காக்க காக்க கனகவேல் காக்க! பூசத் திருவிழா சிறப்புப்  பகுதி 2

வலம்புரி விநாயகரின் முன்னுள்ள மயில்முக விளக்கின் அடிப்புற ஆமை வடிவமும்
காக்க காக்க கனகவேல் காக்க! பூசத் திருவிழா சிறப்புப்  பகுதி 2

வலம்புரி விநாயகரின் முன்னுள்ள மயில்முக விளக்கின் அடிப்புற ஆமை வடிவமும் அதனைத் தொடர்ந்த மேற்தண்டிலுள்ள பாம்பு  உருவங்களும் குறிப்பிடத்தக்கவை. சிவன், அம்பாளுக்கு நடுவில் முருகன் இருக்கும் அமைப்பை, சோமாஸ்கந்த அமைப்பு என்பர். இங்கும் சிவன், அம்பாளுக்கு நடுவில்தான் முருகப் பெருமான் காட்சி தருகிறார். முருகத்தலம் என்றாலும் சுவாமிக்கு வலப்புறம் பட்டீஸ்வரர் சன்னதியும், இடப்புறத்தில் மரகதாம்பிகை சன்னதியும் உள்ளன. கோஷ்டத்தில் உள்ள முருகன் சிகிவாகனர் (மயிலை வாகனமாக உடையவர்), 'சேனானி (படைத்தளபதி) என்ற பெயரில் அழைக்கப்படுவது விசேஷம். மருதம் மரங்கள் நிறைந்தும், நோய் நீக்கும் மருந்து குணங்களை உள்ளடக்கிய மூலிகைகளைக் கொண்டதுமான மலையில் அருளுபவர் என்பதால் இங்கு முருகன், 'மருதாச்சலமூர்த்தி' என்று அழைக்கப்படுகிறார். மருதமரமே இத்தலத்தின் விருட்சம். தீர்த்தத்தின் பெயர் 'மருது சுனை'. இந்த தீர்த்தம் பிரசித்தி பெற்றது. மலையில் உள்ள ஒரு மருதமரத்தின் அடியில் இருந்து இந்த தீர்த்தம் உற்பத்தியாகி வருவதாக சொல்கிறார்கள். இந்த தீர்த்தமே சுவாமி அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. காமதேனு என்னும் தெய்வீகப்பசு இம்மலையில பசி நீங்க மேய்ந்து மருத மரத்தின் கீழ் இருந்த நன்னீரைப் பருகியதாக பேரூர் புராணத்தில் கச்சியப்ப முனிவர் கூறியுள்ளார். மிகப்பழமையான காலத்தே நம் முன்னோர்கள் வனத்தை இருப்பிடமாக கொண்டு வாழ்ந்து வந்தனர். பின்னர் நாகரீக வளர்ச்சியில் காடு கெடுத்து நாடாக்கப்பட்ட பின்பு தெய்வங்களுக்குப் பெருங்கோவில்கள் அமைக்கப்பட்டன. இவ்வாறு கோவில்கள் அமைக்கப்பட்ட போதிலும் ஆதியில் இருந்த மரத்தினை அழிக்காது அதனை இன்றளவும் சுவாமிக்கு அருகில் தல விருட்சம் (தலமரம்) என்ற பெயரில் வளர்த்து வருகின்றனர். அவ்வகையில் மருத மரமானது இங்கு ஸ்தல விருட்சமாக இருந்து வருகிறது.

இம்மலையை மருந்து மலை என்று சொல்லும் வகையில் மக்களின் உடற்பிணியும், மனப்பிணியும் நீக்கும் மூலிகைகளும் மரங்களும் உள்ளன. அருமையான காற்றும், அமைதியான சூழலும் மனத்திற்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. தவம் செய்வோர் அருளாளர்கள் இறப்பிலாப் பெருவாழ்வு அடைய காயகல்பம் தேடி இம்மலையில் வந்து தங்குகிறார்கள்.
 
