காக்க காக்க கனகவேல் காக்க! பூசத் திருவிழா சிறப்புப்  பகுதி 1

தை  மாதம்  முதல்  நாளிலிருந்து  அதாவது  உத்தராயன  காலத்தில், வான்வெளியில்
காக்க காக்க கனகவேல் காக்க! பூசத் திருவிழா சிறப்புப்  பகுதி 1

‘காக்க  காக்க  கனகவேல்  காக்க!

நோக்க  நோக்க  நொடியில்  நோக்க!

தாக்கத்  தாக்கத்  தடையறத்  தாக்க!’

தை  மாதம்  முதல்  நாளிலிருந்து  அதாவது  உத்தராயன  காலத்தில், வான்வெளியில்  சூரியன்  தன்  பயணத்தை  மாற்றிக்கொள்கிறான். வடகிழக்காகப்  பயணிக்கும்  சூரியனின்  பிரகாசம்  இக்காலக்கட்டத்தில் அதிகரித்து  மிகப்பிரகாசமாக  இருக்கும்  என்று  வேதம்  சொல்கிறது அறிவியலும்  அதை  ஏற்கிறது.    

தை  மாதம்  தமிழர்களுக்கு  புனிதமான  மாதமாகும்    முருகனுக்கு   உகந்த  நாள் தைப்பூச  தினம்  என்பர்.    தை  பூசம்  ஒவ்வொரு வருடத்திலும்  தை  மாதம்  பூச நட்சத்திரமும்  பவுர்ணமி  திதியும்  கூடி  வரும்  நன்நாளில்  முருகனுக்கு எடுக்கப்படும்  விழாவாகும்.   அன்றைய  தினம்  ‘காஸ்மிக்  எனர்ஜி’  எனப்படும் மெய்காந்த   அலைகளின்  தாக்கம்  அதிகமாக  இருக்கும்.    நட்சத்திர வரிசையில்  பூசம்  எட்டாவது  நட்சத்திரமாகும்.    இவ்விழா  முழு  நிலவு பூச நட்சத்திரத்திற்கு  வரும்  நேரம்  நடத்தப்படுகிறது.    தைப்பூச நன்னாளில் அதிகாலையில்  கிழக்கில்  சூரியனும், மேற்கில்  முழு நிலவும், ஒரே நேர்கோட்டில்  அமையும்.  

தை  மாதம்  பூச  நட்சத்திரத்தன்று,  உலகெங்கும்  உள்ள  முருகப் பெருமான் ஆலயத்தில்  ‘ஓம்’  என்ற  பிரணவத்தின்  பொருளைப்  போதித்த  முருகப் பெருமானை  வழிபட்டால்,  சேமிப்பு  உயரும், செல்வாக்கு  அதிகரிக்கும்.   ஆசைகள்  நிறைவேற  வேண்டுமானால், பூசத்தில்  வழிபாடு  வைத்துக் கொள்ளுங்கள்  என்று  சொல்வார்கள்.   ஒவ்வொருவருக்கும்  ஒவ்வொரு விதமான  ஆசைகள்  உண்டு.    அந்த  ஆசைகளை  நிறைவேற்றுவது  தெய்வ வழிபாடுகள்தான். நமது ஜாதகத்தில்  பாக்ய  ஸ்தானாதிபதி  இருக்கும் நிலையை  அறிந்து,   அதன்  பலம்  அறிந்து,  நாம்  வழிபாடுகளை மேற்கொண்டால்  வளர்ச்சி  கூடும். இதைக்  காட்டிலும்,  ஒவ்வொரு மாதங்களிலும்  வரும்  சிறப்பு  நட்சத்திரங்கள்,  சிறப்பு  திதிகளில்  அதற்குரிய தெய்வங்களைத்  தேர்ந்தெடுத்து  வழிபட்டால்  உடனுக்குடன்  நற்பலன்களைக் காணலாம்.   அந்த  அடிப்படையில்  வரும்  பிப்ரவரி  9  தை  27  வியாழக்கிழமை தைப்பூசம்  வருகிறது.  

