குருப்பெயர்ச்சி ஒருவருக்கு பலமா? பலவீனமா?

குரு ராசிக்கு வரும் காலம், அனைவருக்கும் யோகம் மட்டுமே தரும் என்று சொல்லிவிட முடியாது.
guru bhagavan
guru bhagavan

ஜோதிட சாஸ்திரத்தில் குரு வல்லமை மிக்க சுபர், அவரால் நன்மை மற்றும் சுப தீர்வுக்கு வழி கிட்டும். குருப் பெயர்ச்சியுடன், ஜாதகரின் தசா புத்தியும் வேலை செய்தால் நூறு சதவீதம் வெற்றியே.

ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல குருவிற்கு ஒரு வருட காலமாகும். குரு ராசிக்கு வரும் காலம், அனைவருக்கும் யோகம் மட்டுமே தரும் என்று சொல்லிவிட முடியாது. ஒருவேளை அவர் அவயோகராக இருந்தால், அந்த ராசியில் இருக்கும் பலவீனத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிடும். ஒவ்வொரு ராசியையும் குரு கடக்கும் பொழுது ஆராய்ந்து பலன்களைச் சொல்ல வேண்டும். முக்கியமாக ஜனனக்கால ஜாதகத்தில் உள்ள கிரகங்களோடு, கோச்சார குருவின் பார்வை, சுப அசுப கிரகங்களின் சேர்க்கை மற்றும் எவ்வளவு காலம் ஜாதகருக்கு பலனை தரும் என்ற கோணத்தில் பார்க்க வேண்டும். சுபத்தன்மை கொண்ட குரு ஒருவருக்கு பாவராக இருந்தாலும் அவர் முடிந்தவரை நிறைய நல்லது செய்ய யோசிப்பார். ஜாதகருக்கு கொடுக்கும் பலனின் அளவுகோல் மட்டுமே மாறுபடும்.

குருவின் நட்பு கிரகங்கள்: சூரியன், சந்திரன், செவ்வாய், பகை கிரகங்கள்: புதன் சுக்கிரன் மற்றும் சனி, சாயா கிரகங்கள் சமமானவர். குரு என்பவர் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் யோகரா, நட்பானவரா அல்லது அவயோகரா என்று ஜோதிட சூட்சம விதி உண்டு. அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சிறு விளக்கத்தைப் பார்ப்போம்.

குருவின் நல்ல பண்பு மற்றும் அவரின் காரகத்துவத்தை பார்க்க வேண்டும். குருவுக்கு பிடித்த வழியில் அதாவது நேர்மை, கண்ணியம், கட்டுப்பாட்டைப் பின்பற்றினால் தன்னுடைய குருப் பெயர்ச்சி காலத்தில் சிறப்பான யோகத்தை, திகட்டாத இனிப்பையும் தந்து விடுவார். குருவின் சுப தன்மை என்பது ஒருவரின் தன்னம்பிக்கை, தன சேமிப்பு, திருமணம், குழந்தைப்பேறு, நேர்மறை ஆற்றல், ஆரோக்கியம், பதவி உயர்வு புகழ், குழந்தைகளால் பெருமை, ஆன்மிக வழி, தங்கம் மற்றும் சுப பொருள்கள் வாங்குதல், சட்டத்தில் ஒரு சில மாற்றம், சுப நிகழ்ச்சிகள் மற்றும் குலதெய்வம் கண்டுபிடித்தல் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்த காலகட்டத்தில் பரிகாரங்கள் வழியாக புண்ணியத்தையும், தெய்வ அருளைப் பலப்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக குருவின் சாதக காலகட்டத்தில் ஏழைப் பெண்களுக்கு மாங்கல்யம் வாங்கி கொடுத்தல், படிப்பில்லாத குழந்தைகளுக்குப் படிப்பு, கோவில் கட்டுமான பணிக்கு நன்கொடை மற்றும் அன்னதானம் செய்யலாம். இவ்வாறு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்தால் பல நூற்றாண்டுக்கு ஒருவரின் குடும்ப வாரிசுகள் சுபிட்சமாக இருக்கும். குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்திற்கு மஞ்சள் நிற ஆடை, மஞ்சள் கிழங்கு, மஞ்சள் நிற பூக்கள், மற்றும் கோவிலுக்குத் தேவையான விளக்கேற்றும் எண்ணெய் வாங்கி கொடுக்கலாம். இது பல வருடக் காலத்துக்கு நமக்கு புண்ணியத்தை சேர்த்துக் கொடுக்கும்.

