குலத்தைக் காக்கும் நம்ம வீட்டு குலசாமி : ஜோதிட தேடல்

நம் முன்னோர்கள் காலம்காலமாக வழிபடும் சாமி அவரவர் வீட்டு குலசாமி ஆகும்.
குலத்தைக் காக்கும் நம்ம வீட்டு குலசாமி : ஜோதிட தேடல்
குலத்தைக் காக்கும் நம்ம வீட்டு குலசாமி : ஜோதிட தேடல்

நம் முன்னோர்கள் காலம்காலமாக வழிபடும் சாமி அவரவர் வீட்டு குலசாமி ஆகும். அவர்களின் முக்கிய கடவுளாக சிவன், பெருமாள், அம்பாள், முருகர் மற்றும் பல்வேறு அவதாரங்களாக அல்லது கன்னி தெய்வமாக அவர்களோடு காக்கும் காவல் தெய்வங்களாகலான ஐயனார், இடும்பன், மதுரை வீரன், கருப்பண்ண சாமி  என்று பல்வேறு பெயர்களில் இருக்கலாம்.  நம்முடைய குலசாமி மற்றும் இஷ்ட தெய்வங்கள் தான் நம் போகும் பாதை சரியாக உள்ளதா என்று உணர்த்தும் ஒரு முக்கிய வழிகாட்டி. அவர் இருக்கும் இடமே நமக்கு கலங்கரை விளக்கம். அதனால் தான் நம்முடைய நல்ல விஷயங்கள் ஆரம்பிக்கும் ஒரு முக்கிய புள்ளியாக குலசாமி நிற்கிறார். பெரியவர்கள் முதலில் நமக்கு சொல்லுவது குலசாமிக்கு ஒரு ரூபாய் காசு முடிந்து வை என்பார்கள். காரணம் குலசாமிதான் நம்மை நல்வழிகாட்டி சரியாக செயல்படுத்துவார் என்பது நம்முடைய பெரியோர்களின் நம்பிக்கை. 
 

ஒரு மனிதன் உயர்வதும் தாழ்வதும் அவரவர் கையில் உள்ளது என்பர். அந்த உயர்வை தடுப்பதும், பாதகம் செய்வதும் கோள்களின் தசா புத்திக்கு ஏற்ப மாற்றங்கள் நிகழும். கிரகங்களுக்கு  அப்பாற்பட்டு அவரவர் இஷ்ட தெய்வம் மற்றும் குலசாமி துணை இருந்தால் மட்டுமே அவரவர் முயற்சி உயர்வு பெரும். குலதெய்வ வழிபாட்டை ஒழுங்காக செய்து வந்தால் நவக்கிரகங்களும் துணை நிற்கும்.  அதனால் தான் நாள் செய்யாததை கோள் செய்யும். கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும் என்பார்கள்.

ஒருவர் ஆண்டி ஆவதும் அரசனாவதும் நம்ம குலசாமியின் சரியான  வழிபாட்டில் உள்ளது. சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை என்ற பழமொழி நம் வாழ்க்கைக்கு மிகவும் ஒத்து போகும். என்னதான் நமக்கு பிரச்னை, கஷ்டம் ஏற்பட்டாலும் ஒரு  சில  காலங்களுக்கு மட்டும் இருக்கும்.  தசா புத்தியின் மாற்றத்திற்கு ஏற்ப நல்லது - கெட்டது என்று மாறி மாறி நடைபெறும். ஆனால் வாழ்நாள் முழுவதும் பிரச்னைகள் தொடரும் என்றால் அதற்கு முக்கிய கரணம் குலசாமி சாபம் ஆகும். நிறைய பேருக்கு குலசாமி தெரியாது,  ஒரு சிலர் குல சாமியை மாற்றி வழிபடுவார்கள். குலசாமி சாபத்தால் பெயருக்கு எல்லாமே இருந்தும் அதனால் சந்தோஷம் இல்லாமல் போகும். எடுத்துக்காட்டாக திருமணம் செய்தும் சந்தோஷம் இருக்காது. குடும்பத்தில் ஈடுபாடு இல்லாத நிலை, குழந்தைகள் பிறந்து பிறந்து இறக்கும் நிலை, சொத்து இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை. இவை அனைத்திற்கும் குலசாமியின் அருள் இல்லாத நிலை. இவர்கள் என்ன தோஷ நிவர்த்தி செய்தாலும் குலசாமியை கண்டுபிடித்து அவர்களுக்கு வேண்டியதை செய்தால் மட்டுமே சரியாகும். நம்ம குலசாமி நிறைய நாள்கள் நமக்காக காத்திருக்கும் நிலை தோஷத்தை ஏற்படுத்துகிறது. குலதெய்வத்தை மறப்பது என்பது பெற்றோரை மறப்பது போன்றது.

