Enable Javscript for better performance
மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்! அதில் ஜோதிட பங்கு என்ன?- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்! அதில் ஜோதிட பங்கு என்ன?  

  By ஜோதிட சிரோன்மணி பார்வதி தேவி   |   Published On : 04th January 2022 12:22 PM  |   Last Updated : 04th January 2022 12:22 PM  |  அ+அ அ-  |  

  women_EPS

  மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்! அதில் ஜோதிட பங்கு என்ன?  

   

  மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும் என்று கவிமணியின் உண்மையான சூட்சமம், ஒருவரின் வாழ்க்கை என்னும்  இனிப்பான பழுத்த மரத்தின் முக்கிய காரணியாக இருப்பவள், மற்றவருக்கு ஒளியாக  திகழ்பவள் ஒரு மங்கை என்னும் தூண்டுகோல்.  

  இந்த பிரபஞ்சத்தில் பெண்களாக பிறப்பதற்கு அனைத்து ஸ்திரீகளும் பெருமிதம் கொள்ளவேண்டும்.  ஒருவன் வாழ்க்கையில் நல்ல நிலையில் உயர கட்டாயம் பெண்ணின் பங்கு அதிகம் உண்டு. அவற்றோடு ஆணின் பங்கும்  அவசியம். அவற்றை யாரும் மறுக்க முடியாது. ஆனாலும் பெண் என்பவளால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். 
  ஒருவன் முற்பிறவி பயனுக்கு ஏற்ப, கர்மாவின் அடிப்படையிலேயே அவரவருக்கு ஏற்ப வீட்டிற்கு குலவிளக்காக, தாயாக, தாரமாக, சகோதரியாக, மகளாக உறுதுணையாக இருப்பாள். ஆனால் பெண் பிறப்பை ஒருசிலரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஒருசில காலங்களில் பெண் சிசு கொலை என்பது சர்வசாதாரணமாக இருந்தது. அவற்றை பற்றி நினைத்து பார்க்கும்பொழுது கேவலமா இருக்கிறது.

  பெண்ணின் முக்கியத்தை ஒரு நடைமுறை உண்மை மூலம் கூற விரும்புகிறேன். ஒரு வியாழக்கிழமை அன்று ஜெயா என்கிற தாய் தன் கர்ப்பமுற்ற மகளை கூட்டிக்கொண்டு அம்மன் கோவிலுக்கு வந்திருந்தார். அவளை அமர செய்து பின்பு ஒரு சில கடுமையான பரிகாரங்களை செய்து கொண்டு இருந்தாள். அவர்களை நான் பார்த்து கொண்டே இருந்தேன். சிறிது நேரம் கழித்து நானே சென்று அவர்களிடம் பேச்சு கொடுத்தேன். பின்பு அவர்கள் என்னிடம் நன்றாக பேச ஆரம்பித்தார்கள். பின்பு அவர்கள் செய்த பரிகாரத்தையும் அதன் காரணத்தையும் என்னிடம் சொன்னார்கள். அவர்கள் என்னிடம் கூறியது, என் பெண்ணிற்கு ஆண் வாரிசு மட்டும் வேண்டும். பெண் குழந்தை பிறக்கவே கூடாது என்று வேண்டிக்கொண்டதாக கூறினார்கள். அதற்காக நிறைய நாள்கள் உண்ணா நோன்பு இருப்பதாகவும் கூறினார்கள். 

  அவருடைய குடும்பத்தில் உள்ள பெண்கள் அனைவரும் கஷ்டத்தை மட்டுமே அனுபவிப்பதாக ஒரு மன அழுத்தத்தோடு கூறினார். அவருக்கு 3 பெண் குழந்தைகள், மற்றும் அவரோடு பிறந்தவர்கள்  1 சகோதர மற்றும் 2 சகோதரிகள். அதற்கு பின்பும் அவர்களோடு நான் இன்றும் தொடர்பில் இருந்துகொண்டு இருக்கிறேன். பலவருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் அந்த அம்மையார் தன்னுடைய வயதான உடல்நலம் குன்றிய தோழியை ஜோதிடம் பார்க்க அழைத்து வந்தார்கள். அந்த தோழிக்கு மகன்கள் தன்னை கவனிக்காத நிலையை பற்றி ஜாதகம் மூலம் ஏதாவது பரிகார தீர்வு காண வந்தார்கள். 

