ஸ்ரீரங்கத்தில் சிறப்பு வாய்ந்த வைகுந்த ஏகாதசி திருவிழா

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி திருவிழா பகல்பத்து உற்ஸவத்துக்கென சில நடைமுறைகள் உள்ளன. அந்த நடைமுறைகளின்படி திருவிழா நடைபெற்று வருகிறது.
ஸ்ரீரங்கத்தில் சிறப்பு வாய்ந்த வைகுந்த ஏகாதசி திருவிழா
ஸ்ரீரங்கத்தில் சிறப்பு வாய்ந்த வைகுந்த ஏகாதசி திருவிழா

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி திருவிழாவில் பகல்பத்து நாளன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் எழுந்தருளும் நம்பெருமாளுக்கு வைரம்,  வைடூரியம், முத்து, பவளம் என பலவிதமான ஆபரணங்கள் அணிவிக்கப்படுகின்றன.  எத்தனை ஆபரணங்கள் அணிந்தாலும் அத்தனையிலும் அழகாய் காட்சியளிப்பார் நம்பெருமாள்.

வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் பரமபதவாசல் திறப்பன்று  கருவறையிலிருந்து பாண்டியன் கொண்டை, கிளி மாலை, ரத்தின அங்கியுடன் புறப்பட்டு சிம்மக்கதியில் வரும் நம்பெருமாளைத் தரிசிக்க திரளும் பக்தர்களே இதற்கு சாட்சியாகும்.

வைகுந்த ஏகாதசி திருவிழாவின் நடைமுறைகள்

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி திருவிழா பகல்பத்து உற்ஸவத்துக்கென சில நடைமுறைகள் உள்ளன. அந்த நடைமுறைகளின்படி திருவிழா நடைபெற்று வருகிறது.

பெரிய திருக்கோயில் எனப்படும் அரங்கநாதசுவாமி திருக்கோயில் நடைபெறும் எந்த திருவிழாக இருந்தாலும் திருக்கோயில் நிர்வாகத்தால் குறிப்பிடப்படும் நேரத்தில் சுவாமி புறப்பாடு தொடங்கும்.  யாருக்காகவும் பெருமாள் காத்திருக்க மாட்டார்கள் என்பார்கள்.   உடையவர் எனப்படும் ராமானுஜர் காலத்தில் வகுத்த நிர்வாக முறை இன்றளவும் இக்கோயிலில் பின்பற்றப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் திருவிழாக்களில் புறப்பாடு தொடங்கப்பட்டுவிடும்.

மேலும் புகைப்படங்களைக் காண.ஸ்ரீரங்கம்: பகல் பத்து 3ம் நாள் உற்சவம்

திரு அத்யயன உற்ஸவம் எனப்படும் வைகுந்த ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம், பகல்பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும்.  இந்த 21 நாள்களிலும்  நம்பெருமாள் புறப்பாடுக்கான வரைமுறைகள் வகுக்கப்பட்டு அதன்படியே  உற்ஸவம் நடைபெற்று வருகிறது.

பகல்பத்து உற்ஸவ நாள்களில் காலையிலேயே நம்பெருமாள் புறப்பாடு நடைபெறும் என்பதால், திருப்பள்ளியெழுச்சி, திருவாராதனம்  முதலியவை சூரிய உதயத்துக்கு முன்பே பூர்த்தி செய்யப்படும்.  இதைத் தொடர்ந்து அரையர்களின் திருப்பல்லாண்டு தொடக்கமும், அதையொட்டி 2 பாசுரங்கள் தாளத்தோடும் தொடங்கும்.

திருப்பல்லாண்டு தொடங்கிய பின்னர், பெரிய அவசரம், திருவாராதனமும், தளிகை நிவேதனமும் ஆனப் பின்னர் பெருமாள் புறப்படத் தயாராகுவார்.

இதைத் தொடர்ந்து கருவறையிலிருந்து நம்பெருமாள் புறப்பாடு, ஆழ்வாராச்சாரியர்களுக்கு மரியாதை, அரையர் சேவை (மரியாதை), நிவேதன விநியோகங்கள்,  ஸ்தோத்ரபாட கோஷ்டி, மண்டபத்திலிருந்து புறப்பாடு,  அரக்ய பாத்யஹ்கள், தீர்த்த விநியோகம், பத்தி உலாவுதல், படியேற்றம், திருவந்திக் காப்பு,  உள்ளே எழுந்தருளுதல் ஆகியவை காரிய கிரமப்படி நடைபெறும்.  பகல்பத்து உற்ஸவக் காலத்தில் இந்த காரியக் கிரமப்படிதான் நம்பெருமாள் புறப்பாடு தொடங்கி நிறைவுபெறும்.

