
பதிபக்தியில் சிறந்து விளங்கிய சாவித்ரி தன் விரத பலத்தாலும் கற்பின் மகிமையாலும் யாராலும் காணமுடியாத யமனைக் கண்டு உரையாடி அவரது பாராட்டுகள், வரங்களைப் பெற்று நலம் பெற்ற வரலாறு சத்தியவான் சாவித்ரி வரலாறு.
சாவித்ரியின் கண்களுக்கு மட்டும் புலப்பட்ட, யமனின் சிறப்பைப் புராணங்கள் வாயிலாக அறிகிறோம். ஜீவன்களின் உயிரை ஆயுள் முடிந்ததும் எடுத்துச் செல்லும் பணியை யமன் செய்து வருவது பற்றியும் ஒரு வரலாறு உண்டு.
பகவான், உலக இயக்கம் நடைபெறுவதற்காக பிரம்மனுக்கு படைப்புத் தொழில், வருணனுக்கு மழை, வாயுவிற்கு காற்று, அக்னிக்கு நெருப்பு தொடர்பான பணிகள், சித்திரபுத்திரனுக்கு உலக மக்களின் பாவபுண்ணியக் கணக்குகள் எழுதுதல், யமனுக்கு ஆயுள் முடிந்த ஜீவன்களின் உயிரை எடுத்து வருதல் போன்ற பணிகளை பிரித்துக் கொடுத்தார்.
யமன் தன் தாயிடம் தனக்குக் கொடுக்கப்பட்ட பணியைப் பற்றிக் கூறியபோது ஜீவன்களின் உயிரை எடுக்கும் பணி, அந்த ஜீவனைச் சார்ந்தவர்களுக்குத் துயரம் தருவதாக இருக்குமே என்று எண்ணி வருத்தப்பட்டார். தாயின் முகவாட்டத்தைப் பற்றிக்கேட்டபோது, "உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பணி எனக்கு வருத்தமளிக்கிறது. உன் பணி பிறருக்கு வருத்தம் அளிக்கக் கூடியது. அதனால் எல்லோரும் உன்னைத் தூற்றுவார்கள்'' என்று கூறினார்.
யமன் தன் தாயிடம் ""ஆயுள் முடிந்த பிறகே ஒருவரது உயிரை எடுக்கிறேன். அதனால் என்னை யாரும் குறை கூறமாட்டார்கள். நீங்கள் வருத்தப்பட வேண்டாம்'' என்று ஆறுதல் கூறினார். ஆனால் அவரது தாயாரால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
யமன் வெகுநேரம் எடுத்துக் கூறியும் சமாதானம் அடையாததால் முடிவில் யமன் தன் தாயிடம், ""அம்மா, நீங்கள் நாளை பூலோகம் சென்று அதிகாலையில் கங்கைக் கரையில் நீராடும் துறைக்கு அருகில் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்து கொள்ளுங்கள். அங்கு நீராடவரும் மக்கள் பேசுவதைக் கேளுங்கள். அவர்கள் பேசிக் கொள்வதைக் கேட்டபின் நீங்கள் இந்தத் தொழில் வேண்டாம் என்று கூறினால் விட்டு விடுகிறேன்'' என்று சொன்னார்.
யமன் கூறியதைக் கேட்டு அவரது தாய், பூலோகம் சென்று அதிகாலையில் நீராடும் படித்துறைக்கு அருகே கண்களை மூடிக்கொண்டு அமர்ந்தார். விடியற்காலையில் பக்தர்களும் யாத்ரீகர்களும் அங்கு நீராட வந்தனர்.
ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் நலம் விசாரித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். ஒருவர் தன் நண்பரிடம் தன்னுடன் வருடாவருடம் வரும் தன் மனைவி காய்ச்சல் வந்து இறந்து விட்டதாகவும் மற்றொருவர் தன் தாயார் மாரடைப்பால் சென்ற வருடம் இறந்து விட்டதாகவும் அதற்காக தர்ப்பணம் செய்ய வந்திருப்பதாகவும் கூறினார்கள். இதுபோல் பலரும் தங்கள் உறவினர் வெவ்வேறு காரணங்களால் இறந்து விட்டதாகக் கூறினாரே தவிர, யமன் அவர்கள் உயிரை பறித்துக் கொண்டு போனதாக ஒருவரும் சொல்லவில்லை. இவை அனைத்தையும் கேட்ட யமனின் தாய் தன் எண்ணம் தவறு என்பதைப் புரிந்து கொண்டார்.