அந்த  தைப்பூச  திருநாளில்  முருகப்  பெருமானை  கொண்டாடுவதற்கு  காலை, மாலை இருவேளைகளிலும்  குளித்து  கவசப் பாராயணங்களைப்  படித்து வழிபட  வேண்டும். ‘வேலை வணங்குவதே  வேலை’  எனக் கொண்டவர்களுக்கு நாளும்,  பொழுதும்  நல்லதே  நடைபெறும்    பூசத்தன்று  கந்தப்பெருமானின்   ஆலயங்களுக்கு  நடந்து  சென்று  வழிபட்டு  வந்தால்,  ஞாலம்   போற்றும் வாழ்க்கை  அமையும்.    நடந்து  செல்ல  இயலாதவர்கள்,   உள்ளூரில்  இருக்கும் சிவாலயத்திற்குச்  சென்று  அங்குள்ள  முருகப்பெருமானை  வழிபட்டு  வரலாம். 

பன்னிரு  கரத்தாலும்  அவன்  அள்ளிக்  கொடுப்பதால்தான்,  அவன் ‘வள்ளல்’ என்று  பெயர்  பெறுகிறான்.    பூசம்  நட்சத்திரமன்று  தான்  தாய்   உமையவள் முருகனிடம்  சக்திவேல்  கொடுத்தாள்.    அந்த  வேலால்   சூரபத்தமனை வென்று அவனை  சேவலும்,  மயிலுமாக  மாற்றிய   பெருமை  முருகப்பெருமானுக்கு உண்டு. பூசத்தன்று  முருகப் பெருமானை  நாம்  நினைத்தாலே  போதும்   போராட்டமான  வாழ்க்கைமகிழ்ச்சியும்  அமைதியும்  நிறைந்த  பூந்தோட்டமாக மாறும்.  

தைப்பூச  திருநாளில்  நடந்த  நிகழ்வுகள்  பல!  அதில்  சில…

ஒரு  யுகத்தின்  துவக்கத்தின்போது,  தைப்பூசத்  திருநாளன்றுதான் முதலில் நீரும்,  அதிலிருந்து  உயிர்களும்  தோன்றியதாகப் புராணங்கள்  கூறுகின்றன. இதை உணர்த்தவே பல்வேறு திருத்தலங்களில் தெப்போற்சவம் நடைபெறுகிறது. இந்த  நாளில்தான்  சூரியனும்,  கடகத்தின்  நடு நட்சத்திரமாகிய பூசமும் ஒன்றையொன்று  மகரத்தில்  சந்திக்கும்  அற்புதம் நடைபெறுகிறது.எல்லாவற்றுக்கும்  மேலாக  தைப்பூசம் முருகப் பெருமானுக்குரிய விழாவாக முருகன்  திருத்தலங்களில் கொண்டாடப்படுகிறது  

சூரனை  வதம்  செய்வதற்காக  தன்  அன்னை  சக்தியிடம்  பிரார்த்தனை  செய்த முருகனுக்கு,  தன்  ஞானசக்தியால்  வேல்  வழங்கி  ஆசி வழங்கிய  திருநாள் தைப்பூசத்  திருநாள்  என்றும்  போற்றி  வழிபடுகிறார்கள்  முருகனின் அடியார்கள்.  

ஆறுமுகப்  பெருமானின்  அருளை  அடைவதற்கு  தைப்பூசம்  உகந்த  நாள்   முருகப்பெருமானின்  ஆறுபடை  வீடுகளிலும்  முருகன் அடியார்கள்  பலர் பாதயாத்திரையாகச்  சென்று  தைப்பூசத்தன்று முருகனை  தரிசித்து  விரதத்தை நிறைவு  செய்யும்  வழக்கத்தைக்  கொண்டுள்ளனர். 

நாம்  இந்த  அற்புதமான  தைப்பூசத்  திருநாளில்  ‘ஏழாம்படை  வீடாக' கருதப்படும்  மருதமலை  சுப்பிரமணியசுவாமி  திருக்கோவிலை பற்றி பார்ப்போம்.      

