பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட பெருமாள்!

தினமும் பால் சாப்பிட்டுக் கொண்டிருந்த பெருமாள், பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட அற்புதம் நடந்த கோயில்..?
பெருமாள்
பெருமாள்
Published on
Updated on
3 min read

தினமும் பால் சாப்பிட்டுக் கொண்டிருந்த பெருமாள், (சுமார் 80 ஆண்டுகள்) பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட அற்புதம் நடந்த கோயில் எது தெரியுமா..?

1915 இல் பிறந்த அலமேலு ஏழு வயது சிறுபெண். சிறுவர்களுடன் அந்த நாகூர் பெருமாள் கோயில் நந்தவனத்தில் ஓடிப்பிடித்து விளையாடி ஓர் ஓரமாய் போய் சாய்ந்து கிடந்த தூண் மீது உட்கார்ந்தாள். திடீரென யாரோ அவளைக் கூப்பிட்ட மாதிரி இருந்தது. கண்ணெதிரில் எவரும் இல்லை. "பசிக்குது பால் கொடு''ன்னு குரல் கேட்டது. மெல்ல தலைதூக்கிய அச்சத்துடன் குரல் வந்த இடத்திற்குப் போய்ப்பார்க்க சுமார் 4 அடி உயரத்தில் பெருமாள் சிலையாய் மல்லாந்து வானத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். மெல்ல அசைத்துப் பார்த்தாள். நகரக்கூட இல்லை. தன் வீட்டில் இருந்தவர்களிடம் அந்த பெருமாள் பற்றிய விவரம் கேட்டாள்.”நந்தவனம் தோண்டும் போது கிடைச்ச பழைய பெருமாள், "வெளிதேசத்திலிருந்து படையெடுத்து வந்த போது கர்ப்பகிரகத்திலிருந்து எடுத்து வந்து பாதுகாப்பா புதைச்சு வைச்சாங்க. பின்னாடி தோண்டி நிமிர்த்தும்போது கை சின்னதா பின்னமாப்போச்சு. வேற சிலை செய்து மூலஸ்தானத்தில் வைச்சுட்டாங்க' என்ற விவரம் சொல்லப்பட்டது. இனம் புரியாத பற்றும் பாசமும் அவளுக்கு அந்த பெருமாளின்மீது ஏற்பட்டது.

மறுநாள் நந்தவனம் பக்கம் போனபோது மீண்டும் " பசிக்குது பால் வேணும்''ன்னு குரல் கேட்டது. வீட்டுக்கு ஓடினாள் அலமேலு. அவளுக்கென வைத்திருந்த பாலை எடுத்துக்கொண்டு போய் கீழேயிருந்த சிலையின் வாயருகில் வைக்க மெல்ல பால் எங்கே போகிறது எனத்தெரியாமல் கீழேயும் சிந்தாமல் குறைந்து போனது. அதுமுதல் இப்படியே தினமும் தொடர ஊராரின் நக்கல் நையாண்டிப்பேச்சும் அதிகரித்தது. அந்தப் பெண் கல்யாணம் ஆகியும் அங்கேயே வாழ்க்கைப்பட்டு இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண்குழந்தைகளையும் வளர்த்துக் கொண்டு பெருமாள் பணியையும் தொடர்ந்து செய்து வந்தாள்.

பெருமாள் மழையிலும் வெய்யிலிலும் இவ்வாறு கிடப்பது மனதை உறுத்தவே பின்னப் பட்ட விக்ரகத்தை தனி சந்நிதியில் வைத்து பூஜை செய்ய அனுமதி கேட்க, காஞ்சி கலவைக்குச் சென்று மஹாபெரியவாளை சந்தித்தாள் அலமேலு . வரிசையில் நின்ற அந்தப்பெண்ணை அலமேலு என்ற பெயர் சொல்லி அழைத்தார் பரமாச்சாரியார். ஆச்சரியத்தோடு வணங்கி பெருமாளை என்னசெய்வது எனக்கேட்டாள். பரமாச்சாரியாரோ "உன்னோட பிள்ளைக்குக் கை உடைந்தால் தூக்கி தோட்டத்துல கடாசிடுவியா? உன்னிடம் பால் வாங்கிக் குடிச்ச பெருமாள் உன் பிள்ளை மாதிரி. தனியா சந்நிதியில் வை. ஸ்தபதி மூலமா கையை சரி செய்''ன்னு உத்தரவு கொடுத்தார். நாகூருக்குத் திரும்பிய அவளிடம் பெரும் பணம் எதுவும் இல்லை. யாரோ செய்த உதவியில் தனி சந்நிதி கட்டப்பட்டு ஸ்தபதியால் கை சரிபார்க்கப்பட்டு நிறுவப்பட்டது.

அன்று இரவு பெருமாள் மறுபடியும் பேசினார். "தினம் பாலே தர்றியே. வளந்துட்டேனே, எனக்கு பழம் தரக்கூடாதா?''ன்னு கேட்டார். மறுநாள் பழம் வாங்கிக் கொண்டு பெருமாள் வாய்கிட்டே கொண்டு போனவுடனே கொஞ்சம் கொஞ்சமாக பழம் குறைந்து போனது. தினமுமிது தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ஊரார் மரியாதையோடு ஆச்சரியப்படத் தொடங்கினர். பெருமாள் சாப்பிட்ட மீதி பழத்தை எதிரில் நிற்கும் யாருக்காவது அலமேலு அம்மாள் கொடுப்பார்கள். பெருமாள் சாப்பிட்ட மீதிப்பழத்தைச் சாப்பிட அவர்களின் பலவிதக்குறைகள் நீங்கி விரும்பிய பலன் பெறுவது பழக்கமாகிப் போனது. அதற்காக வெளியூரில் இருந்தெல்லாம் மக்கள் வரத்தொடங்கினர். அவர்களின் கவலைகள் குறைகள் அனைத்தையும் பெருமாளின் வாழைப்பழப் பிரசாதத்தை அலமேலு கொடுப்பதனால் நீக்கியது தொடர்ந்து கொண்டிருந்தது.

