வெள்ளியங்கிரி மலைப்பாதையில் மருத்துவ முகாம் சாத்தியமா?

வெள்ளியங்கிரி மலைப்பாதையில் மருத்துவ முகாம் சாத்தியமாகுமா
வெள்ளியங்கிரி மலைப்பாதையில் மருத்துவ முகாம் சாத்தியமா?

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலைக் கோயிலுக்கு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். பக்தர்களின் வசதிக்காக, மலைப் பாதையில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என்று பரவலாக கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த ஆண்டு, வெள்ளியங்கிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட சில நாள்களிலேயே ஒரு சில உயிரிழப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை முவைக்கப்பட்டுள்ளது. ஆனால், சுகாதாரத் துறை இந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என்று மறுத்துவிட்டது.

பிப்ரவரி 25ஆம் தேதி முதல் வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 6 பக்தர்கள் பலியாகியுள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டு 13 பேரும், 2023ஆம் ஆண்டு 8 பேரும் மலைக்குச் செல்லும் போது பலியாகியுள்ளனர்.

பக்தர்களின் மரணத்தைத் தொடர்ந்து சில வாரங்களக்கு முன்பு, வனத்துறை சில அறிவுறுத்தல்களை வெளியிட்டது. அதில், இதய நோய், நீரிழிவு, கடுமையாக கரோனா பாதித்தவர்கள் போன்ற இணை நோய் உள்ளவர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வர வேண்டாம் என்றும், வெள்ளியங்கிரி மலையேற விரும்புவோர், அதற்கு முன்பு ஒரு மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்வது நல்லது என்றும் அறிவுறுத்தியிருந்தது.

இதுபோன்ற உயிரிழப்புகளைத் தவிர்க்க, சுகாதாரத் துறை, வெள்ளியங்கிரி மலைப் பாதையில் மருத்துவ முகாம்களை அமைக்கலாம் என்றும் அவசர உதவி தேவைப்படுவோருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க வாய்ப்பு ஏற்படும் என்றும், அனைத்து நாள்களில் இல்லாவிட்டாலும், கூட்டம் அதிகம் இருக்கும் நாள்களிலாவது மருத்துவ முகாம் அமைக்கலாம் என்றும் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து கோவையின் சுகாதார சேவை மையத்தின் உதவி இயக்குநர் டாக்டர். பி. அருணாவிடம் கேட்டதற்கு, வெள்ளியங்கிரி மலையில் மருத்துவ முகாம் அமைப்பதற்கு சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளார்.

எக்ஸ்பிரஸ் குழுமத்திடம் அவர் அளித்த பேட்டியில், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஏற்கனவே மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மலையேறுவதற்கு முன்பு இந்த மருத்துவ முகாமில் உடல்பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த ஆண்டு வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது மரணமடைந்தவர்கள் அனைவரும் ஒன்று வயதானவர்கள் அல்லது இணை நோய் உள்ளவர்களாகவே இருந்தனர். மூன்றாவது அல்லது நான்காவது மலையில் மருத்துவ முகாம் அமைப்பது என்பது சாத்தியமில்லாதது. சுகாதாரத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள், மருத்துவக் கருவிகளுடன், ஒரே நாளில் மலையேறி, மருத்துவ முகாம் அமைத்துவிட்டு மீண்டும் அதே நாளில் இறங்கி வருவது என்பது சாத்தியமற்றது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com