ஜோதிட சூட்சுமங்களும் - நம்பிக்கை தாண்டிய உண்மையும்!

ஜோதிட சூட்சமத்தில் அனைத்து கிரகங்களும் அவரவர் ஜாதகத்துக்கு நல்லவராகவும் கெட்டவராகவும் மாறுபடுவர்.
ஜோதிட சூட்சுமங்களும் - நம்பிக்கை தாண்டிய உண்மையும்!

பஞ்சபூத தத்துவத்தில் உள்ளடங்கியது ஆன்மிகம் கலந்த ஜோதிடம். இன்றைய காலகட்டத்தில் ஜோதிட வல்லுநர்கள் பல்வேறு விதிகளையும், விளக்கங்களையும் நம்முடைய புதிய தலைமுறையினருக்குப் புரியும் விதமாக அறிவியல் விளங்கங்களுடன் சொல்லி வருகின்றனர். ஜாதகத்தில் சுபரான குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன் ஹீரோவாகவும் மற்ற கிரகங்கள் வில்லனாகவும் கூறப்படுக்கிறது. ஆனால் ஜோதிட சூட்சமத்தில் அனைத்து கிரகங்களும் அவரவர் ஜாதகத்துக்கு நல்லவராகவும் கெட்டவராகவும் மாறுபடுவர். விதியால் ஏற்படும் பிரச்சனைகள்; சில மதியாலும், ஆன்மிக ஈடுபாட்டாலும் கொஞ்சம் தீர்க்க முடியும். ஆனால் ஒரு சில கெட்ட கர்மாவை அனுபவித்து தான் ஆக வேண்டும். நமக்கு ஒரு பொருள் மீது தீராத ஆசை ஏற்படுவது என்பது அவரவர் பாவ கிரகங்களின் காரக வாயிலாக ஏற்படும். அது நம்முடைய கர்மாவை அதிகப்படுத்துவதற்கான ஒரு சூட்சும வலையாகும். ஒருவர் அளவுக்கு மீறிய பொருள் மீது பற்று கொள்ளாமல் இருப்பதும், பிறர் பொருள் மீது ஆசைப்படாமல் இருப்பதும் நல்லது. ஆசைக்குக் காரணம் துன்பம் என்ற மாபெரும் தத்துவத்தைப் போதித்தவர் புத்தமகான். நாம் செய்யும் நல்லதும் கெட்டதும் அனைத்தும் நமக்கே திரும்பி வரும். ஒரு சில புத்தரின் கோட்பாடுகள் நம்முடைய ஆன்மிக ஜோதிட விதிகளோடு பொருந்தி இருக்கும் .

தியானம் என்றால் என்ன?

அதிகாலை எழும் பழக்கம் நம்முடைய உடலையும் மனதையும் சீராக வைத்துக் கொள்ளும். அதனால் நம்மைச் சுற்றி நல்ல நேர்மறை ஆற்றலுடன் கூடிய புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். ஜோதிடத்தில் சூரியனை உயிராகவும் சந்திரனை உடலாகவும் கூறப்படுகிறது. நம் கண்ணுக்குப் புலப்படும் ஒரு ஒளி கிரகமான சூரியனை தினமும் காலை நாம் நமஸ்கரிக்க வேண்டும். அந்த வெப்ப கிரகம் நமக்குத் தேவையான சத்துக்களுடன், தெளிவான வழிகாட்டலை நம் கண்ணுக்குப் புலப்படுத்தும். காலைப் பொழுதில் வீட்டிலிருந்து கொண்டே கிழக்கு திசையை நோக்கி சிறிது நேரம் தியானம், முடிந்தால் சுவாச பயிற்சி செய்வது நல்லது. யோகா பயிற்சி நம்முடைய மூளை நரம்புகள் சீராகவும், சுறுசுறுப்பாகவும் இயக்கும். ஒரு மனிதனை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் மனத் தெளிவுடன் செயல்படுத்துவது இந்த ஒளி கிரகங்கள். முக்கியமாக பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி வழிபட்டால், நமக்கு ஏற்படும் இடையூறுகள் நீங்கி நினைத்த காரியம் வெற்றி பெரும். இரவில் பிரகாசிக்கும் குளுமையான சந்திரன் நம்முடைய மனத்தூய்மைக்கும் வழி வகுக்கும். மனமே எல்லா செயலுக்கும் காரணம். சுவாமி விவேகானந்தர் சொல்லுவது போல “நீ எதுவாக நினைக்கிறாயோ நீ அதுவாக மாற்றப்படுவாய்”. அனுதினமும் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லிக்கொண்டு வாழப் பழகிக்கொள், அதேசமயம் உங்களுக்கு கெடுதல் ஏற்படுத்தும் கிரகங்களும் கொஞ்சம் பயப்படும்.