குலசாமியை கண்டுபிடிக்க என்ன செய்ய வேண்டும்?

அதற்கு நிறைய விதிமுறைகள் உண்டு. அவை..

  1. குலசாமியை பிரசன்னம், பாரம்பரிய ஜோதிடம் மற்றும் ஆருடம் வழியாக கண்டுகொள்ளலாம். அவரவர் ஜாதகத்தில்  கடவுளின் அனுகிரகம் இருந்தால் கட்டாயம் கண்டுபிடிக்க முடியும். ஆனால் அவற்றிக்கும் உங்களுக்கு அந்த தசாபுத்தி சரியாக நடக்க வேண்டும்.
     
  2. வீட்டில் மூத்த மகன்  மற்றும் மூத்த மகன் வயிற்று பேரன் ஜாதகத்தில் காணலாம். ஜாதகரின் பிறந்த தேதி நேரம் மற்றும் பிறந்த இடம்  சரியாக  இருந்தால் தான் கண்டுபிடிக்க முடியும்.
     
  3. குலசாமி மற்றும் காவல் தெய்வத்தை வீட்டிற்கு வரவேற்க சரியாக பூஜை செய்ய வேண்டும். அதெற்கென்று ஒரு விதிமுறை உள்ளது. ஒரு மண்டல் வழிபாடு செய்து குலசாமியை வீட்டிற்கு வரவேற்க வேண்டும். குலசாமி பல்வேறு வழியில் கண்ணில் தென்படும்.
     
  4. குலசாமி உங்களுக்கு தெரிய சரியான தசா புத்திகள் நடைபெறவேண்டும்.  அதெற்கு ஏற்ற தசா புத்திகள் வரும்போது பூஜை செய்ய வேண்டும். குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது. முன்னோர்கள் வாக்குக்கு ஏற்ப நம் தேடல் இருக்க வேண்டும்.
     
  5. முதலில் லக்கினதோடு தொடர்பு கொண்ட திரிகோணாதிபதிகள் (5, 9) கொண்டு குலதெய்வத்தைக்  கண்டுபிடிக்கலாம். ஐந்தாமிடம் பூர்வபுண்ணியத்தை சொல்லுமிடம். அதே பாவம் தந்தை வழி பாட்டனாரை 9க்கு 9ம் பாவம் ஐந்தாம் இடத்தில் தெய்வத்தை காணலாம். அந்த குலசாமி சரம், ஸ்திரம், உபய ராசியில் உள்ளதா, ஆண், பெண் தன்மை கொண்ட தெய்வமா அல்லது  சாத்வீக தெய்வமா அல்லது பலிகொடுக்கும்  ஆக்ரோஷ தெய்வமா என்று விளக்கி  சொல்லும் பாவங்கள். அருகில் நீர் உள்ளதா? அது கடலா? அல்லது குளம்  குட்டையா? வயல்வெளி சார்ந்த இடமா? மலை மேல் அல்லது குன்று சார்ந்து உள்ளதா? என்றெல்லாம் ஜாதக வாயிலாக காணலாம்.
     
