சனீஸ்வர பகவானின் அருள் கிடைக்கனுமா? மண் அகலில் விளக்கேற்றுங்க!

இன்று பரணி தீபம் எனப்படும் அண்ணாமலை திருக்கார்த்திகை தீபம். கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாத பௌர்ணமி..
சனீஸ்வர பகவானின் அருள் கிடைக்கனுமா? மண் அகலில் விளக்கேற்றுங்க!

இன்று பரணி தீபம் எனப்படும் அண்ணாமலை திருக்கார்த்திகை தீபம். கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் இந்துக்கள் தமது இல்லங்களிலும் கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும். பஞ்ச பூத தலங்களில் நெருப்பு தலமாக விளங்கும் தீதலம் எனும் திருவண்ணாமலையில் திருகார்த்திகை தீபத்தை முன்னிட்டு இன்று மாலை (22/11/2018) பரணி தீபம் ஏற்றுகிறார்கள். அதனை தொடர்ந்து நாளை அனைத்து ஆலயங்களில் சர்வாலய தீபம் ஏற்றப்படும்.

திருவண்ணாமலையில் கார்த்திகை மாதத்தில் மலை மேல் தீபம் ஏற்றப்பட்டு, ஜோதி வடிவமாக இறைவன் உள்ளதாக நாமெல்லாம் அறிகிறோம். பரமேஸ்வரனும் லிங்கோத்பவ மூர்த்தியாக அடி முடி காணாத ஜோதி வடிவமாக இருப்பதாக அறிந்துகொள்கிறோம். கார்த்திகை தீபம் ஒவ்வொரு கோவிலிலும், ஒவ்வொரு வீட்டிலும் ஏற்றப்பட்டு, விசேஷமாக ஜோதி ஒளியுடன் வீடுகளும், கோவில்களும் விளங்குகின்றன.

கார்த்திகை மாதத்தை கீட மாதம் என்று கூறுவார்கள். மேலும் கார்த்திகை மாதம் மழைக் காலத்தில் வருவதால், புழுக்களும், கொசுக்களும், வண்டுகளும், விஷ ஜந்துகளும் அதிகமாக உருவாகும். புழுக்களுக்கும், கொசுக்களுக்கும், வண்டுகளுக்கும், மரங்களுக்கும், தண்ணீர் மற்றும் ஆகாயத்தில் வசிக்கக்கூடியவற்றுக்கும் நல்ல கதி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்து, சிவ பூஜை முடிந்த பிறகு, குங்கிலியம் போட்டு பிரார்த்தனை செய்வார்கள்

மண் அகல் விளக்கும் ஒரு மிகச் சிறந்த மாசு கட்டுப்பாட்டு கருவி

இன்றைய அவசர யுகத்தில், மூச்சுவிடக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். சுற்றுப்புறக் காற்றும் சுத்தமாக இல்லை. மாசு படிந்த காற்றை சுவாசிப்பதன் விளைவு, சுவாசப் பிரச்னையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால், சளி, இருமல், ஆஸ்துமா, அலர்ஜி போன்ற பல்வேறு நோய்களும் வரிசைகட்டி நம்மை வாட்டுகின்றன. மண் அகலில் திரி போட்டு நல்லெண்ணெய் விட்டு விளக்கேற்றி வைத்தால், அது காற்றில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி சுத்தமான சுவாசத்துக்கு வழிவகுக்கிறது.

மேலும், நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றப்படும் அகல் விளக்கானது, துர்சக்திகளை அழிக்கும் தன்மை கொண்டது. எனவே, அகல்விளக்கை ஏற்றிவைத்து தியானம், பிராணாயாமம் போன்ற பயிற்சிகளைச் செய்யும்போது மனம் எளிதில் ஒருமுகப்படுகிறது. எனவே, உலகத்திலேயே மிகச் சிறந்த காற்று சுத்திகரிக்கும் கருவி மண் அகல் விளக்காகும்.

பஞ்சீகரண தத்துவமும் அகல் விளக்கும்

"அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும் உள்ளது” எனும் வரிகளை ஜோதிடத்தில் பலர் சொல்லக் கேட்டிருப்போம். இவ்வாக்கியத்தின் பொருள், புற உலகில் எது இருக்கின்றதோ அது, அக உலகமாகிய நமது உடலிலும் இருக்கின்றது என்பதே. அதாவது, புற உலகம் என்பது மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்சபூதங்களை உள்ளடக்கியதாகும்.

