இன்று கிருஷ்ண ஜெயந்தி! ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்!

ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த தினத்தை ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தியாக
இன்று கிருஷ்ண ஜெயந்தி! ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்!

ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த தினத்தை ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறோம். ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் சிறைக்குள் வசுதேவர் தேவகி தம்பதியருக்கு எட்டாவது மகனாகக் கிருஷ்ணன் அவதரித்தார். கம்சன் தன் குழந்தையை வதம் செய்துவிடுவானோ என்ற பயத்தில் கொட்டும் மழையில் பச்சிளம் பாலகனை கோகுலத்தில் பலராமர் யசோதை தம்பதியரிடம் ஒப்படைக்கிறார் வசுதேவர். மூன்று வயது வரை கோகுலத்திலும், ஆறு வயது வரை பிருந்தாவனத்திலும், ஏழு வயதில் கோபியர் கூட்டத்திலும், எட்டிலிருந்து பத்து வயது வரை மதுராவிலும் கிருஷ்ணனின் இளம் பிராயம் கழிந்தது. 

கிருஷ்ணர் இரவில் பிறந்தவர் எனவே, மாலை வேளையில் பூஜை செய்வது வழக்கம். வீட்டு வாசலில் கோலம் போட்டு, காவி வரைந்து, பூக்கள் வைத்து கண்ணனின் சின்னச் சின்னப் பாதங்களை வாசலிலிருந்து வீட்டினுள் பூஜை அறை வருவது போல அரிசி மாவால் நயமாகக் கோலமிடவேண்டும்.

வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி, பூஜை அறையில் கண்ணனின் படத்தை அலங்கரித்து நெய் விளக்கு ஏற்ற வேண்டும். தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு போன்ற பூஜை பொருட்களுடன் கண்ணனுக்கு பிரியமான வெண்ணெய் ஒரு கிண்ணத்தில் வைத்து, தயாரித்து வைத்துள்ள பட்சணங்களான சீடை, முறுக்கு, தட்டை, போன்ற பிரசாதங்களை அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணனுக்கு அவரவர் குடும்ப வழக்கப்படி பூஜை செய்தபின், தீப தூப ஆராதனை செய்து அதன் பின் நைவேத்தியம் செய்ய வேண்டும்.

பக்தியுடன் மனம் உருக வேண்டினால் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் வெண்ணெய் போல உருகி பக்தர்கள் வேண்டும் வரத்தை தந்திடுவான். ‘எல்லாவற்றிலும் நான் உறைகின்றேன்‘ என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் உணர்த்தி இருக்கிறார். பொருள் வேண்டாம் அவனருள் மட்டும் போதும் என நினைப்பவர்கள் ஸர்வமும் அவனே என மனதார உணர்ந்து ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம் என்று தியானிக்க வேண்டும். அப்போது கிடைக்கும் மன அமைதியும் மகிழ்ச்சியும் வார்த்தைகளில் சொல்ல முடியாது. 

கண்ணன் பிறந்த மதுராவில் இன்று கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் இன்று பல கோவில்களில் உறியடித் திருவிழா நடக்கும். தமிழகத்தில் `கோகுலாஷ்டமி’ என்றும், வட இந்தியாவில் ஸ்ரீஜெயந்தி, `ஜென்மாஷ்டமி’ என்றும் அழைக்கப்படுகிறது. 

***

கிருஷ்ணரின் எட்டு வடிவங்கள்

1. சந்தான கோபால கிருஷ்ணன் : அன்னை யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம். 

2. பாலகிருஷ்ணன்: தவழும் கோலம். ஆலயங்களில் கிருஷ்ணன் சன்னதிகளிலும் பலரது வீட்டில் பூஜை அறையிலும் இப்படத்தையே காணலாம். 

3. காளிய கிருஷ்ணன்: காளிங்கன் என்ற நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் காளிய கிருஷ்ணன்.

4. கோவர்த்தனதாரி: கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.

5. ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்): வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன். 

6. முரளீதரன்: கிருஷ்ணன் ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது. 

7. மதனகோபாலன்: அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் கிருஷ்ணன். 

8. பார்த்தசாரதி : அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.

