/

கங்கா ஸ்நானம் ஆச்சா? தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்க ஜோதிடம் கூறும் காரணங்கள்!

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! ஐப்பசி மாதம் தன்னுள்ளே பல விஷேச..

News image
Updated On :5 நவம்பர் 2018, 8:06 am

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! ஐப்பசி மாதம் தன்னுள்ளே பல விஷேச தினங்களைக் கொண்டிருக்கின்றது. அவற்றுள் பண்டிகையென்ற ரீதியில் கொண்டாடப்படுவது தீபாவளியாகும். நாம் பல பண்டிகைகளையும் விஷேச தினங்களையும் கொண்டாடியும் அனுசரித்தும் வருகிறோம். அதை எதற்காகச் செய்கிறோம் என பொருளுணர்ந்து செய்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். அந்த வகையில் தீபாவளி எதற்காகக் கொண்டாடி வருகிறோம் என அறிந்தால் நம் முன்னோர்களின் தீர்க தரிசனத்தையும் அறிவையும் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. பண்டிகைகள் எதற்காக என்றால் மக்கள் அனைவரும் இன்பமாகக் கொண்டாட வேண்டும் என்ற காரணத்தினால் தான். 

இப்பண்டிகை ஐப்பசித் திங்களில் கிருஷ்ணபட்ச சதூர்த்தசியன்று கொண்டாடப்படுகிறது. இதை நரக சதுர்த்தசி என்று கூறப்படுகிறது.. நரக சதுர்த்தசி அன்று, நரகத்திற்குச் செல்லாமல் இருக்கவும், ஏற்கனவே நரகத்தில் துன்பப்படுபவர்கள் அங்கிருந்து விடுபடவும் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும். எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புப்பண்டங்கள், தீபம், இனிப்பு மருந்து, நெருப்புப்பொறி ஆகியவற்றிற்குப் பூஜை செய்ய வேண்டும். இந்த தீபத்திருநாளில் திருமகள் அனைத்து விதமான செல்வங்களையும் வளங்களையும் அளிப்பாள். 

பெயர்க்காரணம்

Story image

‘தீபம்‘ என்றால் ஒளி, விளக்கு ’ஆவளி‘ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கனம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். இந்த நன்னாளில் ஏதேனும் ஒரு தீயகுணத்தையாவது எரித்துவிட வேண்டும்.

தீபாவளி கொண்டாடுவதற்கான காரணங்கள்

கிருஷ்ணர் நரகாசுரன் என்ற அசுரனை அவனது கொடுமைகள், இம்சைகள் தாங்காது கொன்று அழிக்கின்றார். அத்தருணத்தில் நரகாசுரன் ஒரு வரம் கேட்கின்றான். பல கொடுமைகள் புரிந்த தீயவன் நான் இறந்துபோகும் இந்நாளை மக்கள் என்றென்றும் மகிழ்ச்சிகரமாக கொண்டாடவேண்டும் என்பதே அவ்வரம். தீயவன் ஒருவனின் அழிவில் மகிழ்வுற்ற மக்கள் அன்று கொண்டாடிய கொண்டாட்டமே இன்றும் தீபாவளியாக கொண்டாடப்படுவதாகக் கருதப்படுகின்றது.

Story image

நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன். பாதாள லோகத்தில் வசித்த மது, கைடபர் என்னும் அரக்கர்களால் எடுத்துச் செல்லப்பட்ட வேதங்களை மீட்கப் பகவான் விஷ்ணு பாதாளம் நோக்கிச் சென்றார். அப்போது, பூமாதேவியுடன் ஏற்பட்ட ஸ்பரிசத்தில் "பவுமன்' என்ற மகனைப் பெற்றாள் பூமாதேவி. அவன் சிறப்பாக தவம் செய்து பிரம்மாவிடம் சாகாவரம் கேட்டான். பூமியில் இறந்தவர்கள் மடிந்தேயாக வேண்டும் என்ற பிரம்மா, அவன் பல லட்சம் ஆண்டுகள் வாழ வரம் தந்ததோடு, எந்தச் சக்தியால் அவனுக்கு அழிவு வரவேண்டும் எனக் கேட்டார். தன்னைப் பெற்ற தாயைத் தவிர வேறு யாராலும் அழிவு வரக்கூடாது என அவன் வரம் பெற்றான். 

அசுர வதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுர சுபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்துவிட்டது. நரன் என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகஅசுரன் எனப்பட்டான். அப்பெயரே நரகாசுரன் என்றானது. இந்த தீபாவளி எப்படி வந்தது என்று பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. நரகாசுரன் என்ற ஒரு அரக்கன் இருந்தான். அவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களைக் கொடுத்து வந்தான்.

