

எனக்கு செவ்வாய் தசையில் முதல் திருமணம் நடந்தது. ஒரு பையன் இருக்கிறான். செவ்வாய் தசையில் பல லட்சங்களை தொழில்மூலம் சம்பாதித்தேன். ராகு தசை தொடக்கத்தில் முதல் மனைவி இறந்துவிட்டார். சம்பாதித்த அனைத்தையும் ராகு தசையில் தற்சமயம் இருக்கும் ஒரு வீட்டைத் தவிர அனைத்தையும் இழந்துவிட்டேன். இரண்டாம் திருமணம் மூலம் இரண்டு மகன்கள். எதனால் எனக்கு இரண்டு திருமணம் ஆனது? இரண்டாண்டுகளுக்கு முன்பிருந்து மனநோயாலும் கஷ்டப்படுகிறேன். தொழிலும் மந்தம். எனக்கு புதையல் யோகம் உள்ளதாக ஒருவர் கூறினார். தற்சமயம் நடக்கும் குருதசையில் அந்த யோகம் உண்டாகுமா? செவ்வாய் தசையில் சம்பாதித்த சொத்துக்கள் இன்று இருந்தால் அது பலகோடிகளைத் தாண்டும். புதையல் யோகம் செவ்வாய் தசையோடு போய்விட்டதா? என் வாழ்க்கை மறுபடியும் பழைய மாதிரி ஆகுமா?
- கோவிந்தராஜ், சென்னை
உங்களுக்கு கடக லக்னம். மேஷ ராசி, பரணி நட்சத்திரம் 3 ஆம் பாதம். பிறப்பில் சுக்கிர மகாதசையில் இருப்பு 5 வருடங்கள், 1 மாதம், 18 நாள்கள் என்று வருகிறது. லக்னாதிபதியான சந்திரபகவான் சுபக்கிரகமாகி பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். பூர்வபுண்ணிய புத்திர மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். ஒரு கிரகத்திற்கு கேந்திராதிபத்யமும் திரிகோணாதிபத்யமும் அமைந்தால் அந்த கிரகம் குறிப்பிட்ட லக்னத்திற்கு யோககாரகர் என்று அழைக்கப்படுகிறார். கடக லக்னத்திற்கு செவ்வாய்பகவான் ஐந்தாம் வீடான திரிகோணராசிக்கும் கேந்திர ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியாவதால் முதல்தர யோககாரகர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் அவர் பாக்கியாதிபதியான குருபகவானின் சாரத்தில் (புனர்பூச நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மேஷராசியை அடைகிறார். இதனால் பூர்வபுண்ணியம் மற்றும் தொழில் ஸ்தானம் ஆகிய இரண்டும் வலுப்பெறுகிறது என்று கூறவேண்டும்.
ஆறாம் வீடு மற்றும் ஒன்பதாம் வீடான பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் எட்டாம் வீட்டில் அமர்ந்து விபரீத ராஜயோகத்தைப் பெறுகிறார் என்பது சிறப்பு. குருபகவானின் ஐந்தாம் வீட்டு அருள்பார்வை பூர்வபுண்ணிய புத்திர தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவானின் மேல் படிவதால் உங்கள் செய்தொழில் படிப்படியாக உயர்வடையும். மேலும் இதனால் குருமங்கள யோகம் உண்டாகிறது. கர்மாதிபதியை தர்மாதிபதி பார்ப்பதும் சிறப்பாகும். குருபகவானின் ஏழாம் பார்வை, தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தின் மீதும் ஒன்பதாம் பார்வை சுக லாபாதிபதியான ஆட்சி பெற்ற சுக்கிரபகவானின் மீதும் படிகிறது. இதனால் இந்த பாவங்கள் சிறப்பான பலம் பெறுகின்றன என்று கூறவேண்டும்.
செவ்வாய் தசையில் அபரிமிதமான செல்வம் சேர்ந்தது என்று கூறியுள்ளீர்கள். இந்த செவ்வாய் தசை இறுதியில் முதல் திருமணமாகி ராகு மகாதசையில் சுயபுக்தியில் முதல் மனைவி இறந்துவிட்டார் என்று கூறியுள்ளீர்கள். இரண்டு விவாகங்கள் எப்படி உண்டாகும் என்று கிரந்தங்களை ஆராய்ந்து பார்த்தால் கீழே குறிப்பிட்டவைகள் ஓரளவு ஒத்துவருகிறது என்று கூறவேண்டும். ஏழாம் வீடு இரட்டைப்படை ராசியாகவோ (மேஷம் ஒற்றைப்படை ராசி, ரிஷபம் இரட்டைப்படை ராசி, இப்படி பார்த்துக் கொள்ள வேண்டும்) அந்த ஏழாம் வீட்டில் அசுபர்கள் அமர, ஏழாம் வீட்டுக்கதிபதி பலமற்று இருந்து, ஏழாமதிபதி குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சுபர்களுடன் கூடி இருந்தாலும் பார்க்கப்பட்டாலும் இருவிவாகம் என்று கூறப்பட்டுள்ளது. ஏழாம் வீட்டோன் திரிகோணமோ, கேந்திரமோ பெற்று நட்பு வீட்டில் உச்சனாகி பத்தாம் அதிபதியால் பார்க்கப்படினும் குருபகவான் நவாம்சத்தில் உச்சம் பெற்றோ, தன் ஆட்சி வீடுகளான தனுசு, மீன ராசிகளில் இருந்தாலும் இரு விவாகம் என்று கூறப்பட்டுள்ளது.