***

கிருஷ்ணன் கதைகள்

வெண்ணெய் திருடி, தயிர் பானையை உடைத்த கண்ணனை, தாய் யசோதை உரலில் கட்டினாள். மகனைக் கட்டிப் போட்டுவிட்டு அன்னை யசோதை வீட்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள். அவ்வாறு மர உரலில் கட்டப்பட்டிருந்த கிருஷ்ணர், தன் முன் இரண்டு அர்ஜுன மரங்கள் நிற்பதைக் கவனித்தார். இந்த இரண்டு அர்ஜுன மரங்களும் பிரபலமான தேவர்களான நளகூவரனும் மணிக்கிரீவனும், தேவர்களின் பொக்கிஷதாரனும் சிவபெருமானின் பெரும் பக்தனுமான குவேரனின் இரு மகன்கள் ஆவார்கள்.

குவேரனின் இவ்விரு மைந்தர்களும் மது, மாது விஷயங்களில் நாடியிருந்தனர். ஒரு முறை நாரதர் முன் இவ்விருவரும் இழி நிலையிலிருந்ததால் அவர்கள் இருவர் மீதும் கருணை கொண்டு, அவர்கள் நற்கதி அடைய வேண்டும் என்பதற்காக அவ்விருவரும் மரங்களாக, தேவர்களின் காலக் கணக்கின்படி நூறு ஆண்டுகளுக்கு இருந்து, பின்னர் முழுமுதற் கடவுளை நேருக்கு நேர் கண்டு நற்பேறு அடைய வேண்டுமென்று நாரதரால் சபிக்கப்பட்டிருந்தார்கள்.

அந்த இரு தேவர்களும் இரட்டை அர்ஜுன மரங்கள் என்று பெயர் பெற்ற மரங்களாக மாறி, நந்த மகாராஜாவின் அரண்மனை முற்றத்தில் தோன்றி வளாந்து, ஸ்ரீ கிருஷ்ணரை நேரில் காணும் நல் வாய்ப்பைப் பெற்றார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் அவ்விரு மரங்களின் இடை வெளியில் புகுந்து சென்றபோது, மரங்களினிடையே உரல் சிக்கிக் கொண்டதும் அதை பலமாக இழுத்தார். அப்போது மரங்கள் வேரோடு சாய்ந்ததும் அவைகளில் இருந்து நளகூவரன், மணிக்கிரீவன் என்னும் அழகான தேவர்கள் தோன்றினார்கள். அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரை பலமுறை வலம் வந்து, சிரம் தாழ்த்தி வணங்கி துதித்து மறைந்தனர்.

சத்தத்தைக் கேட்டு நந்த மகாராஜாவும் கோகுலவாசிகளும் ஓடி வந்தனர். கிருஷ்ணர் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், தேவர்கள் தோன்றியதை கூறினார்கள். நந்தகோபர், கிருஷ்ணரை உரலில் இருந்து விடுவித்து மார்புடன் அணைத்துக் கொண்டார்.

***

பகவான் ஸ்ரீகிருஷ்ணரைக் கொல்வதற்காக கம்சன் தன் நண்பனான கேசி என்ற அரக்கனை விருந்தாவனம் செல்லுமாறு கட்டளையிட்டான். கம்சனின் கட்டளையைப் பெற்றதும் கேசி அசுரன் பயங்கரமான ஒரு குதிரையின் வடிவத்தை மேற்கொண்டு விருந்தவனப் பகுதிக்குள் நுழைந்தான். பிடரி மயிர் காற்றில் பறக்க, அவன் உரக்க கனைத்த ஒலி கேட்டு உலகமே நடுங்கியது. விருந்தாவன வாசிகள் பயந்து நடுங்கும்படி அவன் கனைத்து, வாலை ஆகாயத்தில் பெரும் மேகம் போல் சுழற்றியதைக் கிருஷ்ணர் கண்டார். குதிரை வடிவிலிருந்த அசுரன் தன்னை போருக்கு அழைக்கிறான் என்பதைக் கிருஷ்ணர் புரிந்து கொண்டார்.

அவர் அசுரனைப் போரிட அழைத்த போது அவன் சிங்கம் போல் கர்ஜித்தபடி அவரை நோக்கி முன்னேறினான். மிகுந்த வேகத்துடன் முன்னேறிய கேசி, தன் பலம் மிக்க, கற்களைப் போல் கடினமான கால்களால் கிருஷ்ணரை மிதித்துக் கொல்ல முயற்சித்தான். ஆனால் கிருஷ்ணர் உடனே அவனுடைய கால்களைப் பற்றிக் கொண்டு அவனைத் திகைக்கச் செய்தார். பின் கேசியினுடைய கால்களைப் பிடித்த படி அவனைச் சுழற்றினார். சில சுற்றுக்களக்குப் பின், கருடன் பெரிய பாம்பை எறிவது போல், கிருஷ்ணர் கேசியை நூறு கஜ தூரத்துக்கு அப்பால் எறிந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com