மார்கழியில் ஒரு மலைப்பயணம்! வெள்ளியங்கிரி!

காலை முதல் தொடர்ந்து மலையில் ஏறிக்கொண்டிருப்பதால் அனைவருக்கும் நல்ல பசி
மார்கழியில் ஒரு மலைப்பயணம்! வெள்ளியங்கிரி!

காலை முதல் தொடர்ந்து மலையில் ஏறிக்கொண்டிருப்பதால் அனைவருக்கும் நல்ல பசி ஏற்பட்டது அதனால் நாங்கள் கொண்டுவந்த பழங்களையும், ஊறவைத்த தானியங்களையும் சாப்பிட்டு பின்பு மூலிகைகளின் சாரம் மிகுந்த நீரை பருகினோம் உடல்நலம் சீரானது. எண்ணெயில் தயாரித்த உணவுப் பொருட்களைத் தவிர்த்தல் நலம். இல்லையெனில் மலை ஏறும் போது நிறைய நீர் அருந்த வேண்டி வரும். நீர் அதிக அளவில் அருந்தினால் மலை ஏறுவது சிரமமான காரியம் ஆகிவிடும்.

சிறிது நேரம் ஓய்வுக்கு பின் பயணத்தை தொடங்கினோம், அடுத்து நாங்கள் வழுக்குப் பாறையை அடைந்தோம், ஒரு அடர்ந்த காட்டை உடைய மலையின் சரிவில் உள்ள பாறை முடிவுதான் இந்த வழுக்குப் பாறை. பெயருக்கு ஏற்ற சரிவும், வழவழப்பும் கூடியது இந்தப் பாறை. மரங்களற்று பெரிய பாறையில் சிறிய அளவில் படிகள் போன்று செதுக்கிய அமைப்பை உடையது. இந்தப் பாறையைக் காலையில், அல்லது மாலையில் கடப்பது சுலபம். வெய்யிலில் ஏறினால் கால் கொப்பளித்து விடும். இம்மலையிலும் இரண்டாவது மலையில் உள்ள தாவரங்களே காணப்படுகின்றன. கைதட்டி சுனை அடைந்து, அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்தோம். கைதட்டி சுனை என்பது மூன்று பெரிய பாறைகளுக்கு நடுவில் ஒரு மூங்கில் தப்பையைச் சொருகி வைத்துருப்பார்கள். அதில் குழாயில் கொட்டுவது போல தண்ணீர் கொட்டும். இந்த தண்ணீர் பாம்பாட்டி சுனைத் தண்ணீரை விட அதிகமாகவும், சுவையாகவும் இருக்கும். கை தட்டினால் தண்ணீர் வேகமாக வரும் என கூறுவது உண்டு.

ஒவ்வொரு மலை முடியும் இடம் தொடங்கும் இடம் என எந்தவிதமான அரிதியும் குறியீடும் இல்லை. ஒருவிதமான கோரைபுற்கள் அடர்ந்து வளர்ந்த இடம் வந்தால் அது நான்காம் மலையின் தொடக்கம் என அறியலாம். இம்மலையை ஒட்டன் சமாதி மலை, திருநீர் மலை எனவும் கூறுவர். மலையின் மேற் பரப்பு வெண்மையான திருநீரை ஒத்த தரைப் பகுதியைக் கொண்டவை. இந்த விபூதி மலையில் ஏராளமான பக்தர்கள் நிலத்தைத் தோண்டி விபூதி சேகரித்திருக்கிறார்கள் என்பதை அங்கிருந்த குழிகள் எடுத்துக்காட்டின. என்னைப் பொறுத்தவரை, அவை குறிஞ்சித் தாய் உடலில் ஏற்படுத்தப்பட்ட காயங்கள். அதனால், நாங்கள் அதைச் செய்யவில்லை. அந்த மண்ணைத் தொட்டு எங்கள் நெற்றியில் பூசிக்கொண்டோம்.

பல முறை வந்திருந்தாலும் இந்த முறை தான் எங்களுடன் பைரவர்கள் பயணித்த அனுபவம் கிடைத்தது, கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும் இரண்டு நாய்கள் எங்களுக்கு துணையாக அடிவாரத்தில் இருந்து கூடவே வந்தது, பைரவர் எங்களை வழிநடத்திச்சென்றது ஆச்சரியமாக இருந்தது.

