துல்லியமாகச் சொல்லும் பிரசன்ன ஜோதிடம்!

இந்த பிரபஞ்ச சக்தியில் வானியல் சாஸ்திரம், அறிவியல், கணிதவியல் மற்றும் ஆன்மீகம் சார்ந்தவற்றை உள்ளடங்கியது ஜோதிடம்.
வாரப்பலன்கள்
வாரப்பலன்கள்

இந்த பிரபஞ்ச சக்தியில் வானியல் சாஸ்திரம், அறிவியல், கணிதவியல் மற்றும் ஆன்மீகம் சார்ந்தவற்றை உள்ளடங்கியது ஜோதிடம். ஜோதிடர்களுக்கு வழிகாட்டியாக பழமையான ஜோதிடப் பாடல்களும், வெண்பாக்களும், சித்தர்களின் நூல்களும், பல்வேறு நாட்டு ஜோதிட மூல நூல்களும் உறுதுணையாக உதவி வருகிறது. இவற்றுடன் குருமார்களின் வழிக்காட்டாலின் மூலமாக பல்வேறு புதிய முறைகளில் ஜோதிட அறிவு வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. முக்கியமாக பிரசன்னம், வாஸ்து, நாடி, கைரேகை, எண் மற்றும் பெயர் ஜோதிடம், மரபணு ஜோதிடம் மற்றும் பல்வேறு புதிய வழிகாட்டலின் மூலமாக ஜோதிடம் கற்கப்படுகிறது. ஜோதிட மாணவர்கள் பல்வேறு ஜாதகத்தின் மூலம் ஆராய்ச்சிக்கு  உட்படுத்தி புதிய சூட்சமங்களைத் தெரிந்து தங்களை மேம்படுத்திக் கொள்ளுகின்றனர்.

ஜோதிடம் என்பது கணித ஸ்கந்தம், ஜாதக ஸ்கந்தம், ஸம்ஹிதா ஸ்கந்தம் என்று 3 பிரிவுகள் ஆகும். இவற்றில் ஸம்ஹிதா ஸ்கந்தத்தில் முகூர்த்தம், வாஸ்து, வருஷபணி, சகுணம், பிரசன்னம் என பிரித்து விளக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 35க்கும் மேற்பட்டு பிரசன்னம் முறைகள் நடைமுறையில் பயன்படுத்தி வருகின்றனர். நம் மனதில் நினைக்கும் கேள்விக்கு ஆம், இல்லை என்ற பதில் சட்டென்று பிரசன்னம் வழியாகச் சொல்லப்படுகிறது. இதற்கு முக்கியமாக அனுபவ ஜோதிடம் அவசியம் தேவை. 

ஜோதிடம்  என்பது ஒரு ஆழமான சுவையான நீர் ஊற்று. அவற்றை ஜோதிட மாணவர்கள் படித்து, ஆராய்ந்து, துல்லிய பலன்களை நொடிப்பொழுதில் சொல்லத் தயாராக வேண்டும். பராசர ஜோதிடம் தெரிந்தாலும், ஜாதகரின் வரும் நேரத்தைக் கொண்டு அவர்களின் கேள்வி என்ன, அந்த செயல் நடக்குமா? நடக்காதா? என்று தெரிந்துகொள்ள நாடி மற்றும் பிரசன்னம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். ஜாதக கட்டத்தைப் பார்ப்பதற்கு முன்பு, கேள்வியாளரை பற்றிய விவரம், அவர் மனதில் உள்ள மறைக்கப்பட்ட காரணம் என்ன என்ற தெரிந்துகொள்ள பிரசன்ன ஜோதிடம் அவசியம் தேவை. ஜாதகம் இல்லையென்றாலும் பிரசன்னம் மூலம் கேள்விக்கு பதிலும் அளிக்கலாம். கோவில் பூசாரிகள், கடவுளின் அருள் பெற்றவர்கள் அப்பொழுதே ஒருவர் எதற்கு வந்திருக்கிறார்கள், அவர்களுக்கான தீர்வு என்ன என்று அருள் வாக்கு சொல்லிவிடுவார்கள்.

பிரசன்னத்தில் பலவகைகள் உண்டு. அவற்றில் தாம்பூல பிரசன்னம், தீப பிரசன்னம், சோழி பிரசன்னம், கடிகார பிரசன்னம், அஷ்டமங்கள பிரசன்னம், ஜாமக்கோள் பிரசன்னம், எண்  பிரசன்னம், ஹோரா பிரசன்னம் என்று நூற்றுக்கு மேற்பட்ட பிரசன்னங்கள் உண்டு. ஒருசில முக்கிய பிரசன்னம் கடவுள் மற்றும் குருமார்கள் அருள் அவசியம் தேவை. கிரக காரகத்துவம், அன்றைய கோச்சார கிரக நிலை, சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம், ராகு மாந்தி நிலை என்று மனதில் நிறுத்தி பிரசன்னம் பார்க்க வேண்டும். ஒவ்வொரு பிரசன்னமும் ஒவ்வொரு சாஸ்திர முறைகளில் குருமார்களால் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. கிரகங்களின் அடிப்படையில் தான் நமக்கு துல்லியமாகப் பலன்களைச் சொல்லமுடியும். அவற்றில் சிலவற்றை தெரிந்துக்கொள்ளுவோம். சந்திரன் நகர்வை கொண்டு ஒரு ஜாதகரின் கேள்வி நிலையை அறிந்து கொள்ளலாம். இவற்றை சந்திர நாடி என்போம்.

