சென்னையில் மழை பொழிய வைத்து பக்தனை அசத்திய மகா பெரியவா!

ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியாரை தெரியாதவர்கள் இல்லை எனலாம்..
சென்னையில் மழை பொழிய வைத்து பக்தனை அசத்திய மகா பெரியவா!
Published on
Updated on
1 min read

ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியாரை தெரியாதவர்கள் இல்லை எனலாம். சைவ வைணவ பேதம் அறியாதவர். காஞ்சி மகா பெரியவாளுடைய மஹா மஹா பக்தர்!

சென்னையில் ஒரு சமயம் சொற்பொழிவு செய்துக் கொண்டிருந்த போது, காஞ்சி மகா பெரியவாளுடைய கருணையைப் பற்றி பேசினார்....

பல வருடங்களாக ஒரு துளி கூட மழையே இல்லாத பல இடங்களில், பெரியவாளுடைய கருணையால், மழை பெய்து சுபிக்ஷமான, விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தார். எல்லா இடத்திலும் விதண்டாவாதம் செய்யும் ஆசாமிகள் இருக்கத்தானே செய்வார்கள்? அந்த சபையிலும் ஒருவர் திடீரென்று எழுந்தார்,  நீங்க அந்த சுவாமிகள் மழையை பெய்ய வெச்சார்….ன்னு சொல்லறீங்களே! அது நெஜம்னா…….இன்னிக்கு இங்கே சென்னைல மழையை வரவழைக்க உங்க பெரியவங்களால் முடியுமா? 

கேள்வியில் நையாண்டி, சவால், எகத்தாளம் எல்லாம் இருந்தது. பெரியவாளுடைய கருணை உள்ளத்தைப் பற்றிப் பேசும்போதும், கேட்கும்போதும் மனம் நிரம்பி, கண்களில் நீர் தளும்பும் ஒரு “கத் கத”மான பரவச நிலை, சாதாரணமான பக்தர்களுக்கே உண்டு என்றால், எம்பார் போன்ற மஹா மஹா பக்தர்கள் எப்பேர்பட்ட நிலையில் இருந்து அதை அனுபவித்திருப்பார்கள்! உள்ளிருந்து பேச வைப்பதும் அவர்தானே?

“ஏன் பெய்யாது? பெரியவாளோட அனுக்கிரகத்தினால் இன்னிக்கு உன்மையாகவே சென்னையில் மழை பெய்யும்!”  என்று அழுத்தம் திருத்தமாக, அடித்துச் சொல்லிவிட்டார். அப்போது ஒரு உத்வேகத்தில் அப்படி சொல்லிவிட்டாரே தவிர,” ஒரு வேளை மழை பெய்யலேன்னா.? பெரியவாளோட பேருக்கு ஒரு களங்கம் வந்துடுமே! நாராயணா! தேவையில்லாமல் இப்படி ஒரு விதண்டாவாதத்தை நான் கிளப்பி இருக்க வேண்டாமோ,  என்று உள்ளூர ஒரே கவலை எம்பாருக்கு!

சொற்பொழிவு முடிந்தும் கூட அந்த விதண்டாவாதி அங்கேயே அமர்ந்திருந்தார்…மழை வருகிறதா? என்று பார்க்க! பக்தனை பரிதவிக்க விடுவானா பகவான்? அங்கே காஞ்சிபுரத்தில் பெரியவா சுமார் ஒரு மணிநேரம் ஜபத்தில் இருந்தார். மெதுவாக கண்களைத் திறந்து அருகில் இருந்தவர்களிடம் சம்பந்தமே இல்லாத ஒரு கேள்வியைக் கேட்டார்…………

“ஏண்டா?……இப்போ சென்னையில மழை பெய்யறதா?”

சுற்றி இருந்தவர்கள் மலங்க மலங்க விழித்தனர். ஆம். சென்னை முழுவதும் அப்போது மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது! மஹா பக்தரான எம்பாரின் கண்களிலும் நன்றிக் கண்ணீர்! ஆனந்தக் கண்ணீர் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது!

அன்று அந்த விதண்டாவாதி, மழையில் தொப்பலாக நனைந்து கொண்டே வீடு போய் சேர்ந்திருப்பார். அவரும் பெரியவா என்ற கருணைக் கடலில் ஒரு துளியாக அன்றே சேர்ந்திருப்பார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com