ராகு - கேது சர்ப்ப தோஷங்கள் நீக்கும் திருப்பாம்புரம் பாம்புரநாதர் திருக்கோயில்

ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணத் தடை, கடன் தொல்லை, கனவில் அடிக்கடி பாம்பு தோன்றுதல் என அனைத்துவித தோஷத்திற்கும் இத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்துகொள்ளலாம்.
பாம்புரநாதர் உடனுறை வண்டுசேர்குழலி அம்மன்
பாம்புரநாதர் உடனுறை வண்டுசேர்குழலி அம்மன்

நெடியானும் மலரவனும் நேடி ஆங்கே

நேர் உருவம் காணாமே சென்று நின்ற

பாடிகாளை பாம்புரமே காதலானை

பாம்பு அரையோடு ஆர்த்த படிறன் தன்னை

செடி நாறும் வெண்தலையில் பிச்சைக் கென்று

சென்றானை நின்றியூர் மேயான் தன்னை

கடி நாறு பூஞ்சோலை அந்தண் நாகை

காரோணத்து எஞ்ஞான்றும் காணலாமே

என திருநாவுக்கரசரால் தேவாரப் பதிகத்தில் பாடப்பெற்ற தலம்.

கோயில் ராஜகோபுரம்
கோயில் ராஜகோபுரம்

நாகதோஷம் நீங்கவும், மகப்பேறு வாய்க்கவும், ராகு - கேது போன்ற சர்ப்ப தோஷங்கள் விலகவும் சிறந்த தலமாக விளங்குகிறது திருப்பாம்புரம் அருள்மிகு வண்டுசேர்குழலி உடனுறை அருள்மிகு பாம்புரநாதர் திருக்கோயில். அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 59ஆவது சிவத்தலமாகும். ராகு - கேது ஏக சரீரமாக விளங்கி இறைவனை வழிபட்ட தலம் என்பதால், இங்கு வழிபடுவதன் மூலம் சர்ப்ப தோஷங்கள் நீங்கப் பெறுவதாக ஐதீகம்.

கோயில் பின்புற ராஜகோபுரம்
கோயில் பின்புற ராஜகோபுரம்

இந்தத்தலம், திருப்பாம்புரம், பாம்புர நன்னகர், பாம்புரம், உரகபுரம், உய்யகொண்டார் வளநாட்டுத் திருப்பாம்புரம் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது. இறைவனானவர் சேஷபுரீஷ்வரர், பாம்பீசர், பாம்புரநாதர், பாம்புரீஸ்வரர், பாம்புரேசர் என்ற பெயர்களிலும், இறைவியானவர் பிரமராம்பிகை, வண்டார்குழலி, வண்டுசேர் குழலி, வண்டார் பூங்குழலி, வண்டார் பூங்குழல்வல்லி, மாமலையாட்டி ஆகிய பெயர்களிலும் வழங்கப்படுகின்றனர்.

ராகு - கேது 
ராகு - கேது 

தல வரலாறு

வாயுவுக்கும், ஆதிசேஷனுக்கும் இடையில் யார் என்ற வலியவன் என்ற போட்டியில், வாயுவானவர் மலைகளையெல்லாம் தம் வலிமையால் புரட்ட முற்பட்டபோது, ஆதிசேஷன் மலைகளைப் பெயர்க்காதவாறு காத்து நின்றார். கோபமடைந்த வாயு, உயிர்களுக்கு வழங்கும் பிராண வாயுவை நிறுத்தியதால், உயிர்கள் அனைத்தும் சோர்ந்தன. தேவர்களின் வேண்டுகோளை ஏற்று, ஆதிசேஷன் போரிலிருந்து ஒதுங்க, வாயுவானவர் மலைகளைப் புரட்டி வீசினார். கோபமடைந்த சிவபெருமான், இருவரையும் பேயுருவாக மாறும்படி சாபமிட்டார். வாயுவும், ஆதிசேஷனும் தங்களது தவற்றை உணர்ந்து சிவனை வேண்டினர்.

கோயில் முகப்பு
கோயில் முகப்பு

சாந்தமடைந்த சிவன், வாயு பகவான் வைகை நதிக்கு வடக்கிலும், மதுரைக்கு கிழக்கிலும் பூஜை செய்து சாப விமோசனம் பெறலாம் என்று அருளினார். அதேபோல், ஆதிசேஷன், பாம்புரத்தில் தம்மை 12 ஆண்டுகள் பூஜை செய்து விமோசனம் பெறலாம் என்று அருளினார். அதன்படி, ஆதிசேஷன் திருப்பாம்புரம் வந்து, தீர்த்தம் ஏற்படுத்தி, வழிபட்டு விமோசனம் பெற்றார் என்பது புராண வரலாறு.