திருக்கோவில் வளாகத்தில் மூலவர்க்கு சற்று தூரம் தள்ளி படிக்கட்டில் இருந்து கீழே சென்றால் பாம்பாட்டி சித்தர் கோவில் அமைந்துள்ளது. இந்த இடத்தை பாம்பாட்டி சித்தரின் குகை என்று கூறப்படுகிறது. இக்குகைக்கோயில் சிறு குடைவரை அமைப்பில் உள்ளது. உட்புறத்தில் ஒரு பாறை பாம்பு வடிவில் உள்ளது.  பாம்பாட்டி சித்தர் சன்னிதி முன்புறமுள்ள தியான மண்டபத்தில் இங்கு வருகை தருவோர் அமர்ந்து அமைதியாக தியானம் செய்து வழிபடுகின்றனர். தண்டாயுதபாணி கோயில் தலவிருட்சம் இக்கோயிலுக்கு முன்னால் உள்ளது. இக்கோயிலுக்கு இறங்கி வரும் பாதையில் சப்த கன்னியருக்கு ஒரு சிறு சன்னிதி அமைந்துள்ளது.
 
நவகோடி சித்தர்களில்  முதன்மையானவர்கள் பதினெண் சித்தர்கள், அதில் பாம்பாட்டி சித்தரும் ஒருவர். பாம்பாட்டிசித்தர் வாழ்ந்த காலம் கி.பி 1200 ஆகும். கார்த்திகை மாதம் மிருகசீரிசம் நட்சத்திரத்தில் பிறந்தவர். பாம்பைப் பிடிப்பது அவற்றின் விஷத்தை சேமித்து விற்பது. இதுவே பாம்பாட்டி சித்தரின் தொழில். இவர் விஷமுறிவு மூலிகைகளைப் பற்றி அறிந்திருந்ததால் அந்த ஊரில் பாம்புக்கடிக்கு சிறந்த வைத்தியராகத் திகழ்ந்தார். ஒரு முறை மருதமலை அடிவாரம் வந்த போது பாம்பாட்டி சித்தர் பற்றி அறிந்தவர்கள் மலை மேலே நவரத்தினம் மாணிக்க கல் உடைய நாகசர்ப்பம் உள்ளது எனவும் , இந்த பாம்பை பிடித்தால் கோடிஸ்வரனாகி விடலாம் என ஆசைகூற பாம்பாட்டி சித்தருக்கும் ஆசை ஏற்பட மருதமலை ஏறி மாணிக்கல் உடைய பாம்பை தேடினார்.
 
அப்போது திடீரென பலத்த சிரிப்பொலி கேட்டுத் திரும்பினார். அங்கே மிகப் பிரகாசமான ஒளியோடு சாட்டைமுனி சித்தர் நின்றார். 'இங்கு எதைத் தேடுகிறீர்கள்?' என்று வினவினார். அதற்கு பாம்பாட்டி சித்தர் 'நான் நவரத்ன பாம்பைப் பிடிக்க வந்தேன், அதைக் காணவில்லை' என்றார். இதைக் கேட்ட சாட்டைமுனி சிரித்தார். 'நவரத்ன பாம்பை உனக்குள் நீயே வைத்துக் கொண்டு வெளியே தேடுகின்றாயே! இது பயனற்ற செயல் அல்லவா! மிகுந்த உல்லாசத்தைத் தரக்கூடிய ஓர் பாம்பு எல்லோர் உடலிலும் உண்டு, ஆனால் யாரும் அதை அறிவதில்லை. அதனால் வெளியில் திரியும் இந்தப் பாம்பை தேடுவதை விட்டுவிட்டு, இல்லாத பாம்பைத் தேடி ஓடாதே' என்றார். அப்படியா? என்றவாறே வியந்து சட்டமுனியை நோக்கி ''எமக்கு அதை காண அருள்வீரா'' எனக்கேட்க, குண்டலினி, கூடு விட்டு கூடுபாய்தல், பிராயணமப் பயிற்சிகளை பாம்பாட்டி சித்தர்க்கு சொல்லி கொடுத்தார். எல்லாவற்றையும் கேட்டு உண்மையை உணர்ந்த பாம்பாட்டியார் சித்தரின் காலில் விழுந்து வணங்கினார். சட்டைமுனி சித்தர் அருள்புரிந்து விட்டு மறைந்தார்.


