ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷ தீா்த்த சுவாமிகளின் ஞான வாழ்வின் சீர்த்திருத்த சாதனைகள்!

உலகளவில் பாராட்டப்பட்ட உடுப்பி பெஜாவா் மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷ தீா்த்த சுவாமிகளின் வாழ்க்கை மற்றும் சாதனைகள்! 
ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷ தீா்த்த சுவாமிகளின் ஞான வாழ்வின் சீர்த்திருத்த சாதனைகள்!

இந்திய வேதாந்த தத்துவங்களின் பல கிளைகளில் ஒன்றான துவைத தத்துவப் பள்ளியின் நிறுவனர் ஸ்ரீ மாத்வாச்சார்யர் (கி.பி 1238 ஏ.டி - கி.பி 1317), உடுப்பியில் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலை நிறுவினார். அங்கு இறைப்பணியில் ஈடுபட எட்டு இளம் சந்நியாசிகளுக்கு  தீட்சை வழங்கினார். இதன் மூலம் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தி மார்க்கத்தைப் பற்றிய சரியான புரிதலை மக்களிடம் ஏற்படுத்த வழிவகுத்தார். இந்த எட்டு சந்நியாசிகளில் பரம்பரைதான் இப்போது பெஜாவா் மடம் என்று அழைக்கப்படுகிறது. 

ஸ்ரீமாத்வாச்சாரியரின் நேரடி சீடர்களில் ஒருவராக இருந்த ஸ்ரீ ஆதோக்ஷஜா தீர்த்தர் பெஜாவர் மடத்தின் நிறுவனர் மற்றும் முதல் பீடாதிபதி ஆவார். புகழ்பெற்ற வைணவ ஒழுக்கங்களில் தேர்ந்த மடாதிபதிகளான ஸ்ரீ விஜயத்வாஜ தீர்த்தர், ஸ்ரீ விஸ்வேஷா தீர்த்தர் மற்றும் ஸ்ரீ விஸ்வபதி தீர்த்தர் போன்றவர்களின்  வழிவந்த, ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷ தீா்த்த சுவாமிகள் பெஜாவா் மடத்தின் 32-வது மடாதிபதியாகப் பரிணமித்தார்.

ஆரம்பக் கல்வி மற்றும் சந்நியாச தீட்சை

ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷ தீர்த்த சுவாமிகள் 1931-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி, ராமகுஞ்சாவைச் சேர்ந்த இறை சிந்தனைமிகுந்த தம்பதியரான ஸ்ரீ நாராயணாச்சார்யா மற்றும் ஸ்ரீமதி கமலாமாவின் இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். பெற்றோர் அவருக்கு வெங்கடரமணன் என்று பெயரிட்டனர். குழந்தையின் சாத்விக தன்மையால் அனைவரும் பெரிதும் ஈர்க்கப்பட்டனர்.

பெஜாவர் மடத்தின் அப்போதைய தலைவரான ஸ்ரீ ஸ்ரீ விஸ்வ மான்ய தீர்த்த சுவாமிகள்  வெங்கடரமணருக்கு 8-வது வயதிலேயே சந்நியாச தீட்சை வழங்கினார். 1938-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி, ஹம்பிக்கு அருகிலுள்ள சக்ரதீர்த்தத்தில் இந்த  தீட்சை வழங்கப்பட்டது. தீட்சைப் பெற்றபின்னர், வெங்கடரமணர் ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷ தீர்த்த சுவாமிகள் ஆனார். இளம் சந்நியாசியின் ஆரம்பக் கல்வி உடுப்பியில் தொடங்கியது. பண்டாரகேரி மடத்தின் தலைவரான ஸ்ரீ ஸ்ரீ வித்யமன்ய தீர்த்த சுவாமிகள் குருவாக அருள் பாலித்து அனைத்து சாஸ்திரங்களையும் இந்த இளம் சந்நியாசிக்கு எட்டு ஆண்டுகளாகக் கற்பித்தார், மேலும் அவரை வேதாந்தம் மற்றும் சாஸ்திரங்களின் அறிவார்ந்த மற்றும் புத்திசாலித்தனமான அறிஞராக மாற்ற உதவினார். பால்ய சுவாமிகள் அதி விரைவில் நியமம், வேதாந்தம் மற்றும் தத்துவத்தின் பிற கிளைகளில் அசாதாரண புலமை பெற்று அறிஞரானார்.

