தொன்றுதொட்டு வரும் திருவாதிரைத் திருநாள்

சிவனின் ஆடலை சிவபெருமான் நடனம், நாட்டியம் என்றும், தாண்டவம் என்றும் வழங்குவது உண்டு. தாண்டவம் என்பது வன்மையுற ஆடுவது. நடனம் என்பது மென்மையுற ஆடுவது.
தொன்றுதொட்டு வரும் திருவாதிரைத் திருநாள்

ஆதிமனிதர்கள் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்த காலகட்டத்தில் தம்மிடையே ஒரு அரிய பொருள் கிடைத்துவிட்டால் மிகவும் மகிழ்ச்சியுற்று ஆஹா, ஓஹோ எனக் கூக்குரல் இட்டு கைகளைத் தட்டி ஒலியெழுப்பி கூவிக்குதித்துக் கொண்டாடினர். அப்போதுதான் ஆடல் பாடல்கள் தோற்றம் பெற்றன. இவ்வாறு தோற்றம் பெற்று அவை படிப்படியாய் வளர்ச்சியுற்று கட்டுப்பாடுகளும் கணக்கு அமைப்புகளும் அமையப்பெற்று செப்பமுடன் பல்வேறு வகைகளாக உருப்பெற்றன.

தொல்காப்பியத்தின் சொல்லதிகாரம் போர்க்களங்களில் வீரர்கள் பலர் ஆடிய ஆட்டங்களைக் குறிப்பிடுகின்றது. சங்க நூலான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை  பல்வேறு வகையான ஆடல்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளன. சிவபெருமான் ஆடிய 'கொடுகொட்டி' என்னும் நடனம் குறித்து கலித்தொகை எடுத்துக் காட்டுகிறது. சிலப்பதிகாரம் ஆடல் வகையினைக் குறிப்பிடும் கருவூலம் என்றே கூறலாம். இளங்கோவடிகள் யாத்த இந்நூலில் பல்வேறு வகையான ஆடல் வடிவங்களைக் கூறியுள்ளார். இதேபோல தேவாரத்திலும் ஆடல் வகைகள் பல சுட்டப்பட்டுள்ளன. 

சிவபெருமான் ஆடற்கலையின் இறைவன் எனப் போற்றப்படுகிறான். சிவன் ஆடல் பல வகைப்படும். இது இறைவியல் கருத்துக்களை உட்கொண்டது. அதனாலே இவனை 'ஆடும் தொழிலான்' என்று சம்பந்தர் தன் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சிவனின் ஆடலை சிவபெருமான் நடனம், நாட்டியம் என்றும், தாண்டவம் என்றும் வழங்குவது உண்டு. தாண்டவம் என்பது வன்மையுற ஆடுவது. நடனம் என்பது மென்மையுற ஆடுவது. சிவபெருமான் ஆடியது 11 வகை ஆடல்கள் ஆகும். இப்பதினோரு வகை ஆடல்கள் ஒவ்வொன்றுக்கும் உரிய உறுப்புகள் எவையெவை என கீழ்வரும் அடிகள் நமக்கு குறள் வடிவில் உணர்த்துகின்றன.

            1.         அல்லிய மாயவ னாடிற் றதற்குறுப்புச்

                        சொல்லுப வாறா மெனல்

            2.         கொட்டி கொடுவிடையோ னாடிற் றதற்குறுப்

                        பொட்டிய நான்கா மெனல்

            3.         அறுமுகத்தோ னாடல் குடைமற் றதற்குப்

                        பெறுமுறுப்பு நான்கா மெனல்

            4.         குடத்தாடல் குன்றெடுத்தோ னாட லதனுக்

                        கடைக்குப வைந்துறுப் பாய்ந்து

            5.         பாண்டரங்க முக்கணா னாடிற் றதற்குறுப்

                        பாய்ந்தன வாறா மெனல்.