நாம் அறியகூடிய இந்த பௌதீக பிரபஞ்சம் முழுவதும் பஞ்சபூதங்களின் வெவ்வேறு விகிதாச்சார கலவையால் உருவானது. உதாரணமாக, கல் அல்லது மண் போன்ற ஜடப் பொருள்கள் பஞ்சபூதங்களின் கலவை. சூரியன் உள்ளிட்ட நட்சத்திரங்களும் பூமி போன்ற கிரகங்களும் இந்தப் பஞ்சபூதங்களின் கலவையாக அறிவியல் அறிஞர்களின் விளக்கத்தின்படி உருவாயின.

மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவையே பஞ்சபூதங்கள். இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உருவானதுதான் மனித உடல் எனும் பிரபஞ்சம்.

ஐம்பூதங்களில், ஒவ்வொரு பூதமும் இருகூறாக ஆகி, அதில் ஒரு கூறை நிறுத்திக்கொண்டு, மற்றொரு கூறை நான்கு கூறுகள் ஆக்கி, அந்த நான்கும் மற்ற நான்கு பூதங்களுக்குக் கொடுத்தும் வாங்கியும் தம்மில் கலப்பது பஞ்சீகரணம் எனப்படும். ஆகாயம் துவாரமாகி மற்ற பூதங்களுக்கு இடம் கொடுக்கும் இயல்பானது. வாயு சலித்து மற்ற பூதங்களை திரட்டும் இயல்பானது. தேயு சுட்டு ஒன்றாக்கும் இயல்பானது. அப்பு குளிர்வித்து பதம் செய்யும் இயல்பானது. பிருதிவி கடினமாய் ஆக்கும் இயல்பானது.

மண் அகல் விளக்கும் பஞ்சபூத தத்துவமும்

பஞ்சபூத தத்துவத்தில் மண் அகல் விளக்கு ஐப்பெரும் பூதங்களின் தத்துவத்தை குறிப்பதாக அமைந்திருக்கிறது. மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவையே பஞ்ச பூதங்கள். இவையனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உருவானது தான் மனித உடல் எனும் பிரபஞ்சம். மண்ணை பிருத்திவி என்று அழைக்கின்றனர். எலும்பு, தோல், நரம்பு, தசை, மயிர் இவை அனைத்தும் மனித உடம்பின் மண் கூறு கொண்டவை. நீரின் கூறு நீரின் தன்மை கொண்டவை இரத்தம், விந்து (வெந்நீர்), சிறுநீர், மூளை, கொழுப்பு. நீரினை புனல் என்று அழைக்கின்றனர்.

எந்தக் கடவுளுக்கு தீபம் ஏற்றினாலும் மண்ணினால் செய்யப்பட்ட அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது சிறந்தது. அதற்குக் காரணமும் உண்டு. அதாவது, அகல் விளக்கு ஏழை ஒருவனால் பஞ்சபூதத் தத்துவங்களின் அடிப்படையில் தயார் செய்யப்படுகிறது. அவன் களிமண்ணில் நீரை ஊற்றி, சூரிய ஒளியில் காயவைத்து, காற்றின் உதவி கொண்டு நெருப்பில் இட்டு ஒரு அழகான அகல் விளக்கைச் செய்கிறான்.

மேலும், அகல் விளக்கை ஏற்றும்போதும் மண்ணை குறிக்கும் அகல் விளக்கில், நீரைக் குறிக்கும் நல்லெண்ணெய் விட்டு, ஸ்வாசம் எனும் வாயுவை குறிக்கும் திரி போட்டு, நெருப்பு தத்துவத்தை குறிக்கும் விதமாக ஏற்றும்போது, வெளிச்சம் எனும் ஆகாயம் உருவாகிறது.

மண் அகல் விளக்கும் ஜோதிடமும்

ஜோதிடத்தில், மண்ணை குறிக்கும் கிரகம் சனைஸ்வரன் எனும் சனீஸ்வர பகவானாவார். மண்ணில் உதித்த உயிர்களெல்லாம் மண்ணோடு மண்ணாக மாறுவதைக் குறிக்கும் வகையில், ஆயுள்காரகன் என்றும் அவர் அழைக்கப்படுகிறார்.

நவகிரகங்களில் ஆயுள்காரகன் என்று வர்ணிக்கப்படும் சனி பகவான் சிறப்பாக அமைந்தால் ராஜபோக வாழ்வு உண்டாகும். ஒருவர் ஜாதகத்தில் சனி பகவான் மகரம், கும்பத்தில் அமைந்து ஆட்சி பெற்றோ, துலாமில் சனி அமைந்து உச்சம் பெற்றிருந்து, சனி அமைந்த வீடு லக்கின கேந்திரமாகவோ, சந்திர கேந்திரமாகவோ இருந்தால் சச யோகம் உண்டாகிறது. சச யோகம் என்பது பஞ்சமகா புருஷ யோகத்தின் ஒரு பிரிவு ஆகும். ஆயுள்காரகனான சனியால் இந்த யோகம் உண்டாவதால், ஜாதகர் நீண்ட ஆயுள், நிலையான செல்வம், செல்வாக்கு அடைவார்.

ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் எட்டாம் பாவம் ஆயுள் ஸ்தானம் ஆகும். நவகிரகங்களில் ஆயுள் காரகன் சனி பகவானாவார். எனவே ஒருவரின் ஜாதகத்தில் எட்டாம் பாவ அதிபதியும் சனி பகவானும் பலம் பெற்று அமைந்து விட்டால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் யாவும் சிறப்பாக அமையும். அதுவே எட்டாம் பாவம் பலமிழந்து சனி பகவானும் எட்டாம் அதிபதியும் வக்ரம், பகை, நீசம் பாவ கிரக பார்வை பெற்றிருந்தால் இளம் வயதிலேயே கண்டங்களை எதிர் கொள்ளக் கூடிய அமைப்பு ஏற்படுகிறது. அதுபோல பலமிழந்த மேற்கூறிய கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் கண்டங்கள் உண்டாகிறது. 

இதுபோன்ற ஆயுள் அமைப்பை ஜாதகத்தில் கொண்டவர்கள் மண் அகல் தீபம் ஏற்றி வழிபட ஆயுள்காரகன் சனைச்சர பகவானின் அருளும் அவரின் சகோதரர் யமனின் அருளும் பெற்றும் நீண்ட நாட்கள் வாழ்வார்கள் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

மண் அகல் விளக்கை யார் அதிகமாக ஏற்றுவார்கள்?

  1. மண்ணினை குறிக்கும் கிரகம் சனீஸ்வரன் ஆவார். மண்ணினை குறிக்கும் நில ராசியான மகரத்தையும் மண் குடத்தினை (கும்பம்) ராசியாக கொண்ட கிரகமும் சனீஸ்வரன் ஆவார். மகர, கும்ப ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்கள் எளிமையானவர்கள் மற்றும் பழமையை மறக்காதவர்கள் ஆவர். கால புருஷனுக்கு பத்தாமிடமான மகரத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் அடுத்தவர் உழைப்பை மதிப்பவர்கள். எனவே மண்பாண்டம் செய்வோர் மற்றும் செக்கில் எண்ணெய் பிழியும் வணிகப் பெருமக்களையும் போற்றும்வண்ணம் மகர ராசி லக்னக்காரர்கள், மண் அகலில் நல்லெண்ணெய் விட்டு விளக்கேற்றுவார்கள்.

  2. முக்கியமாக, கும்ப ராசி/லக்னக்காரர்கள், ‘குடத்தில் இட்ட விளக்கு போல’ எனும் பழமொழிக்கேற்ப, குடும்பத்தில் பெரியவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே ஏற்றுக்கொண்டு தன் விருப்பங்களை புதைத்துவிடுவார்கள். அவர்களின் ஐந்து மற்றும் ஒன்பதாம் அதிபதிகளாக மண்ணை குறிக்கும் நில ராசி அதிபதிகளாக புதனும் சுக்கிரனும் வருவதால், அவர்கள் மண் அகல் விளக்கை அதிகமாக ஏற்றுவார்கள்.

  3. எப்போதும் புதிய புதிய விஷயங்களை தேடிக்கொண்டே இருக்கும் தன்மை கொண்டவர்கள் சுக்கிரனின் ஆதிக்கம் பெற்றவர்கள். ரிஷபத்தில் சனி நின்றாலும், துலா ராசியில் சனி உச்சம் பெற்று நின்றாலும் அவர்கள் புதிது புதிதான மண் அகலை விரும்பி ஏற்றுவார்கள்.

  4. பாரம்பரியத்தைப் போற்றுதல் என்றாலே குருவும், சூரியனும்தான். நெருப்பு ராசி மற்றும் திரிகோண ராசிகளான மேஷ, சிம்ம, தனுசு ராசி/லக்னக்காரர்கள், பாரம்பரியத்தைப் போற்றும்வண்ணமும் தர்மத்தைக் காக்கும்வண்ணமும் மண் அகல் விளக்கை ஏற்றுவார்கள்.

