சனிப் பெயர்ச்சி பலன்கள் - கடகம்

2020 கடக ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் - ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்தது. 
சனிப் பெயர்ச்சி பலன்கள் - கடகம்
சனிப் பெயர்ச்சி பலன்கள் - கடகம்
Published on
Updated on
3 min read

2020 கடக ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். 

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

மனசாட்சிகாரகன் சந்திரனை ராசிநாதனாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே நீங்கள் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், மரியாதை கொடுக்கும் பண்பாளர். நீங்கள் எதிலும் அறிவார்ந்து செயல்படுபவர். வெளிவட்டாரப் பழக்கங்களை விரும்பும் தாங்கள் ஒரு சிறந்த பண்பாளர்.

எப்படி இருக்கப் போகிறது இந்த சனிப்பெயர்ச்சி:

கிரகநிலை:

உங்கள் ராசிக்கு ரண ருண ரோக ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சனி பகவான், தற்பொழுது சப்தம களத்திர ஸ்தானமான மகர ராசிக்கு மாறுகிறார். இப்படி மாறக்கூடிய சனி பகவான் தனது மூன்றாம் பார்வையாக உங்களுடைய பாக்கிய ஸ்தானம் - ஏழாம் பார்வை உங்களுடைய ராசி - பத்தாம் பார்வையாக உங்களுடைய சுக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

மற்ற கிரகங்களின் கிரகநிலை:

குரு பகவான் சப்தம களத்திர ஸ்தானமான மகர ராசியில் இருக்கிறார். ராகு பகவான் லாப ஸ்தானத்திலும் - கேது பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.

இந்த சனிப் பெயர்ச்சி செல்வச் செழிப்போடு செல்வாக்கையும் உங்களுக்கு பெற்றுத் தரும். அனைத்துக் காரியங்களிலும் சராசரிக்கும் கூடுதலான வெற்றிகளைக் காண்பீர்கள். சேமிப்புகளை ஆதாயம் தரும் விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். திட்டமிட்டுச் சரியாகச் செயலாற்றுவீர்கள். கடினமாக உழைத்து லாபமடைவீர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் உண்டாகும். தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். சொத்து விவகாரங்களில் நிலவிய வில்லங்கம் விலகும். சமுதாயத்தில் உயர்ந்த பதவிகளையும் பெறுவீர்கள்.

சிறிய முதலீட்டிலும் பெரிய வெற்றிகளைக் காண்பீர்கள். ஆதாயம் தரும் தொழில்களைத் தொடங்குவீர்கள். தொலைவிலுள்ள புண்ணியத் தலங்களுக்கு ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு, பலருக்குக் கிடைக்கும். உடல் உபாதைகள் ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திறமைகள் பளிச்சிடும். குழந்தைகளை கண்டிப்புடன் வளர்ப்பீர்கள். அதேநேரம் அவர்களின் மகிழ்ச்சிக்காக சுற்றுலாவும் சென்று வருவீர்கள். பதற்றப்படாமல் உங்கள் செயல்களை செய்து முடிப்பீர்கள். ஒரு விஷயத்தில் கவனம் தேவை. உங்களின் நெருங்கிய நண்பர்களே உங்களை ஏமாற்ற முயற்சிக்கலாம். இதனால் மனதில் குழப்பங்கள் சூழும். இதை முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்களின் கருத்துக்களை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். 

ஆனால் அவற்றை எச்சரிக்கை உணர்வுடன் வெளிப்படுத்துங்கள். மற்றபடி கடினமான வேலைகளையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள். வருமானம் சீராக இருப்பதால் கடன்கள் ஏற்படாது. செய்தொழிலில் ஏற்படும் போட்டிகளை சாதுர்யத்துடன் எதிர் கொள்வீர்கள். தெய்வ வழிபாட்டில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். என்றாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும். அதனால் அனாவசிய செலவுகளைத் தவிர்த்து, முக்கியமான செலவுகளை மட்டுமே செய்யவும். நூதன வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பாராத பயணங்களால் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். 

உத்யோகஸ்தர்கள் கடுமையாக உழைத்தாலும் அதில் மேலதிகாரிகள் குற்றம் காண வாய்ப்புண்டு. அதேசமயம் சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக நிற்பார்கள். இதனால் சமாளித்துவிடுவீர்கள். சிலருக்கு அலுவலக ரீதியாக வெளியூரில் சில காலம் தங்கிப் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். அலுவலகத்திலிருந்து கடன் கிடைத்து வாகனம் வாங்கும் யோகமும் பலருக்கு அமையும்.

வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எந்தக் குறையும் ஏற்படாது. ஆனாலும் எதிலும் கவனமாக இருக்கவும். புதிய முதலீடுகளைக் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே செய்யவும். தேவைக்கேற்ற சரக்குகளை மட்டுமே வாங்கி விற்கவும். அதேசமயம் சந்தைகளில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயித்து லாபமடைய நிறையவே வாய்ப்புகள் உள்ளன. 

அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகளும் உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள். அவர்களால் உங்களின் செல்வாக்கு தொண்டர்களிடம் உயர்ந்து காணப்படும். உங்களின் மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். அதேசமயம் கட்சியில் முக்கியப் பிரமுகர் யாரிடமாவது மனக்கசப்பு ஏற்படலாம். அதனால் பிறருடன் பேசும்போது ஒரு முறைக்கு இரு முறை யோசித்துப் பேசவும். 

கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள். அவர்களால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள். அதேநேரம் சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் உங்கள் காரியங்களைச் செய்யவும். 

பெண்மணிகள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். கணவரிடம் பாசத்தோடு பழகுவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். தேவையற்ற கவலைகள் சிலருக்குத் தோன்றலாம். மனதைக் கட்டுப்படுத்த யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றை செய்தால், கவலைகள் தேவையற்றவை என்பது தன்னால் புரியும். 

மாணவமணிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு புத்துணர்ச்சியுடன் பாடங்களைப் படிக்கவும். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் நீங்களாகவே இருக்கப் பழகி உங்களின் முன்னேற்றத்திற்கு அடி கோலுங்கள். "உங்களை நீங்கள்தான் உயர்த்திக் கொள்ள வேண்டும்'' என்கிற கீதை வாக்கியத்தை மறவாமல் நடைபோடுங்கள்.

புனர்பூசம் 4ம் பாதம்:

இந்த சனிப் பெயர்ச்சியால் கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச் சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும்.

பூசம்:

இந்த சனி பெயர்ச்சியால் வழக்கு சம்பந்தமான முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும்.  எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தடைதாமதம் ஏற்படும். வீண் அலைச்சல் உண்டாகும். எதிலும் கூடுதல் கவனம் தேவை.

ஆயில்யம்:

இந்த சனிக் கிரகத்தின் பெயர்ச்சியால் மனஉறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை.  வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடமேற்கு
அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, இளம் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2

பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று வேப்பிலை அர்ப்பணித்து வழிபட்டு வர பொருளாதார தேக்கநிலை மாறும். 

சொல்ல வேண்டிய மந்திரம்:

“ஓம் ஸ்ரீகர்ப்பாயை நம” என்ற மந்திரத்தை தினமும் 6 முறை சொல்லவும். 

அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், சுக்கிரன், குரு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com