ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

அரசுப் பேருந்துகளில் கட்டணம், சேவைக் குளறுபடிகள்!

கவனத்தில் கொள்ளுமா தமிழக அரசு?

News image

அரசுப் பேருந்துகள்... - கோப்புப்படம்.

Updated On :25 மே 2026, 4:59 am IST

- இராச. கார்த்திகேயன்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பயணக் கட்டணம் மற்றும் சேவைக் குளறுபடிகள் அதிகரித்து வருவதோடு, பேருந்துகளின் எண்ணிக்கையும் தொழிலாளர்களும் குறைந்து வருவதால் பயணிகள் கடும் இன்னல்களை எதிர்கொள்ளும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் சுமார் 22,000 பேருந்துகள் இயங்கிவந்த நிலையில் தற்போது 19,000 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது பயணிகளுக்குப் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழகம் தொடர்ந்து இழப்பைச் சந்தித்து வருகிறது, இந்த நிலையில், புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசு மக்கள் சேவைக்காக உருவாக்கப்பட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் , பொதுமக்கள் மற்றும் தொழிலாளர் நலன் கருதி சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

மாவட்டங்களுக்கு இடைய...!

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக புறநகர் பேருந்துகள் அதிகபட்சம் 100 கி.மீ. அளவில் இயக்கப்பட்டு வந்தன. குறிப்பாக அடுத்தடுத்த மாவட்ட தலைமையிடங்களுக்கு இடையே அதிக அளவில் பேருந்துகள் இயங்கின. சுமார் 300 கி.மீட்டருக்கு மேல் உள்ள நெடுந்தொலைவு நகரங்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளே இயக்கப்பட்டன.

2006-க்குப் பிறகு அரசு புறநகர் பேருத்துகள் அனைத்தும் நெடுந்தொலைவு பேருந்துகளாக மாற்றப்பட்டன. குறிப்பாக மாநிலத்தின் மையப்பகுதியான திருச்சியில் இருந்து நாமக்கல், கரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் அடுத்த மாவட்ட எல்லைகளையும் கடந்து இயக்கப்பட்டன.

திருச்சியில் இருந்து நாமக்கல் வரை இயங்கிய பேருந்துகள் கிருஷ்ணகிரி, ஒசூர் வரையும் கரூர் வரை இயக்கப்பட்ட பேருந்துகள் திருப்பூர், ஈரோடு, கோவை வரையும் தஞ்சாவூர் வரை இயக்கப்பட்ட பேருந்துகள் கும்பகோணம் நாகை, மயிலாடுதுறை வரையும் பெரம்பலூர் வரை இயக்கப்பட்ட பேருந்துகள் விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை வரையும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பேருந்துகளில், அவை கடைசியாக சென்றடையும் பகுதிக்குச் செல்லும் பயணிகளுக்கு மட்டுமே நடந்துநர்கள் முக்கியத்துவம் அளிக்கின்றனர். அவர்கள் ஏறிய பிறகு இடம் இருந்தால் மட்டுமே அருகே உள்ள மாவட்ட பயணிகள் ஏற முடியும் என்ற நிலை தொடர்கிறது.

இதன் காரணமாக, சுமார் 50, 100 கி.மீ. தொலைவில் உள்ள மாவட்ட தலைமை இடங்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் குறிப்பாக குடும்பத்துடன் செல்லும் பயணிகள் அமருவதற்கு இருக்கைகள் கிடைக்காமலும் நின்றபடியும் பயணம் செய்ய வேண்டியநிலை உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக ஊழியர் சம்மேள மாநில துணைத் தலைவரும், சிஐடியூ தருமபுரி மண்டல தலைவருமான எஸ். சண்முகம் கூறியதாவது:

அரசுப் போக்குவரத்து கழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்களின் நலனுக்கோ, போக்குவரத்து தொழிலாளர்களின் நலனுக்கோ முன்னுரிமை தரப்படுவதில்லை. பேருந்துகளின் எண்ணிக்கையும் கமார் 1000 வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைத்து விட்டது.

