காசிக்கு நிகரான காலபைரவ ஷேத்திரம் 

காசிக்கு நிகரான தலங்கள், காசிக்கு வீசம் அதிகமான தலங்கள் என பல தலங்கள்
காசிக்கு நிகரான காலபைரவ ஷேத்திரம் 

காசிக்கு நிகரான தலமொன்று குடந்தையில் உள்ளது என்று ஆச்சரியமாக உள்ளதா? நேரில் சென்று காண்பதே அதை பூர்த்தி செய்யும் ஒரே வழி.

காசியில் இறப்பவர்க்கு எம வாதனை கிடையாது என்பார்கள், ஆனால் பைரவ தண்டனை உண்டு. குடந்தையில் உள்ள காலபைரவப் பெருமான் மற்றும் சப்த ரிஷிகள் வழிபட்ட ஞானாம்பிகை சமேத  ரிஷீஸ்வரரை வணங்கி, வழிபாடு செய்தால் எம் வாதனை மற்றும் பைரவ தண்டனை  இரண்டுமே கிடையாது.

குடந்தை அருகில் மயிலாடுதுறை செல்லும் வழியில் அமைந்துள்ளது அம்மாசத்திரம். அருகிலேயே திருபுவனம்,  திருவிடைமருதூர் போன்ற புகழ்மிக்க தலங்கள் சூழ அமைந்துள்ளது. இங்கு கம்பீரமாக வீற்றிருக்கும் காலபைரவ பெருமானுக்கு தேய்பிறை அஷ்டமி நாளில் 11 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அவ்வமையம் திரளான மக்கள் கலந்து கொண்டு பலன் பெறுகிறார்கள்.

காசியை போலவே  கும்பகோணத்திலும் 8 திக்குகளிலும் 8 விதமான பைரவர்கள் அருள்பாலிக்கின்றனர். சப்த ரிஷிகளும் சிவபெருமானுக்கு திருமணம் செய்வித்த தலம் என்பதால் , இது திருமண தடை நீக்கும் தலமாகவும் விளங்குகிறது.

பிதுர் கடன்களை முறையாக செய்ய தவறியவர்கள் இங்கு வந்து வணங்குவதன் மூலம் அதனை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இத்தலத்தின் பெருமை பவிஷ்ய புராணத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மிகவும் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் பராமரிக்கப்படும் திருக்கோயில்களில் அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் திருக்கோயிலும் ஒன்றாகும். கோவிலில் உள்ள காலபைரவரின் வாகனத்தின் முகம் வடக்கு நோக்கி இருப்பது வேறு எங்கும் இல்லாத விசேஷ அம்சமாகும்

திருக்கோவிலின் சிறப்புமிக்க அம்சங்கள்:

  • சப்தரிஷிகள் சிவபெருமானுக்கு திருமணம் பேசி முடித்த திருத்தலம்.
  • பஞ்சலிங்கங்கள் மற்றும் பஞ்சசக்திகள் அருள்பாலிக்கும் திருத்தலம்
  • நவகிரஹ இயந்திர மண்டலம் விளங்குவது ஆகியவை ஒரே கோவிலில் அமைந்திருப்பது என்பது இத்திருத்தலத்தின் சிறப்பு.

இங்கு இறைவன் அஷ்ட பைரவ ரூபியாக  இருந்து கும்பகோணத்தை காவல் காப்பதாக சம்பிரதாயம் உண்டு. குடந்தையிலிருந்து 7 கிலோமீட்டரில் உள்ளது இத்தலத்திற்கு ஆன்மிக அன்பர்கள்  தவறாமல் சென்று காலபைரவப் பெருமானை தரிசனம் செய்து பலன்களைப் பெற வேண்டுகிறேன்.

- துர்கா லஷ்மி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com