எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மாசிமக விழா: மகாமக குளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடல்

மாசி மகத் திருவிழாவையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் வியாழக்கிழமை அதிகாலை முதல் மாலை வரை பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.

News image
மாசி மக விழா தீர்த்தவாரியை ஒட்டி கும்பகோணம் மகா மகக் குளத்தில் புனித நீராடிய பொதுமக்கள்.
Updated On :1 மார்ச் 2018, 8:45 pm

DIN

மாசி மகத் திருவிழாவையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் வியாழக்கிழமை அதிகாலை முதல் மாலை வரை பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.
ஆண்டுதோறும் மாசி மாதம் மக நட்சத்திர நாளில் மாசிமக விழா கொண்டாடப்படுகிறது. இதே விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக விழாவாகவும் கொண்டாடப்படும்.
மாசி மக விழாவினை முன்னிட்டு கடந்த 20 ஆம் தேதி முதல் ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கௌதமேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் உள்ளிட்ட 6 சிவாலயங்களில் பத்துநாள் உற்ஸவம் நடைபெற்றது. விழாவின் 5 ஆம் நாள் ஓலைச்சப்பரமும், 8 மற்றும் 9 ஆம் நாள்களில் தேரோட்டமும் நடைபெற்றது.
தீர்த்தவாரி...இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக வியாழக்கிழமை காலை ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கௌதமேஸ்வரர், பாணபுரீஸ்வரர், அமிர்தகலசநாதர், கம்பட்டவிஸ்வநாதர், கோடீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 12 சிவாலயங்களிலிருந்து சுவாமி - அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி, ரிஷப வாகனங்களில் மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் தீர்த்தவாரிக்காக எழுந்தருளினர்.
பின்னர் அந்தந்த கோயிலின் அஸ்திரதேவர்களுக்கு 21 வகையான அபிஷேகப் பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், அஸ்திரதேவர்கள் மகாமக குளத்தில் தீர்த்தவாரி கண்டருளியதைத் தொடர்ந்து, நான்கு கரைகளிலும், குளத்திலும் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
தீர்த்தவாரியை முன்னிட்டு வியாழக்கிழமை அதிகாலை 4 மணி முதல் மாலை வரை தொடர்ந்து மகாமக குளத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர். 
பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார், தீயணைப்பு வீரர்கள், அறநிலையத்துறையினர், மருத்துவ குழுவினர், வருவாய்த்துறையினர், நகராட்சி நிர்வாகத்தினர் இணைந்து செய்திருந்தனர்.
குளக்கரையில் திதி கொடுக்க அனுமதி மறுப்பு: மாசிமகத்தின்போது, மகாமகக் குளக்கரையில் பொதுமக்கள் தங்களுடைய மூதாதையருக்கு திதி கொடுப்பது வழக்கம். 
ஆனால், நிகழாண்டு குளத்தின் தென்மேற்கு கரையில் மட்டுமே திதி கொடுக்க மக்கள் அனுமதிக்கப்பட்டனர். இதர கரைகளில் திதி கொடுக்க வந்த பொதுமக்களை போலீஸார் திருப்பி அனுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.