Story image

இதை அறிந்த மகாவிஷ்ணு அவனைக் கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்குப் பிறந்தவன். அவன் தன் தாயைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகாவிஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார். அவன் மகா விஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதைப் பார்த்த சத்தயபாமா கோபம் அடைந்து நரகாசுரனைப் போருக்கு அழைத்தார். சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி விழுந்தான்.

Story image

அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. அப்போது அவரிடம், அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி வெடி போட்டு கொண்டாட வேண்டும் என்று வேண்டினான். மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

தீபாவளி குறித்த மற்ற நிகழ்வுகள்

வட மாநிலங்களில் ராவணனை வென்று சீதாபிராட்டியை மீட்ட ராமர், அயோத்தி திரும்பிய நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. வால்மீகி ராமாயணத்தில் முதன் முதலாகத் தீபாவளி பற்றிய குறிப்புகள் உள்ளன. ஸ்கந்தபுராணத்தின் படி, சிவனோடு ஒரு சந்தர்ப்பத்தில் கோபம் கொண்ட சக்தி, சிவனின் அருளை உணர்ந்து 21 நாள் கேதாரகெளரி விரதம் இருந்து சிவனில் ஒன்றிணைகிறார். இவ்வாறான விரதம் முடிவுற்ற அத்தினத்தில் சிவன் தன்னில் ஒரு பாதி சக்தி என்பதை ஏற்று அர்த்தநாரீஸ்வரர் உருவமெடுக்கின்றார். இவ்வாறு ஆணில் பெண் சரிபாதியாக இணையும் நன்னாளினை நினைவுபடுத்துவதாக தீபாவளி அமைகின்றதாகக் கூறுகின்றனர். 

Story image

துலா (ஐப்பசி) மாதம் தேய்பிறையில் திரயோதசி அன்று மகாபிரதோஷ பூஜை செய்து, யமதீபம் ஏற்ற வேண்டும். எமதர்ம ராஜாவை மனதால் பிரார்த்தனை செய்து, அகாலமரணம் சம்பவிக்காமல் காக்கும்படி பிரார்த்திக்க வேண்டும். மறுநாள் நரக சதுர்த்தசி அன்று, நரகத்திற்குச் செல்லாமல் இருக்கவும், ஏற்கனவே நரகத்தில் துன்பப்படுபவர்கள் அங்கிருந்து விடுபடவும் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும். எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புப்பண்டங்கள், தீபம், இனிப்பு மருந்து, நெருப்புப்பொறி ஆகியவற்றிற்குப் பூஜை செய்ய வேண்டும்.

தீபாவளியின் பெருமை

ஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் வந்தாலும் தீபாவளிக்கு என்று தனிச்சிறப்பு ஒன்று உண்டு. அன்றைய தினம் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் எண்ணெய் நீராடி, புத்தாடை அணிந்து, தீபம் ஏற்றிக் கொண்டாடுவது அவசியம் என்று புராணமே கூறுவதுதான் அந்தச் சிறப்பு. 

தீபாவளி குளியல் என்பது கங்கை நதியில் குளிப்பதற்கு ஒப்பாகக் கருதப்படுவதால் இது கங்காஸ்நானம் என்று அழைக்கப்படுகிறது. தர்மசாஸ்திர மூலகிரந்தங்களான விஷ்ணுபுராணம், ஸ்ம்ருத்யர்த்தஸாரம், ஸ்ம்ருதிரத்னம், காலாதர்சத்திலும், ஸாரஸங்க்ரஹத்தில் ஆஸ்வீஜ மாதத்தில் சூரியன் சுவாதியில் நிற்க, சந்திரன் சுவாதியில் வரும் நாளில் குளித்தல் லக்ஷ்மீகரமானது எனக் குறிப்பிடுகிறது. சில வருடங்களில் மட்டுமே சூரியன் சுவாதியில் நிற்க தீபாவளி நிகழும், ஏனெனில் சூரியன் துலா (ஐப்பசி தமிழ்) மாதத்தில் மட்டுமே சுவாதியில் இருப்பார். ஐப்பசி மாத துவக்கத்தில் அல்லது முடிவில் சாந்திரமான ஆஸ்வீஜ மாத அமாவாசை ஏற்படின் நட்சத்திர மாறுதல் இருக்கும்.

