விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: பிள்ளையார் சிலைகள் வைக்க 24 விதிமுறைகள் என்னென்ன?

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 அடிக்கு மேல் சிலை வைக்கக் கூடாது, ஒரு மாதத்திற்கு முன்பு தடையில்லாச் சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 24 கடுமையான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்த
கோப்புப் படம்
கோப்புப் படம்


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 அடிக்கு மேல் சிலை வைக்கக் கூடாது, ஒரு மாதத்திற்கு முன்பு தடையில்லாச் சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 24 கடுமையான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

செப்டம்பர்  2-ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. சிலைகளைச் செய்து பொது இடங்களில் வைத்து பூஜை செய்வது வழக்கம். மூன்று நாட்கள் கழித்து ஆறு, குளம் அல்லது கடலில் அந்தச் சிலைகளைக் கரைப்பார்கள். 

விநாயகர் சதுர்த்தி விழாவினைக் கொண்டாடுவதற்காக மக்கள் தயாராகி வரும் நிலையில் சிலை வைப்பது, ஊர்வலம் செல்வது தொடர்பாக 24 விதிமுறைகளை கடந்த ஆண்டே தமிழக அரசு அறிவித்துள்ளது. அதைப் பற்றி தெரிந்து நடந்துகொள்வோம்.

  • பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க காவல், தீயணைப்பு, உள்ளாட்சி மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும். 
  • சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் ரசாயனப் பொருட்களையோ, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் ரசாயன வண்ணங்களையோ சிலைகளில் பயன்படுத்தக்கூடாது.
  • சிலை வைக்கப்படும் பந்தல் எரியும் தன்மை உடையதாக இருக்கக்கூடாது. 
  • வெடி பொருட்களை சிலை அருகே வைக்கக்கூடாது.
  • சிலையின் உயரம் மேடையிலிருந்து பத்தடி வரை தான் இருக்க வேண்டும். பள்ளிகள், மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் கட்டாயமாக சிலைகள் வைக்கக்கூடாது.
  • கூம்பு வடிவிலான ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது. காலை, மாலை வேளைகளில் இரண்டு மணி நேரம் மட்டுமே பாடல்கள் ஒலிக்க ஒலிபெருக்கியைப் பயன்படுத்த வேண்டும். 
  • சட்டவிரோதமாக மின் இணைப்பை ஏற்படுத்தக்கூடாது.
  • குறிப்பிட்ட மதங்களுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பக்கூடாது.
  • ஐந்து நாட்களுக்குள் சிலை கரைக்கப்பட வேண்டும்.
  • மசூதி, தேவாலயங்கள் இல்லாத வழிகளில் விநாயகர் சிலையைக் கொண்டுசெல்ல வேண்டும். 
  • வாண வேடிக்கைகள் பயன்படுத்தக்கூடாது.
  • சிலை வைப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே ஆர்.டி.ஓ.விடம் அனுமதி பெற வேண்டும். அதற்கு முன்பு, சிலை வைக்கப்படும் இடத்தின் உரிமையாளரிடம் தடையில்லா சான்று பெற வேண்டும்.
  • தனியார் இடத்தில் இல்லாமல் வேறு இடத்தில் சிலை வைத்தால் உள்ளாட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் தடையில்லா சான்று பெற வேண்டும். 
  • சிலை வைத்தல் மற்றும் ஒலிப்பெருக்கி அமைப்பது தொடர்பாக போலீசாரிடமும், தற்காலிக பந்தல் அமைப்புகள் விதிமுறைப்படி அமைக்கப்பட்டுள்ளது என தீயணைப்பு துறையிடமும் தடையில்லாச் சான்று பெற வேண்டும்.
  • சட்டவிரோதமாக மின் இணைப்பு எடுக்கக்கூடாது. எங்கு இருந்து மின் இணைப்பு எடுக்கப்படுகிறது என்பது குறித்து மின்வாரியத்திடம் தடையில்லா சான்று பெற வேண்டும். இதுபோன்ற தடையில்லா சான்றுகளை சமர்ப்பித்து ஆர்.டி.ஓ.விடம் முன் அனுமதி பெற வேண்டும்.
  • விநாயகர் சிலைகள் வைத்து வழிபடும் போர்வையில் சட்டத்துக்கு புறம்பான செயல்கள் நடைபெறாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். 
  • அரசியல் கட்சியினரின் பெயர்களில் சிலை அமையும் இடத்தில் பெயர் பலகைகள் வைக்கக்கூடாது. 
  • சிலை வைத்திருக்கும் பொழுது எந்த அமைப்பின் மூலம் வைக்கப்படுகிறதோ அந்த அமைப்பை சேர்ந்த 2 நபர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும்.
  • பிற மத வழிபாட்டு தலங்களின் வழியே விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. 
  • போலீஸ் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உள்ளாட்சி துறை ஆகிய துறைகளால் அனுமதிக்கப்படும் இடங்களில் மட்டுமே சிலைகள் வைக்கப்பட வேண்டும். சிலைகள் அமைக்கப்பட்டு 5 நாட்களுக்குள் கரைக்கப்பட வேண்டும்.
  • வாகனங்களில் உரிய எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே ஊர்வலத்தில் செல்ல வேண்டும். 
  • சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் மற்றும் ஊர்வலப் பாதையில் பட்டாசு போன்ற வெடி பொருட்கள் பயன்படுத்தக்கூடாது.
  • விநாயகர் சதுர்த்தி விழா முடிந்தபின்னர், பூ மற்றும் அலங்காரப் பொருட்களை அகற்றிய பின்னரே சிலைகளை எடுத்துச் செல்ல வேண்டும்
  • கடல், ஏரி, குளங்களில் கரை ஒதுங்கும் சிலைக் கழிவுகளை உள்ளாட்சி துறையினர் 48 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com