  தோழியின் ஜோதிட பலன்களை அறிந்துகொண்டு அவர்கள் புறப்பட தயாரானார்கள். அப்பொழுது நான் ஜெயாவை பார்த்து  கேட்டேன் உங்களுக்கு 3  பெண்கள் தானே நீங்கள் எப்படி இருக்கீர்கள். அதற்கு அந்த தாய் என் பெண்கள் வாழ்க்கையை வழிநடத்தும் நல்ல நிலையில் இருகிறார்கள். அதோடு என்னையும்  நன்றாக கவனித்து கொள்கிறார்கள்.  அதற்கு நான் சரியான பதிலடி கொடுக்கும் விதத்தில் ஒரு சில விஷயங்களை அவருக்கு விளக்கினேன்.

  உங்களுடைய சிறுவயதில் விதவையான அம்மா, ஆண் துணையில்லாமல் உங்கள் அனைவரையும் நல்ல நிலையில் திருமணம் செய்து உங்களுக்கு தேவையானவற்றை அனைத்தும் செய்து உங்களுக்கும் உங்கள் கூட பிறந்தவரையும் சரியானமுறையில் வழிநடத்தினார்கள். அதே தாயை பின்பு நீங்கள் மற்றும் உங்கள் சகோதரிகள் சேர்ந்து  தாயின் மறைவு வரை நீங்கள் அனைவரும் காப்பாற்றினீர்கள். உங்கள் சகோதரனால் உங்கள் தாய்க்கு எந்த உபயோகமும் இல்லை. அது தவிர இன்றுவரை உங்களை காப்பாற்றுவதும் உங்கள் மகள்கள் தான். தற்பொழுது உங்கள் தோழியின் வாழ்வில் முக்கிய தேவைகளை ஆண் வாரிசு பூர்த்தி செய்யவில்லை. ஆனால் தற்பொழுது  உங்கள் வழி தலைமுறைக்கு, ஆண் வாரிசு வேண்டும் என்று தவம் இருப்பீர்களா என்று கேட்டேன். அதற்கு அந்த தாயிடம் எந்த பதிலும்  இல்லை.  அந்த தாயின் அமைதி அவர்களின் தவறை உணர்த்தியது. 

  இதன் மூலம் பிரபஞ்ச சக்தியில் ஆண், பெண் இருவரும் முக்கியமே, பொக்கிஷமே என்று புரிந்துகொண்டால் போதுமானது. ஆனால் இருப்பாலரில் ஆணை   விட பெண்ணிற்கு மன வலிமை அதிகம் உள்ளது என்பதால்தான் குழந்தைகளை சுமக்கும் தன்மை பெண்ணிற்கு இறைவன் கொடுத்துள்ளார்.    

  நவகிரகங்களில் பெண் கிரகம் என்று கூறப்படும் சந்திரன், சுக்கிரன், மற்ற கிரகங்களோடு சேரும்போழுது அதிக வலிமை, யோகம் ஏற்படும்.  இவை அனைத்தும் ஆண் பாவத்திற்கும் பொருந்தும். மனிதனின் அத்தியாவசிய தேவைகளான, நிலையான அமைதி, சுகம், மோகம், வீடு ஆடை, ஆபரணம், காமம், அடக்கிய அனைத்திருக்கும் பெண் கிரகங்கள் தேவை. இவற்றை அனைத்தையும் ஒரு கோர்வையாக பாரம்பரிய ஜோதிடத்தில், பெண்ணின் ஜாதக படலத்தை பார்ப்போம்.

  ஒரு பெண்ணுடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னம், ராசியை கொண்டு அழகு, நிறம் உடல் அமைப்பு கூற வேண்டும். அதுவும் இரட்டைப்படை ராசியாக அமைந்தால் அந்த பெண் சௌதர்யவதியாக திகழ்வாள். அதுவும் சுபர்கள் பார்வைப்பட்டால் அதிரூப சுந்தரியாக மிளிருவாள். அதுவே ஒற்றை படை ராசியாக இருந்தால் பெண்ணிற்கு மென்மை தன்மை சிறிது குறைந்து ஆண் சாயலுடன் காணப்படுவாள். இங்கு கிரகங்களின் பார்வை கொண்டு உடலாற்றல், குலம், மனவலிமை, செல்வ வசதி சொல்லப்படும் என்று ஜாதக அலங்காரத்தில் கூறபடுகிறது.  பெண்ணின் ஜாதக கட்டத்தில் லக்கனத்தில் 7ம் பாவத்தை கொண்டு கணவனின் அழகு, ஆற்றல் குணம் சொல்ல முடியும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் எந்தக் கிரகம் மிகவும் பலங்குறைந்து அல்லது நீசமாகவோ அல்லது அஸ்தமனமாகவோ இருக்கின்றதோ அந்தக் கிரகம் கணவன் ஜாதகத்தில் லக்னாதிபதியாக வரக் கூடாது.