நல்ல சிந்தனை எப்படி வளரும்? நாம் தினமும் குழந்தைகளுக்கு ஒருசில நன்னெறி கதைகளின் மூலம் புரியவைக்க வேண்டும். அந்த கதையைச் சொல்லச் சொல்ல நமக்கும் நல்ல சிந்தனைகள் வளரும். ஒருவரின் புருவ மத்தியில் ஆறாவது ஆக்னேய சக்கரம் இயங்குகிறது, அதனால்தான் அங்கு நாம் திருநீறு, சந்தனம், குங்குமம் வைத்துக் கொள்கிறோம். அது நமக்கு நல்ல சிந்தனையை ஏற்படுத்தும். அவ்வப்பொழுது நற்சிந்தனையாளர்கள் மற்றும் அவரவர் குருமார்களின் கோட்பாடுகளையும் தெரிந்து கொண்டு, நம்மால் முடிந்தவற்றைப் பின்பற்றலாம்.

நற்பேச்சு என்பதை ஜாதகக் கட்டத்தில் 2ம் இடம் சொல்லும். இந்த இடத்தில் வெப்ப கிரகங்களான சூரியன், செவ்வாய் மற்றும் சாயா கிரகங்கள் சம்பந்தம் பெற்றால் வன்மம் கலந்த, நிதானம் இல்லாத பேச்சாக இருக்கும். அதுவே குடும்ப உறவில் முறிவை ஏற்படுத்தும். இவர்களுக்கு பேச்சே இவருக்கு எதிரி ஆகும். நாக்கு மிகவும் கூர்மையானது, அது ஆயுதம் இல்லாமல் நம்மைக் கொன்றுவிடும். ஆனால் அதிகாரத்தில் இருப்பவர் பேச்சு என்பது வலுத்து தான் இருக்கும். ஒருவரின் வாய்மை, நற்பேச்சு என்பது நம்முடைய குழந்தைகள் மற்றும் மற்றவர்கள் பின்பற்றும் விதமாக இருக்க வேண்டும்.

நன்முயற்சி என்பதை சனி சந்திரன் சொல்லிக் கொடுத்து விடும். ஒருவரின் ஜனன ஜாதகத்தில் எந்த பாவத்தில் சனி சந்திரன் தொடர்பு பெறுகிறதோ அந்த பாவத்தின் செயல்பாடுகள் - முயற்சியின் தன்மை அதிக காலம் இருக்கும். எடுத்துக்காட்டாக 10ல் சனி சந்திரன் சேர்க்கை அல்லது தொடர்பு இருந்தால் தொழிலில் நீண்ட முயற்சி இருந்து கொண்டே இருக்கும். அதற்காகப் பயப்படாமல் தொடர்ந்து நம்பிக்கையுடன் முயற்சிப்பவருக்கு வெற்றி நிச்சயம். ஜோதிட சூட்சுமபடி ஒரு புது முயற்சி துவங்குதல் மற்றும் சுப காரியம் செய்யும் பொழுது, ஜாதகரின் நட்சத்திரமும், அன்றைய நட்சத்திரம் கொண்டு தாரபலன் பார்த்து துவங்குதல் நல்லது. இங்கு மனோகாரகன் சந்திரனின் பலம் ஒருவரின் மனம் உறுதியுடன், வலிமையுடன் இருந்தால் அவனுடைய செயலில் வெற்றி பெறுவான்.