பாம்பாட்டி சித்தர்க்கு முருகப்பெருமான் மருதமலையில் மருதமரத்தடியில் பெருகும் மருததீர்த்தம் அளித்து சர்ப்ப ரூபத்தில் காட்சி கொடுத்ததாக வரலாறுகள் உண்டு. மருதமலை முருகர் சன்னதிக்கும் சித்தர் குகைக்ககும் வழி உள்ளதாகவும், அதன் வழியே பாம்பாட்டி சித்தர் தினமும் முருகப்பெருமானை தரிசிப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றது. இவரது படைப்புகள் பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள், சித்தராரூடம், பாம்பாட்டி சித்தர் வைத்திய சாத்திரம் ஆகியனவாகும்.
 
'பிறப்பையும் இறப்பையும் அறுத்துவிட யான்
பெருமருந்து ஒன்று சொல்வேன் பெட்புடன் கேளாய்
திறப்புடன் மனப்பூட்டுஞ் சிந்தைக் கதவும்
திறந்திடும் வகையறிந்து ஆடாய் பாம்பே!’

 
- பாம்பாட்டிச் சித்தர்.
 
பிறப்பும், இறப்பும் இல்லாத பிறவா பேரின்ப நிலையை அடைய வேண்டுமானால் முதலில் மனதின் பூட்டைத் திறந்து அங்கே நிறைந்திருக்கும் அழுக்குகளை அகற்றி, நிரந்தர ஜோதியான இறையுணர்வு நிரம்பிட, நிறைந்த சிந்தனையுடன் மனதை திறந்தே வைக்கக் கூறுகிறார்.
 
பூட்டைத் திறந்தால்தான், கதவைத் திறக்க முடியும். மனம் பூட்டுப் போன்றது. பூட்டைத் திறக்கும் சாவிதான் மேலான குருநாதரின் தொடர்பு. அவரது அருளினால் பூட்டுத் திறந்து விடும். பின் அவரது நல்ல அறிவுரைகள் நெறிப்படுத்துவதால் சிந்தைக் கதவும் திறந்து விடும். இறைவன் எளிதாக உள்ளே நுழைந்து விட்டால் எல்லாப் பிறப்பும் நீங்கி விடும் என்கிறார்.
 
வாழ்வின் நிலையினையும், உடலின் தன்மை, உலகமாயை,  நிலையானவை எவை நிலையற்றவை எவை என்றும் பல்வேறு பாடல்கள் பாடியுள்ளார். பாம்பாட்டி சித்தர் 123 வருடங்கள் 32 நாட்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது..
 
மருதமலையில் முருகனின் அருள்பெற்ற பாம்பாட்டிச் சித்தர், முருகனுக்கு புதிய சிலை வடித்தார் என்றும், இந்த சிலையே மூலஸ்தானத்தில் இருக்கிறது, இரண்டு கரங்களுடன் உள்ள இவர், பழநி முருகனைப் போலவே, கையில் தண்டத்துடன், இடதுகையை இடுப்பில் வைத்தபடி தண்டபாணியாக காட்சி தருகிறார். தலைக்கு பின்புறம் குடுமி உள்ளது. காலில் தண்டை அணிந்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். தினமும் ராஜ அலங்காரம், விபூதிக்காப்பு, சந்தனக்காப்பு என மூன்றுவித அலங்காரங்களுடன் காட்சி தருவார். விசேஷ நாட்களில் வெள்ளிக்காப்பும், கிருத்திகை, தைப்பூசம் நாட்களில் தங்க கவசமும் அணிகிறார். அர்த்தஜாம பூஜையில் மட்டுமே இவரை தண்டாயுதபாணியாக சுய ரூபத்தில் தரிசிக்க முடியும். அப்போது ஆபரணம், கிரீடம் என எதுவும் இல்லாமல், வேட்டி மட்டும் அணிவிக்கின்றனர். அருணகிரியாரால் பாடப்பெற்றவர் இவர். இத்தலம் "ஏழாம்படை வீடாக' கருதப்படுகிறது.
 