“குருபகவான் கோச்சாரத்தில் ஜென்மத்துக்கு வந்தால் அவனால் துன்பமே விளையும். கோதண்டராமன் வனவாசம் சென்றதும் இவனால் தான். செம்பொன் விரயமாகும். அரசர்களுடைய கோபமும் இச்சாதகருக்கு விளையும்” என்று போகர் அருளால் புலிப்பாணி சீடரின் கூற்று. ஜென்மகுரு பொல்லாதவர் என்று ராமனின் வனவாசமே உதாரணம் ஆகும். குரு எந்த ராசியில் அமர்கிறாரோ அது ஜென்ம குரு என்பர். இந்த காலகட்டம் அந்த ஜாதகருக்கு நன்மை குறைவாகவும், அவரால் மற்றவர்களுக்கு நன்மை அதிகமாகவும் இருக்கும். இந்த நேரம் இவர்கள் மற்றவர்களுக்கு உதவியாகவும் வழிகாட்டியாகவும் இருப்பார். ஆனால் தனக்கான எந்த முயற்சியிலும் உயர்வு பெறுவது கடினம். இது வனவாசத்திற்கு நிகரான ஒன்று. முதலில் நாம் ஜாதகத்தை இரு கோணத்தில் பார்க்க வேண்டும். ஜனனக்கால ஜாதகத்தில், அன்றைய கோச்சார குரு எந்த பாவத்தில் செல்கிறாரோ அந்த பாவத்தின் நின்ற பலன்களைச் செய்யும். அந்த குரு, அடுத்து எந்த கிரகத்தைத் தொடுகிறாரோ சேர்க்கை பெறுகிறாரோ அந்த இரு கிரகத்தின் பலனை வெளிப்படுத்தும். அது நல்ல பலனாகவும் இருக்கலாம் கெட்ட பலனாகவும் இருக்கலாம்.

குரு 1,2,4,5,7,9,10,11 பாவங்களில் இடங்களில் இருக்கும் பொழுது அல்லது தொடர்புபெறும் பொழுது யோகத்தை ஜாதகருக்கு தர வல்லவர் என்று புலிப்பாணி  நூலில் சொல்லப்படுகிறது. முக்கியமாக 6,8,12ல் இருந்தால் பலன்களைக் குறைத்து தருவார் அல்லது பலன்களைத் தடுத்துவிடுவார். அதேசமயம் நன்மையும் குருவின் அனுக்கிரகத்தால் நமக்குத் தென்படும்.

எடுத்துக்காட்டாக கோச்சார குரு 6,8,12ம் இடத்தையோ பார்க்கும் பொழுது உடலில் மறைந்த வியாதியின் தன்மை வெளிப்படும், அதற்கான நல்ல மருந்துகள் கிடைக்கும், கோமாவில் படுத்துக் கொண்டிருப்பவர் கூட சிறிது நல்ல மாற்றங்கள் தெளிவுபடுத்து. ஒருவரின் உடல் தன்மையைக் குறிப்பது சந்திரன் ஆவார். கோச்சார குரு  சந்திரன் தொடர்பு பெறும்பொழுது மன சஞ்சலத்தையும் மற்றும் நோயின் தாக்கம் வெளிப்படுத்தும். குரு எப்பொழுது எல்லாம் பாவர்களுடன் சேர்ந்த சந்திரனைத் தொடுகிறாரோ அந்த காலக்கட்டம் உடலில் ஒரு வீக்கத்தையோ கொழுப்புக் கட்டியையோ ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம். கோச்சார குரு, சந்திரனைப் பார்க்கும் பொழுது அதிக பலன்களையும், அவர்கள் சேரும்பொழுது குறைவான பலன்களைத் தருவார்.