தாம்பூல பிரசன்னம் என்பது மகாலக்ஷ்மி வாசம் செய்யும் வெற்றிலை கொண்டு சொல்லப்படுவது. ஒருவர் கொண்டு வரும் வெற்றிலை எண்ணிக்கை, அவற்றில் உள்ள ஓட்டை, அழுகிய நிலை மற்றும் காலநிலை கொண்டு சொல்லப்படும். வந்தவர் கேட்கும் கேள்வி வெற்றி பெறுமா இல்லையா என்று தெரிந்து கொள்ளலாம். இந்த தாம்புல பிரசன்னம் மிகவும் தெளிவான ஒன்று. இந்த பிரசன்னத்தை நிறைய ஜோதிடர்கள் உபயோகிக்கிறார்கள்.

அருள் வடிவமான மகாலக்ஷ்மியாக சொல்லப்படும் சோழிகள் கொண்டு பிரசன்னம் பார்க்கப்படுகிறது. இந்த சோழி பிரசன்னம் மிகச் சிறந்த பிரசன்ன வகையாகும். உயிரோட்டம் கொண்ட சோழிகள் ஒருவரின் கர்மாவின் அளவுக்கு ஏற்ப அதன் வீரியத்தைக் குறைக்க வழிகளைச் சொல்லிவிடும். இவற்றைச் சரியான முறையில் கற்று உள்ளார்ந்து சொல்லவேண்டும். இந்த பிரசன்னம் பார்க்க 108 சோழிகள் மற்றும் சரியான அளவு கொண்ட தேக்கு மரத்தால் செய்யப்பட்ட பலகை தேவை. இவை கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று பிரித்துப் பார்த்து பதில்களைச் சொல்லும். சோழி பிரசன்னம் பார்க்கக் கட்டாயம் கடவுளின் பிராரப்தம், குலதெய்வ அருள், குருவின் அனுக்கிரகம் இருந்தால் மட்டுமே சோழிகளைக் கொண்டு பிரசன்னம் கற்றுக்கொள்ளமுடியும்.

பஞ்சபூத தத்துவத்தில் ஒன்றான தீபம் கொண்டும் பிரசன்னம் சொல்லப்படுகிறது. இது தீப பிரசன்னமாகும். வரும் நபரின் முன்பே சரியான திசையில்  தீபம் ஏற்றி, ஜாதகர் கேட்கும் கேள்விக்கு இயற்கையாகவே தீபத்தின் உள்ள திசையின் அசைவு மற்றும் நிறம் மூலம் பிரசன்னம் சொல்லப்படுகின்றன. இதுவும் ஜோதிடரால் 15 நிமிடத்திற்குள் சொல்லப்படும் எளிய பிரசன்னம் ஆகும். கடிகார முள் கொண்டு சொல்லும் பிரசன்னமும் எளிய மற்றொரு முறை பிரசன்னமாகும்.

ஜாமக்கோள் ஆருடம் என்பது மற்றொரு முக்கிய பிரசன்னம் ஆகும். அவற்றை விளக்கமாகப்  பார்ப்போம். இதனுடைய மூல நூல் சினேந்திர மாலை என்கிற சமண நூல் ஆகும். இந்த பிரசன்னம் கணிக்கும் விதம் கடினமான ஒன்று. இதற்கும் எளிய முறையில் பல்வேறு சாப்ட்வேர்கள் வந்துவிட்டது. ஒருவர் கேள்வி கேட்கும் தேதி மற்றும் நேரம் பதிவு செய்தால் ஜாமக்கோள் ஜாதக கட்டம் வந்துவிடும். இந்த பிரசன்னத்தின் முக்கியமான ஹீரோக்கள் உதயம், ஆருடம், கவிப்பு, உள்புறத்தில் உள்ள கிரகங்கள் கோச்சார கிரகங்களும், வெளிப்புற கட்டத்தில் உள்ள கிரகங்கள் ஜாம கிரகங்கள் வரிசைப்படுத்தப்படும். இந்த ஜாமக்கோள் கிரகங்கள் பின்னோக்கி அதாவது இடப் பக்கம் நகரும் தன்மை கொண்டது.  