மருதமலை முருகனை மனமுருக வேண்டிக்கொண்டால் கல்யாண பாக்கியம் குழந்தை பாக்கியம் ஆகியவை கைகூடுகின்றன. நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் திருமணத் தடை ஏற்படுவோர் இத்திருக்கோவில் சுவாமிக்கு பொட்டுத்தாலி, வஸ்திரம் வைத்து கல்யாண உற்சவம் நடத்தினால் கட்டாயம் விரைவில் திருமணம் நடக்கும். குழந்தை இல்லாத தம்பதியினர் ஐந்து வாரம் வெள்ளிக்கிழமை தோறும் வழிபாடு செய்தால் நிச்சயம் முருகனின் அருள் கிடைக்கும். நோய் நீக்கம் ஆயுள் பலம் கல்வி அறிவு செல்வம் வேண்டுதல் விவசாயம் செழிப்பு உத்தியோக உயர்வு ஆகியவற்றைப்பெற இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள். நேர்த்தி கடன் அபிஷேகம் கிருத்திகை அன்னதானம் காவடி எடுத்தல் பால்குடம் எடுத்தல் மொட்டை எடுத்தல் பொங்கல் படைத்தல் சுவாமிக்கு சந்தனகாப்பு பஞ்சாமிர்த அபிசேகம் பால் அபிசேகம் அன்னதானம் வழங்குவது நெய் விளக்கு ஏற்றுதல் பால்குடம் எடுத்தல் காவடிஎடுத்தல் அபிசேக ஆராதனைகள் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. தவிர சண்முகார்ச்சனை கார்த்திகை விரதம் இருத்தல் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் இறைவனுக்கு செய்யலாம். வசதி படைத்தவர்கள் கோயில் திருப்பணிக்காக பொருள் தருவதும் வழக்கமாக உள்ளது.
 
இத்திருக்கோவிலில் வழிபாட்டு முறை காமிகா ஆகம பிரகாரம், தினசரி பூஜைகள் செய்யப்படுகிறது. காலையில் 6.00 மணிக்கு உஷக்காலம் (விஸ்வரூப தரிசனம்) காலை 9.00 மணிக்கு காலசந்தி, மதியம் 12.00 மணிக்கு உச்சிக்காலம் மாலை 5.00 மணிக்கு சாயரட்சை மற்றும் இரவு 8.30 மணிக்கு அர்த்தஜாமம் (இராகாலம்) ஆகிய பூஜைகள் செய்யப்படுகிறது. மதியம் 1.00 மணி முதல் 2.00 மணிவரை திருக்கோவில் காப்பீடுதல் செய்யப்படுகிறது.
 


குமரன் வீற்றிருக்கும், குன்றிருக்கும் மலைகளில் மருதமலைக்குத் தனிச் சிறப்பு உண்டு. இந்த மலையில், மட்டுமே தேரோட்டம் உண்டு. மற்ற மலைகளில் தங்க ரதம் மட்டுமே வலம் வரும். இங்குள்ள தேர் 20 அடி உயரம், 12 அடி அகலம், 10 டன் எடையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
மருதமலை முருகன் கோவிலில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் தங்கத்தேர் புறப்பாடு நடந்து வருகிறது. சுமார் 16 1/2 அடி உயரத்தில் ரூ.1.08 கோடி மதிப்பில் தங்க ரதம் செய்யப்பட்டு உள்ளது. தங்க ரதத்தில் ஜொலிக்கும் முருகனை தரிசனம் செய்ய கண் கோடி வேண்டும் என்பது போல் பக்தர்கள் மனமுருகி வேண்டி செல்கிறார்கள். தங்கத் தேரை நேரில் தரிசிப்பது அப்படி ஒரு ஆனந்த அனுபவம். அனைவருக்கும் இதை காணும் வாய்ப்பு கிடைபபதில்லை.
 
இக்கோவிலில் முக்கிய திருவிழாக்கள் தைப்பூசப் பெருவிழா தை மாதம் பத்து நாள் திருவிழா ஐந்து லட்சம் பக்தர்கள் கூடுவர். தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கார்த்திகை தீபம் ஒரு நாள் விழா இரண்டு லட்சம் பக்தர்கள் கூடுவர். கந்த சஷ்டி விழா ஆறு நாள் உற்சவம், ஐப்பசி மாதம் பெருமளவில் பக்தர்கள் கூடுவர். பங்குனி உத்திரம் ஒரு நாள் விழா பல்லாயிரம் பக்தர்கள் கூடுவர், கிருத்திகை, தமிழ்வருடப் பிறப்பு, ஆங்கில வருடப் பிறப்பு நாட்களிலும் தீபாவளி பொங்கல் போன்ற விசேச நாட்களில் பெரிய அளவில் பக்தர்கள் கூட்டம் திரள்கிறது.
 