பின்னர், யமனிடம் சென்று, ""நான் உண்மையை புரிந்து கொண்டேன். யாருடைய இறப்புக்கும் நீ காரணமில்லை. வேறு ஏதோ காரணத்தால் இறந்ததாகத்தான் எல்லோரும் கூறுகிறார்கள். அதனால் உனக்கு கொடுக்கப்பட்ட பணியைத் திருப்தியுடன் நீ ஏற்றுக்கொள்'' என்று கூறி யமனை ஆசீர்வதித்தார். யமனும் தன் பணியைச் செய்து வந்தார்.
சாவித்ரி, "சத்யவான் திருமணமாகி ஒரு வருட காலமே உயிருடன் இருப்பான் என்பதை அறிந்திருந்தும் அவனையே மணப்பேன்' என்ற உறுதியுடன் அவனை மணந்து கொண்டாள். திருமணத்திற்குப்பின் மாமனார், மாமியார், கணவன் ஆகியோருடன் காட்டு வாழ்க்கை மேற்கொண்டு அவரவர்களுக்கு பணிவிடைகள் செய்து போற்றி மனநிறைவுடன் வாழ்ந்து வந்தாள். மாங்கல்ய பலம் வேண்டி விரதங்கள், நோன்புகள் அனைத்தையும் முறைப்படி அனுஷ்டித்தாள்.
சத்யவானின் ஆயுள்காலம் முடியும் நேரம் வந்தபோது அவனது உயிரை எடுக்க கையில் பாசக்கயிற்றுடன் கரிய உருவம் ஒன்று வந்தது. அது யமன் என்றறிந்த சாவித்ரி, யமனை நமஸ்கரித்தாள். யமன் அவளை "தீர்க்க சுமங்கலி பவ' என்று ஆசீர்வதித்தார். சத்யவானின் உயிரை எடுத்துச் சென்ற யமனை, சாவித்ரி பின் தொடர்ந்து சென்று, அவனுடன் அறிவுபூர்வமாக வாதாடி யமன் தடுத்தபோதும் கேளாமல் அவனுடனேயே சென்றாள். ""சத்யவானின் உயிரைத் தவிர வேறு எது வேண்டுமானாலும் கேள்!''
என்ற யமனிடம் மாமனார், மாமியார் குறித்து வரம் கேட்ட சாவித்ரி, ""என் கற்புநிலை பழுதுபடாமல் எனக்கு நூறுபுத்திரர்களைக் கொடு'' என்று சமார்த்தியமான ஒரு வரத்தைக் கேட்டுப்பெற்றாள். சாஸ்திரங்கள் அனைத்தையும் கற்றிருந்த யமனும் அவளிடம் தோல்வியுற்று அவளுக்கு அவள் கேட்ட வரத்தை அருளி சத்யவானின் உயிரையும் விடுவித்தார். இந்நிகழ்வு சாவித்ரியின் பதிபக்தியையும் மதிநுட்பத்தையும் காட்டுவதாக அமைந்துள்ளது.
சாவித்ரி யமனைப் பின் தொடர்ந்து சென்று சத்யவானின் உயிரை மீட்டுவர 3 3/4 நாழிகை (ஒன்றரை மணி நேரம்) ஆயிற்று. இதன் அடிப்படையில்தான் இன்றும் ஒருவர் மரணமடைந்தால் 3 3/4 நாழிகை கழிந்த பிறகே அவரது இறுதிச் சடங்குகளைச் செய்கிறார்கள். இதற்கு, பிரிந்த உயிர் குறிப்பிட்ட அந்த நேரத்திற்குள் மீண்டும் வந்து விடலாம் என்று ஆவலும் நம்பிக்கையுமே காரணம் எனலாம்.
- கே. சுவர்ணா