  லக்கின கிரக  சேர்க்கை 
  லக்கினத்தில் சந்திரனோடு சுக்கிரனும் கூடி நின்றிருந்தால் அப்பெண் பெருமைக்குரிய பல பண்புகளுடன் சுகசௌக்கியமாக இவ்வுலகில் வாழ்க்கை நடத்துவாள். லக்னத்தில் சந்திரனும் புதனும் சேர்ந்து அமர்ந்து இருந்தாள் அந்த நங்கை நல்லாள் பல கலைகளை கற்றரிந்தவள், நற்பண்புகளை உடையவளாகவும், அழகும் அறிவும் கொண்டவளாக இன்பங்களை அனுபவிக்க கூடியவளாக இருப்பாள். லக்னத்தில் புதனும் சுக்கிரனும் சேர்க்கை பெற்ற ஜாதகி மெய்யறிவு உடையவளாக, மிக்க சௌந்தரியவதியாக, இனிமையாக பேச கூடியவளாக விளங்குவாள். அதுவும் இந்த வகை சேர்க்கை இரட்டைப்படை ராசியில் அமர்ந்தாள் அவள் அதீத அறிவு, அழகு, ஆற்றல் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.  லக்னத்திற்கு மூன்றாம் இடத்தில் சுபர்கள் நின்றிருந்தால் மிக்க செல்வம், நற்பண்பு, இரக்க சுபாவம் மற்றும் சுகபோகங்கள் ஆகிய யாவும் படைத்திருப்பாள்.

  இரட்டை ராசியில் குரு, செவ்வாய், புதன் ஆகியவை பலம் பெற்று இருந்தால் அந்த ஜாதகர் உயர் குலத்தில் பிறந்தவள், மயில் போன்ற சாயல் உடையவல், அனேக கலைகளை அறிந்தவள் நற்பண்புகளை உடையவள்.

   ஜாதகத்தில் சூரியனோடு சேரும்பொழுது
  பெண்ணின் ஜாதகத்தில் சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால் பலருடைய சிந்தனையையும் அறிந்துகொள்ளக் கூடிய ஆரோக்கியமான உடலை பெற்றவள். சூரியனும் குருவும் சேர்ந்திருந்தால் கபட  எண்ணம் உடையவளாக, முன்யோசனை இல்லாதவளாக இருப்பாள். சூரியனும் சுக்கிரனும் சேர்ந்திருந்தால் அவள் மறபோர் தெரிந்தவராக ஆயுதங்களை கையாளும் திறன் கொண்டவளாக அதன் மூலம் வருமானம் ஈட்டுபவளாக இருப்பாள். சூரியனும் சனியும் சேர்ந்திருந்தால் பித்தளை, செம்பு போன்ற உலோகங்களை கொண்டு வருமானம் ஈட்டுபவள். சூரியன் சனி சேர்க்கை என்பது ஆண் ஜாதகத்தில் தந்தை மகன் ஒற்றுமை அற்ற தன்மையும். பெண் ஜாதகத்தில் தந்தை மகள் உறவு பாசமிக்க அன்னியோன்யத்தையும் சொல்லும்.

  சூரியனும் சந்திரனும் சேர்ந்து நின்றிருந்தாள் பல தொழில்களை கற்றறிந்து வருமானம் ஈட்டி மகிழ்பவள். ஆனால்  சூரியன் செவ்வாயும் கூடி நின்று இருந்தாள் அவள் பெரும் பாவி, இருவரும் இணைந்து எவ்விடத்தில் அமர்ந்தாலும் அந்த ஜாதகி இளம் வயதிலேயே தன் பூவையும் பொட்டையும் இழக்க வாய்ப்பு நேரிடும் என்று ஜாதக அலங்கார நூலில் கூறப்படுகிறது.

  பெண்ணின் ஜாதகத்தில்  ஆண்  ராசியாக இருந்து அங்கு வலிமை மிக்க  கிரகங்களான சூரியன்  செவ்வாய் சேர்க்கை பெற்றால்,  அவள் புகழ் வலிமை மிக்கவள் மற்றும் விளையாட்டு துறையில் ஜெயிக்க பிறந்தவள். இங்கு பெண்கள் சாதிக்கும்பொழுது மென்மை தன்மை குறைந்தால் தவறில்லை. லக்னத்தில் இருக்கும் போது அப்பெண் மிகவும் சந்தோஷமாக வாழ்பவளாகவும் ஆடல், பாடல், இசைகளில்  தேர்ச்சி பெற்றவளாகவும் இருப்பாள். லக்ன ராசியின் தன்மையைக் கவனத்தில் கொண்டு அந்த பெண்ணின் புகழ், பெருமை இவற்றின் அளவை நிர்ணயிக்க முடியும்.