            6.         நெடியவ னாடிற்று மல்லாடன் மல்லிற்

                        கொடியா வுறுப்போரைந் தாம்

            7.         துடியாடல் வேன்முருக னாட லதனுக்

                        கொடியா வுறுப்போரைந் தாம்

            8.         கடைய மயிராணி யாடிற் றதனுக்

                        கடைய வுறுப்புக்க ளாறு

            9.         காமன தாடல்பே டாட லதற்குறுப்பு

                        வாய்மையி னாராயி னான்கு

            10.       மாயவ ளாடன் மரக்கா லதற்குறுப்பு

                        நாமவகை சொல்லுங்கா னான்கு

            11.       பாவை திருமக ளாடிற் றதற்குறுப்

                        போவாம லொன்றுடனே யொன்று

தில்லையில் எழுந்தருளிய பெருமானுக்கு பல்லாண்டு கூறுவதாக அமைந்த பதிகம் திருப்பல்லாண்டு ஆகும். 13 பாடல்கள் கொண்ட இப்பதிகம் திருவாதிரைத் திருநாளில் பாடப்பெற்றது. சைவத்திருமுறைகள் பன்னிரெண்டனுள் 9ம் திருமுறையினைப் பாடியவர் பலராவர். அவற்றுள் ஒன்றுதான் திருப்பல்லாண்டு. இதனைப் பாடியவர் சேந்தனார் ஆவார். சேந்தன் என்னும் பெயர் முருகனைக் குறிக்கும் பெயர்களில் ஒன்றாகும். அந்த வகையில் மன்னர்கள், சில புலவர்கள் சேந்தன், சேந்தனார் என்னும் பெயரோடு திகழ்ந்தனர். திருப்பல்லாண்டு பாடிய சேந்தனார் ஒன்பதாம் திருமுறையில் மூன்று திருவிசைப்பா பாடிய சிறப்பிற்குரியவராவார்.

அவை திருவீழிமிழலை பதிகம், திருவாவடுதுறை பதிகம், திருவிடைக்கழி பதிகம் என்பனவாகும். திருப்பல்லாண்டின் இறுதிப் பாடலில் 'சிவன் சீரடியார் அடி நாய் செப்புறை அந்தமிழ் ஆனந்தச் சேந்தன்' என்று தம்மைக் குறிப்பிட்டுள்ளமையால் இவருடைய ஊர் செப்புறை ஆக இருக்கலாம் என்று தெரிய வருகிறது. செப்புறை என்பது குடிப்பெயராகக் கூறுவதும் உண்டு. இவர் பாடிய பதிகத்தில் இடம்பெறும் பிடவூர் பற்றிய குறிப்பினைக் கொண்டு திருவிடைக்கழிக்கு அருகில் உள்ள பிடவூரிலும் இவர் இருந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். நம்பியாண்டார் நம்பியின் கூற்றால் இவர் நந்தனார் மரபில் வந்தவர் என்று கருதப்படுகிறது.

சேந்தனார் வரலாறு பற்றி மரபு வழியாக ஒருசில செய்திகள் சொல்லப்பட்டு வருகின்றது. இவர் பட்டினத்து அடிகளாரின் கணக்குப் பிள்ளையாக இருந்தபோது அவருடைய கட்டளைப்படி நிதி நிறைந்த அறையினைத் திறந்து வைத்து அங்குள்ள செல்வத்தை எல்லோரும் எடுத்துச் செல்லுமாறு செய்துவிட்டார். இது கண்ட பட்டினத்தடிகளின் உறவினர்கள் மன்னனிடம் சென்று முறையிட மன்னன் இவரை சிறையில் அடைத்தார். அதுகண்ட பட்டினத்து அடிகள் மன்னனிடம் வேண்ட சிவன் அருளால் இவர் சிறைமீண்டார் என்று சொல்லப்படுகிறது.

பின்னர் தில்லை சென்ற சேந்தனார் வறுமையுற்ற நிலையிலும் அடியாருக்கு உணவளிக்கும் தொண்டினை மேற்கொண்டார். இவர் அன்பினை வெளிப்படுத்த இறைவன் முதியோர் வேடம் கொண்டு இவர் இல்லம் நாடி வந்தார். நாள்தோறும் அடியாருக்கு அன்னம் வழங்கும் சேந்தனாருக்கு அன்றைய நாள் மிகவும் கடினமான நாளாக இருந்தது. இருந்தபோதிலும் தன்னிடம் இருப்பதைக் கொண்டு களி சமைத்து அவருக்கு களி உணவினை அளித்தார். மேலும் வந்திருந்த முதியவர் மீதமிருந்த களியையும் அவரிடம் இருந்து பெற்றுச்சென்றார். வந்தவர் வேறு யாருமல்ல. சிவப் பரம்பொருளே ஆவார். இதனாலேயே இக்களி "திருவாதிரைக் களி" என்று பெயர் பெற்றது. மார்கழி திருவாதிரை நாளில் இந்நிகழ்வு நடந்ததால் இப்பெயர் ஏற்பட்டது.

அதேநேரம் கண்டராதித்த சோழர் நாள்தோறும் சிவபெருமானின் பாதச் சிலம்பைக் கேட்ட பிறகே உறங்கச் செல்வது வழக்கம். அன்றைய நாளில் இவருக்கு சிவனின் பாதச் சிலம்பொலிக் கேட்கவில்லை. அதனால் மனம் வாடி படுக்கைக்குச் சென்ற கண்டராதித்தரின் கனவில் தோன்றிய சிவபெருமான் இன்று நான் சேந்தனாரின் இல்லத்திற்கு களி சாப்பிடச் சென்றேன் என்று கூறி மறைந்தார். அடுத்த நாள் காலை தில்லைவாழ் அந்தணர்கள் தில்லைப் பெருங்கோயில் கதவினைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது சிவன் உறையுமிடமெங்கும் களி சிதறுண்டு கிடந்ததைக் கண்டனர். அச்செய்தி கண்டராதித்த சோழரின் செவிக்கும் எட்டியது. இதனை அறிந்த மன்னன் சேந்தனாரை சிறப்பித்துக் கொண்டாடினான்.