கோவை  நகரில்  எங்கு  இருந்து  பார்த்தாலும்  நம்  கண்களுக்கு  அற்புதகாட்சி தருவது  இயற்கை  எழில்  பொங்கும்  மேற்கு  தொடர்ச்சி  மலைதான். அந்த மலைகளுக்கு  இடையில்  கம்பீரமான  தோற்றத்துடன் மருதமலை  முருகனின் திருக்கோவில்  அமைந்துள்ளது.    தமிழ்  மரபுகளில்  மலையும்  மலை  சார்ந்த இடத்தை  குறிஞ்சி  நிலம்  என்றும்   வயலும்  வயல்  சார்ந்த  இடத்தை  மருதம் என்றும்  அழைக்கிறார்கள்.  இந்த  இரு  நில  அழகுகளையும்  தனதாக்கிக் கொண்டது  போன்ற   அற்புதமான  பெயருடன்  மருதமலை  என்று அழைக்கப்படும் ஸ்தலத்தில் முருகன் பிரகாசத்துடன் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.    ‘இருநில  மீது  எளியனும்  வாழ  எனது  முன்  ஓடி  வர வேணும்’  என  அருணகிரி  நாதர்  பாடியுள்ளார். மருதமலை   சுப்பிரமணிய சுவாமி  கோவில்  மேற்கு  தொடர்ச்சி  மலையில்  தரை   மட்டத்தில்  இருந்து ஐனூறு  அடி  உயரத்திலும்  கோவையில்  இருந்து வடமேற்கு  திசையில் பதினைந்து  கிலோ  மீட்டர்  தூரத்திலும்  அமைந்துள்ளது.   

பார்ப்பவர்கள்  மனம்  மகிழ  எழில்  கொஞ்சும்  இயற்கையான  சூழலில் அமைந்திருக்கும்  மருதமலை,  அதன்  மூன்று  புறங்களிலும்  மலை அரண்களால்  சூழப்பட்டு  உள்ளது.    கோவிலுக்கு  பின்புறம்   அமைந்துள்ள மலைகளின்  இயற்கை  அமைப்போடு  சேர்த்து பார்க்கும்  போது  மயில்  தோகை விரித்தாற்போல்  காட்சி  அளிக்கிறது.    இதனால்  முருகன்  மயில்  மீது  அமர்ந்த தோற்றம்  நம்  கண்  முன்   தெரிகிறது.    மருத  மரங்கள்  அதிகமாக காணப்படுவதால்  இந்த  மலை  மருதமலை  என  அழைக்கப்படுகிறது.    மேலும் மருதமால் வரை,  மருதவரை,  மருதவெற்பு,  மருதக்குன்று,  மருதலோங்கல்,   கமற்பிறங்கு,  மருதாச்சலம்,  வேள்வரை  என்றெல்லாம்  பேரூர் புராணத்தில் கூறப்படுகிறது.    

மலை  அடிவாரம்  வரை  தமிழக  அரசுப்  பேருந்துகள்  கோவையில் இருந்து செல்கின்றன.    மலையின்  மீது  படியேறி  கோவிலுக்கு  நடந்து  செல்லலாம், அல்லது  கோயில்  நிர்வாகத்தினரால்  ஏற்பாடு   செய்யப்பட்டுள்ள  மினி பஸ்களில்  மலைப்பாதையில்  செல்லலாம்     தனியார்  இரு  சக்கர வாகனங்களும்  கார்களும்  கட்டணம்  செலுத்தி மலைப்பாதை  மூலம்  மேலே கோயிலுக்குச்  செல்லலாம்.

