காவிரி தாயின் பூரண ஆசிகளைப் பெற்றுத்தரும் ஆடிப்பெருக்கு திருநாள்!

நீர் நிலைகளை "கங்கை' என்று போற்றுதல் மரபு. கங்கையின் நீர் எல்லா நீர்நிலைகளிலும்
காவிரி தாயின் பூரண ஆசிகளைப் பெற்றுத்தரும் ஆடிப்பெருக்கு திருநாள்!

நீர் நிலைகளை "கங்கை' என்று போற்றுதல் மரபு. கங்கையின் நீர் எல்லா நீர்நிலைகளிலும் சேரட்டும் என்று சங்கல்பம் செய்துகொண்டு புனிதநீராகக் கருதுவர் பெரியோர். அவ்வாறு, கங்கையினும் புனிதமானதாகக் காவிரி ஆழ்வார்களால் போற்றப்பட்டுள்ளது.

ஆடிப் பெருக்கு உற்ஸவமும் காவிரியை மையமாகக் கொண்டே நடத்தப்படுகிறது. இருப்பினும் காவிரி அன்று அனைத்து நீர்நிலைகளிலும் பாய்வதாக எண்ணி நீர்நிலைக் கரைகளில் ஆடிப்பெருக்கு உற்ஸவத்தைக் கொண்டாடுகிறார்கள்.

ஆடி-18 அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் குவியும் புதுமண தம்பதிகள் பட்டு வேட்டி-பட்டுசேலை அணிந்து, திருமண மாலைகளை ஆற்றில் மிதக்கவிட்டு, சூரியனை வழிபடுவர். மேலும், காவிரி வெள்ளம்போல், வாழ்வில் என்றும் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும் என்று வேண்டுவர். திருமணமான பெண்ணுக்கு அவரின் கணவர் புதுத் தாலி கட்டுவதும், அதைத் தொடர்ந்து படித்துறையில் பூ, பழங்கள் வைத்து குடம் வைத்து பூஜை செய்வதும் வழக்கம். திருமணமாகாத கன்னிப் பெண்கள் விரைவில் தங்களுக்கு திருமணம் நடைபெற வேண்டியும் நல்ல கணவன் அமைய வேண்டியும், தங்களது கழுத்தில் மஞ்சள் கயிறு அணிந்து வழிபடுவர்.

ஆடி, அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால், ஆடி பதினெட்டாம் நாளன்று அம்மன் கோயில்களுக்கு சென்று பெண்கள் வழிபடுவர். திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், உறையூர் வெக்காளியம்மன் கோயில், தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், கும்பகோணம் - பட்டீஸ்வரம் துர்க்கை தலம், திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில், வலங்கைமான் மகா மாரியம்மன் கோயில் என ஆடிப்பெருக்கு களைகட்டும்.

ஆடிப்பெருக்கு பூஜையை காவிரி கரையில் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். ஒரு செம்பில் அரைத்த மஞ்சளை சிறிதளவு போடவும். நிறைகுடத்தில் இருந்து அந்த செம்பில் நீர் எடுத்ததும் மஞ்சள் கரைந்து விடும். திருவிளக்கேற்றி அந்த நீரை விளக்கின் முன் வைக்கவும். தண்ணீரில் உதிரிப்பூக்களைப் போடவும்.

கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி, கங்கை, யமுனை, நம்மதை, காவிரி வைகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து கொள்ளவும். செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில் ஊற்றி விடலாம். சர்க்கரைப் பொங்கல் வைத்து காவிரி அன்னைக்கு படைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். காவிரி தாயின் பூரண ஆசிகள் பெற்று, செல்வ செழிப்புடன் வாழலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com