இந்நிலையில் திருவாதிரை நாளன்று தேர் திருவீதி வலம் வருகையில் சேற்றில் தேர்ச்சக்கரம் மாட்டி நகர முடியாமல் நின்ற நிலையில் 'தேர் செல்லுமாறு பாடுக' என்று இறைவன் சேந்தனாருக்கு கட்டளையிட சேந்தனாரும் ''மண்ணுலக தில்லை வளர்க நும் பக்தர்கள்'' என்று திருப்பல்லாண்டு பாட திருத்தேர் வலம் வந்து நிலை நின்றது.

சேந்தனாரையும் அவர்தம் திருப்பல்லாண்டையும் சிறப்பிக்கும் வகையில் அமைந்த இவ்வரலாற்றுச் செய்தியினை நம்பியாண்டார் நம்பியின் திருப்பண்ணியர் விருப்பத்திலும், உய்யக்கொண்ட நாயனார் தம் திருப்பதிற்றுப் பதிகத்திலும் குறிப்பிட்டுப் போற்றியுள்ளனர். இம்மரபு செய்தியால் சேந்தனார் பட்டினத்தடிகளோடு தொடர்புடைமை பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. இதுகொண்டு இவருடைய காலம் பட்டினத்தடிகள் காலமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி இவர் வாழ்ந்த காலகட்டம் எனக் கருதலாம். இத்தகு சிறப்புமிக்க மார்கழி திருவாதிரை நாள் சிவாலயங்களில் ஆடல் வல்லானுக்கு உகந்த நாளாகக் கொண்டு வெகுசிறப்பாக விழா நடைபெறுகின்றது.

பல்வேறு சிவன் கோயில்களில் விழா நடைபெற்றாலும் சைவ சமயக் குரவர்களால் முதலில் பாடல் பெற்ற தலமான உத்தரகோசமங்கையில் மரகத நடராஜருக்கு வெகுவிமரிசையான விழாவாக நடைபெறுகிறது. அதேபோல சிதம்பரத்திலும் ஆண்டுதோறும் ஆருத்ரா திருநாள் பெரும் விழாவாகவே நடைபெறுகின்றது. இவ்விழாவானது மக்கள் தம் இல்லங்களிலும் சிறப்பாக களி உணவு செய்து இறைவனுக்கு படையலிட்டு சிறப்பாக கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு இவ்விழாவானது டிசம்பர் 21இல் தொடங்கி முப்பதாம் தேதி நிறைவு பெறுகிறது. 21ஆம் தேதி திங்கள்கிழமை ஆருத்ரா தரிசன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 22ஆம் தேதி வெள்ளி சந்திர பிரபை வாகனத்திலும், 23ஆம் தேதி தங்க சந்திரபிரபை வாகனத்திலும், 24ஆம் தேதி வௌ்ளி பூத வாகனத்திலும், 25ஆம் தேதி ரிஷப வாகனத்திலும், 26ஆம் தேதி வௌ்ளி யானை வாகனத்திலும், 27ஆம் தேதி தங்க கைலாச வாகனத்திலும் வீதியுலா நடைபெற உள்ளது. 28ஆம் தேதி சோமாஸ்கந்தர் தங்க ரதத்தில் வெட்டுக்குதிரையில் வீதியுலா வருகிறார். 29ஆம் தேதி தேர்த் திருவிழாவும் அன்றிரவு எட்டு மணிக்கு ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும் நடைபெற இருக்கிறது. 30ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் முத்துப்பல்லக்குடன் விழா நிறைவு பெறுகிறது.

இந்த விழா நாளில் தில்லைக்கோயிலில் நடைபெறக்கூடிய நாட்டிய நிகழ்வானது உலக அளவில் புகழ்மிக்க ஒன்றாகக் கருதப்படுகிறது. எவ்வாறு திருவையாறு தியாக பிரும்ம விழாவில் பல்வேறு இசைக்கலைஞர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்களோ அதேபோல தில்லை நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் உலகெங்கும் இருக்கக்கூடிய புகழ்மிக்க நாட்டியக் கலைஞர்கள் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர். அன்றைய நாளில் அப்பெருமான் சன்னதி சென்று ஆடல் வல்லான் ஆடிய அற்புதக் காட்சியினை அங்கு பங்குபெறும் கலைஞர்களின் வடிவிலே கண்டு களித்து மகிழ்ந்து இன்புறுவோம் வாருங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.