உன்மத்தர் உழலும் ஊஞ்சலூர்! சேஷாத்திரி சுவாமிகள் ஆராதனை!

தர்மம்  தழைத்தோங்கவும், அனைத்து ஜீவராசிகள் உய்யவும், கர்ம, பக்தி, ஞான யோகத் தத்துவங்களை உபதேசிக்கவும்  மகான்கள், அருளாளர்கள், குருமார்கள் அடிக்கடி அவதரிப்பது பாரத பூமியின் மிகப்பெரிய பெருமை.
உன்மத்தர் உழலும் ஊஞ்சலூர்! சேஷாத்திரி சுவாமிகள் ஆராதனை!

தர்மம்  தழைத்தோங்கவும், அனைத்து ஜீவராசிகள் உய்யவும், கர்ம, பக்தி, ஞான யோகத் தத்துவங்களை உபதேசிக்கவும் மகான்கள், மகனீயர்கள், அருளாளர்கள், குருமார்கள் அடிக்கடி அவதரிப்பது பாரத பூமியின் மிகப்பெரிய பெருமை. அப்படிப்பட்ட ஒரு திரு அவதாரம்தான் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்.

வந்தவாசி அருகில் வழூர் கிராமத்தில் வசித்துவந்த மரகதம்மாள், வரதராசன் தம்பதிகளுக்கு பிறந்தவர். வெகு நாள்கள் குழந்தைப்பேறு வாய்க்காமல் வருந்திய அந்த தம்பதிகளுக்கு காமாட்சி அம்மன் கனவில் தோன்றி அருளியவண்ணம் மந்திரித்து நவநீதம் (வெண்ணெய்) சாப்பிட அதன் பயனாய் மரகதம்மாள் கருவுற்று அவதரித்தவர். 'வெண்ணெய் உருவாக்கிய ஆன்மீகக் 'கரு' வூலம் இந்த மகான் என சிலாகித்து கூறலாம்.

அன்னை இறக்கும் தருவாயில் உணர்த்தியபடி திருவண்ணாமலையை அடைந்து சுமார் நாற்பது வருடங்கள் நான்கும் (நான்கு வர்ணாஸ்ரமங்கள்) கடந்த அதீத நிலையில் உன்மத்தராய், சித்த புருஷராய், பித்தராய் அவரவர்களுக்குத் தோன்றியவண்ணம் நின்று பக்தர்களின் இருள், இடர் நீக்கி, மெய்யறிவூட்டி நல்வழிகாட்டி அருளிய மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள். விப வருடம் 1929 மார்கழி மாதம் கிருஷ்ண பக்ஷ நவமி திதியன்று (4.1.29) மகா சமாதி எய்தினார். திருவண்ணாமலை செங்கம் முதன்மைச் சாலையில் அவரது சமாதி உள்ளது.

மகனீயர்கள், ஒரு இடத்தில் வசித்தாலும், சமாதி கொண்டாலும் அவர்கள் அந்த இடத்தில் மட்டும் உழுபவர்கள் அல்லர், எங்கு, எவ்விதம் அவர்களது அருட்சக்தியை ஸ்தாபனம் செய்து வழிபட்டாலும் அங்கு அவர்களது அருள் பூரணமாக நிலைத்து நின்று வேண்டுவோருக்கு வேண்டியதை அருளிக் காக்கும். இதனை காய வ்யூகம் என்பர். அனேக சரீரமெடுத்து ஒரே நேரத்தில் நான்கைந்து இடங்களில் தென்படுதலைக் குறிக்கும். இவ்விதமாக, திரு அருணையில் தனது சரீரத்தை அடக்கிக் கொண்ட ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளுக்கு ஊஞ்சலூரில் அமையப் பெற்றதுதான் ' சூஷ்ம யோக சமாதி'

அதேபோன்று நெரூர் ஸ்ரீ சதாசிவப்ரம்மேந்திரருக்கு மூன்று சமாதிகள், மதுரை குழந்தையானந்த சுவாமிகளுக்கு நான்கு சமாதிகள் வெளிப்படையாக அமைந்துள்ளன. ஸ்ரீ ராகவேந்திரருக்கு நூற்றுக்கணக்கில் பிருந்தாவனங்கள் அமைந்துள்ளன. 

