இளம் பெண்களை வழிபட அனுமதிக்கும் புத்தன் சபரிமலை!

கேரளாவில் சபரிமலையை போன்றே பழமையான அமைப்புடன் பதினெட்டு படிகளை உள்ளடக்கிய கோவில்
இளம் பெண்களை வழிபட அனுமதிக்கும் புத்தன் சபரிமலை!

கேரளாவில் சபரிமலையை போன்றே பழமையான அமைப்புடன் பதினெட்டு படிகளை உள்ளடக்கி சபரிமலை கோவிலை போன்றே ஆச்சார அனுஷ்டானங்களை பூஜைகளை கடைபிடித்து வரும் புத்தன் சபரிமலை எனும் கோவில் உள்ளது. அங்கு அனைத்து வயது பெண்களும் பதினெட்டு படிகள் வழியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். 

இந்த புத்தன் சபரிமலை அய்யப்பன் கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது, பழமையானது. இங்கும் அடர்ந்த வனப்பிரதேசம் ஒரு காலத்தில் இருந்துள்ளது கொடும் காட்டு விலங்குகள் வாழ்ந்த இந்த புத்தன் சபரிமலையில் முன்னர் பக்தர்கள் அவ்வளவாக சென்றதில்லை சுமார் நூறு வருடங்களாக மட்டுமே இருமுடி கட்டி பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். தற்போது பிரதான சபரிமலை அமைந்துள்ள இதே பத்தனம்தெட்டா மாவட்டத்தில் திருவல்லாவிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் தடியூர் எனும் இடத்தில் மிக புராதான ஆலயமாக பழமை மாறாது காணப்படுகிறது இந்த புத்தன் சபரிமலை அய்யப்பன் ஆலயம். 

பிரதான சபரிமலை கோவிலுக்கு இணையான தெய்வ சக்தி இங்கும் பரந்து விரிந்து வியாபித்துள்ளதாக கூறப்படுகிறது. சபரிமலையில் உள்ளது போன்றே அதே வடிவிலான ஐம்பொன்னால் ஆன அய்யப்பன் விக்கிரகம் இங்கும் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள 18 படிகளும் கரும் கற்களால் சபரிமலையில் உள்ளது போன்றே செங்குத்தாக அமையப்பெற்றுள்ளது. இங்கு அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட்டாலும் இருமுடி கட்டு இல்லாத எவர் ஒருவரும் படிக்கட்டுக்கள் மீது செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இருமுடி கட்டு இல்லாதவர்கள் கோவிலின் வடக்கு பகுதி வழியாக செல்லவே அனுமதிக்கப்படுகிறார்கள். சபரிமலையில் பின்பற்றப்படும் பூஜைகளும் வழிபாட்டு முறைகளும் அபிஷேக வகைகளும் குறிப்பாக சந்தனாபிஷேகம், நெய்யபிஷேகம், பூ அபிஷேகம் போன்றவைகள் அப்படியே சற்றும் மாறாது இங்கும் கடைபிடிக்கப் படுகிறது.   

சபரிமலையை போன்றே ஒவ்வொரு மலையாள மாதம் ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை பக்தர்கள் இங்கும் அய்யப்பனை வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள். சபரிமலையை போன்றே அப்பமும் அரவணை பாயாசமும் இங்கும் பிரதான பிரசாதங்கள். தை முதல் நாளில் மகர சங்கராந்தியன்று எப்படி சபரிமலையில் மகர விளக்கு காணப்படுகிறதோ அவ்வாறே இங்கும் மகரவிளக்கு தரிசனத்தை பக்தர்கள் காணலாம். எல்லாவற்றையும் விட சபரிமலை தந்தரியாக செயல்படுபவர்களே இங்கும் தந்தரியாக செயல்படுகிறார்கள்.

எல்லா வகைகளிலும் பிரதான சபரிமலைக்கு இணையாக காணப்பட்டு வரும் இந்த புத்தன் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் பிராதான சபரிமலைக்கு மட்டுமே நாங்கள் செல்வோம் என உச்சநீதி மன்றத்தின் உத்தரவை தலைமீது வைத்து கொண்டு பிடிவாதம் பிடித்து செயல்படும் இளம் பெண்களின் எண்ணம் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. அது உண்மையான பக்தியின் அடையாளமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.    எனவே பிரதான சபரிமலைக்கு செல்ல முடியாத 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் விரதமிருந்து இருமுடி கட்டிக் கொண்டு இந்த புத்தன் சபரிமலை என்று அழைக்கப்படும் அய்யப்பன் கோவிலில் உள்ள புராதான 18 படிக்கட்டுக்கள் வழியே கடந்து சென்று அய்யப்பனை வழிபடலாமே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com