கி  பி  12ம்  நூற்றாண்டில்  மருதமலைத்  திருக்கோவில் அமைக்கப்பட்டது என்றும்,  கொங்கு  நாட்டின்  24  பிரிவுகளுள்   ஒன்றான  ஆறைநாட்டின் எல்லையாக  மருதமலை  இருந்தது   என்றும்  அறியலாம்.    பேரூர்  புராணம், காஞ்சிப்புராணம்,  அருணகிரிநாதரின்  திருப்புகழ்  முதலிய  நூல்களில் மருதமலை  சிறப்பித்துக் கூறப்பட்டு  உள்ளது.    மற்றும்  தேவாரப்பாடல்  பெற்ற தலமான திருமுருகன்பூண்டி  கோயில்  கல்வெட்டுகளில்,  மருதமலை   கோயில்  12-ஆம்  நூற்றாண்டைச்  சேர்ந்ததாகத் தகவல்கள்  உள்ளன.   இக்கோவிலின்  முதன்மைக்  கடவுளான   முருகன்,  இங்கு  சுப்பிரமணிய சுவாமி  என்றும்  தண்டாயுதபாணி என்றும்  மருதாசலமூர்த்தி  என்றும் அழைக்கப்படுகிறார். முருகப் பெருமானின்  ஏழாவது  படைவீடாகக் கருதப்படும் மருதமலை, முற்காலத்தில்  கொங்கு  வேட்டுவ  மன்னர்களால் பராமரிக்கப்பட்டு  வந்தது.    தற்போது  மருதமலை  முருகன்  கோயில்தமிழ்நாடு அரசின்  இந்து  சமய  அறநிலையத்துறையின்  கட்டுப்பாட்டில்  உள்ளது . 

மருதமலை  அடிவாரத்தில்  அமைந்துள்ள  வேல்கோட்டம்  தியான  மண்டபம் என  அழைக்கப்படுகிறது.    இக்கோவிலில்  வேல்தான் மூலவர்    சுமார்  ஆறரை அடி  உயரம்  கொண்ட  அழகிய  சிற்ப  வேலைப்பாடுகளுடன்  கூடிய  வேல் கருவறையில்  பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளது.    வேலின்  தண்டுப்பகுதியில் பஞ்சபூத  சக்கரங்கள்  செதுக்கப் பட்டுள்ளன    வேலின்  முகப்பில் இயற்கையான வெளிச்சம்  விழும்   விதத்தில்,  விதானத்தில்  ஒரு  சிறிய  துவாரம்  அமைக்கப் பட்டிருக்கிறது.   முன்  மண்டபம்  ‘சரவணபவ’  எனும்  ஆறெழுத்து மந்திரத்தைக் குறிக்கும்  வகையில்  அறுகோண  வடிவில் அமைந்துள்ளது.  

மருதமலையின்  அடிவாரத்திலிருந்து  நடைபயணமாக  மலையேறி  செல்லும் பாதையில்  படிகள்  ஆரம்பிக்கும்  இடத்தில்  தான்தோன்றி  விநாயகர்  சன்னதி உள்ளது.  இச்சன்னதியில்  விநாயகர்,  சுயம்புவாக  இருக்கிறார்    யானைத்தலை மட்டும்  உள்ள  இவருக்கு  உடல்  இல்ல.     இவர்,  மலையிலுள்ள  முருகன் சன்னதியை  நோக்கி,  தும்பிக்கையை  நீட்டி  காட்சி  தருவது  விசேஷம்.   அருகில்  மற்றொரு  விநாயகர்  சிலைபிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளது    சுயம்பு விநாயகருக்கு  பூஜை செய்த  பின்பே,  பிரதான  விநாயகருக்கு  பூஜை நடக்கிறது. முருகனுக்கு  உகந்த  நாட்களான  கிருத்திகை,  சஷ்டி,  விசாகம்  மற்றும் அமாவாசை   நாட்களில்  இவருக்கும்  விசேஷ  பூஜை   நடக்கிறது.     ‘தம்பிக்கு  உகந்த  விநாயகர்'  என்றும் இவரை அழைக்கிறார்கள்.    

மருதமலை   சுப்பிரமணியரை  தரிசிக்கச்  செல்பவர்கள்  இவரை வணங்கிவிட்டுச்  செல்ல  வேண்டுமென்பது  ஐதீகம்.    இந்த விநாயகரை வணங்கிச்  சென்றால்  சரியாக  பதினெட்டு  படிகளைக்  கொண்ட  பதினெட்டாம் படி  உள்ளது.  சபரிமலைக்கு  சென்று அய்யப்பனை  வழிபட  இயலாத  பக்தர்கள் இந்த  பதினெட்டாம்  படிக்கு  வந்து  வழிபட்டு  செல்வார்கள். 

