என்ன செய்துவிடுவார் சனி? அவர் நல்லவரா கெட்டவரா?

சனி பகவான் நல்லவரா கெட்டவரா, அவரால் உயிருக்கு ஆபத்தா என்ற அனைத்து கேள்விகளும் மனதில் ஒருவித பயத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். 
சனி பகவான்
சனி பகவான்


சனி பகவான் நல்லவரா கெட்டவரா, அவரால் உயிருக்கு ஆபத்தா என்ற அனைத்து கேள்விகளும் மனதில் ஒருவித பயத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். 

முதலில் சனி பகவானை பார்த்து அச்சம் கொள்ள வேண்டாம். கர்மகாரகன் எனப்படும் சனி பகவானுக்கு பரிகாரம் என்று எடுத்துக்கொண்டால், ஒவ்வொருவரும் அவர்  வழிகளான நீதி, நியாயம், கடின உழைப்பு, மற்றும் செயலில் நிதானம் என்று அவருக்கு பிடித்த செயல்களை செய்தால் ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டக சனி காலத்தில் பாதிப்பு அவ்வளவாக இருக்காது. அவர் ஒரு ராசிக்குச் செல்லும் முன்பு 2.5 வருடமும், ராசியில் 2.5 வருடம் அடுத்த ராசியில் 2.5 வருடம் என மொத்தம் 7.5 வருடங்கள் சனியின் பிடியில் இருக்கும் (12,1,2 பாவங்கள்). ஒரு ராசிகட்டத்தில் சுற்றிவர 30 வருடங்கள் ஆகும். ஒவ்வொரு சுற்றும் நம்மைக் கொஞ்சம் உஷராக இருக்கச் சொல்லும் காலகட்டம்.

சனிப் பெயர்ச்சி காலம்

தங்கத்தை நெருப்பில் இட்டு, தட்டி, அழுக்கை நீக்கி, புடம்போட்டு அழகிய ஆபரணமாக மாற்றும் தன்மை பொற்கொல்லன் வேலை. பொற்கொல்லன் போல சனி பகவான் நம்மையும் புடம்போட்டு பத்தரைமாற்றுத் தங்க ஆபரணமாக மாற்றுபவன். நம் உடலில் இருக்கும் கெட்ட குணங்களை, சோம்பேறித்தனத்தையும் அறவே துவைத்து எடுத்து சலவை செய்பவர் சனி. உளியைக் கொண்டு அழகான சிற்பமாக மாற்றும் தன்மை சனி என்ற சிற்பியால்தான் முடியும். சனி என்கிற சிற்பி தன்னுடைய அழகான சிற்பம் முடிவு பெறும்வரை ஜாதகரை விடமாட்டார். சனியின் சேர்க்கை மற்றும் பார்வையானது நாம் முக்தி அடையும் வரை பின்தொடரும். இவர் என் அனுபவத்தில் சரியான ஆசிரியர் மற்றும் தகப்பன் என்று கூறலாம். முக்கியமாக சனி தசையில், ஏழரை சனி காலங்களில் வெற்றியை நோக்கி செல்லும் வழிகாட்டுவார். நாம் போகும் பாதை கடினம் தான். விதிகள் மற்றும் ஒழுங்குமுறை (Rules and regulation) வரைபடம் போட்டு அதன்படி நடக்கச் செய்வார். ஒரு மனிதனுள் குருவின் தன்மையைக் கொண்டு வரச் செய்வார். அதனால் தான் சனி தசையின் கடைசி புத்தி குரு புத்தி.

ஜாதகரின் ஒரு ராசி கட்டத்தைக் கடக்கும் முதல் இரண்டு சுற்றுகள் சனி பகவான் நிலையை பார்க்க வேண்டும். அது குழந்தைப் பருவமா அல்லது மாணவ பருவமா அல்லது உழைக்கும் வாலிப பருவமா என்று பிரித்துப் பார்க்க வேண்டும். இவற்றில் குழந்தைப்பருவ காலத்தில் சனி அவ்வளவு பிரச்னையை ஏற்படுத்தமாட்டார். அதுவே மாணவர் பருவம் என்றால் படிப்பிலும் ஒழுக்கத்திலும் கவனம் தேவை. முன்னேறும் நிலை என்பது 2,3 சுற்றுகளில் வந்தால், அவர்கள் தொழிலில் கவனம், மற்றும் கடின உழைக்கும் நிலையைக் குறிக்கும். ஒருவருக்கு மூன்று மற்றும் நான்காவது சுற்று அதனோடு அஷ்டமாதிபதி தசை அல்லது மாரகத்தை தரும் தசா வந்தால் ஆயுள் பிரச்னை ஏற்படுத்தும்.

"சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்” என்ற ஜோதிட சொற்றொடர்களுக்கு ஏற்ப உண்மையாக உழைப்பவருக்கு சனி கொடுப்பதை எந்த கிரகமும் தடுக்க முடியாது. கோச்சார சனி வரும் காலத்தில் தான் ஜாதகர் முக்கிய முடிவுகளை எடுக்கும் நிலை உண்டாகும். எடுத்துக்காட்டாக திருமணம் என்ற கால் கட்டுப் போடும் காலம். குருவை கோச்சார சனி தொடர்பு பெரும் காலம், ஒருவரின் உயர்ந்த தொழில் மாற்றத்தையும், வேலையில் உயர்நிலையும் தரும் காலகட்டமாக அமையும். இந்த எல்லாவித செயலுக்கும் அன்றைய கோச்சாரம் மட்டும் போதாது, முக்கியமாக ஒருவரின் தசையும் புத்தியும் வேலை செய்ய வேண்டும். அதற்கு ஏற்ப 100% பலன்கள் நடைபெறும். 

சனி ராசிக்கு 3,6,11ல் இருக்கும்பொழுது நன்மை செய்வார் என்பது மூல நூல்களின் ஆதாரம். இது கோச்சாரத்தில் சனி பயணம் செய்யும் பொழுது 3,6,11ல் அமர்ந்தால் நன்று. இது பல்வேறு கிரக சேர்க்கை என்றால் பலன் மாறுபடும். சனியோடு சேரும் பாவ கிரகத்தைப் பொருத்து நோயின் தாக்கம் வெளிப்படும். நோய் என்றால் உடலில் அழுக்கான கிருமிகள் சேர்க்கையால் ஏற்படும் நோய், ரத்த சோகை, விபத்து அல்லது கால்வழியான பிரச்னைகளை ஏற்படுத்தும். சனி எட்டில் வரும்பொழுது அஷ்ட சனி என்பர், எட்டு என்பது ஆயுள் பலம் இருக்கும்.  ஆனால் என்னடா இந்த பிறவி என்று நமக்கு தோணும். முக்கியமாக அது பாதகம் தரும் தசா புத்தியாக அமையக்கூடாது.

சனி இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடம் மிரட்டலையும் பயத்தையும் ஏற்படுத்தும். சனிபார்வை ஒருவரை ஆக்கவும் அழிக்க செய்யும். அது அவரவர் சுய ஜாதகத்தை பொறுத்து மாறுபடும். சனியின் பார்வை 3,7,10, அவற்றில் சப சப்தம பார்வையான 7ம் பார்வை (கண்ட சனி) என்பது கூடுதல் பலம் மற்றும் பலவீனம். ஜாதகருக்கு அந்த காலகட்டத்தில் பிடித்த விஷயத்தில் கொஞ்சம் ஆட்டிப்படைக்கும். ஏழரைச் சனி, அஷ்டம சனி, கண்டக சனி காலத்தில் சனியால் நல்ல அனுபவங்கள் நமக்கு கிட்டும். சனிபகவான் ஒருசில ராசிக்கு நன்மை பயக்கும். மற்ற சிலருக்கு கொஞ்சம் ஏமாற்றம் மற்றும் உடல் பாதிப்பு ஏற்படுத்தும்.

நாடி முறைப்படி, சனி முதலில் ராசி கட்டத்தில் உள்ள எந்த கிரகத்தைத் தொடுகிறார் என்று பார்க்க வேண்டும். பின்பு அவர் எத்தனையாவது சுற்று என்று கவனிக்க வேண்டும். சனி யோகரை தொடும்பொழுது அவற்றை சார்ந்த நல்ல கர்மாவையும், அதுவே அவர் அவயோகரோடு தொடும்பொழுது கெட்ட கர்மாவையும் தரவல்லவர். எடுத்துகாட்டாக செவ்வாயை கோச்சார சனி தொடும் காலம் நோய் அல்லது விபத்து சார்ந்த பிரச்னை தரவல்லவர். செவ்வாய் ஒரு பாவ கிரகம். அவரோடு சனி சேர்வது நன்று அல்ல. அதுவே சுப தன்மையுடன் குரு சனி தொடர்பு நன்மை பயக்கும். குரு மேலே சனி போனால் உயர்வு, முதலாளியாகும் யோகம். சனிமேல் குரு போகும் காலம் பல்வேறு காரணங்களால் முதலாளிதுவம் மாறி  உயர் அதிகாரி பொறுப்பு கிட்டும். இந்த கிரக சேர்க்கை கீழே தள்ளாமல், உயர்வை மட்டும் தரவல்லது.

ஜெனன ராசியில் உள்ள சந்திரன் பாகையில் சனி நெருங்கும் சமயம் திருமணம் செய்யும்பொழுது பார்த்து முடிவு செய்ய வேண்டும். சில சமயம் புனர்பூ தோஷத்தை ஏற்படுத்தும். சனி அமரும் வீடு நட்பாக இருந்தால் நற்பலனும், நீச்சமோ பகையோ பெரும்பொழுது கொஞ்சம் பாதிப்பு கொடுக்கும். உச்ச வீடான துலாம், மூலதிரிகோண வீடான கும்பம், ஆட்சி பெரும் மகரம், புதன் வீடுகளில் சனி அவ்வளவு பாதிப்பு தராது. மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம் ராசிக்கு சனிப் பெயர்ச்சியில் தொடர்புபெரும் போது அதிக பாதிப்பு ஏற்படுத்தும்.

