திருமண பொருத்தத்தில் செவ்வாய் தோஷம் பாடாய்ப்படுத்துகிறதா? அங்காரக சதுர்த்தியில் விநாயகரை வணங்குங்க!

இன்று திருமணமாகாத பல ஆண் மற்றும் பெண்கள் செவ்வாய் தோஷத்தால் திருமணம் தாமதமாவதாக..
திருமண பொருத்தத்தில் செவ்வாய் தோஷம் பாடாய்ப்படுத்துகிறதா? அங்காரக சதுர்த்தியில் விநாயகரை வணங்குங்க!

இன்று திருமணமாகாத பல ஆண் மற்றும் பெண்கள் செவ்வாய் தோஷத்தால் திருமணம் தாமதமாவதாக கூறுகின்றனர். திருமணத்துக்கு ஜாதகப்பொருத்தம் பார்ப்பவர்களை பெரும்பாலும் கலங்கடிப்பது செவ்வாய் தோஷமாகும். இந்தத் தோஷத்தால் நிறையப் பேரின் திருமணம் தாமதமாகி விடுவதுண்டு. செவ்வாய் தோஷம் எனப்படும் அங்காரக தோஷம் இன்று பலராலும் பல கற்பனைகளையும் கட்டுக்கதைகளையும் சேர்த்துப் புனைந்து ஒரு பூதாகரமான விஷயமாகக் கல்யாணத்திற்கு பெரும் தடையாக பேசப்படும் முக்கிய தோஷமாக இது கருதப்படுகிறது. ஆனால் இந்தச் செவ்வாய் தோஷம் ஆணுக்கும், பெண்ணுக்கும் இருந்தால் திருமணம் செய்யலாம். ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து மற்றொருவருக்கு செவ்வாய் தோஷம் இல்லை எனில் அவர்களுக்குத் திருமணம் செய்யக்கூடாது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

செவ்வாய் தோஷம்

லக்னம், சந்திரன், சுக்கிரன் முதலியவற்றுக்கு 1,2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாகக் கருத வேண்டும். அப்படி மீறி திருமணம் செய்தால் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு செவ்வாய் தசை நடைபெற்றால் அக்காலத்தில் துணைவர் துணைவியை இழக்க வேண்டிய நிலை வரும் என ஜோதிடம் கணிக்கிறது. நடைமுறையில் சந்திரனை மட்டுமே கணக்கில் எடுத்து பெரும்பாலான ஜோதிடர்கள் கூறுவர். சிலர் லக்னத்தையும் கணக்கில் எடுப்பது உண்டு. 

செவ்வாய் தோஷம் எப்படி ஏற்பட்டது?

நீர் காரகனான சந்திரனால் ஏற்படும் நோயை ஜல தோஷம் எனக் கூறி மருத்துவம் செய்துகொள்கிறோம். ஆனால் செவ்வாயினால் உடம்பில் ஏற்படும் மாற்றத்தை செவ்வாய் தோஷம் எனக் கூறி திருமண வாழ்க்கையையே சீரழித்து விடுகிறோம். ரத்தத்தின் காரகன் செவ்வாய் ஆதிக்கம் உள்ளவர்களுக்கு மற்றவர்களை விடச் சற்றே கூடுதலான உணர்ச்சி இருக்கும். அது சிலருக்கு கோப உணர்ச்சியாகவும் சிலருக்கு வேக உணர்ச்சியாகவும் சிலருக்கு காம உணர்ச்சியாகவும் இருக்கும்.

செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்களுக்கு தாம்பத்தியத்தில் அதிக நாட்டம் இருக்கும். செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்களையே செவ்வாய் தோஷம் பெற்றவர்களாகக் கூறப்படுகிறது. ஆனால் தோஷம் இல்லாதவர்கள் காலப்போக்கில் தாம்பத்தியத்தில் இருந்து விலகுவர். தோஷம் உள்ளவர்களுக்கு, தோஷம் இல்லாதவர்களை திருமணம் செய்து வைத்தால், அவர்களுக்கிடையில் தாம்பத்திய ரீதியான பிரச்னைகள் ஏற்படும். சூசகமாகக் கூற வேண்டுமென்றால் ஒருவர் விரும்ப, ஒருவர் அதற்கு மறுப்பு தெரிவிப்பார்.

