கடவுளை அடைய எளிமையான வழி.. ஜோதிடம் சொல்வதென்ன?

இறைவனை அடையக்கூடிய வழிகள் பற்றி இக்கட்டுரையில்,
jothidam
ஜோதிடம்
Published on
Updated on
3 min read

இறைவனை அடைய எத்தனையோ வழிமுறைகள் இருந்தாலும் உண்மையான பக்தியின் மூலம் நாம் இறைவனின் பாதம் பற்றுவதே சரியான வழிமுறையாக இருக்கும். இந்த உலகில் கடவுள் நம்மைப் படைக்கக் காரணம் எதற்காக என்பதை ஒரு குறிப்பிட்ட வயதில் அவரவர் தசா புத்தி மற்றும் குருவின் அனுக்கிரகத்தால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

கர்மயோகம், ராஜயோகம் மற்றும் ஞானயோகம் இவ்வாறு எத்தனையோ வழிகள் இருந்தாலும், பக்தி யோகம் என்னும் அன்பான சேவை முறையில் நாம் கடவுளை எளிதில் அடையலாம். நம்முடைய பிறவியின் நோக்கம் தெரிந்த பிறகு, அந்த தர்ம வழியை நாம் பின்பற்றத் தயாராக வேண்டும். இவற்றில் முக்கியமான ஒன்று கடவுள் தொண்டு, அதுவே ஒரு சிலருக்குத் தொழிலாகவும் மாறலாம்.

நம் முன்னோர்கள் அளவுக்கு மீறிய பணத்தைச் சம்பாதித்து, பின்பு அந்த பொருள் மோகத்திலிருந்து வெளிவந்துவிடுவார்கள். இவர்கள் தங்கள் நிலம், பொருள் அனைத்தையும் கோயில்களுக்கும் அன்னதானத்திற்கும் கொடையாகக் கொடுத்துவிட்டு, கடவுளிடம் பரிபூரணமாகச் சரணாகதி அடைவார்கள். பழம்பெரும் சிவன், பெருமாள், மற்றும் முருகர் கோயில்களில் செல்வந்தர்களால் உருவாக்கப்பட்ட தர்ம சத்திரங்கள், அன்னதான கூடங்கள் என்று இன்றும் இருக்கின்றனர். இவர்கள் கடவுள் பணி, பஜனை, வேத மந்திரங்களை ஓதுதல், யாகம், தானதர்மம், ஆன்மிக சொற்பொழிவு மற்றும் மக்கள் தொண்டு என்று பொதுச் சேவைகளில் ஈடுபடுகின்றனர்.

பல்வேறு காலங்களில் சித்தர்கள், சைவ / வைணவ குருமார்கள் தங்களுடைய ஆன்மிக தொண்டுகளைத் திறம்படச் செய்தனர். முக்கியமாகக் கோயில் அர்ச்சகர்கள் தங்களால் முடிந்தவற்றைக் கருவறையில் உள்ள தெய்வங்களுக்குப் பூஜை புனஸ்காரங்கள் செய்ய அதிகாரம் பெற்ற பாக்கியவான்கள். இந்த அனைத்து நற்சேவைகளையும் மனதார, புன்னகையுடன் ஏழை பணக்காரன் என்று பிரிவு பார்க்காமல் தொண்டு ஆற்ற வேண்டும். இதுவே கடவுளின் தர்ம கோட்பாடு. குரு, கேது மதம் சார்ந்த ஆன்மிக வழிகாட்டி. நீதியின் அதிபதி சனி பகவான் என்பவர் கர்த்தாவைக் குறிப்பவர். இந்த பணியைத் தொடர அவரவர் ஜாதகத்தில் குரு, சனி, கேது மற்றும் 5, 9 அதிபதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஒரு சிலருக்கு இளவயதிலேயே இந்த ஆன்மிக தொண்டு ஆற்ற சரியான தசை புத்தி செயல்பட்டு விடும். எடுத்துக்காட்டாக 63 நாயன்மார்களில் ஒரே ஒரு பெண் நாயன்மாராக இருக்கும் காரைக்கால் அம்மையார் தன்னுடைய சிறுவயது முதலே பற்றற்ற பக்தியுடன், சிவ தொண்டு புரிவதிலும் சிறந்து விளங்கினார்.