தற்பொழுது சனிப் பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கப்படி 17-1-2023ம் ஆண்டு சனி பகவான் மகரத்திலிருந்து கும்பத்திற்குப் பயணம் செய்யப் போகிறார். இவர் "விவேகமே வெற்றியைத் தரும்" (slow and steady wins the race ) என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடம் மெதுவாகச் செல்லும் கிரகம். 

சனிப் பெயர்ச்சியின் பொது பலன்கள் ஒரு வரியில்... 

மேஷம்: நல்வினை விதைத்ததற்கு ஏற்ப அறுவடை செய்யும் காலம்.  உறவுகளால் மற்றும் தொழிலால் லாபம் தரும்.

ரிஷபம்: மற்றவர்கள் ஆதரவு கிட்டும். வெளிநாடு பயணம் உண்டு. மனதில் நினைப்பதை கர்ம சனி   நடத்தி வைப்பார்.

மிதுனம்: நிம்மதி பெருமூச்சு விடும் காலம், செய்யும் செயல் மற்றும் வழக்கில் வெற்றி, பெரியவர்கள் ஆசீர்வாதம் கிட்டும், சேர்த்து வைத்த பாக்கியம் உங்களை வந்துசேரும்.

கடகம்: எந்த செயலும் செய்யும்பொழுது - நில் கவனி, பின்பு அவ்வழியில் செல்.  உடலில் பாதிப்பைத் தரவல்லது இந்த அஷ்டம சனி.

சிம்மம்: கண்டக சனி காலகட்டத்தில் எதிரிகளால் பிரச்னை, திருமண உறவில் வாக்குவாதம், தெரியாத விஷயத்தில் மூக்கை நுழைப்பது.  மருத்துவச் செலவு ஏற்படுத்தும். 

கன்னி: ரோக சனி, நோய் மற்றும் கடனை ஏற்படுத்துவார். ஜாமின் விஷயத்தில் ஜாக்கிரதை.

துலாம்: பஞ்சம சனி உங்களுக்கு யோகத்தை அள்ளிதரும். புதிய பணவரவு மற்றும் சொத்து சேர்த்தல். குழந்தை பேறு உண்டு.  உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் அடிமை.

விருச்சிகம்: அர்த்தாஷ்டம சனி பணத்தைக் குறைத்துக் கொடுக்கும், சுகத்திற்கு பங்கம், வேலையில் பிரச்சனை அல்லது வேலை மாற்றம், சுயமதிப்பு மற்றும் நல்ல பெயர் வாங்க உழைப்பீர்கள்.

தனுசு: மனதில் உற்சாகம், சரியான நேரத்தில் உதவி, பன்மடங்கு வெற்றியைத் தருவார் சகாய சனி.

மகரம்: பாத சனி என்பதால் நடந்து அல்லது வாகனத்தில் போகும் பொழுது கவனம் தேவை. சொத்து சேர்ப்பதில் முயற்சி, உழைப்பு மற்றும் உயர்வுக்கு வித்து.

கும்பம்: ஜென்ம சனி ஒருவரை புதிய சிறந்த மனிதனாக மாற்றும் காலம். தொழிலில் மாற்றம், காரியத்தில் ஜெயம், புதிய உறவுகளை ஏற்படுத்தும். 

மீனம்: விரய சனியானவர், வாழ்க்கை முறைகளை கற்றுக் கொடுக்கும் காலம். செல்வ வளம் உண்டு, ஆசைப் பட்டது கிடைக்கும்.

சனிபெயர்ச்சி பொது பலன்கள் 50% மட்டுமே பலன்கள் வேலை செய்யும். கும்பத்தில் பெயரும்பொழுது ராசிக்கு முன்னும் பின்னும் உள்ள மகரம், மீனம் ராசிக்கு சனியின் தாக்கமும் சிறிது இருக்கும். பொறுமையாகக் காத்திருந்து வெற்றியைக் காண்பார்கள். ஜென்ம ராசியில் சனி, பார்வை பெரும் ராசிகள் மற்றும் குருவுடன் சேரும் சனி – இந்த காலகட்டத்தில் புதிய முயற்சி, தொழிலில் மாற்றம்,  திருமண உறவு, மறுமணம், என்று பல்வேறு நல்லதும் நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். கோச்சார சனி மற்றும் கர்ம காரகன்  தசை ஒருவரின் கர்மாவை செயல்படுத்தும் ஒரு புதிய வழியைக் காட்டும் ஒரு ஆசான். அதனால் அவரை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். சனி பகவான் நம்மை செதுக்கும் ஒரு சரியான சிற்பி ஆவார்.

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி ஜனவரி மாதம் 17ம் தேதி மாலை 6.04 மணிக்கு மகர ராசி அவிட்ட நட்சத்திரம் 2ம் பாதத்திலிருந்து, சனி தனது மற்றொரு சொந்த ராசியான கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் 3ம் பாதத்திற்குப் பெயர்ச்சி ஆக உள்ளார்.

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி வரும் மார்ச் 29 அன்று பகல் 1.07 மணிக்கு மகரத்திலிருந்து, கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆவதாக ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


Whatsapp:8939115647
vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com