1977- ஆம் ஆண்டு நல்ல மழை பெய்த போது கோயிலின் ராஜகோபுர நாசித்தலை இடிந்து சிதிலமானது. அதனை முன்னின்று எடுத்துச் செய்ய யாரும் இல்லை. பெருமாளிடம் உத்தரவு கேட்டாள் அலமேலு. பெருமாள் காட்டிய ஆட்கள் மூலம் அந்ததிருப்பணியை அவர்களே செய்ய ஏற்பாடு செய்து அந்தப் பணியையும் முடித்தாள்.

1995-ஆம் வருடம் கோயில் கும்பாபிஷேகம் செய்யவேண்டுமென்று அலமேலு அம்மாள் சொன்னவுடன் யார்யாரோ எங்கிருந்தோ வந்தார்கள். அவர்களே முன்னின்று அவர்களின் கைப்பட அலமேலு வழிகாட்ட செய்தார்கள். கும்பாபிஷேகம் நன்றாக நடந்தது, 2004 ஆம் ஆண்டு ஒருநாள் காலை அலமேலு பெருமாள் திருவடி சேர்ந்தாள்.

ஒரு பெண் ஊட்டிய பாலும் பழமும் சாப்பிட்ட பெருமாள் இன்றைக்கும் வாழைப்பழப் பெருமாள் என அழைக்கப்பட்டு வணங்கப்படுகிறார். தங்கள் கோரிக்கை நிறைவேற பெருமாளை வேண்டிக்கொண்டு மீண்டும் வந்து வாழைப்பழமாலை சாற்றி எல்லோருக்கும் கொடுத்த பிறகு மீதியை வீட்டுக்கு பிரசாதமாக எடுத்துச் சென்று பலன் பெறுகிறார்கள்.

நாகூர் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என அழைக்கப்படும் தலத்தில் ஐந்து நிலை ராஜகோபுரம், கொடிமரம், கருடாழ்வார் சந்நிதிக்கு வலப்புறம் சந்நிதியில் மஹாலட்சுமி உருவத்துடன் நின்று பெரும்பாலும் பக்தர்கள் சார்த்திய வாழைப்பழமாலையுடன் காட்சி தருகிறார். அந்த சந்நிதியின் மேலே அலமேலு அம்மாளின் சுதை உருவம் எப்போதும் வணங்கிக் கொண்டிருக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.

மூலவர் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். பிரகாரத்தில் ஸ்ரீ சுதர்சனரும் தனி சந்நிதியில் அலர்மேல்மங்கைத் தாயார் அமைந்துள்ளார். ஆண்டாள் ஆஞ்சநேயர் சந்நிதிகளும் உள்ளன. திருக்கோயிலின் திருக்குளம் கோயிலின் வலப்புறம் அமைந்துள்ளது. அதன் கரையில் தேங்காய் கட்டி ஆஞ்சநேயர் என்னும் பெயரில் வீர ஆஞ்சநேயர் உள்ளார். இவர் சந்நிதியில் பிரார்த்தனைத் தேங்காய் கட்டினால் ஒரு மண்டலத்துக்குள் காரியம் சித்தியாகும்.

எல்லா நாள்களிலும் வாழைப்பழப் பெருமாளையும்; ஒவ்வொரு சனிக்கிழமை பெருமாளுக்கும்; அமாவாசை ஆஞ்சநேயருக்கும்; தினமும் மாலை பிரதோஷ நேரங்களில் சுதர்சன யோக நரசிம்மருக்கும்; சுதர்சனருக்கும் புதன்கிழமைகளிலும்; பெளர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அலமேலுமங்கை தாயாரையும் வழிபடுவதால் பலன் உண்டு.

வாழைப்பழப் பெருமாளுக்கு அஸ்தம், பெருமாளுக்கு திருவோணம். அனுமாருக்கு மூலம், தாயாருக்கு உத்திரம் ஆகிய நாள்களில் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. இக்கோயிலில் தரிசனம் செய்ய புரட்டாசி மாதம் சிறப்பானது என்றாலும் சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்கி பலன் பெறுவதற்கென பலர் வந்து பலன்பெற்றுச் செல்லும் தலமாகும்.

கலியுகத்தில் உலகத்தைக் காத்து ரட்சிக்க இவ்வூரில் வந்து பெருமாள் பிரசன்னமானதால் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் எனவும் தென்திருப்பதி அல்லது சின்னத் திருப்பதி எனவும் அழைக்கப்படுகிறது. திருப்பதி செல்ல முடியாதவர்கள் இயலாதவர்கள் நாகூர் அலர்மேல்மங்கைத் தாயார் உடனாய பிரசன்ன வெங்கடாஜலபதியை வணங்கினால் போதும் என்று சொல்லப்படுவதால் இத்திருக்கோயிலைப் பொறுத்தவரை புரட்டாசி மாதம் முழுவதும் மிகவும் சிறப்பானதாக பக்தர்கள் வருகையுடன் இருக்கும்.

தொடர்புக்கு: 94456 26857/ 96775 09835.

- ஏ.சம்பத் குமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com