கோயில் முகப்பில் ராகு-கேது
கோயில் முகப்பில் ராகு-கேது

ஒருமுறை விநாயகர் இறைவனைத் தொழுதபோது, சிவபெருமான் கழுத்திலிருந்த பாம்பு, விநாயகர் தம்மையும் தொழுவதாக எண்ணி கர்வமடைந்தது. கோபமடைந்த சிவன், நாக இனங்கள் அனைத்தும் தமது சக்தியை இழக்கும் வகையில் சாபமிட்டார். இதன் பின்னர், அஷ்ட மகா நாகங்களும், ராகு - கேதுவும், ஈசனைத் தொழுது, பிழை பொறுத்தளுமாறு வேண்டினர். சிவராத்திரியில் தம்மை வணங்கி விமோசனம் பெறலாம் என்று சிவன் அருள அதன்படி, மகாசிவராத்திரி மூன்றாம் சாமத்தில் ராகுவும், கேதுவும், அஷ்ட மகா நாகங்களும் திருப்பாம்புர நாதனை வணங்கி சாபவிமோசனம் பெற்றனர்.

கற்கத்தியில் உள்ள ராகு கேது வளைவு
கற்கத்தியில் உள்ள ராகு கேது வளைவு

உலகைத் தாங்கும் ஆதிசேஷன், சுமை காரணமாக உடல் நலிவுற்று வருந்தியபோது ஈசனின் ஆணைப்படி, சிவராத்திரி இரவு முதல் காலம் குடந்தை நாகேஸ்வரரையும், இரண்டாம் காலம் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் திருப்பாம்புரம் வந்து வழிபட்டு விமோசனம் பெற்றதாகவும் புராண வரலாறுகள் தெரிவிக்கின்றன.

மலையீஸ்வரர் சன்னதி
மலையீஸ்வரர் சன்னதி

பிரம்மன் பூஜை செய்த வரலாறு

பூலோகத்தில் மிக அழகான பெண்ணைப் படைத்த பிரம்மன், அவளுக்கு திலோத்தமை என்று பெயரிட்டார். பிரம்மனை தந்தையாக நினைத்து திலோத்தமை வழிபட, பிரம்மன் அவளது அழகைக் காண வேண்டி, நான்கு திசைகளுக்கும் முகத்தை உண்டாக்கி அவளைக் கண்டார். பயந்துபோன திலோத்தமை, வானத்துக்குச் செல்ல அங்கும் பிரம்மன் ஒரு முகத்தை உருவாக்கினார். உடனே திலோத்தமை சிவனை வழிபட, சிவபெருமான் பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்ததுடன், படைப்புத் தொழிலையும் இழக்கும்படி சாபமிட்டார். முனிவர்கள் அறிவுரையின்படி திருப்பாம்புரம் வந்த பிரம்மா, அங்கு ஒரு தீர்த்தம் உருவாக்கி, ஓராண்டுக் காலம் தன் மனைவியுடன் இறைவனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றார்.

விஷ்ணு துர்க்கை சன்னதி
விஷ்ணு துர்க்கை சன்னதி

திருப்பாம்புரம் கோயிலில், ஆதிசேஷன், பிரம்மன் மட்டுமின்றி பார்வதி, அத்தியர், அக்னி, கங்கை, சந்திரன், சூரியன், தட்சன், சுனிதன் என்னும் வடநாட்டு மன்னன், கோச்செங்கட்சோழன் ஆகியோரும் வழிபட்டு, தங்கள் சாபங்கள் நீங்கப் பெற்றுள்ளதைப் புராணக்கதைகள் மூலமாக அறிய முடிகிறது.

கோயில் அமைப்பு

திருப்பாம்புரம் கோயிலில் கிழக்குப் பகுதியில் ராஜகோபுரம் உள்ளது. ராஜகோபுரத்துக்கு எதிரில் ஆதிசேஷ தீர்த்தம் அமைந்துள்ளது. கோயிலினுள், கொடிமரத்து விநாயகர் கிழக்கு நோக்கியபடி அருள்கிறார். அவருடன் பலிபீடம், நந்தி பெருமானும் காட்சி தருகிறார். தெற்குப் பிரகாரத்தில் திருமலை ஈஸ்வரன் எழுந்தருளியிருக்கும் மாடக்கோயில் காட்சியளிக்கிறது.

