திருப்பதி ஏழுமலையான் தரிசனம் நாளை 5 மணி நேரம் ரத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கவிருப்பதை..
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் நாளை 5 மணி நேரம் ரத்து!


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கவிருப்பதை முன்னிட்டு ஏழுமலையான் தரிசனம் 5 மணி நேரம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர தெப்போற்சவம், வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட உற்சவங்களுக்கு முன் வரும் செவ்வாய்க் கிழமைகளில் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

அப்போது கருவறையில் உள்ள பொருள்கள் வெளியேற்றப்பட்டு, தரிசன வரிசைகள், உயர்மட்டப் படிகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு ஏழுமலையான் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்படுவது வழக்கம்.

இந்நிலையில், ஏப்ரல் 6-ம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி ஏழுமலையானுக்கு ஆஸ்தானம் நடைபெற உள்ளது. எனவே, அதற்கு முன் வரும் செவ்வாய்க் கிழமையான ஏப்ரல் 2(நாளை) காலை 6.00 மணி முதல் 11 மணி வரை ஏழுமலையான் கோயில் சுத்தம் செய்யப்பட உள்ளது. இதையொட்டி, அன்று ஏழுமலையான் தரிசனம் 5 மணி நேரம் ரத்து செய்யப்படுகிறது.

கோயிலில் சுத்தம் செய்யும் பணிகள் முடிந்த பின், ஏழுமலையானுக்கு முறையாக பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். அன்றைய தினம் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகள் ஏழுமலையானுக்குத் தனிமையில் நடத்தப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com