ஸ்ரீ வித்யமன்ய சுவாமிகளின் ஆசீர்வாதத்துடன் சந்நியாச தர்மத்தை தேர்ந்தெடுத்தார் 

குரு மெச்சிப் போற்றும் சீடராக விளங்கினார் சுவாமிகள். ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷ தீர்த்த சுவாமிகளின் சாஸ்திர அறிவு மற்றும் புலமையால் மிகவும் அறிவார்ந்த பண்டிதர்கள் கூட திகைத்துப் போனார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இறையருளைப் பரிபூரணமாகப் பெற்றவர் சுவாமிகள். பன்முகத் திறமையுடைய அவர், வேத சாஸ்திரங்களைக் கற்றுணர்ந்த சீலராய் விளங்கினார்.

சுவாமிகளின் அறிவுக்கூர்மையால் விவாதத்தில் தோற்கடிக்கப்பட்ட அறிஞர்களின் பட்டியல் மிகப் பெரியது. கொச்சி மகாராஜா, புனே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஸ்ரீ தத்தோ வாமனா போத்தர், காசி மகாமஹோபாத்யா, ராஜராஜேஸ்வர சாஸ்திரிகள், ராமச்சந்திர சாஸ்திரிகள், கதரிங்கர் ஜாகுங்கா மற்றும் பலருடன் சுவாமிகள் நடத்திய விவாதங்கள் வரலாற்று பதிவு.  ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷ தீர்த்தரின் குரு ஸ்ரீ வித்யாமன்யா தீர்த்த சுவாமிகள் தம் சீடரின் அறிவுத்திறன் கண்டு வியந்தோகினார். குறிப்பாக திருவாரி விஜயேந்திராச்சார்யாந்து மற்றும் ஸ்ரீ மைசூர் ராமச்சந்திர சாஸ்திரியுடனான விவாதத்தின் போது, தம் சீடரின் மொழிப் பிரயோகம் மற்றும் வாக்குத்திறன் கண்டு வியப்படைந்தார்.  சுவாமிகளின் அசாதாரண கல்வியறிவு, படைப்பாற்றல்  மற்றும் கவிதைத் திறன்களால் மக்களின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தார். 25 வயதில் “சம்பா விஜயா” என்ற சமஸ்கிருத கவிதை எழுதினார். இளம் வயதிலேயே மைசூர் மகாராஜாவால் உருவாக்கப்பட்ட நஞ்சநாகுட்டில் நடைபெற்ற அகமாத்ரயா மாநாட்டின் தலைவராகப் பொறுப்பேற்றார். இந்த மாநாட்டில்தான் முதல் முதலில் சுவாமிகள் தனது சொற்பொழிவுத் திறன்களால் பார்வையாளர்களை பரவசப்படுத்தினார். “கடவுள் நம் இதயத்தில் இல்லையென்றால், நாம் ஹம்பியின் பாழடைந்த கோவில்களைப் போல ஆகி விடுவோம்” என்று தத்துவார்த்தமாக உரையாற்றினார்.

ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷ தீர்த்த சுவாமிகளின் தீட்சண்யமான தோற்றம்

அகத்தில் மட்டுமல்லாமல் புறத்தோற்றத்திலும் சுவாமிகள் பொலிவானவர். மெலிந்த தேகமும், தீட்சண்யமான முக வடிவும் உடையவர். மேலும் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கக் கூடியவர்.  பாரம்பரியமிக்க மடத்துக்குத் தலைமை தாங்கினாலும், எந்தவிதமான ஆடம்பரமும், தலைக்கனமும் இல்லாத எளிய ஆளுமை அவர். எப்போதும் தீட்சண்யமான பார்வையுடனும் குழந்தையைப் போன்ற சிரிப்புடனும் காட்சி தருவார். அன்பும் இரக்கமும் நிறைந்தது அவர் மனம். நாட்டின் பிரதமர் முதல் ஏழையினும் ஏழை வரை யாரொருவரும் சுவாமிகளை ஒருமுறைப் பார்த்துவிட்டால் உடனடியாக ஈர்க்கப்படுவார்கள். யார் வேண்டுமானாலும் தன்னை வந்து சந்திக்கலாம் என்று அனைவரையும் ஒரேபோல் வழிநடத்தியவர். அவரை பின்தொடர்பவர்கள், எப்போது விரும்பினாலும் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கப் பெற்றவர்கள். சுவாமிகளின் பல ஆண்டுகள் தொடர்ந்து சமூக சேவையிலும் ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டு வருகிறார். “இந்தச் சமூகம் எனும் கடலில், மடங்கள் மீன்கள் போன்றவை. மீன்கள் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது. போலவே மீன்கள் இல்லாமல் நீர் சுத்தமாக இருக்க முடியாது ”- இதுதான் சமுதாயத்தின் மீதான அவரது தத்துவத்தின் சாராம்சம்.

பொறுப்பை திறம்பட நிறைவேற்றுபவர்

காற்று இல்லாத வீட்டில் கூட ஒருவர் வாழ்ந்து விடக் கூடும். ஆனால் காற்று ஒரு அசுரனாகி சூறாவளியாக மாறி வீட்டின் கூரையைப் பிய்த்தெறிந்து வீசினால் என்ன ஆகும்? மேற்கத்திய கலாச்சார, மற்றும் அமைப்புகளைக் கண்மூடித்தனமாக பின்தொடர்தல் என்பதுதான் நம் கலாச்சாரத்திற்கும் ஆன்மிக வேர்களுக்கும் கடும் சூறாவளியாக மாறியுள்ளது. ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷா தீர்த்த சுவாமிகள் இந்த உண்மையையும் அதன் விளைவாக வந்த அச்சுறுத்தலையும் 50 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உணர்ந்தார்! கல்வியை முடித்த பின்னர் அவர் மேற்கொண்ட குறிக்கோள்களில் முதன்மையான ஒன்று குருகுல கல்வி முறையை நிறுவுவதாகும். 1956-ம் ஆண்டு பெங்களூரில் பூர்ணபிரஜ்னா வித்யாபீடத்தை நிறுவியபோது அவரது கனவு நனவாகியது.

நமது பண்டைய கலாச்சாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் ஸ்ரீமாத்வாசாரியரின் தத்துவத்தை பரப்புதல் என்ற இரட்டை இலக்குகளுடன் நிறுவப்பட்ட வித்யாபீடம், ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷ தீர்த்த சுவாமிகளின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் தழைத்தது. மிக விரைவில் தலைசிறந்த குருகுலமாக வளர்ச்சி அடைந்து அங்கீகாரமும் பெற்றது. வித்யாபீடம் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான அறிஞர்களையும் இளம் சந்நியாசிகளையும் உருவாக்கி வருகிறது, இதன்மூலம் வறண்டு போயிருக்கக் கூடிய தத்துவ அறிஞர்களின் நீரோடை குறையாமல் இன்றளவும் தொடர்கிறது. இன்னும் சில தலைமுறைகளுக்கு அது தொடர்ந்து ஓடும் என்பதும் உறுதி.