ஒருகட்டத்தில் உங்களுக்குத் தேவைப்பட்டால்/விருப்பமிருந்தால் வேறு எங்காவது சென்று கொள்ளுங்கள் என்று  விளையாட்டாகக் கூறினாலும், அதை தனக்கு கிடைத்த அனுமதியாகக் கருதி வேறு துணையை தேடுவார். செவ்வாய் தோஷத்தால் பெற்றோருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதேபோல் மாமனார், மாமியாரையும் செவ்வாய் தோஷம் பாதிக்காது. தாம்பத்திய, காம வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தோஷம் உள்ள இருவருக்கும் திருமணம் செய்து வைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறுகின்றனர். 

சுக்கிரன்,செவ்வாய் சேர்க்கை

செவ்வாய் என்பது ஒரு ஆண் கிரகமாகும். வீரம், ஆண்மை, கம்பீரம், வீரியம், இரத்தம், உணர்ச்சியைத் தூண்டுதல் ஆகியவற்றின் காரக கிரகமாகும். சுக்கிரன் என்பது பெண் கிரகமாகும்.

செவ்வாய் தோஷம் என்பது எப்படி உருவாகியிருக்கும் என ஆராய்ந்தபோது காலபுருஷ ஜாதகத்தை ஒட்டியே செவ்வாய் சுக்கிரனின் சேர்க்கையை ஒட்டி ஏற்பட்டதாகத் தெரிகிறது. கால புருஷ ஜாதகத்தில் மேஷத்தை லக்னமாக கூறப்படுகிறது. காலபுருஷ ஜாதகத்தில் சுக்கிரன் சேர்க்கையையும் செவ்வாய் நீசத்தையும் கருத்தில் கொண்டே செவ்வாய் தோஷ விதிமுறைகள் உருவாகியிருப்பது தெள்ள தெளிவாக விளங்கும்.

லக்னத்திற்கு 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் நின்றால் தோஷமாக கூறப்படுகிறது. இதைச் சற்று கால புருஷ ஜாதகப்படி ஆராய்ந்து பார்ப்போம். கால புருஷ லக்னமான மேஷத்திற்கு இரண்டாம் வீடு ரிஷபம் சுக்கிரனின் சேர்க்கை ஏற்படுகிறது. நான்காம் வீடான கடகம் குரு உச்சம் பெறும் வீடு அதே சமயம் செவ்வாய் நீசமடையும் வீடு. ஏழாம் வீடான துலாம் சுக்கிரனின் வீடாகும். இங்கு செவ்வாய் நின்றாலும் சுக்கிர சேர்க்கை ஏற்படும். 

அடுத்தது காலபுருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகம். இது செவ்வாயின் சொந்த வீடென்றாலும் ஆட்சி பெற்றாலும் பார்க்கும் பார்வை சுக்கிரனின் வீடாகிய ரிஷபத்தில் தான் அமைகிறது. இதுவும் செவ்வாய் சுக்கிர சேர்க்கையை ஏற்படுத்திவிடுகிறது. மேலும் எட்டாம் வீடு என்பது மர்ம ஸ்தானங்களை குறிக்குமிடமாகும்.

அடுத்தது காலபுருஷனுக்கு பன்னிரெண்டாமிடமெனப்படும் அயன சயன போக ஸ்தானமாகும். இது குருவின் ஆட்சி வீடாகும். மேலும் சுக்கிரன் உச்சமடையும் இடமாகும். இங்கு செவ்வாய் இருந்துவிட்டால் அந்த ஜாதகன் பக்திக்கும் படுக்கைக்கும் இடையில் அலைக் கழிக்கப்படுவான். எனவே ஒரு ஜாதகத்தில் குரு பார்வையில்லாமல் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை அதிக காமத்தையும் குருபார்வையில்லாமல் செவ்வாய் நீசமடைவது ஆண்மைக் குறைவையும் ஏற்படுத்தும்.

இதைக் கருத்தில் கொண்டுதான் மருத்துவ வசதி இல்லாத காலத்தில் ஒரு தம்பதி அதிக தாம்பத்திய சுகத்தினாலோ அல்லது ஆண்மை குறைபாட்டினால் திருப்திப்படுத்த முடியாத தன்மையாலோ பாதிப்படையக் கூடாது எனக் கருதி சமூக பாதுகாப்பை கருத்தில் கொண்டு செவ்வாய் தோஷம் எனும் கட்டுப்பாட்டை உருவாக்கினார்கள் எனத் தோன்றுகிறது.