  1. ஜாதகத்தில் காலபுருஷனுக்கு தர்ம கர்மாதிபதிகளான குருவும் சனியும் சேர்ந்து நிற்பவர்கள் மற்றும் தர்ம கர்மாதிபதி யோகம் பெற்றவர்கள், தர்மத்தையும் கர்மத்தையும் காக்கும்வண்ணம் மண் அகல் விளக்கேற்றுவார்கள்.

  2. ஜாதகத்தில் மண்ணை குறிக்கும் கிரகம் சனைச்சரன். எளிமையை குறிக்கும் கிரகம் கேது பகவான். ஜாதகத்தில் இவர்கள் சேர்க்கை பெற்றோ அல்லது திரிகோண பார்வை பெற்றோ நிற்பவர்கள், மண்ணினால் செய்த அகல் விளக்கை ஏற்றுவார்கள்.

  3. பஞ்சபட்சி சாஸ்திரபடி  பூமி ததுவத்தில் பிறந்த அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி மற்றும் மிருகசீரிஷ நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களும் அ,ஆ ஐ,ஒள எனும் அக்ஷரங்களை பெயரின் முதலாக கொண்டவர்களும் நெருப்பு தத்துவத்தில் பிறந்த உத்திரம், ஹஸ்தம், சித்திரை, ஸ்வாதி மற்றும் விசாக நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களும் உ, ஊ எனும் அக்ஷரங்களை தங்களது பெயரின் முதலாக கொண்டவர்களும் மண் அகலில் விளக்கேற்றி சிறப்படைவர்.

மண் அகலில் விளக்கேற்றுவதால் ஏற்படும் நன்மைகள்

  1. ஆயுள்காரகனான சனைச்சரனின் அம்சமான மண் அகலில் விளக்கேற்றினால் சுத்தமான சுவாசம் அமைந்து நமக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும்.

  2. குயவர்கள் எனப்படும் மண்பாண்டம் செய்வோர் மற்றும் செக்கில் நல்லெண்ணெய் ஆட்டும் வணிகர்கள், கடின உழைப்பாளிகள் மற்றும் சனியின் காரகம் பெற்றவர் ஆவர். எனவே மண் விளக்குக்கும் நல்லெண்ணெய்க்கும் செய்யும் செலவு, சனீஸ்வர பகவானுக்கு செய்யும் பரிகாரம் என்பதால் சனிதோஷம் விலகுவதோடு ஆயுள் காரகனின் அருள் கிட்டும் என்பது நிதர்சனம்.

  3. ராகு மற்றும் கேது ஆதிக்கம் பெற்ற ரசாயன மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகம் உலக வெப்பமயமாதலை (குளோபல் வார்மிங்) அதிகரித்துவரும் நிலையில், ரசாயனங்களையும் பிளாஸ்டிக் உபயோகத்தையும் குறைக்கும் வகையில் மண் அகலில் விளக்கேற்றுவது, மண்ணின் காரகனான சனீஸ்வரனுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் செய்யும் நன்றிக்கடனாகும்.

  4. பரணி நட்சத்திரம் என்பது யமதர்ம ராஜனின் நக்ஷத்திரம் ஆகும். இந்நாளில் இறந்த நம் முன்னோர்கள் எல்லாம் அவரவர் கர்ம விணைக்கு ஏற்ப யமதர்மனின் தீர்ப்புக்கு இணங்க சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் செல்வார்கள் என்பது நியதி ஆகும். யமதர்மனுக்கு உகந்த மஹாபரணி நக்ஷத்திர நாளில் முன்னோர்களுக்கு ஸிரார்த்தம், திதிகள், தர்ப்பணம் செய்வது மற்றும் யமதீபம் ஏற்றுவது  போன்றைவைகளை செய்தால் யமதர்மன் மனம் மகிழ்ந்து நரகத்திற்கு செல்ல வேண்டிய நம் முன்னோர்களின் வேதனையைக் குறைத்து சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பார்கள் என ஐதீகம். எனவே இந்தத் திருக்கார்த்திகை திருநாளில் பரணி தீபத்தில் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் எட்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்றுவதால் முன்னோர்கள் ஆசி கிடைப்பதோடு ஆயுள் பயம் நீங்கும் என்பது நிதர்சனம்.

இந்தக் குருநாளில் அமைந்த கார்த்திகை திருநாளில் மண் அகல் விளக்குகளை நிறைய வாங்கி சுத்தமான நல்லெண்ணெய் விட்டு விளக்கேற்றி   குயவர்களை மட்டுமல்லாது செக்கில் எண்ணை ஆட்டும் வாணியர்களையும் காத்து சனி பகவானின் அருள் பெறுவோமாக!

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com