ஆடிப்பெருக்கில் புதுத்தாலி மாற்றும் வழக்கம் எப்படி வந்தது?

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18-ம் நாள் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். 
ஆடிப்பெருக்கில் புதுத்தாலி மாற்றும் வழக்கம் எப்படி வந்தது?

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18-ம் நாள் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். நதியைப் பெண்ணாக வணங்கும் நாள்! 

இன்று புத்தாடை அணிந்து, சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, தயிர்ச் சாதம், வடகம் முதலான பதார்த்தங்களை எடுத்துச்சென்று, நதிக் கரைகளில் அமர்ந்து நதிகளை தாயாகக் கருதி பூஜித்து விருந்துண்டு மகிழ்வார்கள். இந்தத் தினத்தில் செய்யப்படும் மங்கல காரியங்கள் பன்மடங்கு பலன் தரும் என்பது ஐதீகம்.

இன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டு அந்த இடத்தைச் சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைத்து வழிபடுவார்கள்.

ஆற்றங்கரைக்குப் போகும்பொழுதே, ஒரு முறத்தில் வெற்றிலை பாக்கு, தேங்காய், பழம், பூ, ரவிக்கைத்துணி, காதோலை கருகமணி, திருமாங்கல்யச் சரடு என்று ஒரு பெண் விரும்பி ஏற்கும் அனைத்தையும் வைத்து, மற்றொரு முறத்தில் மூடி எடுத்துச் செல்வர். ஆற்றங்கரையில் இவற்றை வைத்து தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வணங்குவர்.

இந்த நன்னாளில் கணவனின் நலனுக்காகப் பிரார்த்திக்கும் ஒரு நாளாகவும் சொல்லலாம். சங்க நூல்களில் பெண்கள் ஆற்றிற்கு விழா எடுத்தார்கள். ஆற்றை ஒரு கன்னிப் பெண்ணாக நினைத்து வணங்கினார்கள். இதில் சப்த கன்னிகளுக்கான வழிபாடு என்பது விசேஷமானது. பெருக்கெடுத்து ஓடி வரும் அந்த புது வெள்ளம், புது நீர் போன்று பெண்கள் வாழ்வில் எப்போதும் வசந்தம் பொங்கி வரும் என்பதற்காகவே புதுத்தாலி மாற்றும் வழக்கம் கொண்டுவரப்பட்டது.

கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைச் சுற்றிக்கொள்வது, நல்ல வரன் வரவேண்டும் என்று வேண்டிக் கொள்வது, சுமங்கலிகள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்வார்கள்.

தானிய அபிவிருத்தி (பயிர்கள் செழிக்க) அருளும் அம்பிகையை, பெண்கள் வம்ச அபிவிருத்தி (நற்குழைந்தைப் பேறு) வேண்டி வழிபாடுகள் நடத்துவார்கள். குலம் விளங்க, நல்வாரிசுகள் அமைய அம்பிகையை மனமுருகிப் பிரார்த்தனை செய்வார்கள்.

தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்ப்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாகப் போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் உழவு வேலையைத் தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் விளைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com