  6. திரிகோணத்தில் உள்ள கிரகங்கள் மற்றும் அவற்றின் பார்வை அடிப்படையில் குலசாமி தன்மை தெரியும். ராசிகட்டத்தில் அமரும் கிரகங்கள் வாயிலாக குலசாமி உடன் உள்ள கூட்ட தெய்வங்கள் எத்தனை ஆண் மற்றும் பெண் என்று காணலாம். அந்த தெய்வத்தின் வாகனங்களான குதிரை, சிங்கம், புலி போன்றவற்றில் எது என்று அறிய முடியும். அவை பலிக்கொடுக்கும் தெய்வங்களா, கத்தி உடன் இருக்கும் சாமியா என்றெல்லாம் அவரவர் குடும்ப மூத்த உறுப்பினர் மூலம் கண்டுகொள்ளலாம்.

  1. இதற்கும் நிறைய மண்டல பூஜைகள் செய்ய வேண்டி இருக்கும். இவற்றின் வாயிலாக உங்கள் சாமி வீடு தேடி வருவார்கள். குலசாமி சிவனா, சக்தியா, பெருமாளா, முருக்காரா  என்று காணலாம். ஆனால் சரியான குல சாமியை காணுவது தான் கடினம். அதாவது முருகர் என்று அறிய முடியும். ஆனால், சுவாமி மலை முருகரா, பழனி தண்டாயுதபாணியா, திருச்செந்தூர் முருகரா, வைத்தீஸ்வர கோவில் செல்வமுத்துக் குமரனா என்பது சொல்லுவது மிக முக்கியம். நாம் செய்யும் பூஜையானது குலசாமியை கனவிலோ மனிதரின் ரூபத்திலோ, உணர்விலோ அறிய முடியும். முன்னோர்கள் மற்றும் பங்காளிகள் வாழ்ந்த இடங்களின் வாயிலாக காணலாம். உங்கள் மூதாதையர் உறவினர் மூலம் நமக்கு தென்படும். 
     
  2. குலசாமியை கண்டுபிடிக்க உங்களின்  பூர்வ புண்ணியமும், அதற்கேற்ப உங்களின் சுப கிரகங்களின் தசா புத்திகள் உங்களுக்கு சரியாக உதவ வேண்டும். அவர்களின் ஒட்டுமொத்த உதவி இருந்தால் உங்க குலசாமி வீட்டிற்கு வந்து காட்சி கொடுப்பார் அல்லது மற்றவர்கள் மூலமாக அறியச் செய்வார் என்பது உண்மையே.  இவற்றிக்கு என்னிடம் உள்ள ஜாதகமே சாட்சிகளாக உள்ளன.

​குலசாமி பலம் பெற்றால் அனைத்தையும் வெற்றி காணலாம்.  எமன் கூட  குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் ஒருவன்  உயிரை எடுக்க முடியும். நம் இறந்த மூதாதையர்களின்  புனித ஆத்மாக்கள் மற்றும் குலத்தை  சார்ந்தவர்களை காக்க குலசாமி உடனிருந்து  நம்மை பண்படுத்தும். திருமணம் மற்றும் எந்த நல்ல காரியம் செய்யும் பொழுதும் குலசாமி உத்தரவு இருந்தால் அந்த குடும்பம் பரிபூர்ண திருப்தியுடன் சந்தோஷம் நிலவும். குலதெய்வ வழிபாட்டை மறப்பது தாயை பட்டினி போடுவதற்குச் சமம். அதனால் அனைவரும் வருடம் ஒருமுறை செய்யவேண்டிய முறைகளை அவரவர் குடும்ப வழிபாட்டுக்கு ஏற்ப செய்யவும்.

குலதெய்வத்தை வணங்குவதல் கர்மவினை அகலும், அவரவர்  வம்சத்தை வளர்க்கும், குடும்பத்தை காவல் காக்கும், செய்யும் நற்காரியத்தில் ஜெயம் உண்டாகும், நோயிலிருந்து விடுபடுவோம், குடும்பம் தழைத்து ஓங்கும் என்பது  என்னுடைய காஞ்சி மஹா பெரியவா குருவின் வாக்கு.
 

ஜோதிட சிரோன்மணி தேவி 
வாட்ஸ்ஆப்: 8939115647
மின்னஞ்சல்: vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com