முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

ஏழுமலையில் அமைந்துள்ள எட்டு புனிதத் தீர்த்தங்கள்!

திருப்பதி சேஷாசல மலையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் 8 அற்புத புனித தீர்த்தங்கள் அமைந்துள்ளன.

News image
Updated On :6 அக்டோபர் 2016, 3:53 pm IST

திருப்பதி சேஷாசல மலையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் 8 அற்புத புனித தீர்த்தங்கள் அமைந்துள்ளன.

திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசித்தால் மட்டும் போதும் என்று நினைக்கும் பக்தர்களுடன், சேஷாசல மலையில் உள்ள அற்புதமான புனித தீர்த்தங்களை கண்டுகளிக்க விரும்பும் இயற்கை ஆர்வலர்களும் அதிகம். மலையேற்றம் செய்து, சாகசம் புரிய விரும்பும் சாகசப் பிரியர்களுக்காக திருமலையில் 8 சாகசத் தீர்த்த யாத்திரை தலங்கள் உள்ளன.

குஞ்ஜானா தீர்த்தம்: இதில் முதலில் வருவது குஞ்ஜானா தீர்த்தம். திருமலைக் கோயிலிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள இந்த தீர்த்தத்தை அடைய 5 நாள்கள் ஆகும்.

முதல் 2 நாள்கள் பாபவிநாசத்திலிருந்து குமாரதார தீர்த்தத்தை தாண்டி, அண்ணா தம்முள்ள பண்ட, சாமலகோணா, ஜோன்னல கோணா, போகம்தானி பேட்டு, தவ்வேலு குண்டா, மொகிலி பெண்ட்டாவை அடையலாம்.

இரவு அங்கு தங்கி 3-ஆம் நாள் பயணத்தைத் தொடங்கினால் தவ்வேலு குண்டாவிலிருந்து இடதுபுறம் சென்றால் தலைகோணா தீர்த்தம், வலதுபுறம் சென்றால் வரலாற்று புகழ்மிக்க ருத்ரகல தீர்த்தம் என்கிற யுத்தகல தீர்த்தம் உள்ளது.

4-ஆம் நாள் காலை அங்கிருந்து ஹலாயுத தீர்த்தம், விஷ்ணுகுண்ட தீர்த்தம், கங்குமடுகு, தொங்கலபண்டாவைத் தாண்டி, 5-ஆம் நாள் மாலை குஞ்ஜானா தீர்த்தத்ததை அடையலாம். சேஷாசல வனத்தில் மிக உயரத்தில் உள்ள தீர்த்தம் இது. இத்தீர்த்த கரையில் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டு மறுநாள் காலை வாகேட்டிகோணா அருகில் உள்ள நீர்வீழ்ச்சி வழியாக நடந்து, கங்கராஜூபோடு கிராமத்தை அடைந்து, அங்கிருந்து பஸ் மூலம் ரயில்வேகோடுரு சென்று அங்கிருந்து திருப்பதியை அடையலாம்.

சனீஸ்வர தீர்த்தம்: தலைகோணாவிலிருந்து பாபநாசம் வரை செல்லும், சாகச யாத்திரை இது. 30 கி.மீ தொலைவுள்ள இதை சென்றடைய 4 நாள்கள் ஆகும். தலைகோணா நீர்வீழ்ச்சியின் உச்சி, யுத்தகல தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், பெத்தகோடா குகை வழியாக 4-ஆம் நாள் சனீஸ்வர தீர்த்தத்தை அடையலாம். மிகவும் குறுகலாக உள்ள இரு மலைப் பகுதிகளுக்கு நடுவில் பயணம். மயிர்க்கூச்செரிய வைக்கும் படியான நிலை. அங்கிருந்து திரும்பும் வழியில் லட்சுமி தீர்த்தம், கைலாச தீர்த்தம் உள்ளன. யானைகள் இந்த பகுதியில் அதிகம் என்பதால் அவற்றின் பிளிறல் சப்தம் கேட்டுக் கொண்டேயிருக்கும். லட்சுமி தீர்த்தத்திலிருந்து பார்த்தால், ஏழுமலையான் கோயில் தங்கக் கோபுரம் தெரியும். அங்கிருந்து குமாரதீர்த்தம் வழியாக மீண்டும் பாபவிநாசத்தை அடையலாம்.

பித்ருகல தீர்த்தம்: இது ஆதிமானவத் தீர்த்தம் எனப்படுகிறது. குக்கலதொட்டியிலிருந்து புறப்பட்டால், எட்டமடுகை அடையலாம். இங்கு மண் செந்நிறத்தில் உள்ளதால், தீர்த்தமும் செந்நிறத்தில் காணப்படும். ஆறுமேனுபண்ட வழியாக, கங்குமடுகை அடைந்து, மறுநாள் குஞ்ஜனா தீர்த்தம் வழியாக பித்ருகல தீர்த்தத்தை அடையலாம். 35 கி.மீ. தொலைவை 2 நாள்களில் கடக்கலாம். அங்கிருந்து கங்கராஜூபோடு கிராமம் வழியாக, ரயில்வே கோடூரு சென்று ஊர் திரும்பலாம்.

சுத்தோதகம் தீர்த்தம்: கடப்பா செல்லும் வழியில் உள்ள குக்கலதொட்டியிலிருந்து தொடங்கும் 50 கி.மீ. பயணம் 3 நாள்கள் நீடிக்கும். இங்கு செல்ல அக்டோபர் முதல், ஜனவரி வரை சிறந்த காலமாக கருதப்படுகிறது. குக்கலதொட்டியிலிருந்து பயணம் தொடங்கி வழியில் சுத்தோதக தீர்த்தம், அஷ்டவக்கர தீர்த்தம், சனீஸ்வர தீர்த்தம், நாராயண தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் வழியாக தலைகோணாவை அடைந்து அங்கிருந்து பஸ் மூலம் திருப்பதியை அடையலாம்.