விநாயகரை  வணங்கி  சற்று  மேலே  பல  இளைப்பறும்   மண்டபங்களை கடந்து நடந்தால்  இடும்பன்  சன்னதி  வரும்,  இந்த தலத்தில்  அமைந்துள்ள  இடும்பன் கோவிலில்,  இடும்பனின்  உருவம்  உருண்டை  வடிவமாக  பெரிய  பாறையில் உள்ளது. காவடியைச்   சுமந்து  கொண்டு  இருக்கும்  தோற்றத்தில் பொறிக்கப்பட்டு  உள்ளது.  இடும்பனை  வணங்கினால்  குழந்தை  பேறு கிடைக்கும்  என்பதால் பக்தர்கள்  இடும்பனை  வணங்கிச்  செல்வார்கள்.    

இடும்பனை  வணங்கிசற்று  மேலே  சென்றால்  குதிரைக்குளம்பு  என்ற  சுவடு உள்ளது  இதற்காக  எழில்மிகு  மண்டபம்  ஒன்று  அமைக்கப்பட்டுள்ளது.     முருகப்பெருமான்  சூரர்களை  வெற்றி  கொள்ள புறப்படும்  போது  அல்லது வெற்றியுடன்  திரும்பி  வரும்  போது   குதிரைக்  குளம்புகள்  படிந்த  இடம்  எனக் கூறப்படுகிறது. உண்டியல்  பொருட்களை  திருடர்கள்  திருடிச்  செல்ல அவர்களை  முருகப் பெருமான்  தேடிச்  சென்ற  போது  ஏற்பட்ட  குதிரைக்  குளம்படியாகவும்  இருக்கலாம்  எனக்  கருதப்படுகிறது.  

அங்கிருந்து  கோயிலுக்குச்  செல்லும்  படிக்கட்டுகள்  அன்னதான   கூடத்தின் வழியாக  செல்கிறது,  இக்கோவிலில்  தினமும்  மதியம்  12-15  மணிக்கு கோவிலுக்கு  வரும்  150  பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டு  வருகிறது   வெள்ளிதோறும்  வடை  பாயசத்துடன் அன்னதானம்  வழங்கப்படுகிறது.    இதை தொடர்ந்து முடி காணிக்கை  செலுத்தி  நேர்த்திக்கடன்  செய்யும்  இடமும் உள்ளது.   மருதமலை  கோவிலுக்கு  வரும்  பக்தர்கள்  தங்களது  வேண்டுதல்   நிறைவேறிய  பிறகு  குடும்பத்துடன்  வந்து  நேர்த்தி  கடனை  செலுத்தி வருகிறார்கள்.    அங்கிருந்து  பார்த்தால்  அப்பன்  மருதமலை   ஆண்டவனின் திருக்கோவில்  ஏழுநிலை  ராஜகோபுரம்  அற்புதமாக  காட்சி  தரும்    திருத்தல சுவரில்  ஓம்  முருகா,கருணை  கடலே  கந்தா  போற்றி  என்ற  வாசகத்துடன் வண்ணவிளக்கு  அமைக்கப்பட்டுள்ளது. 

ராஜகோபுரத்திற்கு  எதிராக  மலைமேல்  வரும்  வாகனங்கள்  நிறுத்தும் இடம்  மிக  விலாசமாக  உள்ளது    ராஜகோபுரம்  வழியாக  சென்றால் சுப்பிரமணியசுவாமி  சன்னிதிக்கு  எதிராக  செல்லும்,  ஆனால்  ஆதி மூலஸ்தானத்திற்கு  நேர்  எதிராக  உள்ள  இப்பாதைவழியாக   செல்பவர்கள் முதலில்  மருதமலைக்  கோயிலின்  ஆதி மூலஸ்தானத்தை அடைவர், புராதனமான  சிவன்  கோயில்களில் சிவன்,  சுயம்புலிங்கமாக  இருப்பார். ஆனால்,  இத்தலத்தில்  முருகன்  சுயம்புமூர்த்தியாக  இருக்கிறார்.  இவருடன் வள்ளி,  தெய்வானையும்  சுயம்புவடிவில்  இருப்பது  விசேஷம். இங்கு வள்ளியின்  சுயம்பு உருவம்,  தெய்வயானையை  விட  சற்று  உயரமாகக் காணப்படுகிறது. இந்த  சுயம்பு  முருகனே  இத்தலத்தின் ஆதிமூர்த்தியை இவரது  சன்னதி  ‘ஆதி  மூலஸ்தானம்’ எனப்படுகிறது. இவருக்கு  முதல்  பூஜைசெய்யப்பட்ட  பின்பே,  பிரதான  முருகனுக்கு  பூஜை நடக்கிறது.     கிருத்திகையில்  இவருக்கு  அதிகளவில்  பாலபிஷேகம்  செய்து வழிபடுகிறார்கள். ஆதிமூலஸ்தான  கருவறை  விமானமும்,  முன்புறம் தைப்பூசக்  கல்யாண  உற்சவ  மண்டபமும்  புதிதாகக்  கட்டப்பட்டுள்ளன.  