ஐந்தாவது மலையை பீமன் களியுருண்டை மலை என அழைப்பர். ஒரு பெரிய பாறை களியுருண்டை வடிவில் உள்ளதால் இப்பெயர் பெற்றது. இம்மலையில் செண்பக மரங்கள், குறிஞ்சிப் பூ செடிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. பாதையின் வடக்குப் பகுதியில் அடர்ந்த சீதை வனம் அமைந்துள்ளது. ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் சமவெளி போன்ற பகுதியே இம்மலையில் அதிகம். இப்பகுதியில் பயணிக்கும் போது, கோடை காலத்திலும் கடுங்குளிருடன் அதிவேகத்துடன் காற்று வீசுவதை உணர முடியும். இங்கு வனவிலங்குகள் அதிகம் என்றாலும் யாரும் அவை தாக்கி இறந்தது கிடையாது. ஆனால் இங்கு அவ்வப்போது கனத்த ஊய் என்ற ஓசையுடன் அடிக்கும் பனிப்புயல் ஒன்றுதான் இங்கு ஆபத்தானது. சில சமயம் நம்மை விறைப்படையச் செய்ய வைக்கும். இந்தப் பனிப்புயல் அடிக்கும் போது அனுபவம் மிக்கவர்கள் அங்கு இருக்கும் குகைகளில் சென்று பதுங்கிக் கொள்வார்கள். இல்லை என்றால் காற்று அடிக்கும் திசையில் பாறைகளின் பின்னால் குறுகி உட்கார்ந்து கொள்வார்கள்.

நாங்கள் தொழிற்சாலையில் பணிபுரிவதால் எப்போதும் காலில் ஷூ அணிந்திருப்போம் அதனால் வெறும் காலில் நடப்பதற்கு சிரமமாக இருந்தது, இந்த சூழ்நிலையில் பஞ்சாச்சர மந்திரமே துணையாக இருந்தது, அடுத்து ஆறாவது மலையை அடைந்தோம், இதை சந்தன மலை என அழைக்கின்றனர். காரணம் இதன் நிலப்பரப்பு சந்தனத்தின் நிறத்தை ஒத்திருப்பது தான். வாசனைப் புற்கள், கற்றாழை, கற்பூர வல்லி, மிளகு பலாமரம் போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்த தாவரங்கள், மரங்கள் அதிக அளவில் உள்ளதைக் காணலாம். பாதையின் இருபுறங்களிலும் சமவெளிப் பகுதிகளிலும் புற்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இம்மலையின் முடிவில் ஆண்டி சுனை எனப்படும் பிரம்பி தீர்த்தம் உள்ளது. இந்த சுனை தீர்த்தம் தான் ஈசனின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது,

நாங்கள் உடல் சோர்வடைந்த நிலையில் நீராட போகிறோம் என்ற உற்சாகத்தில் ஆண்டி சுனையை அடைந்தோம். ஆண்டி சுனை என்பது காட்டுக்குள் இருந்து ஓடிவரும் காட்டாறு. இது மழைக்காலத்தில் காட்டாற்று வெள்ளமாகவும், நாங்கள் போகும் காலங்களில் சிறு வாய்க்கால் போல விளங்கும். இதில் இந்த இடத்தில் அதனுடன் பாறைகளுக்கு அடியிலும் நீர் சுரக்கும். மிகவும் குளிர்ந்த நீர். தண்ணீர் அதிக ஓட்டம் இல்லாமல் தடுத்து நிறுத்தி இருப்பதால், மிகவும் குளிர்ந்து, அப்பத்தான் பிரிட்ஜ்ஜில் இருந்து எடுத்த தண்ணீர் போல இருக்கும். அதில் இறங்கும் முன்னர் நாம் கொஞ்சம் தண்ணீரைக் கை, கால்களில் நனைத்துக் கொண்டால், உடல் சமனிலை அடைந்தவுடன் குளிக்கலாம். அது இல்லாமல் எடுத்தவுடன் தண்ணீரில் முங்கினால், சில சமயம் விறைத்துக் கூடப்போகலாம். அதிக ஆழம் இல்லாமல் முழங்கால் வரை தேங்கிய தண்ணீர் இருக்கும். நல்ல அற்புதமான தண்ணீர், ஆனால் இதன் ஓரங்களில் நிற்கும் போதும், சுனையில் தண்ணீர் பிடிக்கும் போதும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த சுனையில் அட்டைப் பூச்சிகள் அதிகம். கடித்தால் தெரியாது. ஆனால் காயம் ஆறுவது மிகவும் சிரமம். சுண்ணாம்பு, தீப்பெட்டி எடுத்து செல்வது நல்லது. சுண்ணாம்பு தடவினாலும், தீக்குச்சி சூட்டுக்கும் தான் கடிக்கும் அட்டைப்பூச்சி நம் உடலை விடும். நாங்கள் பகல் பதினொன்றரை மணிக்கு குளித்ததால் அந்த பயம் இல்லை. குளித்தபின்பு உடலும் மனமும் புத்துணர்வு அடைந்தது.