தும்புரு, கன்னியகா தீர்த்தம்: 25 கி.மீ. தொலைவு உள்ள இந்த தீர்த்தத்துக்கு செல்ல 2 இரவுகள், 3 பகல்வேளை தேவைப்படும். குக்கலதொட்டியிலிருந்து புறப்பட்டு, எட்லபண்ட, தேவதீர்த்தம் வழியாக வெங்கமாம்பா கவியை அடைந்து அங்கிருந்து, தும்புரு தீர்த்தம் சென்று கன்னியகாதீர்த்தம் வழியாக, பாபவிநாசம் சென்று திருமலை திரும்பலாம். இந்த யாத்திரையில், சிறு அருவிகளில் நனைந்தபடி, குளங்களில் நீந்தியபடி பயணிப்பது ஒரு அலாதியான இன்பம்.

ஈத்த மண்டப தீர்த்தம்: 2 நாள்கள், 20 கி.மீ. பயணம் செய்யும் யாத்திரை இது. குக்கலதொட்டியிலிருந்து, திருமலையை அடையும் யாத்திரை. அவ்வாதாத்தா கோணா வழியாக, அன்னமய்ய மார்க்கத்தில் உள்ள மார்கண்டேய தீர்த்தம், மசாலா ஓடை வழியாக பால்குணி தீர்த்தம், கருடத் தீர்த்தம், வெங்கடகிரி மன்னர்கள் அமைத்த சத்திரம் வழியாக, வன விலங்குகள் நீர் அருந்தும் புல்லுட்ல ஏரியை அடைந்து ஈத்த மண்டபத்தை அடையலாம். இங்கு ஈச்ச மரங்கள் உள்ளதால் கரடிகள் அதிகம் இருக்கும். அங்கிருந்து 15 நிமிடங்கள் நடந்தால் கோகர்பம் நீர்த்தேக்கம், பார்வேட்டு மண்டபம் வழியாக, திருமலையை அடையலாம்.

குண்டாலு தசாவதாராலு: இரண்டு இரவு, 3 பகல்கள் நடந்து 7 கி.மீ. பயணம் செய்யும் யாத்திரை இது. பாச்சிகால்வாய் கங்கம்மா கோயில் வழியாக, காக்குலதின்ன, அவ்வாசாரிகோண வழியாக சேஷதீர்த்தம் அடைந்து அங்கிருந்து ஆதிசேஷகுண்டா, சப்தரிஷி குகை வழியாக தசாவதாரம் தீர்த்தத்தை அடையலாம். தொடர்ந்து, 10 குளங்கள் அருகருகே இருப்பதால் இப் பெயர் பெற்றது. அங்கிருந்து, அம்ருத தீர்த்தம், சீதம்மா தீர்த்தம், ஈத மண்டபம் வழியாகத் திருமலையை அடையலாம். இந்த யாத்திரையில் மலையேற்றம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.

சக்தி கட்டாரி தீர்த்தம்: திருமலை தீர்த்த யாத்திரையில் மிகவும் பயங்கரமானது இந்த சக்தி கட்டாரி யாத்திரை. 2 நாள்கள், 5 கி.மீ. பயணமே என்றாலும், செல்லும் பாதை முழுவதும் அனைவர் மனதிலும் பயம் நிறைந்திருக்கும். பாபவிநாசத்தில் தொடங்கி, ஜனகச நந்தன தீர்த்தம், ராமகிருஷ்ணா தீர்த்தம் வழியாக பயணம் செய்தால், சக்தி கட்டாரியை அடையலாம். அங்கிருந்து இருட்டான குகை மார்க்கத்தில், அஸ்வினி தீர்த்தத்தை அடைந்து அங்கிருந்தபடியே, ஏழுமலையான் கோயிலை தரிசிக்கலாம். பின் பசுதாரா, குமாரதீர்த்தம் வழியாக பாபவிநாசத்தை அடையலாம்.

அனுமதி பெறுவது எப்படி?

இந்த 8 சாகச தீர்த்த யாத்திரை மேற்கொள்ள திருப்பதியில் உள்ள பயோஸ்பீயர் ரிசர்வ் அலுவலகத்திலிருந்து விண்ணப்பம் பெற்று பெயர், முகவரி, விலாசம், ஆதார் அட்டை நகல் இணைத்து அளித்து அனுமதி பெற வேண்டும். திருப்பதி கபில தீர்த்தத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்திலும் அனுமதி பெறலாம். பயணத்தில் வனத்துறை அதிகாரிகள் உடன் வருவர் வழிகாட்டிகளையும் நியமிப்பர்.

மேலும் விவரங்களுக்கு 0877-2280977, 0877-2231887, 2280980 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

முகவரி:
இந்த தீர்த்த யாத்திரை விவரம் குறித்து தெரிந்து கொள்ள, யூத் ஹாஸ்டல், நியு பாலாஜி காலனி, போலீஸ் பரேட் மைதானம் அருகில், திருப்பதி-517501. தொலைபேசி எண். 0877-2240300 என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

ஸ்ரீதேவி காம்ப்ளக்ஸ், முதல் மாடி, திலக் ரோடு, திருப்பதி, 0877-2289120 என்ற ஆந்திர சுற்றுலா வளர்ச்சி கழகம் வாயிலாகவும் சாகச யாத்திரை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.