பத்தூர் சிவன் கோயில் பற்றித் தெரியுமா?

பத்தூர் தெரியுமா எனக் கேட்டால் பலரும் எந்த பத்தூர் என்பர், ஆனால் பத்தூர் நடராஜர் தெரியுமா என்றால் பலரும் தெரியும் என்பர்.
பத்தூர் சிவன் கோயில் பற்றித் தெரியுமா?

பத்தூர் தெரியுமா எனக் கேட்டால் பலரும் எந்த பத்தூர் என்பர், ஆனால் பத்தூர் நடராஜர் தெரியுமா என்றால் பலரும் தெரியும் என்பர்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே 2 கி.மீ தூரத்தில் உள்ள பத்தூரில் 1972-ல் பூமிக்கடியில் இருந்து நடராஜர் சிலை உட்பட 10 ஐம்பொன் சிலைகள் எடுக்கப்பட்டன. இதில் நடராஜர் சிலை மட்டும் கடத்தப்பட்டு லண்டனிலிருந்த கனடா ஆர்ட் கேலரி உரிமையாளர் ஒருவரின் கைக்குப் போய்ச் சேர்ந்தது.

இதன்பின்னர் கடத்தல் கும்பல் எஞ்சிய ஒன்பது சிலைகளையும் திருட முயற்சித்த போது போலீஸ் பிடியில் சிக்கியது. ஏற்கெனவே கடத்தப்பட்ட நடராஜர் சிலையை மீட்பதற்காக 1982-ல் லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இது தொடர்பாக ஸ்காட்லாந்து போலீஸும் அப்போது விசாரணை நடத்தியது.

அப்போது தமிழக தொல்லியல் துறையின் இயக்குநராக இருந்த தொல்லியல் அறிஞர் முனைவர் நாகசாமி லண்டன் நீதிமன்றம் வரைக்கும் சென்று சாட்சியம் அளித்தார். 1986-ல் வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியபோது, பத்தூரில் சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தின் மண் மாதிரியையும் நடராஜர் சிலையில் ஒட்டி இருந்த மண் மாதிரியையும் ஆய்வுக்கு அனுப்பியது நீதிமன்றம். இரண்டும் வெவ்வேறானவை என எதிர்பார்க்காத முடிவைச் சொன்னது ஆய்வு முடிவு.

ஆம், மண் மாதிரிகள் வெவ்வேறாக இருந்தது ஏன்?

சிலைகளைத் தோண்டி எடுத்த நபர் பின்னர் அவற்றை வேறொரு இடத்தில் புதைத்து வைத்தார். அங்கிருந்தே களவாடப்பட்டன. அதனால் அங்கிருந்த மண்ணும் நடராஜர் மேலிருந்து மண்ணும் வெவ்வேறாக இருந்தமைக்கு காரணம் ஆனது. ஒன்பது ஆண்டுகள் போராட்டத்தின் பின்னர் 1991-ம் ஆண்டு நடராஜர் தாய் மண்ணிற்குத் திரும்பினார்.

பத்தூர் புக்கிரந்துண்டு பலபதிகம் பாடிப்

பவையரை கிறிபேசிப் படிறாடித் திரிவீர்

செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித்திரிவீர்

செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக்கொரு நாள் இரங்கீர்

முத்தாரம் இலங்கி மிளிர் மணி வயிரக்கோவை

அவை பூணத் தந்தருளி மெய்க்கினிதா நாளும்

கத்தூரி கமழ்சாந்தும் பணித்தருள வேண்டும்

கடல் நாகைக் காரோணம் மேவியிருந்தீரே-- சுந்தரர்

இதில் சுந்தரர் சொல்லும் பத்தூர் இதுவாக இருக்கலாம். ஏனெனில் இந்த பத்தூர் தஞ்சை- நாகை சாலையில் தான் உள்ளது.

நெல் வயல்களை பத்து என்று சொல்வார்கள், வயல்வெளிகளைப் பற்றிப் பேசும்போது வடக்குப் பத்து, தெற்குப் பத்து, மேலப்பத்து, கீழப்பத்து எனத் திசைகள் சார்ந்தும், புறப்பத்து, கண்டமூட்டுப் பத்து, சாத்தாங்கோயில் பத்து, மடத்துப் பத்து என்று இடங்களையும், தேரூர் பத்து, கடுக்கரைப் பத்து, புத்தேரிப் பத்து, பறத்தைப் பத்து என்பது ஊர்களையும் வைத்துப் பேசுவது. இதனால் வயல் சார்ந்த இந்த பகுதியை பத்தூர் என அழைக்கின்றனர்.

வடக்கில் இருந்து வரும் வெட்டாறு இங்கு கிழக்கு நோக்கி 90°வளைவாக திரும்புகிறது. சிறிய ஊர் தான் இங்கு ஒரு சிவாலயமும் ஒரு வைணவ ஆலயமும் உள்ளன. பழமையான பத்தாம் நூற்றாண்டு சிவாலயம் புதுப்பிக்கப்பட்டு அழகுடன் உள்ளது.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தில் அலங்கார வளைவுடன் கூடிய மதிலை கடந்தால் பெரிய வளாகத்தில் இறைவன் காசி விசுவநாதர் கருவறை கிழக்கு நோக்கி கம்பீரமாகக் காட்சி தருகிறது. முகப்பு மண்டபத்தின் வாயிலில் அனுக்ஞை விநாயகரும் முருகனும் உள்ளனர். முகப்பு மண்டபத்தில் தெற்கு நோக்கிய சன்னதி கொண்டு காட்சி தருகிறார் அம்பிகை விசாலாட்சி.

விசாலாட்சி சன்னதி அருகில் கோர்வை இருப்புகதவு கொண்ட நடராஜர் சன்னதி உள்ளது, ஆனால் அவரோ தன் சபை விடுத்து பல நாட்டு மன்றங்களையும் சபைகளுக்கும் சென்று நமது நாட்டின் கலாசாரம், தொன்மை, சிற்ப சிறப்பு, உலோக கலவை சேர்க்கை பற்றி அமைதியாக வகுப்பெடுத்து விட்டு திருவாரூரில் குடிகொண்டுள்ளார்.

கருவறை கோட்டத்தில் விநாயகர் தென்முகன், லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை என உள்ளது. பிரகார சிற்றாலயங்கள் விநாயகர், முருகன் மற்றும் மகாலட்சுமி உள்ளனர். வடபுறம் ஓர் வில்வ மரத்தடியில் சில நாகர்கள் உள்ளனர். வடகிழக்கில் பைரவர், நவக்கிரகங்கள் உள்ளன.

கோயில் ஒருகால பூஜையில் உள்ளது. புதிய கோயிலாகையால் உள்ளூர் மக்கள் காலை மாலை நேரங்களில் வந்து செல்வதைக் காண முடிகிறது.

- கடம்பூர் விஜயன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com