ஜோதிடப்படி திரிகோண அதிபதிகள், கர்மா, மோட்சம் என்கிற பாவத்தோடு தொடர்பு மற்றும் குரு, சனி, கேது சேர்க்கை பார்வை பெரும்பொழுது தெய்வீக பணிகளில் ஈடுபடுவார்கள். இன்றும் ஒருசிலர் இறைப்பணி செய்யும் பொழுது கோபம் செயல் மற்றும் மற்றவர்களை மனம் புண்படுத்தும் வார்த்தைகளை உபயோகப்படுத்தி சேவை செய்பவர்களைக் கடவுளால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டார். எந்த தொழிலாளியும் தாம் செய்யும் தொழிலுக்கு துரோகம் செய்யாமல் இருப்பது என்பது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். இதுவே தர்மநிலை. பன்னிரண்டு ராசி கட்டத்தில் அறம் என்கிற - மேஷம், சிம்மம், தனுசு, தர்மம் என்கிற கடகம், விருச்சிகம், மீனம் மோட்ச ராசிகளின் சுப கிரகங்கள் மேலோங்கி இருக்கும் பொழுது கொடை ஆர்வம் கொஞ்சம் அதிகம் இருக்கும்.

அங்குள்ள சுபக் கிரகங்கள் ஆட்சி உச்சம், பரிவர்த்தனை பெரும்பொழுது கடவுள் தொண்டு ஆற்றச் சரியான தசைக்கு காத்துகொண்டு இருப்பார்கள். எல்லா ஜாதகருக்கும் அவ்வளவு சீக்கிரம் ஈகை பண்பு என்ற குணம் வந்துவிடாது. ஒரு சில ஜாதகருக்கு மட்டுமே பொருட்செல்வம் ஈட்டும் யோகமும் அதோடு ஆன்மிகம் கூடிய கொடை வள்ளல் பண்பும் அமையும். எடுத்துக்காட்டாக தர்ம கர்மாதிபதி யோகம்/ தன்ம யோகம் பெற்றவர்கள் முதலாளி உயர்நிலை மற்றும் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியில் மேன்மேலும் உயருவார்கள். இது எல்லாருக்கும் அமையாது, ஒரு சிலருக்கு மட்டுமே அமையும்.

“மாதேகேள் தன்ம யோக

வகைகன்ம மன்ன னோடு

தாதையும் கூடி எந்தத்

தலத்தினில் இருந்த போதும்

ஓதிய ஒருவர் வீட்டில்

ஒருவர்மா றாயி ருந்த

போதும்மா றாத செல்வம்

பொருந்திடும் ராஜயோகம்!” ( ஜாதக அலங்காரம் 318)

விளக்கம்: 10, 9க்கு உடையவன் இணைந்து ஒரு வீட்டில் இருப்பது அல்லது 10ம் வீட்டில் 9க்கு உடையவனும், 9ம் வீட்டில் 10க்கு உடையவனும் மாறி நின்றால் ஜாதகன் இடம் நிலையான செல்வம் மற்றும் ராஜயோக பலன்களை அனுபவிப்பார்கள்.