ஒருவருக்கு தனித்த குரு கிரகங்கள் இல்லாத ராசி கட்டத்தை கடந்தால் அவ்வளவு சுப தன்மையைத் தராது  அதுவே மற்ற கிரகங்களை கோச்சார குரு தொடும்பொழுது அதீத பலத்தைக் கொடுக்கும். அதோடு 5,7,9 பாவங்களையும் பலப்படுத்தும். எடுத்துக்காட்டாக ரிஷபத்தில் பிறந்த ஒருவர் 5,7,9 பாவங்களில் பாவ கிரகங்கள் இருந்து, அவர் பல வருடங்களாக விடுபட முடியாத கஷ்டமான சூழ்நிலையில் இருந்தார் என்றால், தற்பொழுது 2024 மே மாதத்தில்  ரிஷபத்தில் வரும் குரு அவருக்கு அதிக நன்மைகளைக் கொடுத்து உயர்த்தி விடுவார். மேலும் அவர் அஷ்டமாதிபதி இருந்தாலும் அவர் கஷ்டங்களுக்கு ஒரு முடிவு கட்டுவார். கோச்சார குரு 2,4,10,11 பாவங்களில் தொடும் பொழுது,   தொழிலில் உயர்வு, நினைத்த காரியத்தில் வெற்றி, தனயோகம், வசீகர பேச்சு, தெளிவான முடிவுடன் கூடிய வெற்றிப்பாதையை அவர் காட்டுவார்.

கோச்சாரகுருவுடன் ஜனன கால சூரியனுடன் சேரும்பொழுது சிவனின் அருளால் அதிக புகழ் பெறுவார். நல்ல பலனைத் தர  உதவும் காலம் சூரியன் பகையோ, குறைந்த பரலோ  மற்றும் அஸ்தங்கமோ ஆகக்கூடாது. அதுதவிர அந்த பாவத்தையும் உற்று நோக்கி சூட்சம பலனைச் சொல்ல  வேண்டும். ஒரு சில ராசிக்கு குரு  நல்லவராகவும்; ஒரு சில ராசிக்கு பாவியாகவும் இருப்பார். 

ஒருவரின் ஜாதகத்தில் நீச்சம் பெற்ற கிரகத்தோடு கோச்சார குரு தொடும் காலம், பல காலம் தடைப்பட்ட ஒரு செயல் நல்ல சுபத்தன்மை பெறும். குருவின் பார்வையில் இருக்கும் கிரகம் தீராத பாவிகளாக இருந்தாலும், சிறிதேனும் நன்மை செய்ய வல்லவர். சில நேரங்களின் கெட்ட செயலிருந்து தப்பிக்கக்கூடிய வழிகளையும் காட்டுவார். எடுத்துக்காட்டாக கோச்சார குரு ஜனன கால ராகுவைத் தொடும்பொழுது, அந்த காலகட்டத்தில் நன்மைகள் அளிக்காது. ஆனால் குழந்தை இல்லாதவர்களுக்கு, குழந்தைக்கான மருத்துவ வழியைக் காட்டும். அதே சமயம் பலநாள் தீராத நோய் இருந்தால் அறுவைச் சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை மூலம் தீர்வு காட்டுவார். குருவானவர் பாவ கிரகங்களை சந்திக்கும் தருணம் கட்டாயம் ஒரு நோயின் தாக்கம் இருக்கும். கடவுளின் அருள் அதற்கேற்ப வழிபாடுகள் செய்தால், நோயின் தாக்கத்திற்குத் தீர்வு அல்லது சரியான மருத்துவச் சிகிச்சை கிடைக்கும்.

குருக்கு பகைவரான சனியோடு சேரும்போது பாவர் தன்மையைத் தராமல் நற்பலனை தரவல்லவர். உதாரணமாக கோச்சார குரு, அடுத்து சனியைத் தொடும் காலம் வேலையில் நல்ல மாற்றம் கட்டாயம் இருக்கும் அவற்றோடு அதீத உயர்வைக் கொடுக்கும். அதுவே அவர் இரண்டில் வரும்பொழுது புதிய குடும்ப உறவை மற்றும் பண வரவை சரியான வழியில் சேமிக்கும் தன்மையை ஏற்படுத்துவார். சனி என்பவர் கர்ம காரகன் அதனால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் பந்தத்தையும் ஏற்படுத்துவார். குருவும் சனியும் சேரும் காலம், இனிப்பும் கசப்பும் கலந்த ஒரு நல்லுணர்வை ஏற்படுத்தும்.

