பிரம்மனிடம் இருந்து வேத சாஸ்திரங்களையும், படைக்கும் திறனையும் அபகரித்துச் சென்றான் சோமுகன் என்ற அரக்கன். பிரம்மனும் தன் கையில் இருந்த தண்டத்தை ஒரு பிரம்மச்சாரியாக மாற்றி, புவியில் உள்ள புண்ணியத் தலங்களைப் பார்த்து வருவதற்குக் கட்டளையிட்டார். அவரோ தாமிரவருணி நதிக்கரையில் உள்ள ஜெயந்தபுரிக்கு வந்தவுடன், அசுரமோகினியால் கவரப்பட்டு, பிரம்மனின் கட்டளையை மறந்திருந்தான்.
இதைக் கண்ட பிரம்மன் தனது கமண்டலத்தைப் பெண்ணுருவாக்கி, புண்ணியத் தலத்தை அறிந்து வருமாறு கட்டளையிட்டார். அந்தப் பெண்ணும் திருவைகுண்ட தலத்தைத் தெரிவித்தாள். உடனே பிரம்மனும் அந்தப் பெண்ணுடன் அங்கே சென்று தாமிரவருணி கலசத் தீர்த்தத்தில் நீராடி கடும்தவம் புரிந்தார்.
தவத்தால் மனமுவந்த சிவனும் பிரம்மன் முன் தோன்றி, "வேண்டும் வரம் கேள்' என்றார். பிரம்மனும் தான் இழந்தவற்றை மீண்டும் வேண்டி அவற்றைப் பெற்றார். பின்னர், பிரம்மனின் வேண்டுகோளின்படி, ஸ்ரீமந்நாராயணனும் இத்தலத்தில் அர்ச்சாவிக்ரமாக "திருவைகுண்டபதி' என்ற பெயருடன் எழுந்தருளினார்.
வணிகர் வீரகுப்தனின் மகன் கால தூசகன் தான் திருடச் செல்வதற்கு முன்பு, திருவைகுண்டநாதனை வேண்டியே செல்வான். திருடிய பொருளில் பாதியை சந்நிதியில் சேர்த்துவிட்டு, மீதமுள்ளவற்றை தர்மம் செய்தான்.
ஒருநாள் நள்ளிரவில் மணப்படை ராஜ்ஜியத்தின் அரண்மனையிலும் பெரும் பொக்கிஷங்களை கொள்ளையடித்து தப்பித்தான். இவனது சகாக்களோ காவலாளிகளிடம் பிடிபட்டனர். இதையறிந்த கால தூசகன், திருவைகுண்டபதியை சரணடைய, அடைக்கலம் கொடுத்தார் பெருமான்.
பிறகு எம்பெருமானே கால தூசகன் வேடத்தில் அரசவைக்குச் சென்றார். அரசரோ, ""திருட்டுத் தொழிலை செய்த உன்னைப் பார்க்கும்பொழுது கருணையே ஏற்படுகிறது. நீ யார்?'' என்று கேட்டார். உடனே எம்பெருமான், ""அரசே, உன் குற்றத்தை நீ உணரவில்லை. அரசின் செல்வங்கள் யாவும் உன்னாலும், உன்னைச் சுற்றி இருப்பவர்களாலும் வீணே செலவிடப்படுகிறது. தர்மத்தை செய்யத் தவறியதால் அதை உனக்கு உணர்த்தவே இதை நடத்தினேன். நான்தான் உலகைக் காக்கும் பெருமாள்'' என்றார். அரசருக்கு ஞானத்தையும், நல்ல புத்தியையும் எடுத்துரைத்து கள்ளனை காத்ததின் மூலம் திருவைகுண்டபதியோ "கள்ளபிரான்' (சோரநாதன்) என அழைக்கப்பட்டார். பிரம்மனின் வேண்டுகோளின்படி எழுந்தருளிய திருவைகுண்டபதி விக்கிரகமும், சிறிய சந்நிதியும் காலச் சுழற்சியால் புவியில் மறைந்துவிட்டது.
கொற்கை, மணப்படைவீடு போன்றவற்றை தலைநகராகக் கொண்டு பாண்டிய அரசர்கள் ஆட்சிபுரிந்து வந்தனர். இங்கு அரண்மனைப் பசுக்கள் மேயும். கூட்டத்தில் புண்ணியம் செய்த பசு வைகுண்டபதி புதையுண்ட இடத்துக்கு நேர் மேல் உள்ள பிலாத்துவாரத்தில் தினமும் தனது பாலைச் சுரந்து வந்தது. அரண்மனைக்கு சென்றவுடன் இந்தப் பசு மட்டும் பால் சுரக்காது.
இதைச் சோதிக்க வந்த அரசரின் ஆள்கள் பின்தொடர, பசு ஓரிடத்தில் பாலைச் சுரப்பதைக் கண்டு அரசனிடம் தெரிவித்தனர். அரசனும் தனது படைசூழ இவ்விடம் வந்து புவியை பயபக்தியுடன் தோண்ட, அங்கு திருவைகுண்டபதிக்கு பால் திருமஞ்சனம் செய்த நிலையில், ஆதிசேஷன் குடையாய் நிற்க, எம்பெருமான் சாலிக்கிராம மாலையுடன், கதையுடன் காட்சித் தந்தார். இதனால் இங்கு தினமும் பால் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
இறைவன் வைகுண்டநாதன்} கள்ளபிரான், இறைவிக்கு வைகுண்ட நாச்சியார்} சோரநாத நாச்சியார் என்ற திருநாமங்களின் அழைக்கப்படுகின்றனர்.
நம்மாழ்வாரால் மங்களாசாசனம் பெற்றது. நவதிருப்பதிகளில் முதலானதாகவும், சூரிய தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள பெருமாள், சந்திர விமானத்தின் கீழ், ஆதிசேஷன் குடைபிடிக்க, நான்கு திருக்கரங்களுடன், மார்பில் மகாலெட்சுமியுடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் இருப்பது தனிச்சிறப்பாகும்.
மூலவரின் திருவடிகளின் மத்தியில் சூரிய ஒளியானது, சித்திரைபெüர்ணமி தினத்தன்று காலை உதயத்திலும். ஐப்பசி பெüர்ணமி காலை உதயத்திலும் என ஆண்டுக்கு இருமுறை வணங்கும் தன்மையில் விழுகிறது. "இங்கு இறைவனை வணங்குவதால், நவக்கிரகத் தோஷங்கள், பித்ரு சாபங்கள் விலகுகிறது' என்பது ஐதீகம்.
கோயிலில் ஏப்ரல் 25}இல் சுவாமி கொடிமரம் சுற்றி எழுந்தருளல், 26}ஆம் தேதி தேரோட்டம், 27}இல் ஸ்ரீசோரநாதர் எழுந்தருளி தீர்த்தவாரி, 28}இல் புஷ்பாஞ்சலி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூர் போன்ற இடங்களில் இருந்து ஸ்ரீவைகுண்டத்துக்கு பேருந்து வசதிகள் உள்ளன.
பொ.ஜெயச்சந்திரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.