  பெண்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் கற்பு ஸ்தானம், வாழ்க்கை சுகம், வீட்டின் அமைப்பு, ஒழுக்க நெறியை பற்றி சொல்லும் இடம்.  இந்த இடத்தின் அதிபதி பலம் பெற்று இருந்தால் காதல் மற்றும் சுகமான வாழ்க்கை சிறப்பாக நடக்கும் (இங்கு 5ம் இடமும் பலம் தேவை). நான்காம் அதிபதி சுபத்தன்மையோடு பலமாக இருந்தால் ஒழுக்கம் மற்றும் நெறி தவறாத வாழ்வு அமையும். நான்காம் வீட்டில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், அசுப கிரகங்கள் இருந்தாலும், பார்த்தாலும் அந்தப்பெண்ணிற்கு கூடா நட்புகள் தேடி வரும்.

  பெண்ணின் தீராத நோய், கருப்பை பிரிச்சனை, கருச்சிதைவு, எதிர்ப்பு சக்தி இல்லா நிலை, இரட்டை குழந்தை மற்றும் குறை பிரசவம், குழந்தைக்கு கூடுதல் உடல் உறுப்பு சேர்க்கை என்பது பெண்ணின் ஜாதகம் மூலம் அறியலாம். இங்கு திருமணத்திற்கு பிறகு ஏற்படுவதை சுக்கிரன் செவ்வாய் கொண்டு அறியலாம். அதெற்கு நோய்க்குரிய பாவம் கொண்டு பலன் கூறல் வேண்டும்.

  மாங்கல்ய ஸ்தானம் - ஏழில் ஒன்றுக்கு மேற்பட்ட பாபக் கிரகங்கள், சுபர் பார்வை இல்லாமல் அமரக்கூடாது. அதிலும்  ஏழாமிடத்தில் பாவிகள் இருப்பது கொஞ்சம் பிரச்னையை உண்டு செய்யும். மற்றும் அதோடு சேரும் கிரகம் பொறுத்து அமையும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடத்தில் கணவனின் தோற்றத்தையும், ஆற்றலையும், அன்பையும் கூறும் இடம். ஏழாம் இடம் அசுப கிரக சேர்க்கை, அசுப பார்வை, சூன்ய ராசி அல்லது அவற்றின் அதிபதி தொடர்பு பெறாமல் இருக்க வேண்டும்.  எட்டாமிடத்தால் மாங்கல்ய வலுவையும் அதாவது கணவனின் ஆயுளையும் கூறும் இடம். அதுவும் சூரியன், செவ்வாய் இவர்கள் திருமண வாழ்க்கையை ஈடுபடுத்தாத நிலையை உண்டு பண்ணும். அதுதவிர தம்பதியர் விவாகரத்து, நீண்டநாள் பிரிவு, ஆயுள் பலம் குறை ஏற்படுத்தும். முக்கியமாக 7, 11 பாவங்களில் அலி கிரகங்கள் (உதாரணம்.. புதன், சனி ) சம்மணம் போட்டு அமர்ந்தாள் அவர்கள் ஆண்மை குறை ஏற்படுத்தும் அல்லது புத்திர சோகம் ஏற்படுத்தும்.

  ஏழாமிடத்தில் சனி வீடாக இருக்குமானால் அப்பெண்ணுக்கு மாங்கல்யதாரணம் செய்பவன் வயோதிகனாகவும்,  குணக்கேடானாகவும் இருப்பான். சந்திரனும் சுக்கிரனும் இணைந்து ஏழாம் இடத்தில் நின்றிருந்தால் அந்த மங்கைக்கு கிழவனுக்கு மாலை இடுவாள். பாவிகள் அவர்களோடு சேர்ந்தால் பருவ வயதில் பூவும் போட்டும் இழப்பாள்.