கோயிலின் எதிரில் உள்ள ஆதிசேஷன் தீர்த்தம்
கோயிலின் எதிரில் உள்ள ஆதிசேஷன் தீர்த்தம்

மேற்கு பிரகாரத்தின் கன்னி மூலையில் தல விநாயகராகிய ராஜராஜ பிள்ளையாரும், அடுத்ததாக வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமானின் சன்னதியும் உள்ளது. தலவிருட்சமாக வன்னி மரத்தின் வயது 250 ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வன்னி மரத்தடியில் ஆதிபாம்புரேசர் தனி சன்னதி கொண்டு அடியார்களுக்கு அருள்புரிகிறார். இவர், வன்னீஸ்வரர் எனவும் அழைக்கப்படுகிறார்.

வன்னீஸ்வரர் சன்னதி
வன்னீஸ்வரர் சன்னதி

வடக்கு பிரகாரத்தில் சுவாமி சன்னதிக்கு இடப்புறத்தில் வண்டுசேர் குழலி சன்னதி உள்ளது. கிழக்கு பிரகாரத்தில் தனி மண்டபத்தில், பைரவர், சூரியன், திருமால், பிரம்மன், பஞ்சலிங்கங்கள், ஆதிசேஷன், ராகு, கேது, சனீஸ்வரன், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரை தரிசிக்கலாம்.

வண்டார் பூங்குழலி சன்னதி
வண்டார் பூங்குழலி சன்னதி

இறைவன் சன்னதியானது, மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என மூன்று பகுதிகளைக் கொண்டது. மகாமண்டபத்தில் தென்புறம் சோமாஸ்கந்தர் தனி இடம் அமைந்துள்ளது. கருவறையில் பாம்புரேசுவர லிங்க வடிவாகக் காட்சியளிக்கிறார். ஆதிசேஷன் (உற்சவர்) ஈசனைத் தொழுதவாறு கருவறையுள் எழுந்தருளியுள்ளார்.

இங்குள்ள இறைவி, ஒரு கையில் தாமரையும், ஒரு கையில் உருத்திராட்ச மாலையும் கொண்டு, வரத ஹஸ்தம், அபய ஹஸ்தம் விளங்க அருள் தோற்றமளிக்கிறார்.

ராகு-கேது சன்னதி
ராகு-கேது சன்னதி

ராகு-கேது சன்னதி

திருப்பாம்புரம் கோயிலில், ஏகசரீரமாகி, ஈசனை நெஞ்சில் இருத்தி, ராகுவும் கேதுவும் அருள் பெற்றார்கள் என்பது புராண வரலாறு. எனவே, இக்கோயிலில் இறைவன், இறைவி மற்றும் ராகு-கேதுவை வணங்குவோருக்கு பாவங்கள் நீங்கப்பெற்று, நினைத்த காரியம் கைகூடுகிறது. இத்தகைய சிறப்புக்கு காரணமான ராகுவும், கேதுவும் கோயிலின் ஈசான்ய மூலையில் தனிச் சன்னதியில் எழுந்தருளியுள்ளனர். ராகு காலங்களில் இந்தச் சன்னதியில் அபிஷேகம், அர்ச்சனை செய்வோர் தோஷங்கள் விலகி நலம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. எனவே, ராகு காலங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

ராகு-கேது சன்னதியில் பரிகாரப் பூஜை செய்யும் பக்தர்கள்
ராகு-கேது சன்னதியில் பரிகாரப் பூஜை செய்யும் பக்தர்கள்

எதற்கெல்லாம் பரிகாரங்கள், என்ன பரிகாரங்கள்?

பிற கோயில்களில் இருப்பதைப்போல் ராகுவும் - கேதுவும் தனியாக இல்லாமல் இருவரும் ஏக சரீரமாக இருப்பது இக்கோயிலின் மற்றுமொரு சிறப்பாக உள்ளது. ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம் இருந்தால் இங்கு வந்து பரிகாரம் செய்யலாம்.

நாக பிரதிஷ்டை
நாக பிரதிஷ்டை

மேலும், 18 வருட ராகு தசா நடந்தால், 7 வருட கேது தசா நடந்தால், லக்னத்துக்கு 2இல் ராகுவோ கேதுவோ இருந்து, லக்னத்துக்கு 8இல் கேதுவோ ராகுவோ இருந்தால் இத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்யலாம்.

ஏக சரீர ராகு - கேது பகவான்
ஏக சரீர ராகு - கேது பகவான்

அத்துடன், ராகு புத்தி, கேது புத்தி நடந்தால், களத்திர தோஷம் இருந்தால், புத்திர தோஷம் இருந்தால், ஆண்-பெண் இருபாலருக்கும் திருமணம் தடைப்பட்டால், கனவில் அடிக்கடி பாம்பு வந்தால், தெரிந்தோ தெரியாமலோ பாம்பை அடித்திருந்தால், கடன் தொல்லை இருந்தால் இத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்வது அவசியமாகும்.

வன்னி மரத்தடியில் பிரதிஷ்டை செய்துள்ள நாகர் சிலை
வன்னி மரத்தடியில் பிரதிஷ்டை செய்துள்ள நாகர் சிலை

பரிகாரம் செய்ய விரும்புவோர் இங்கு எழுந்தருளியிருக்கும் சுவாமி, அம்பாள் மற்றும் ஏக சரீர ராகு - கேது பகவானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். ராகு கேதுவுக்கு நீலம் மற்றும் பல வண்ண ஆடையைச் சாற்ற வேண்டும். வாய்ப்பிருந்தால் கோமேதகம் மற்றும் வைடூரியம் அணிவிக்கலாம்.

வன்னி மரத்தடியில் பரிகாரம்
வன்னி மரத்தடியில் பரிகாரம்

சங்கு புஷ்பம், மல்லிகை, நீல மந்தாரை, இலுப்பைப்பூ, செவ்வரளி, நாகலிங்கப்பூ ஆகியவை ராகு-கேது பகவானுக்குப் பிடித்தவை. அர்ச்சனை முடிந்த பின் உளுத்தம் பருப்புப் பொடி மற்றும் கொள்ளுப் பொடி அன்னம் நிவேதனம் செய்து தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மேலே குறிப்பிட்ட தோஷங்கள் விலகுகின்றன.

ராகு - கேது புராணம்
ராகு - கேது புராணம்

கல்வெட்டுகளில் வரலாறு

திருஞானசம்பந்தர் காலத்தில் செங்கல் கோயிலாக இருந்த திருப்பாம்புரம் கோயில், சோழமன்னர்கள் காலத்தில் கருவறை அர்த்த மண்டபம், மகா மண்டபம், நந்தி மண்டபம் என கற்கோயிலாக விரிவடைந்தது. 3-ஆம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு இக்கோயிலில் காணப்படுகிறது. காலம் கிபி.1178-1218 என குறிப்பிடுவதால், இந்த கற்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என அறிய முடிகிறது.

ராகு - கேது தகவல் பலகை
ராகு - கேது தகவல் பலகை

அமைவிடம்

குடந்தையிலிருந்து காரைக்கால் சாலையில் கொல்லுமாங்குடிக்கு மேற்கே கற்கத்தி என்னும் ஊரிலிருந்து தெற்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருப்பாம்புரம். இந்த கோயிலுக்கு வருவோர் கும்பகோணத்திலிருந்து கொல்லுமாங்குடி வழியாக காரைக்கால் செல்லும் பேருந்தின் மூலம் கற்கத்தியை அடைந்து அங்கிருந்து செல்லலாம். மேலும், கொல்லுமாங்குடி அல்லது பேரளம் சென்று, மினிபஸ் மூலமாகவும் கோயிலுக்கு வரலாம்.

பல்வேறு வகையான கிரக தோஷங்களுக்கும் ஏற்ற பரிகாரத்தலமாக இந்த ஆலயம் விளங்குவதால், தினசரி ஏராளமானோர் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். அவ்வாறு வருவோர் பலருக்கும் இன்னல்கள் தீர்வதாலும், வேண்டுதல் நிறைவேறுவதாலும் மீண்டும் அவர்கள் திருப்பாம்புரம் கோயிலுக்கு வருவதுடன், மேலும் பலரை அழைத்து வருவதையும் காண முடிகிறது.

கோயிலுக்கு நன்கொடைகளை அனுப்புவோர், ஆலய முகவரிக்கு மட்டுமே அனுப்ப வேண்டும். வசூலுக்கு தனிநபர் அல்லது அமைப்பு அனுமதிக்கப்படவில்லை எனக் கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். (தொலைபேசி 0435 3469555)

ஆலய முகவரி

அருள்மிகு பாம்புரநாதர் திருக்கோயில்

திருப்பாம்புரம், சுரைக்காயூர் அஞ்சல்,

பாலையூர் வழி, குடவாசல் வட்டம்,

திருவாரூர் மாவட்டம் - 612203 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com