உங்களுக்கு களத்திர ஸ்தானாதிபதி இரட்டைப்படை ராசியான மகரத்தில் அமர்ந்து சர்ப்பக்கிரகச் சேர்க்கை, பார்வை பெற்று இருப்பது கடுமையான களத்திர தோஷம் என்று கூறவேண்டும். அதேநேரம் களத்திர ஸ்தானாதிபதி ஆட்சி பெற்றும் சுக ஸ்தானம், புத்திர ஸ்தானம் வலுவாக உள்ளதால் இரண்டாம் திருமணம் சமதோஷமுள்ளவருடன் அமைந்து நல்லமுறையில் செல்கிறது என்பதும் உண்மை. புத்திரகாரகர் ஆண் கிரகமாகி ஆண் கிரகமாகிய புத்திர ஸ்தானாதிபதியைப் பார்வை செய்வதால் முதல் திருமணம் மூலம் ஒரு ஆண் குழந்தையும் இரண்டாம் திருமணத்தினால் இரண்டு ஆண் குழந்தைகளும் உண்டாயின என்று புரிந்து கொள்ள வேண்டும்.
புதையல் யோகம் பற்றி கேட்டுள்ளீர்கள். இக்காலத்தில் புதையல் கிடைப்பது அரிதாகையால் புதையல் கிடைத்தமாதிரி லாட்டரி முதலிய வழியில் எதிர்பாராதபடி அதிக வருவாய் கிடைக்கும் என்பது பொருத்தமாகும். இங்கு, பொதுவாக கூறப்பட்டுள்ள சில புதையல் யோகம் பற்றி விவரிக்கிறோம். பதினொன்றாம் அதிபதி என்கிற லாபாதிபதி லக்னத்திலும் லக்னாதிபதி இரண்டாம் வீட்டிலும் இரண்டுக்குடையவன் லாப ஸ்தானத்திலும் இருந்தால் புதையல் கிடைக்கும். அதாவது எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். எல்லா கிரகங்களைக் காட்டிலும் லக்னாதிபதி அதிக பலம் பெற்று கேந்திர ராசிகளில் இருந்து குருபகவானுடன் கூடி, இரண்டாமதிபதியும் சிறப்பான இடத்தை அடைந்திருந்தால் சுயமாக சம்பாதித்து செல்வந்தராவார். லக்னாதிபதி இருக்கும் அம்சத்திற்கதிபதி பலம் பெற்று இரண்டாம் வீட்டுக்கதிபதிக்கு நண்பராகி கேந்திர திரிகோணங்களில் இருந்தால், தானே சுயமாக பெரும் செல்வம் தேடுவார். இரண்டு பதினொன்றுக்கு உரியவர்கள் இணைந்து கேந்திர திரிகோணங்களில் இருந்து சுபர்களால் பார்க்கப்பட்டால் காலசக்கர தசையும் அனுகூலமாக நடந்தால் செல்வம் தேடி வரும். ஒன்பதாமதிபதி எட்டில் இருந்தால் புதையல் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எட்டாம் வீட்டை புதையல் வீடு என்று பலமுறை எழுதியிருக்கிறோம். இதில் ஒன்பதுக்குடையவனின் தசையும் சேர்ந்தால்தான் இந்த பலன் கிடைக்கும்.
உங்களுக்கு அதிர்ஷ்டவசமாக, தற்சமயம் எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கும் ஒன்பதாமதிபதியின் தசை நடக்கிறது. மேலும் "மறைந்த குரு நிறைந்த நிதி' என்பதும் ஜோதிட வழக்கு. தற்சமயம் குருபகவானின் தசையில் கேதுபகவானின் புக்தி 17.9.2016 வரை நடக்கும். அதற்குப்பிறகு ஒன்றரை ஆண்டுகள் கழிந்தபின், மறுபடியும் செய்தொழிலில் வளர்ச்சி உண்டாகத் தொடங்கும். குருமகா தசை முடிவதற்குள் இழந்த செல்வங்களுக்கு சமமான செல்வம் உங்கள் சுயமுயற்சியால் திரும்பக் கிடைக்கப்பெறுவீர்கள். சனிமகா
தசையும் நன்றாக வேலை செய்யும். முடிந்தால் ஒருமுறை ராமேஸ்வரம் சென்று திலஹோமம் செய்து விட்டுவரவும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.