ஆதிமூலஸ்தானத்தின்  முன்மண்டபத்திற்கும்  சுப்பிரமணியசுவாமி  சன்னிதி மண்டபத்திற்கும்  இடையே  பஞ்ச  விருட்ச  விநாயகர் சன்னிதி  உள்ளது.   பொதுவாக  அரசமரத்தடியில்  காணப்படும்   விநாயகர்  இங்கு  அரசு,  அத்தி, வேம்பு,  வன்னி,  கொரக்கட்டை  என ஐந்து  மரங்களுக்கடியில் ஐந்து முகங்களுடன்  அமைந்துள்ளார்.  

நடைபயணமாக  மலையேறி  வருவோர்  இந்த  விநாயகரைத்  தாண்டிதான் சுப்பிரமணியசுவாமி  சன்னிதிக்குச்  செல்ல  வேண்டும். பஞ்சமுக விநாயகரையும்  வழிபட்டபின்சுப்பிரமணியசுவாமி   சன்னிதிக்குச்  செல்லலாம் சுப்பிரமணிய சுவாமி  சன்னிதிக்கு  நேராக  புதியதாக  ஏழுநிலை  ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுர  கல்ஹாரம்,  ஏழுநிலை  கோபுரம், தங்கமுலாம்  பூசிய ஏழு  கலசங்கள்,  மேல்மண்டபம், ராஜகோபுரத்திற்குச் செல்லும் படிக்கட்டுகள் மற்றும் ராஜகோபுரத்திலிருந்து மேல் மண்டபத்திற்குச்செல்லும்  படிக்கட்டுகள்  புதியதாய்  இந்து  சமய அறநிலைத் துறையால்  நிர்மாணிக்கப்பட்டுள்ளது ராஜகோபுர நுழைவாயிலைத் தாண்டினால்  கல்லாலான  கொடிமரத்துக்கு  முன்  வலம்புரி விநாயகர்,  அவர்முன்  வைக்கப்பட்டுள்ள  பெரிய  மயில்முக  குத்துவிளக்கு, அடுத்து  உலோகக்  கொடிமரம்,  மயில்வாகனம்,  முன்மண்டபத்தில்   வரதராஜப் பெருமாள்  சன்னிதி,  அர்த்தமண்டபத்தில்  கருவறையின்  நுழைவாயிலின் இருபுறத்திலும்  விநாயகரும்  (இடப்புறம்)  வீர பத்திரரும் (வலப்புறம்), கருவறையில்  தண்டத்துடன்  காட்சி தரும்   தண்டாயுதபாணி  என  இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.    

இக்கோயிலை  அடைந்து  முருகன்  முன்  நிற்கும்  போது  நாம்   அடையும் மகிழ்ச்சி,  பூரிப்பு  ஆகியவற்றை  சொல்ல  இயலாது,  அழகு என்றால்  முருகன் என்பது  போல்  இந்த  அழகிய  சுப்பிரமணிய சுவாமியை  காண  கண்  கோடி வேண்டும்.

ச.பாலகிருஷ்ணன், கோவை

(இரண்டாம் பாகம் அடுத்த பதிவேற்றத்தில்...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com