பழுது நீக்குநர்கள் உள்ளிட்ட தொழில்நுட்பப் பிரிவில் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக புதிதாக பணியாளர்கள் தேர்வு செய்யப்படவில்லை. ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மட்டுமே சிறிய எண்ணிக்கையில் தேர்வாகியுள்ளனர். அந்த வகையில் மாநிலம் முழுவதும் பல்வேறு பிரிவுகளில் கடந்த பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் உள்ளன.

போக்குவரத்தில் தற்காலிக மாற்றங்கள் நடவடிக்கைகள், பேருந்துகளில் ஏற்படும் சிறு சிறு பழுது நீக்கும் நீக்கும் பணிகள்கூட துறைரீதியாக பலநிலை பரிந்துரைகளுக்குப் பிறகே மேற்கொள்ளப்படும் சூழல் நிலவுகிறது. இந்த விஷயத்தில் மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு மிக மிக குறைந்த அதிகாரங்களே உள்ளன. அனைத்து அதிகாரங்களும் கோட்ட அளவில் பணியாற்றும் இயக்குநர், துறைச் செயலாளர் மற்றும் அமைச்சர் அளவில் உள்ளன.

இதனால் எந்தப் பணியும் முறையாகவோ, அவசர காலத்துக்கேற்பவோ நடைபெறுவதில்லை. பேருந்து பணிமனைகளில் பழுது நீக்குவதற்கான உதிரி பாகங்கள் முற்றிலும் கிடையாது. இவை, எல்லாவற்றுக்கும் காரணம், போக்குவரத்துக் கழகங்கள் இணைப்புக்குப் பின்னர் கொண்டுவரப்பட்ட அதிகார நடைமுறைதான்.

எனவே, அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் கொள்கை அல்லது அதிகார மாற்றம் என்பது மிக முக்கியத் தேவையாக உள்ளது. அப்போதுதான் அனைத்து அலுவலர்களுக்கும் அதிகாரம் பகிரப்பட்டு நிர்வாகம் பராமரிப்புப் பணிகளைத் திறம்பட மேற்கொள்ள முடியும் என்றார்.

தவிக்கும் பயணிகள்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புறநகர் பேருந்துகளில் ஒரே பகுதியில் குறிப்பிட்ட தொலைவுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் கட்டணம், தனியார் பேருந்துகளைவிட அதிகமாகும். அதிலும் சிறப்புப் பேருந்து, இடைநில்லாப் பேருந்து குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டுமே நிற்கும் பேருந்து எனப் பல்வேறு வகையில் கூடுதல் பயணக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன

இடைப்பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் பெரும்பாலான பேருந்துகளில் ஏற்றப்படுவதில்லை செல்லும் வழியில் சில ஊர்களில் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றும் ஊழியர் பேருந்து புறப்படும் இடத்தில் இருந்து அதே ஊருக்குச் செல்லும் பயணிகளை ஏற்றுவதில்லை. இரவு நேரங்களில் இடைப்பட்ட நிறுத்தங்களில் பேருந்துகள் நிற்பதில்லை. இதனால், பயணிகள் தவிப்புக்குள்ளாகின்றனர். மேலும், பேருந்துகளில் இருக்கைகள், ஜன்னல் கண்ணாடிகள் பழுது போன்ற பிரச்னைகள் முடிவின்றி தொடர்கின்றன. பேருந்துகள் உரிய வகையில் பராமரிக்கப்படாததன் வெளிப்பாடுகள் இவை.

பண்டிகை காலங்களில் நகரங்களுக்கு இடையே கூடுதல் பேருந்துகளை இயக்குவதாகக் கூறும் அதிகாரிகள், கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளை நிறுத்தி, அவற்றை கூடுதல் கட்டணத்துடன் சிறப்புப் பேருத்துகளாக நகர்ப் பகுதிக்கு இயக்குகின்றனர். இதனால், கிராமப்புற மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இதை, அதிகாரிகள் பொருட்படுத்துவதில்லை இவ்வாறு பேருந்துகள் திருப்பி விடப்பட்டாலும், பண்டிகை கால பேருந்து பற்றாக்குறையால், குடும்பத்துடன் வெளியூர் செல்லும் பயணிகள் பல மணி நேரம் பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் நிலைதான் உள்ளது.

Summary

Government Buses: Fare Issues and Service Glitches!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.