Story image

ஆல், அரசு, புரசு, அத்தி, மாவலிங்கம் ஆகிய ஐந்து மரங்களின் பட்டைகளையும் தண்ணீரில் சேர்த்துக் கலந்து சிறிது நேரம் ஊறவைத்து பின் கொதிக்கவைத்து வெந்நீர் தயார் செய்ய வேண்டும். காய்ச்சிய நல்லெண்ணெய்யை உச்சந்தலை முதல் பாதம் வரை உடல் முழுவதும் தடவி சற்று ஊறவேண்டும். பிரம்மன் காத்தல் நிலையில் (ரக்க்ஷை) “நாயுருவி”  செடி வடிவில் இருக்கிறார். இந்த நாயுருவி செடியால் தலையை மூன்று முறை தடவியநிலையில் வலமாகச் சுற்றி கால்படாமல் பெருமரத்தின் அடியில் சேர்த்து பின்னர் கங்கை, லக்ஷ்மியை தியானித்து தலைக்கு குளித்தல் வேண்டும்.

“தைலே லக்ஷ்மீர் ஜலேகங்கா தீபாவளிதினே வஸேத்’

சூரிய உதயத்துக்கு முன்னதாக இரண்டு நாழிகை முன்னதாக (48 நிமிடம்) குளிப்பது மிகவும் சிறப்பானது. காலை 5.30க்குள் எண்ணெய் குளியலை முடித்து விட வேண்டும். ஆனால், நாலரை மணிக்கு முன்னதாக குளிக்கக்கூடாது. சூரிய உதயத்திற்குப் பிறகு வழக்கமான குளியலையும் குளிக்க வேண்டும் என்பதும் நியதி. 

Story image

கங்காஸ்நானத்திற்குப் பின்னர் தீபம் ஏற்றி புத்தாடைகள் உடுத்தி சம்பிரதாயப்படி விபூதி, நாமம் இட்டு தங்க நகைகள் பூண்டு லக்ஷ்மி நாராயணனை வணங்கி செல்வ செழிப்புடன் ஆரோக்கியத்துடன் விளங்கப் பிராத்தித்து லக்ஷ்மி, விஷ்ணு அஷ்டோத்திரம் வாசித்து தீபாவளி லேக்கியம், இனிப்பு பலகாரவகைகள், பழங்களைப் படைத்து கற்பூர தீபம் காண்பித்து அங்கம் புழுதிபட சேவித்து பின்னர் லேக்கியத்தையும் இனிப்புகளையும் உண்டு வானவேடிக்கையில் ஈடுபடவேண்டும். பெரியவர்கள் காலில் விழுந்து மரியாதை செலுத்தி அவர்களின் ஆசியைப் பெறுதல் மிகவும் முக்கியமானதாகும்.

அவலக்ஷ்மி நீங்கி லக்ஷ்மி கடாட்சம் பெருக பிரார்த்தனை செய்தல் வேண்டும். கீழ்க் கண்ட சுலோகத்தைக் இறைவன் முன்நின்று கூறவேண்டும்.

“விஷ்ணோ: பாத ப்ரஸூதாஸி வைஷ்ணவீ விஷ்ணு தேவதா

த்ராஹி நஸ்த்வேனஸஸ் தஸ்மாத்  ஆஜன்ம மரணாந்திகாத்

திஸ்ர: கோட்யோர்த்த கோடீச  தீர்த்தானாம் வாயுரப்ரவீத்

திவி புவ்யந்தரிக்ஷே ச  தானிமே ஸந்து ஜாஹ்னவி’.

தாய் போன்ற கங்கா தேவி நீ மகாவிஷ்ணுவின் பாதத்தில் தோன்றி வைஷ்ணவியாகவும், விஷ்ணுவை அதிதேவதையாக உடையவளாகவும் விளங்குகிறாய். ஜனன - மரண இடைப்பட்ட காலங்களில் பாவங்களிலிருந்து எங்களைக் காத்தருள வேண்டும். தேவலோகம், பூமி, அந்தரிக்ஷம், மூன்றரை கோடி புண்ணிய தீர்த்தங்கள் உள்ளதாக வாயு பகவான் கூறியுள்ளார். தங்கள் கருணையால் அவைகள் என்பொருட்டு இங்கு வந்து அருள வேண்டும். நீரின்றி அமையாது உலகம் எனும் வள்ளுவன் வாக்குப்படி நீர் மிக முக்கியமானதும் தாயார் போன்றதாகும். அந்த நீரை கங்காஸ்நானம் எனச் செய்வதால் நல்லவை நடக்கும்.