பனிப்பொழிவு குறைவாக இருந்ததால் அங்கிருந்து பார்க்கும் போது ஏழாவது மலையின் முழு தோற்றம் அருமையாக காட்சியளித்தது, வெள்ளியங்கிரி மலை கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரத்தில் 6 கி.மீ மலைப்பயண தூரத்தில் அமைந்துள்ளது, சிவபெருமானே வந்து தவம் புரிந்த இடமென்றும், சித்தர்கள், யோகிகள், ஞானிகள் பலரும் காலங்காலமாய் தவம்புரிந்தும், வாழ்ந்தும், சூட்சுமத்தில் இயங்கியும்வருவதால் இந்த மலை சிவரூபமாகும், தவரூபமாகவும் திகழ்கிறது.

இம்மலையை மனித உடலாக பார்த்தால் முதல்மலை பிரணவ சொரூபம் 'மூலாதாரம்' வெள்ளிவிநாயகர் உறைவிடம். இரண்டாம் மலை 'சுவாதிஷ்டானம்' பாம்பாட்டிச் சுனை. மூன்றாம் மலை 'மணிப்பூரகம்' அக்னிஅம்சம், கைதட்டிச்சுனை. நான்காம் மலை 'அநாகதம்' ஒட்டர் சித்தர் சமாதி உள்ள இடம். ஐந்தாம் மலை 'விசுக்தி நிலை' பீமன் களியுருண்டை மலை.ஆறாம் மலை 'ஆக்ஞை நிலை' சேத்திழைக்குகை, ஆண்டி சுனை. ஏழாவது மலை 'சஹஸ்ரஹாரம்' சுயம்புலிங்கம், (வெள்ளியங்கிரி ஆண்டவர்). வெள்ளியங்கிரியின் ஏழு மலைகளிலும் மனி்த உடலில் உள்ள மேற்கண்ட ஏழு சக்கரங்களின் அம்சங்கள், ஒவ்வொரு மலையிலும் ஒவ்வொரு ஆதாரத்தின் அம்சமா௧ அடங்கியுள்ளதாக் ஆன்மீகச் சான்றோர்கள சொல்வதுண்டு்.

இம்மலையை சுவாமிமுடி மலை என்பர். இம் மலையில் செங்குத்தான படிகள் இல்லை. ஆனால் மண் மற்றும் பாறைகள் நிறைந்த சரிவான பாதை. சில இடங்களில் கைகளை ஊன்றி ஊர்ந்தும் தவழ்ந்தும் செல்ல வேண்டும். பாதையின் இருபுறங்களிலும் புற்கள் மற்றும் குறிஞ்சிப்பூ செடிகள் பூத்துக் குலுங்குவதை காணலாம். இது மேகங்களும் சூழ , வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால்  ‘வெள்ளியங்கிரி’ என்ற பெயர் பெற்றது. ஏழாவது மலை மீது செல்லையில் நீர் மேகங்கள் நம்மை தழுவி கடந்து செல்லும். சிறுவாணி ஆறு, அணை, வனங்கள் என்று கொள்ளை அழகு நம் கண் முன் விரிந்து நிற்கும்.

ச.பாலகிருஷ்ணன்

(நிறைவுப் பகுதி அடுத்த பதிவேற்றத்தில்....)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com