ஊஞ்சலூர்: ஈரோடு மாவட்டத்தில் ஈரோட்டிற்கும், கரூருக்கும் மத்தியில் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள சிறிய கிராமம்தான் ஊஞ்சலூர். (கொடுமுடியில் இருந்து  5 கி மீ தூரம்) இவ்வூரில் உள்ள மாரியம்மன் கோயில் வளாகத்தில் அம்பாள் ஊஞ்சலில் அமர்ந்து ஆடினதான ஐதீகத்தில் ஊஞ்சலூர் என்ற பெயர் அமைந்ததாம். இன்றும் இக்கோயிலில் ஒரு ஊஞ்சல் தொங்கியபடி தெய்வீகமாகப் போற்றி வழிபடப்படுகிறது. இதைத் தவிர இந்த ஊரில் புராதனமான நாகேஸ்வரஸ்வாமி திருக்கோயில், செல்லாண்டியம்மன் கோயில்,. ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனமும் அமைந்துள்ளது.

ஸ்ரீ ஸத்குருஸ்வாமிகளின் அருளாசி உத்தரவின்படி  26.11.50ல் ஊஞ்சலூரில் சூஸ்மயோக சமாதி வைதீக பிரதிஷ்டையாக அமைக்கப்பட்டு தினசரி பூஜைகளும், ஆராதனை, ஜெயந்தி உற்சவங்களும், நவாவரண, பௌர்ணமி பூஜைகளும் நடைபெறுகின்றன. தற்போது இவ்வாலயத்தில் பிள்ளையார், பாலமுருகன் சன்னதிகள், ஸ்ரீ சக்ரபிரதிஷ்டை, சிறப்பு வாய்ந்த அர்த்தநாதீஸ்வரலிங்கம், குரு பாதுகா தேவதாப் பிரதிஷ்டை, மகானின் உற்சவ விக்ரம் ஆகியவைகள் தரிசிக்க வேண்டிய இதர அம்சங்கள். கோயம்பத்தூரை தலைமை இடமாகக் கொண்ட ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் சேவாசங்கம் என்ற அமைப்பு ஊஞ்சலூர் அதிஷ்டானத்தைச் சிறப்பாக நிர்வகிப்பதுடன், ஆண்டுதோறும் ஆராதனை உற்சவத்தை விமரிசையாக நடத்துகிறது. ஆராதனை வைபவத்தைக் காண இந்த சிறிய கிராமத்தை நாடிவரும் பக்தர்களின் எண்ணிக்கையோ பல்லாயிரம் ஆகும்.

இவ்வாண்டு மகானின் 94ம் ஆண்டு ஆராதனை வைபவம் டிசம்பர் 17-ம் தேதி(இன்று) நடத்தப்படுகிறது. வைதீக முறைப்படி தீர்த்த நாராயண பூஜையும் ஆராதனை நிகழ்ச்சிகளும், மாலை மகானின் உற்சவமூர்த்தி பல்லக்கில் விசேஷ அலங்காரத்துடன் நாதஸ்வர இன்னிசை, வேதபாராயணங்கள், பஜனை நாம சங்கீர்த்தனத்துடன் பவனி வரும் அழகைக் காண இரு கண்கள் போதாது.

பக்தர்கள் வசதிக்காக இந்த ஆராதனை வைபவத்தை ஒட்டி முன்னும், பின்னும் 5 நாள்களுக்கு சில குறிப்பிட்ட ரயில்கள் ஊஞ்சலூரில் புகை வண்டி நிலையத்தில் நின்று செல்கின்றது. கரூர், ஈரோட்டிலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளது. மேலும் தகவல்களுக்கு: 0422-2494361.

ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆராதனை நடக்கும் பிற இடங்கள்:

1. திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆஸ்ரமம் (8668127649)

2. வந்தவாசி அருகில் வழுர் கிராமத்தில் உள்ள மணிமண்டபம் (9962019172)

3. சென்னை அருகே மாடம்பாக்கம் ஸ்ரீ சக்கர மகா மேரு பதினெண் சித்தர்கள் சக்திபீட பிருந்தாவனம் (8754486723)

4. சென்னை அடையாறு கார்ப்பரேஷன் ஆபீஸ் அருகில் உள்ள தியான மண்டபம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com