நற்செயல் என்பது நம்முடைய நல்ல கர்மாவின் அளவுகோல் ஆகும். ஜாதகரின் 10ம் பாவம் என்பது கர்ம பாவமாகும். கர்ம பாவத்திற்கு 8ம் பாவம் ஒருவரின் பூர்வ புண்ணியம் மற்றும் குழந்தையைக் குறிக்கும் பாவமாகும். ஒருவர் செய்யும் தொழிலில் நியாயம், தர்மம் இல்லை என்றால் அது குழந்தையைப் பாதிக்கும் என்பது ஜோதிட சூட்சும விதி. ஒருவருக்கு அதிக துன்பமும் மற்றும் அளவுக்கு மீறிய தண்டனையும் நமக்குத் தருவது என்பது முதலிடம் சனியும், இரண்டாமிடம் குரு ஆவார். இவர்கள் ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கர்மாவின் அளவுக்கு ஏற்ப பலன்களை திருப்பிக் கொடுப்பார்கள். அதுவே சனி கொடுப்பது பிரம்பு அடியாகவும் மற்றும் குரு கொடுப்பது கௌரவ அடியாகவும் இருக்கும். ஒருசில நேரங்களில் கெட்ட கர்மா நமக்கு தீராத நோயாகவும் மற்றும் உயிரைப் பயமுறுத்தும் நிலையையும் ஏற்படுத்தும். அதனால் நாம் முடிந்தவரை மற்றவருக்கு துன்பம் செய்யாமல் இருப்பது, மற்றவர்களுக்கு உதவியாகவும் இருந்தால், நம்முடைய பாவங்கள் குறையும். அகிம்சை மட்டுமே நம்முடைய நற்செயலுக்கு வழிகாட்டும்.

நம்முடைய நல்வாழ்க்கையின் வழியை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். அந்த வாழ்க்கை நேர்மையான, தீமை இல்லாத, அமைதியான வழியில் இருக்க வேண்டும். ஒருவருக்கு பல வருடங்களாக என்னதான் முயற்சித்தாலும் துன்பம் அகலாமல் வறுமையில் இருக்கும் நபருக்கு அவருடைய வங்கிக் கணக்கில் பாவ கர்மா அதிகமாக இருக்கும். அதிக கர்மாக்களை பெற்றவர்கள் முடிந்த அளவு நற்செயல்களைப் பின்பற்றி நாம் அவரவர் கடவுளின் பாதம் அழுத்தமாகப் பற்றிக்கொண்டால் நமக்கு அழகான ஒளிமிக்க வாழ்க்கை கிட்டும். நம்முடைய வாழ்க்கையை நாம் சரியாகத் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். நமக்கென்று நல்வழியில், பெருந்தன்மையான மனமுடன், சேவை செய்யும் குணமுடன், உண்மையான பேச்சுடன், உயர்வான எண்ணங்களுடன், நல்லுணர்வுடன், பொறுமையுடன், அதிக ஆசைப்படாமல், மன்னிக்கும் தன்மையுடன், கபடமின்றி நற்செயலுடன் கூடிய நிறைவான பாதையில் செல்பவன் வெற்றி காண்பான் என்பது புத்தரின் கூற்று. நமக்கென்று இருக்கும் கடமையைப் பலனை எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும் என்பது பகவத்கீதை கூற்று. கடவுள் மீது பற்றுள்ளவன் கிரகங்கள் துன்பங்கள் கொடுத்தாலும் கடவுளால் நல்வழிகளும் காட்டப்படும். அந்த வழி நம் கண்ணுக்குப் புலப்படுவது கொஞ்சம் கடினம்தான். கடந்த காலத்தை மறந்து நிகழ்காலத்துக்காக நம்மை முடிந்தவரை உயர்த்திக் கொள்ள வேண்டும். குரு அருள் இருப்பவர்கள் அதைச் சுலபமாகக் காண முடியும்.

Whatsapp: 8939115647

vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com