பகல்பத்து விழாவில்,  4,7,8,9,10 ஆம் திருநாள்களில் இரண்டு அரையர் சேவை நடைபெறும். ஒரு அரையர் சேவை இருக்கும் நாளில் சேவை ஆன பிறகு அலங்காரம் அமுது செய்தல்,  விநியோகம் நடைபெறும். ஆனால், இரண்டு அரையர் சேவை நடைபெறும் நாள்களில் முதல் சேவை முடிந்த பிறகு அலங்காரம் அமுது செய்தல் நடைபெறும். இது முடிந்த பின்னர்  உடனடியாக இரண்டாம் அரையர் சேவையைப் பூர்த்தி செய்து விநியோகம் செய்த பிறகே திருவாராதனம் முதலான காரியங்கள் நடைபெறும். இந்த நடைமுறை இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது.

பகல்பத்து உற்ஸவத்தில் நம்பெருமாள் புறப்பாட்டின் சிறப்பு

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் திருவிழாக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. அந்த வகையில் 21 நாள்கள் நடைபெறும் திருஅத்யயன உற்ஸவம் எனப்படும் வைகுந்த ஏகாதசி திருவிழாவும் பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கிறது.

பகல்பத்து உற்ஸவத்தில் நம்பெருமாள் கருவறையை விட்டு வெளியே வரும் போது சிம்மகதியில் புறப்படுவார்.  சிங்கமானது குகையிலிருந்து வெளிவரும் போது தன் தேகத்திலுள்ள மயிர்களை உதறிக் கொண்டு புறப்பட்டு  அடிவைக்குமாம். அதுபோல, நம்பெருமாளும் சிம்மகதியில் புறப்படுவார்.

ரங்கநாதனே அர்ச்சையில் பரத்வமுடையவன் என்பதைக் காட்டிக் கொடுக்க  சிம்மகதி ஆனவுடன், நம்பெருமாள் மேற்கே  திரும்பி இரண்டடி ஒய்யார நடை இடுவார்.  சிம்மகதியும், ஒய்யார நடையும் சேர்ந்து  வராஹ - வாமன திரு விக்ரம அவதாரங்களைக் குறிப்பிடுகின்றன.

நம்பெருமாள் மேலப்படியை விட்டு கீழே இறங்கி வடக்கே திரும்பி நின்றவுடன் அவர் முன் வந்து நிற்கும் உத்தமநம்பிகளுக்கும், தேவஸ்தான அதிகாரிகளுக்கும் இரண்டு உருண்டை சந்தனம் கையில் கொடுக்கப்படும். அதை  அவர்கள்  வினயத்துடனும், மரியாதையுடனும் பெற்றுக் கொண்டு, உத்தமநம்பி நீங்கலாக மற்றவர்கள் மணியக்காரரிடம் திருப்பிக் கொடுத்து விடுவார்கள். இதன் தாத்பர்யம் அவர்கள் ரங்கநாதனுடைய கைங்கர்யத்தை துரோகமன்றியில் செய்து வருவதாய் ராஜ விசுவாசப்ரமாணம் செய்கிறார்கள். ( இதன் உண்மையை அறியாமல் சிலர் தாங்களும் பெற்று அதை ஒரு மரியாதையாகக் கருதுகிறார்கள்).

அதன் பின்னர் நம்பெருமாள் சேனை முதலியார் வாசலுக்குச் சென்று அவருக்கு மாலையை அனுப்பி சாத்தச் சொல்வார். இது  உத்ஸவார்த்தம் வெளியிலும் செல்லும் ரங்கநாதன், தமது ராஜாங்க அதிகாரத்தை சேனை முதலியாரிடம் ஒப்பிப்பதாகிறது. அங்கிருந்து நம்பெருமாள் புறப்பட்டு துலுக்க நாச்சியாருக்கு சேவை சாதித்து விட்டு, அர்ச்சுன மண்டபத்தில் ஆஸ்தானத்தில் அமர்ந்ததும் அங்கு வந்திருக்கும்  ஆழ்வார் ஆச்சாரியர்களுக்குப் பரிவட்டம் முதலான மரியாதைகள் சேவிக்கப்படும்.

அதன் பின்னர் அரையர்களுக்கு மரியாதையும், மற்ற பிரபந்தங்களும் இந்த மண்டபத்தில் சேவிக்கப்படும். மாலையில் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தைவிட்டு  கர்ப்ப கிரகத்துக்கு எழுந்தருளுவதற்கு முன்பு கருவூலத்தின் பக்கத்திலுள்ள நாலுகால் மண்டபம் வலம் வந்த பிறகு அங்கிருந்து யாகசாலை வரையில் பத்தி உலாவிச் சென்று திரும்பி வருவார்.

பத்தி உலாவுதலில் நடக்கும் நடைக்கு ருஷபக்தி என்று பெயர். இந்தி கதி ப்ராணாயாமம் செய்ய  ஆரம்பிக்கும் முன் எப்படி நாடி சுத்தி செய்து கொள்வது என்பதை குறிக்கிறது. இந்த நாலுகால் மண்டபத்துக்குத் திரும்பி வந்ததும்,  பானகம், விடாய்பருப்பு நிவேதனம் செய்யப்படும்.  இது நாடி சுத்தி செய்து கொண்டவுடன் அல்ப ஆகாரம் செய்து கொண்டு இளைப்பாற வேண்டும் என்பதை குறிக்கிறது.