ஏனெனில் முருகனின் அகராதியில் தண்டித்தல் என்ற ஒன்றே கிடையாது. அருள் செய்வது மட்டும்தான் அவனுக்கு தெரியும். அசுரர்கள் அனைவரும் இறை அவதாரங்களால் வதம் செய்யப்பட்டது தான் வரலாறு. ஆனால், சூரபண்மனை முருகன் வதம் செய்யாமல் அருள் செய்து தன்னகத்தே வைத்துக்கொண்டான். இது எந்த தெய்வத்திடமும் இல்லாத சிறப்பு. அசுரர்களுக்கே அருள் செய்பவன் தன்னை நாடி வந்தோரை கைவிடுவானா?
 
உங்களுக்கு எத்தனை பிரச்னைகள் இருந்தால் என்ன ?  ஏதேனும் மலை மீதுள்ள முருகன் கோவிலுக்கு ஓடுங்கள். படியேறி அவனை தரிசியுங்கள். ஒவ்வொரு படி ஏறும் போதும் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் உங்கள் கண் முன்னே வரவேண்டும். நேரத்தை வீணடித்தது, ஆதாயத்திற்காக தகுதியற்றவர்களை புகழ்ந்தது, நல்லோர்களை வேதனையுறச் செய்தது, ஊன்சுவை உண்டு உடல் வளர்த்தது, கடவுளையும் கடமையையும் மறந்து களித்திருந்தது, கோள் சொல்லியது, பொறாமைப் பட்டது, பிறர் மீது வீண் பழி சுமத்தியது, கடுஞ்சொல் பேசியது. தாய் தந்தையரை புறக்கணித்தது, விலை மகளிரை அணைத்தது, பிறன் மனை நோக்கியது, தீயோரோடு சேர்ந்திருந்தது. இப்படி அவரவர் தாங்கள் செய்த பாவங்ககள் அனைத்தையும் முருகன் காலடியில் சமர்பித்து மன்னிப்பு கோர வேண்டும்.
 
பாவம் செய்யாத மனிதர் என்று உலகில் யாரும் இல்லை. அறிந்தோ, அறியாமலோ அனுதினமும் பாவக்கணக்குகளை ஏற்றிக்கொண்டே போகிறோம். எறும்பு, ஈ, கொசு என எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் இறைவன். அவற்றிற்கு நம்மையும் அறியாமல் துன்பம் கொடுக்கும்போது, நம் பாவக்கணக்கும் சேர்ந்துவிடுகிறது. அவற்றைக் களைய இறைவன் நமக்கு பல வாய்ப்புகளையும் அளித்திருக்கிறார். இனியாவது பாவங்கள் செய்யக் கூடாது என்று சங்கல்பம் எடுப்பதும் முக்கியம்.
 
“நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். என் தவறுகள் அனைத்திற்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி தவறு செய்யமாட்டேன். உன்னை விட்டால் எனக்கு வேறு கதி இல்லை. காப்பாற்று கந்தா!” என கதறுங்கள். தினசரி கந்தசஷ்டி கவசம், அல்லது கந்தரலங்கராம், கந்தரனுபூதி இப்படி ஏதேனும் ஒன்றை படித்து வரும் வழக்கத்தை மேற்கொள்ளுங்கள். அவ்வளவு தான் நீங்கள் செய்யவேண்டியது. முருகனின் அருட்பார்வை உங்கள் மீது படும். உங்கள் பிரச்னைகள் யாவும் சூரியனை கண்ட பனி போல மறைந்துவிடும். இது சத்தியம்.
 
கந்தனுக்கு அரோகரா !
கடம்பனுக்கு அரோகரா !!
வேலனுக்கு அரோகரா !!!
முருகனுக்கு அரோகரா !!!!
 
மருதமலை ஆண்டவனுக்கு அரோகரா...!
 
(மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலை பொது மக்கள் 0422-2422490 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெறலாம்.)


 
ச.பாலகிருஷ்ணன், கோவை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com