பிறந்த கால சுக்கிரன் மீது கோச்சார குரு சேரும்பொழுது பணத்தை அள்ளித் தரும், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அதுவே சுக்கிரன் நீச்சம், அஸ்தங்கம் அல்லது மறைவு பெற்றாலோ குறைவான நற்பலனை தரும். குரு 2,7 பாவங்களைப் பார்க்கும், தொடர்பு பெரும்பொழுது அல்லது சுக்கிரனோடு சேரும்பொழுது திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும். கோச்சார குரு, ஜாதகரின் புதன் மீது பயணிக்கும் பொழுது நட்புத்தன்மை வளப்படுத்தும் புதிய நிலங்கள் வாங்கத் தோன்றும் மாணவர்கள் படிப்பில் உயர்வு பெறுவர். அதிகமாக கடன் இருப்பவர்கள், அவற்றை அடைக்க வழியைக் காட்டுவார். குரு நட்பு கிரகமான செவ்வாயோடு சேரும்பொழுது நல்ல நில புலன்களையும், பலமான அதீத உயர்வையும் ஏற்படுத்தும். ஏதாவது தோஷம் இருந்தாலும் நிவர்த்தியுடன் அந்த சரியான சுப பலனைப் பெறுவார்கள்.

குரு பகை கிரகங்களோடு சேர்ந்தாலோ அல்லது ராகு கேதுவுடன் சேர்க்கை பெற்றால் நற்பலன்கள் தருவது கடினம். சாயா கிரகங்கள் நல்ல பலன்களைத் தடுக்க வல்லவர்கள். கால புருஷ தத்துவப்படி தங்கத்தைக் குறிக்கும் குருவோடு ராகு சேரும் செல்லும் காலம் தங்கத்திற்கு படிப்படியாக அதீத மதிப்பு உயரும். கோச்சார குரு, ஜெனன புதனையோ கேதுவையோ தொடும் காலம் அல்லது தொடர்பு பெரும்போது பெரிய கடன் ஒன்று வாங்க நேரும். குருவானவர் கேது சந்திரனைத் தொடும் நேரம் உடலில் பலநாள் மறைந்திருக்கும் ஒரு பெரிய உயிக்கொல்லி நோய் கண்டுபிடிக்கப்படும். இதற்கான சிகிச்சை எடுக்க நேரிடும். குரு பெயர்ச்சி என்பது ஒவ்வொரு ராசியிலும் ஒருசில மாற்றங்கள் கட்டாயம் ஏற்படும். குரு கட்டாயம் நல்ல பலன்களைத் தருவார் ஆனால் ஒவ்வொருவருக்கும் பலன்களின் சதவீதங்கள் மாறுபடும். கோச்சார சுபத் தன்மையோடு, தசா புத்திகள் சரியாக இல்லையென்றால் நல்ல பலன்களைக் குறைத்துத் தரும். குரு கொடுக்கும் பலன்களை சரியாக உபயோகிக்க வேண்டும். அவர் அள்ளிகொடுக்கும் பணத்தை தவறாக பயன்படுத்தினாலோ, நமக்கு உதவியாக இருந்தவர்களுக்கு துரோகம் செய்தாலும் குருவின் தாக்கம் பின்பு மற்ற கிரகங்கள் துணையோடு நமக்கு அசலும் வட்டியுமாகத் திருப்பி கொடுத்து விடுவார். இங்குக் கெட்ட பலன்களை ஏற்படுத்தும் வழியாகும். இந்த குருப் பெயர்ச்சியில், அவரவருக்குப் பிடித்த சித்தர் அல்லது குருவை வணங்குவது நல்லது.

Whatsapp:8939115647

vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com