இந்த மண்டபத்தில் நம்பெருமாள்  எழுந்தருளியிருக்கும் போது அவருக்கு அர்க்கியம் முதலானவை சமர்ப்பித்து, திருவடி விளக்கின  தீர்த்தம் விநியோகம் செய்யப்படும்.  தீர்த்த விநியோகம் ஆன பிறகு  நம்பெருமாள் ஒய்யார நடை என்னும் வ்யாக்ரகதியில் யாகசாலை வரை சென்று திரும்பி நாலுகால் மண்டபத்துக்கு வருகிறார். இந்த நடை  கும்பகத்தைச் செய்தால் குண்டலிநீ சக்தி நாடியில் புகுந்து புலி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குப் பாய்ந்து செல்வது போல, பாய்ந்து செல்கிறதென்னும் தத்துவத்தை காட்டிக் கொடுக்கிறது.

 இதைத் தொடர்ந்து படியேற்றம் நடைபெறும். அரங்கநாதர் சன்னதிக்கு முன்புள்ள மண்டபத்திற்கு அங்குள்ள படிகளின் வழியாக ஏறுதலாகும். இப்படியேறும் போது அரையர்தாளம் இசைப்பார். மிருதங்கம் முதலான வாத்தியங்கள் வாசிக்கப்படும். இந்த படியேற்றம் நாடியில் குண்டலிநீ சக்தி  ஆறு  ஆதாரங்களையும் கடந்து  ஸஹஸ்ரார சக்ரம் போய்ச் சேருவதைக் குறிக்கிறது.

ஆறாவது, ஏழாவது படிகளில் பெருமாள் ஒருபுறமிருந்து மற்றொருபுறம் திரும்பி ஆடுவதால் திருமங்கையாழ்வார் பாசுரமாகிய  நீணிலாமுற்றத்து நின்றிவள் நோக்கினாள் காணுமோ கண்ணபுரமென்றுகாட்டினாள் என்பதன் அர்த்தம் குறிப்பிட்டுக் காட்டப்படுகிறது.  மண்டபத்தின் மேல் ஏறினவுடன்  ஸ்ரீபாதம்  தாங்குவார் பெருமாளை உயரத்தூக்கிக் காட்டுகிறார்கள். இதனால் ஸுஷும் நையிலுள்ள எல்லாப் படிகளையும் ஏறிச் சென்று குண்டலீநீ யுடையவர்கள் பரமபதம் என்னும் மேலான ஸ்தானத்தை அடைந்துவிடுவதாகக் காட்டப்படுகிறது.

நம்பெருமாள் படியேறி அழகியமணவாளன் திருமண்டபத்தை அடைந்து மேற்கு திரும்பின பிறகு கடதீபாராதனை செய்யப்படும். தமது சரீரத்திலுள்ள குண்டலிநீ சக்தியா சகஸ்ராரம் போய்ச் சேரும்படி   செய்யக்கூடியவர்கள் பரஞ்சோதியான பகவானை சோதிரூபமாய்க் கொண்டு தரிசிக்கலாம் என்பதை கடதீபாராதனை காட்டிக் கொடுக்கிறது.

இதன் பிறகு  நம்பெருமாள்  கிழக்கே திரும்பி ஜயவிஜயாள் வாசலுக்கு வந்தவுடன் ஸ்ரீ பாதம் தாங்குவோர் பெருமாளை  தோளுக்கிணியானுடன் வகையில் எழுந்தருளப் செய்துகொண்டு வந்து சன்னதிக்குள் நுழைவார்கள். இதுவரையில் பெருமாளுடன் கூட வந்த ஜீயர், பட்டர், வாதூல தேசிகர் அந்த வாசலுக்கு வெளியே நின்றுவிடுவார்கள்.

சன்னதி வாசலில் ஸ்ரீபாதம் தாங்குவோர் பெருமாளைக் கீழே தாழ்த்தி அதன் பின் மேலே உயர்த்தி, ஸர்ப்பம் வளைந்து செல்வது போல  எழுந்தருளப் பண்ணிக்கொண்டு போவார்கள். இப்படி செல்வது ஸ்ர்ப்பகதியாகும்.  பெருமாள் சன்னதிக்கு வாசலுக்கு முன் வந்தவுடன் இரண்டு  ஜுவாலைகளுடன் கத்திரிப்பந்தம்  பெருமாளுக்கெதிரில் பிடிக்கப்படும். இதன் பின்னர்  பெருமாளை கர்ப்பகிருகத்திலிருக்கும் சிம்மாசனத்தில்  எழுந்தருளப்பண்ண மங்களஹாரத்தி நடைபெறும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com