ஜாமக்கோள் உள் கட்டத்தின் முதன்மை புள்ளி உதயம், இது குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படும் லக்னமாகும். ஜாமக்கோள் ஆருடத்தில் பகல் 12 லக்கினமும் இரவு 12 லக்கினமும், ஆக மொத்தம் 24 லக்கினம் கொண்டது. உதயம் ஒவ்வொரு கட்டத்தையும் கடக்க 1 மணி நேரம் ஆகும். ஜாதகராகிய கேள்வியாளர் பற்றியது மற்றும் கேள்விக்குள் மறைந்து இருக்கும் ரகசியம் வெளிப்படுத்தும் பாவமாகும். அதற்கு அடுத்தது ஆரூடம், இது அதிபலம் கொண்ட முக்கியமானது. ஜாதகம் கேட்க வந்தவர் வந்து நின்ற நிமிடத்தை ஆரூடம் காட்டும். ஆரூடம் என்பது ஒரு ராசியை 5 நிமிடத்தில் அதாவது ஒருமணி நேரத்தில் 12 ராசி கட்டத்தையும் கடக்கும் தன்மை கொண்டது. எடுத்துக்காட்டாக உதயத்தில் ஆருடம் ஒரே பாவத்தில் இருந்தால் தன்னை பற்றிய கேள்வி இருக்கும். அதுவே அவர் 2ம் பாவத்தில் இருந்தால் தன வரவு, புதிய உறவு, குடும்பத்தைப் பற்றிய கேள்வியாக இருக்கும் அதுவே 3ம் பாவம் என்றால் இடம் மாற்றம், முயற்சியில் வெற்றி, இளைய சகோதரி பற்றிய கேள்வி, ஒப்பந்தம், பயணம் பற்றிய  கேள்வியாக இருக்கும்.

கவிப்பு என்றால் குடை அல்லது கவிழ்த்து வைத்தல். அதாவது ஒரு குடை போன்ற அரை வட்ட வடிவமான ஒன்றை கவிப்பை சுற்றி வரைய வேண்டும். அதற்குள் எந்த கிரகம் மறைந்திருக்கும் என்று பார்க்க வேண்டும். அந்த கிரக காரகத்துவம் ஒருவரின் பல்வேறு மர்ம  விஷயங்களை வெளியே படம் பிடித்துக் காட்டப்படும். இந்த பிரசன்னத்தில் துல்லியமான பலன் பார்ப்பதற்கு கவிப்பு மிகப் பிரதானமாகச் செயல்படுகிறது. கேள்வியாளரின் கேள்வி நடக்குமா நடக்காதா என்ற பதில். அது நடக்காது என்றால் காரணம் என்ன என்பதை அதனோடு தொடர்புடைய ஜாமக்கோள் கிரகங்கள் சொல்லிவிடும். எடுத்துக்காட்டாக கெட்ட செயல் எப்பொழுது பிரசன்னம் காட்டிக்கொடுக்கும்? பாதகாதிபதி அல்லது பாதகத்தில் உள்ள கிரகம் உச்சம் ஆகிறதோ அதன் காரகத்துவம் பாதிக்கப்படும். கேள்விக்கான காரக கிரகம் அஷ்டமத்தில் இருந்தால் அல்லது உதயாதிபதியை குளிகன் மற்றும் மாந்தி கவிதால் கெட்ட சம்பவம் சம்பவிக்கும். 

முக்கியமாக கவிப்புயே மாந்தி கவித்தால்  மரணத்திற்கு நிகரான சம்பவம் நடக்கும். ஆனால் இறப்பிற்கான விதியை கடவுள் மட்டுமே தீர்மானிப்பார். முக்கியமாக ஜாமக்கோள் பிரசன்னதில் கேள்வியாளரின் மனநிலை, சேதார நிலை, நஷ்டம், காணாமல் போனவரின் திசை, குலதெய்வம், தொலைந்த பொருள் இருக்கும் இருப்பிடம் இதுபோன்ற வியக்க வைக்கும் பல்வேறு விஷயங்களை   அறியலாம். உதயாதிபதி நீச்சமாகவோ, அந்த ஜாம கிரகத்தை கவிப்பு கவிதால் அதமம். ஒருவர் கேட்க வந்த கேள்வி மற்றும் செயல் நடக்கவே நடக்காது என்று சொல்லிவிடலாம். பிரசன்னம் பார்க்க கிரக காரகத்துவம், பாவ காரகத்துவம், யாம காரகத்துவம், கோச்சாரம் மற்றும் கோள்களின் நிலை, ராசிக்கதிர்கள், தாது மூல ஜீவன், ராகு /எமகண்ட காலம், கிரகச் சேர்க்கை பல்வேறு நிலைகளை தெரிந்துகொண்டு துல்லியமாக பிரசன்னம் பார்க்க வேண்டும். கற்ற பிரசன்னம் பலிக்கக் குலதெய்வம் அருள், குருவின் ஆசீர்வாதம் அவசியம் தேவை.

Whatsapp:8939115647
vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com