இந்த யோகம் கர்மா என்ற ஸ்தானம் 10, தர்மம் என்று சொல்லப்படும் முக்கிய திரிக்கோணம் 9 மற்றும் லக்கினம் தொடர்பு மற்றும் பரிவர்த்தனை பெரும்பொழுது உயரிய செல்வதோடு பொதுசேவையும் மனதில் ஏற்படுத்தும். இந்த யோகத்தின் அளவு அங்குள்ள கிரகங்களின் சுபத்தன்மை பாவத்தன்மை பொருத்து மாறுபடும். ஒருவரின் கேந்திர திரிகோண அதிபதிகள் ஆட்சி உச்சம் பெரும்பொழுது சுப யோகங்கள் ஏற்படும். தர்மகர்மாதிபதி யோகத்தைச் செயல்படுத்தும் கிரகங்களின் தசை புத்தி ஒருவருக்கு வராமல் இருந்தால் இந்த யோகமும் வேலை செய்யாது. அதுவே அந்த கிரகங்கள் மறைவு, அஸ்தங்கம் வக்ரம் பெற்றிருக்கும் பொழுது யோகம் குறைவாக வேலை செய்யும்.

காலபுருஷ தத்துவப்படி குரு சனி தர்ம கர்மாதிபதி ஆவார். குரு என்பவர் மொத்த செல்வத்தின் கஜானா பெட்டி, அவற்றை கர்ம பணிக்காக செலவு செய்பவன் இன்னும் உயர்வு பெருவார். இவர்கள் ஈட்டிய செல்வத்தைக் கோயில் பணி, மருத்துவ பணி, இறந்தவர்களின் சடங்கு மற்றும் அனைத்து தர்ம காரியங்களுக்கு இந்த யோகம் உதவியாக இருக்கும். இந்த தர்ம கர்மாதிபதி யோகத்தால் பெறப்படும் செல்வங்களை, முடிந்தவரை கோயில் திருப்பணி மற்றும் பொது பணிகளுக்குச் செலவு செய்தால் அவர்களின் பரம்பரை உயர்வு பெறும்.

கடவுளுக்கு உரிமையான பொன், பொருள் அனைத்தையும் எடுக்க நினைப்பவர்களுக்கு அவர்களின் 7 தலைமுறைக்கு கர்மாவின் தாக்கம் தொடரும். அவர்கள் பதுக்கிய செல்வத்தோடு ஈட்டிய செல்வமும் இழக்க நேரிடும். ஒரு சில கோயில்களில் வேலை செய்யும் தொழிலாளிகள் வருமானம் குறைவாக இருந்தாலும் கடவுளுக்குச் செய்ய வேண்டிய அனைத்து காரியங்களும் தங்களால் இயன்ற அளவு சிறப்பாகச் செய்கின்றனர். முக்கியமாகப் பிரசித்திபெற்ற கோயில்களில் பணி செய்யும் பலர் புன்னகைக்குப் பதில் பொன் நகைக்கும், பணத்திற்கும் மரியாதை கொடுக்கிறார்கள்.

கடவுளுக்குப் பிடிக்காத இந்த செயல்களைச் செய்வது அந்த நபருக்குக் கெட்ட கர்மாவின் தாக்கம் அதிகம் இருக்கும். அன்புடனும் பக்தியுடனும் ஒருவன் எனக்கு இலையோ, பூவோ, பழமோ, நீரோ அளித்தால் அதனை நான் ஏற்கின்றேன் என்பது கடவுள் வாக்கு. அதற்காகக் கடன் வாங்கி அவருக்கு அர்ச்சனை, பரிகாரம் மற்றும் ஊழியம் செய்ய வேண்டாம். கடவுளுக்கும் மக்களுக்கும் செய்யும் தொண்டு மகேசன் தொண்டு அது மறுபிறவி இல்லாத வாழ்க்கையை நமக்குக் கொடுக்கும்.

பகவான் கூறியது போல “தேகத்தை உடையவனின் உடல், சிறுவயது, இளமை, முதுமை என்று கடந்துசெல்வதைப் போல, ஆத்மா, மரணத்தின் போது வேறு உடலுக்கு மாற்றம் பெறுகின்றது. நிதான புத்தியுடையவர் இதுபோன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை.” பலனை எதிர்பார்க்காமல் நமக்கான கடமையைத் திறம்படச் செய்து, அவரவர் மத கோட்பாட்டின் வழியில் கடவுளின் பாதம் பற்றுவோம்.

Whatsapp: 8939115647

vaideeshwra2013@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com