கட்டில் சுகத்தில் திருப்தி அடையாத கணவன்/மனைவி ஜாதகங்களில் இந்த செவ்வாய் சுக்கிர சேர்க்கை இருப்பதைக் கண்கூடாக பார்க்க முடியும்.

காதல் செவ்வாய்

காதல் கண்களை மறைக்கும் என்பது பழமொழி அதேபோல காமம் என்பது தனது நிலை மற்றும் குல பெருமை போன்றவற்றை மறக்கச் செய்யும் என்பது பலவகையிலும் நாமறிந்த ஒன்றே. இருப்பினும் இந்த உறவு சார்ந்த சிக்கல்களில் தவறு செய்பவர்கள் அது கணவனாயினும் அல்லது மனைவியாயினும் தவறு நடக்கும் வரை எந்த ஒரு வருத்தமும் இல்லாமல் ஒரு ஆர்வத்தினாலும் ஆசையினாலும் அளவு கடந்த விருப்பத்தினாலும் தங்களது பெருமை நிலை வசதி போன்ற எல்லாவற்றையும் மறந்து விடுகின்றனர்

ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய் பங்கு மிக முக்கியமானது எனலாம். செவ்வாய் நம் உடலில் ஓடும் ரத்தத்துக்கு அதிபதி ஆகிறார். போர் தளபதி செவ்வாய். கோபம், வீரம் போன்றவற்றுக்கு முக்கிய காரணகர்த்தா செவ்வாய். இவருக்கு உரிய தெய்வம் முருகன். பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் கெட்டுப்போனால் ஆண்களால் பல பிரச்னைகளை சந்திக்க நேருகிறது. கணவனுக்குப் பாதிப்பு தருகிறது. பலமுள்ள செவ்வாய் கணவனை அடக்கி ஆளவும், கணவருக்கு யோகத்தையும் தந்து விடுகிறது. 

ஆனால் இன்று இளைஞர்கள் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்தல், தங்கள் ஜோடிகளை அடுத்தவர்களுடன் பகிர்தல், "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" எனப் பலருடன் சேர்ந்துவாழ்தல் என வாழ்ந்துவரும் இந்தக் காலத்திற்கும் செவ்வாய் தோஷம் என்பது பொருந்துமா எனச் சிந்திக்க வேண்டும். அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்தில் தாம்பத்திய நிலையறிய அறிவியலின் காரகனான செவ்வாயைக் கொண்டு அறியப்பட்டது. ஆனால் தற்போது அரை மணி நேரம் முன்பு யாருடன் சேர்ந்து இருந்தார்கள் என அறியுமளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. இதற்கும் செவ்வாயே காரகனாகும். எனவே கால தேச வர்த்தமானத்தை உணர்ந்து செவ்வாய் தோஷம் என்பது தேவையா எனச் சிந்திக்க வேண்டும்.

செவ்வாய் தோஷத்திற்கு விதிவிலக்கு உண்டா?

திருமணம் தாமதமாவதை மனதில் கொண்டு சிலர் எப்படியாவது திருமணம் ஆனால் போதும் என்ற எண்ணத்தில் கீழ்க்கண்ட இடங்களில் செவ்வாய் இருந்தால் தோஷ நிவர்த்தி எனக் கூறிவருகின்றனர். 

லக்னத்தில் இருந்து இரண்டாம் இடம் மிதுனம், கன்னி ராசியாக இருந்து அதில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி என்றும் 

லக்னத்தில் இருந்து 12-ம் இடம் ரிஷபம், துலாம் ராசியாக இருந்து அதில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி என்றும் லக்கினத்தில் இருந்து 4-ம் இடம் மேஷம், விருச்சிகம் ராசியாக இருந்து அதில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி என்றும்

லக்னத்தில் இருந்து 7-ம் இடம் மகரம், கடகம் ராசியாக இருந்து அதில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி என்றும்

லக்கினத்தில் இருந்து 8-ம் இடம் தனுசு, மீனம் ராசியாக இருந்து அதில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி என்றும்

மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி என்றும்

செவ்வாய் இருக்கும் ராசியின் அதிபதி செவ்வாய் இருக்கும் ராசியில் இருந்து 1,4,7,10 அல்லது 1,5,9 ஆகிய ராசிகளில் இருந்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி என்றும்

சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகிய ஏதாவது ஒரு கிரகத்தினுடன் சேர்ந்து எந்த ராசியில் செவ்வாய் இருந்தாலும் செவ்வாய் தோஷம் நிவர்த்தி என்றும்

குரு கிரகம் இருக்கும் வீட்டில் இருந்து 5,7,9 ஆகிய ஏதாவது ஒரு வீட்டில்(ராசியில்) செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி என்றும்

கடகம் மற்றும் சிம்மம் லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தோஷம் நிவர்த்தி என்றும் கூறி வருகிறார்கள்.

இந்த விதிவிலக்குகள் எல்லாம் தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்வதுதான். உண்மையில் செவ்வாய் தோஷத்திற்கு விதிவிலக்கு என்பதெல்லாம் கிடையாது. செவ்வாய் தோஷம் என்பதே ரத்தத்தின் உட்கூறுகளான RH+  மற்றும் RH- சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால் அதே இனத்தில் திருமணம் செய்வது பிரச்னையை குறைக்கும்.

உதாரணமாக ஆண் ஜாதகருக்கு லக்னம் அல்லது சந்திரனுக்கு 1, 7, 8 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் பெண்ணிற்கும் அதே இடங்களில் செவ்வாய் இருக்குமாறு திருமணம் செய்வது நல்லது, அதேபோல 2,4,12 ஆகிய எந்த இடங்களில் செவ்வாய் இருந்தாலும் அதே அமைப்புடைய ஜாதகரோடு திருமணம் செய்யும்போது தாம்பத்திய வாழ்வு சிறக்கும். எத்தனைப் பரிகாரங்கள் செய்தாலும், இத்தகைய இணைப்போடு செய்யும் திருமணங்களே சிறப்பாக இருக்கும்

திருமண தடைபோக்கும் அங்காரக சதுர்த்தி

விநாயகரின் பரமபக்தரான பரத்துவாச முனிவர் தலயாத்திரை’ சென்றபோது நர்மதை நதியில் நீராடினார். அங்கே ஒரு கந்தர்வ மங்கையைக் கண்டார். அவள் மேல் அன்பு கொண்டு வாழ்ந்தார். இவ்விருவருக்கும் சிவந்த நிறத்தில் குழந்தை ஒன்று பிறந்தது. செந்நிறம் கொண்டிருந்ததால் ‘அங்காகரன்’ என்று குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டது. அக்குழந்தையைப் பூமாதேவி எடுத்து வளர்த்ததால் ‘பூமி குமாரன்’ மற்றும் பௌமன் என்ற பெயரும் உண்டு. 

அங்காரகர் சிறந்த விநாயகர் பக்தர். அவருடைய பக்தியை மெச்சிய விநாயகர் அங்காரகன் வேண்டிக் கொண்டபடி தேவர்களைப் போல் வாழவும், நவக்கிரகங்களில் ஒருவராகத் திகழும் பெரும்பேற்றினையும் பெற்றார். அதனுடன் அங்காரகனுக்குரிய செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியில் விநாயகரின் திருவடிகளைப் பணிவோரின் பிணிகளைத் தீர்க்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார். இதன் காரணமாகச் செவ்வாய்க்கிழமை சதுர்த்தி விரதம் இருந்து விநாயகப் பெருமானின் திருவருளைப் பெறுவோர் திருமணத் தடை முக்கியமாக அங்காரக தோஷத்தால் திருமணத் தடையுள்ளவர்களுக்கு தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

எனவே செவ்வாய் தோஷம் என்றாலே யாரும் பயந்து விட வேண்டாம். இன்றைய நடைமுறையில் பாதிக்கும் மேல் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தான் அதிகம். திருமண தாமதத்திற்கு, செவ்வாய் தோஷம் மட்டுமே காரணம் ஆகாது. எனவே செவ்வாய் தோஷத்தின் தன்மையை ஒரு நல்ல ஜோதிடரின் மூலம் அறிந்து அதற்கேற்ப செயல்படுவதே சிறந்ததாகும்

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786
WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com