தற்போது, ​​300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வித்யாபீடத்தில் வேத சாஸ்திரக் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மாணவர்களின் தங்குமிடம், உணவு மற்றும் பிற அத்தியாவசியச் செலவுகள் உள்ளிட்ட முழுமையான பொறுப்பு வித்யாபீடத்தினரால் கவனிக்கப்படுகிறது. குருகுலத்தில் 30-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற முன்னாள் மாணவர்கள் தற்போது ஆசிரியர்களாக அதே பீடத்தில் பணியாற்றி வருகின்றனர். தத்துவ சாஸ்திரத்தைச் சார்ந்த பல படைப்புகள் நிறுவனத்தால் மொழிபெயர்க்கப்பட்டு அறிவுத் தாகமுள்ள பக்தர்களுக்கு கிடைக்கப் பெறுகின்றன. இந்த குருகுலத்தின் அதிபராக ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷ தீர்த்த சுவாமிகள் தனது கடமைகளை பாராட்டத்தக்க வகையில் நிறைவேற்றியுள்ளார். ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷ தீர்த்த சுவாமிகளின் இத்தகைய பங்களிப்பு மகத்தானது. அடுத்தகட்டமாக, அவர் இதேபோன்ற வித்யாபீடத்தைத் தலைநகரான புதுதில்லியில் நிறுவுவதற்கான முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார். இதற்காக தில்லி மேம்பாட்டு ஆணையம் ஏற்கனவே ஒரு ஏக்கர் நிலத்தை அனுமதித்துள்ளது. புதுதில்லியில் உள்ள இந்த நிறுவனம், வட இந்தியாவிலுள்ள அனைத்து தத்துவ செயல்பாடுகளுக்கும் மையப் புள்ளியாக மாற வேண்டும் என்பதே ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷ தீர்த்த சுவாமிகளின் தீவிரமான குறிக்கோள். தனது பக்தர்கள் அனைவரின் இதயங்களையும் வென்ற ஒருவருக்கு, சாத்தியமற்ற செயல் என்று எதுவும் இல்லை!

ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷா தீர்த்த சுவாமிகள் உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடுதல்

உடுப்பி மடாதிபதி அனைவரும் பரியாயம் செய்தலைக் கடமையாகக் கொள்ள வேண்டும். மேலும் பகவான் கிருஷ்ணரை இரண்டு ஆண்டுகள் வழிபடும் பாக்கியமும் அவர்களுக்குக் கிடைக்கும். இத்தகைய புனிதமான கடமை ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷ தீர்த்த சுவாமிகளுக்கு 1952-ஆம் ஆண்டில் முதன்முறையாக வழங்கப்பட்டது. சுவாமிகளின் முதல் பரியாயம் மகத்துவமானது. அப்போதுதான் மாத்வ கலாச்சாரத்தின் பெருமை வாய்ந்த அகில பாரத மாதவ மகா மண்டலி நிறுவப்பட்டது.  தனது முதல் மாநாட்டை மைசூர் மகாராஜாவின் தலைமையில் நடத்தியது. 1968-ம் ஆண்டில் சுவாமிகளின் இரண்டாவது பரியாயத்தின் போது, ​​உடுப்பியின் முழுப் பகுதியும் உண்மையில் புத்துயிர் பெற்றது. காரணம் ​​விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பிராந்திய உச்சி மாநாட்டின்போது, சுவாமிகளின் முழக்கம் இதுதான் “இந்துவாஹ சோடரஹ சர்வே ந இந்துஹு பதிதோ பவது” இது பரிஷத்தின் அனைவருக்கும் தாரக மந்திரமாக மாறியது. 1984 -ஆம் ஆண்டில் சுவாமிகளின் மூன்றாவது பரியாயத்தின் போது உடுப்பியின் முழு ஆன்மிக, கலாச்சாரம் புரட்சிகரமான மாற்றங்களுக்கு உள்ளானது என்றால் மிகையில்லை.

