மஹாளயம்: 15 நாள்களும் எப்படி இருக்க வேண்டும்?

மஹாளயபட்சமான 15 நாள்களும் எப்படி இருக்க வேண்டும், தர்ப்பணம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரிந்துகொள்ளலாம். 
மஹாளயம்: 15 நாள்களும் எப்படி இருக்க வேண்டும்?

2023-ம் ஆண்டுக்கான மஹாளயபட்சம் இன்று(செப்.30) முதல் தொடங்கியுள்ளது. மஹாளயபட்சமான 15 நாள்களும் எப்படி இருக்க வேண்டும், தர்ப்பணம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரிந்துகொள்ளலாம். 

மஹாளய பட்சம் நாளில் ஒவ்வொருவரும் அவரது வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் சண்டை போடுவது, தகாத சொற்களைப் பேசுவது, புலால் உண்ணுதல், கள், மது குடித்தல் ஆகியவற்றைக் கட்டாயம் தவிர்த்தல் வேண்டும்.

நாம் எந்த அளவிற்குத் தூய்மையாக இருக்கிறோமோ, ஒற்றுமையாக இருக்கிறோமோ, பித்ருக்களைச் சிரத்தையுடன் பூஜிக்கிறோமோ அந்த அளவிற்கு இந்தப் பதினைந்து நாள்களும் நம்முடன் தங்கியிருக்கும் நம் பித்ருக்கள், மனமகிழ்ச்சியையும், மனநிறைவையும் அடைவார்கள். பித்ருக்கள் இவ்விதம் இந்தப் பதினைந்து நாள்களும் நாம் குடும்பம் நடத்தும் நேர்மையைக் கண்டு மனத்திருப்தி அடைவதன் பலனைப் பித்ரு தேவதைகள் அவர்களிடம் பெற்று நம்மிடம் சேர்க்கிறார்கள்.

மஹாளயபட்ச திதியில் தர்ப்பணம் செய்தால் கிடைக்கும் பலன்கள்

* முதல்நாள் - பிரதமை திதியில் தர்ப்பணம் செய்தால் பணக்கஷ்டம் தீர்ந்து, பணம் வந்து சேரும்.

* இரண்டாம் நாள் - துவிதியை திதியில் தர்ப்பணம் செய்தால் ஒழுக்கமான குழந்தைகள் பிறப்பார்கள்.

* மூன்றாம் நாள் - திரிதியை திதியில் தர்ப்பணம் செய்தால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

* நான்காம் நாள் - சதுர்த்தி திதியில் தர்ப்பணம் செய்தால் எதிரிகளால் தொல்லை இல்லாமல் வாழலாம்.

* ஐந்தாம் நாள் - பஞ்சமி திதியில் தர்ப்பணம் செய்தால் செல்வம் சேரும், நியாயமான சொத்துகள் கிடைக்கும். வீடு, நிலம் முதலான சொத்துக்கள் வாங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.

* ஆறாம் நாள் - சஷ்டி திதியில் தர்ப்பணம் செய்தால் பேரும் புகழும் கிடைக்கும்.

* ஏழாம் நாள் - சப்தமி திதியில் தர்ப்பணம் செய்தால் சிறந்த பதவிகளை அடையலாம். உத்தியோகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும், தடைப்பட்ட பதவி உயர்வு கிடைக்கும்.

* எட்டாம் நாள் - அஷ்டமி திதியில் தர்ப்பணம் செய்வதால் அறிவாற்றல் பெருகும்.

* ஒன்பதாம் நாள் - நவமியில் தர்ப்பணம் செய்தால் திருமணத் தடை நீங்கும். சிறந்த வாழ்க்கைத்துணை அமைவார்கள். குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைந்து புத்திசாலியான பெண் குழந்தைகள்
பிறக்கும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

* பத்தாம் நாள் - தசமி திதியில் தர்ப்பணம் செய்தால் நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

* பதினொன்றாம் நாள் - ஏகாதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் படிப்பு, விளையாட்டு மற்றும் கலையில் வளர்ச்சி அடைவார்கள்.

* பனிரெண்டாம் நாள் - துவாதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் தங்கநகை சேர்தல், விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.

* பதின்மூன்றாம் நாள் - திரயோதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்க ஆயுள், ஆரோக்கியம், நல்ல தொழில் போன்றவை சிறப்பாக இருக்கும்.

* பதினான்காம் நாள் - சதுர்த்தசி திதியில் தர்ப்பணம் செய்வதால் ஆயுள் விருத்தியாகும். நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். மேலும், எதிர்கால தலைமுறையினருக்கு நன்மை உண்டாகும்.

* பதினைந்தாம் நாள் - மஹாளய அமாவாசை நாளாகும்.

மகாளய பட்சம் என்னும் இந்த அரியச் சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் தொடர்ந்து 15 நாள்களும் தர்ப்பணம் செய்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com