Story image

கோதூளி லக்னத்தில் கோ பூஜை (லக்ஷ்மிபூஜை): தீபாவளி அன்று மாலை கோதூளி லக்ன காலத்தில் பசுவை லக்ஷ்மி ஸ்வரூபமாக நினைத்து திலகம் இட்டு வணங்கி, கோதுமை தவிடு, வெல்லம் சிறிது கலந்து உணவாகத் தந்து வாலைத் தொட்டு வணங்கவும்.

மாலையில் தீபம்: மாலையில் லக்ஷ்மி கடாக்ஷ்ம் வேண்டும் எனப் பிராத்தித்து சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர் பூஜை அறையில் மற்றும் வீட்டு வாசலிலும் தீபம் ஏற்றி வழிபடவும்.

ஜோதிடத்தில் தீபாவளி

தீபாவளியை சுக்கிர பகவானின் அதிகபட்ச ஆதிக்கம் நிறைந்த நாளாக இருந்தாலும் அனைத்து கிரக்களின் பங்களிப்பு நிறைந்து நிற்கிறது. மரபைப் போற்றுதல், பித்ருகடன் போன்றவை சூரியனின் காரகங்களாகும். மேலும், சூரியன் தந்தை மற்றும் குடும்ப தலைவருக்குக் காரகர் ஆவார். தந்தையின் போனஸ் பணத்தில் அனைவருக்கும் புத்தாடை, இனிப்பு மற்றும் பலகாரங்கள் செய்து மகிழ்வித்து குடும்பத்தில் அனைவரையும் அரவணைத்து செல்வது சூரிய பகவானின் காரகம் ஆகும்.

Story image

கங்கா ஸ்நானம் செய்வது சந்திரனின் காரகமாகும். கங்கா ஸ்நானம் செய்தவர்களுக்கு நரக பயமும், அபமிருத்யுவும் (அகால மரணம், கோர மரணம்) ரோகங்களும் ஏற்படாமலிருக்க வேண்டும் என்று கூடுதலாக நம் எல்லோருக்காகவும் வரம் வாங்கித் தந்தாள் பூமித்தாய். அவள் நரகனுக்கு மட்டுமில்லை, நம் எல்லோருக்குமே தாய் அல்லவா? சந்திரனை மாத்ரு காரகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. கார பட்சணங்கள், வெந்நீர் குளியல், பட்டாசு ஒலி, அதிர்வேட்டு போன்றவை செவ்வாயின் காரகங்களாகும். 

உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பது புதனின் காரகத்துவங்களாம். பெரியோரை வணங்கி ஆசி பெறுவது, கோயில்களுக்குச் செல்வது இறைவழிபாடு குருவின் காரகத்துவங்கள் ஆகும். மேலும், நெய்யில் செய்த இனிப்பு வகைகள், கடலைமாவில் செய்த இனிப்பு வகைகள் ஆகியவற்றிற்கும் குருவே காரகர் ஆவார். தீப ஒளி, புத்தாடை, இனிப்புகள், நெய்யில் செய்த இனிப்புகள், மத்தாப்புகளின் வெளிச்சம், பலவித ஒளி, மகிழ்ச்சி, தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் கண்டுகளிப்பது, புதிய திரைப்படங்கள் செல்வது போன்றவை சுக்கிரனின் காரகத்துவங்களாகும். 

யம தீபம் ஏற்றுவது, நல்லெண்ணெய் குளியல், எண்ணெய்யில் செய்த பலகாரங்கள் தின்று மந்தமாக இருப்பது போன்றவை சனியின் காரகங்களாகும். காதைப் பிளக்கும் ஒலியுடன் வெடிக்கும் வெடிகள், இரசாயனங்கள், ராக்கெட்டுகள் போன்றவை ராகுவின் காரகங்களாம். தான தருமங்கள் செய்வது, தீபாவளி மருந்து, இறைவழிபாடுகள் போன்றவை கேதுவின் காரகங்களாகும்.

எனவே தீபாவளியை கொண்டாடுபவர்கள் அனைவரும் நவக்கிரகங்களின் அருளை ஒருசேரப் பெறுகிறார்கள் என்றால் மிகையாகாது. இந்தப் புனிதத்திருநாளில் நாம் எதற்காகப் பிறந்தோம்? தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம்? நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதையெல்லாம் சிந்தித்து, நம்முடைய மனத்திலே நரகாசுரன் போன்ற தீய குணங்கள் எல்லாம் இருந்தால் அவற்றை அழிக்கக் கண்ணபிரானைப் பிரார்த்தித்து, மனிதன் தேவனாக மாற முடியாவிட்டாலும், மனிதனாகவாவது வாழ முயற்சி செய்து இறைவனுடைய அருளைப் பெறுவோமாக.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.