சுவாமிகளின் துணிச்சலான முடிவுகள்

தலித்துகளை ஹிந்து சமுதாயத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக கருதிய முதல் சுவாமிகள் ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷ தீர்த்த சுவாமிகள்தான். தீண்டாமையின் கொடிய நடைமுறையை, மனிதக் கண்ணோட்டத்தில் மறுபரிசீலனை செய்வதற்கான அவரது முடிவும், அதன் விளைவாக அவர் எடுத்த சில நடவடிக்கைகளும் அந்நாட்களில் புரட்சியை ஏற்படுத்தியது. "நம் வீடுகளிலும், பொது இடங்களிலும், கிறிஸ்துவர்களும் முஸ்லிம்களுக்கும் பெறும் அதே வாய்ப்புகளை தலித்துகள் அனுபவிக்கிறார்களா? மதம் மாறிவிட்ட பின்னர் அவர்கள் நம்மை அணுகும்போது, ​​நாம் அவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதில்லை. அப்படியானால், மற்ற மதங்கள் தலித்துகளை மனிதநேயத்துடன் நடத்துகின்றன என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.  அப்படி நாம் செய்கிறோமா? இதைவிட நமது தர்மத்திற்கும் சமூகத்திற்கும் ஒரு பெரிய அவமானம் இருக்கிறதா?” சுவாமிகளின் கூர்மையான தர்க்கரீதியான கேள்விகள் பழமைவாதிகளின் கண்களைத் திறந்தன. தமிழ்நாட்டின் மீனாக்ஷிபுரம் பகுதியில் தலித்துகளை மாற்றுவது தொடர்பான சர்ச்சையில் சுவாமிகளின் தனிப்பட்ட வருகையால் தடுக்கப்பட்டது. சுவாமிகளின் இனிமையான புன்னகையானது கடுமையான எதிரிகளைக் கூட வென்றது.  இந்து சமூகம் ஒன்றிணைந்து வலுவானது.

தன்னலமற்ற கர்ம யோகி

ஜபம் மற்றும் சடங்குகள் மூலம் கட்டுண்டு கிடத்த பழமைவாத மடத்தின் அமைப்பை உடைத்த பெருமை ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷ தீர்த்த சுவாமிகளுக்கு உரியது. தனது அன்றாட நடைமுறைகளுக்கு எவ்விதமான இடையூறும் ஏற்படாமல், தனது பரபரப்பான பயணத்தின் போதும்கூட சொற்பொழிவுகளையும், ஆன்மிக வகுப்புகளையும் நடத்தினார். சீர்திருத்தவாதியான சுவாமிகள், கடந்தகால மரபுக்கும் எதிர்கால நம்பிக்கைக்கும் இடையிலான தங்கப் பாலமாக மாறினார்.

“வீடென்பது பொருட்கள் நிறைந்தது. வெவ்வேறு அறைகள் வெவ்வேறு நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் வெளிச்சத்திற்கு தனி அறை இருக்கிறதா? ”என்று சுவாமிகள் கேட்கிறார். அவரது கறைபடாத பிரம்மச்சரியம் பெரும் தவம். சுவாமிகள் உண்மையான ஒரு கர்ம யோகி, கடவுளை வெறும் கற்சிலைகளில் பார்ப்பதைத் தாண்டி, முழுமையான உலகத்தையே இறைவனின் தங்குமிடமாகப் பார்க்கிறார். அவர் எடுத்த ஒவ்வொரு அடியும் இறைவனை வணங்குவதாகும், ஏனெனில் அவருடைய செயல்களில் சுயநலத்தின் ஒருதுளிக் கூட இல்லை. ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷ தீர்த்த சுவாமிகள் தனிநபர் மட்டுமல்ல; அவர் ஒரு அமைப்பு.

ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷ தீர்த்த சுவாமிகள், தனது ஏழு வயதிலிருந்து 80 ஆண்டுகளில் நிறைவடையும்வரை, சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்துள்ளார். சுவாமிகளின் அளப்பரிய செயல்கள் மானுடம் உள்ள வரை நிலைத்திருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com