  ஏழாமிடத்தில் செவ்வாய் சனி என்பது ஒரு தவறான சேர்க்கைதான். ஏழில் சனி செவ்வாய் சந்திரன் ஆகிய மூவரும் சேர்ந்து நின்றால் அந்தப்பெண் இல்லற நெறியிலிருந்து பிறழ்வாள்.  நவாம்ச லக்னத்தின் ஏழாம் இடத்தில் சனியும் செவ்வாயும் சேர்ந்திருந்தால் அந்த பெண் உடலில் வியாதியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். நவாம்ச லக்னமும், சனி, செவ்வாய் ஆகிய இருவரும் நின்றிருக்க நவாம்ச ராசிகளில் சுபர்கள் வீடுகளாக இருந்தால் அப்பெண் இடை அழகு  கொண்ட மனைவியாக கணவனின் மனதில் அன்புடன்  வீற்றிருப்பாள். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சனி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் எந்த ராசியில் இருக்கின்றனவோ அந்த ராசிக்கு கேந்திரங்களில் கணவனது ஜாதகத்தில் சனி, செவ்வாய் வரக் கூடாது.

  ஆயுள் பலம்
  எட்டுக்குடையவன் சனியுடன் இணைந்து 8  அல்லது 11 ம் இடத்தில் இருந்தால் ஜாதகி கணவனுடன் 100  வயது வரை இருப்பாள். மேற்சொன்ன இருவரும் அஸ்தங்கம் ஆகியிருந்தால் கணவனுக்கு ஆயுள் பலம் குறைவு.   ஒன்பதுக்கு உடையவன் சுபர் வீட்டில் நின்றிருந்தால் அந்த ஜாதகன் மத்திம வயதில் கைம்பெண்ணாவாள். ஒன்பதுக்குடையவன்  பாவகிரகமாகி உச்சம் பெற்றிருந்தால் அவள் பூவும் பொட்டும் உடையவளாக அதிக காலம் வாழ்வாள். 

  லக்னாதிபதியும் 9க்கு  உடையவனும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் அந்த ஜாதகர் அவளுடைய கணவனும் ஒரே காலகட்டத்தில் இறப்பை தழுவுவார்கள். 

  கிரகங்களின் சேர்க்கை மற்றும் சுபர்களின் ஒளி கதிர் கொண்டு இயங்கும். ஜாதகரின் தசா புத்தி மற்றும் கோச்சார காலங்களில் எதிர்கால வாழ்க்கையை நிலைநிறுத்தும் ஒரு முக்கிய ஊன்றுகோலாக உதவும். மேற்குறிய அனைத்து பொது விதிகளும் 10 % அளவுதான் சொல்லப்பட்ட சூட்சமம். இவை அனைத்தும் ஒரு சில நூற்களின் வாயிலாக பல்வேறு ஜாதகங்கள் கொண்டு ஆராய்ந்து சொல்லப்பட்ட சூட்சம பொதுப்பலன். எந்தெந்த கிரகங்கள் அசுபர் என்று அவரவர் ஜாதகத்தில் உள்ள ஜென்ம லக்னம் கொண்டு அறியப்படும். அவற்றின் தெளிவான உண்மையான பலன் எப்பொழுது நடைபெறும் என்பது அவரவர் தசாபுத்தி மற்றும் கோட்சரம் கொண்டு செயல்படும். மாணவர்கள் நுணுக்கமான அனைத்தும் அறிய உதாரண ஜாதகங்கள் மூலம் தெரிந்து கொள்ளவேண்டும். ஆண் ஜாதக பலத்தையும் பலவீனத்தையும் ஜோதிட சூட்சம விளக்கங்களை  பின்பு கட்டுரையாக வெளிவரும்.

  பெண் என்பவள் ஒரு மனிதனை உருவாக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்.  முடிந்தவரை பெண்களிடம் தவறான சாபத்தை பெற்றுவிடாமல் இருக்கவேண்டும். குடும்பத்தில் உள்ள குல விளக்குகளான  தாய், தமக்கை, மகள், மனைவி முடிந்தவரை அழுத்தம் கொடுக்காமல், அழவிடாமல் இருந்தாலே உங்களுக்கு எல்லாவித  செல்வங்கள், நல்ல உயர்வு, மன நிம்மதி கிட்டும்.  ஒரு பெண் என்பவளுக்கு மட்டுமே ஒரு பெரிய தேரை இழுக்கும் அதீத சக்தியை கடவுள் கொடுத்துள்ளார். அதிலும் ஒரு மனிதனுக்கு தாய் மற்றும்  மனைவி பிரிவில் அதிக வலி இருக்கும். அதனால் வீட்டில் உள்ள மகாலக்ஷ்மிகளை முடிந்தவரை துன்பப்படுத்தாமல் குன்றின்மேல் இட்ட குல விளக்காக பார்த்துக்கொள்ளுவோம்.

  ஜோதிட சிரோன்மணி பார்வதி தேவி 

  வாட்ஸ்ஆப்: 8939115647
  மின்னஞ்சல்: vaideeshwra2013@gmail.com


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp