ஆகஸ்ட் மாத பலன்கள் (துலாம் முதல் மீனம்)

ஆகஸ்ட் மாத பலன்களை தினமணியின் இணையதள ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். (துலாம் முதல் மீனம் வரை)
ஆகஸ்ட் மாத பலன்கள் (துலாம் முதல் மீனம்)

ஆகஸ்ட் மாத பலன்களை தினமணியின் இணையதள ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

கிரகநிலை:
ராசியில் கேது - சுக ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், ராஹூ -  பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் புதன், சந்திரன் என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
07-08-2022 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10-08-2022 அன்று செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
அன்பும் பாசமும் கருணையும் ஒருங்கே அமையப் பெற்ற துலா ராசி அன்பர்களே, நீங்கள் மனசாட்சிக்கு பயந்து நடப்பவர்கள். இந்த மாதம் உடல் அசதி ஏற்படலாம். மனதில் ஏதாவது கவலை  இருந்து கொண்டே இருக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதில் பின்னடைவு ஏற்படலாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள்.

தொழில் வியாபாரம் தொடர்பான சிக்கல்கள் தீரும். பணவரத்து திருப்தி தரும். வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதங்கள்  தரும்போது கவனமாக இருப்பது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு இருப்பது போல் உணர்வார்கள். மேல் அதிகாரிகள் உங்கள் செயல்களில் குறை காணலாம் கவனமாக இருப்பது நல்லது. சக ஊழியர்களுக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் வரலாம்.

குடும்பத்தில் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.  பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. சுபநிகழ்ச்சிகளுக்கு இருந்து வந்த தடைகள் அகலும். 

பெண்களுக்கு காரியங்களில் பின்னடைவு ஏற்படலாம். மற்றவர்களிடம்  சில்லறை சண்டைகள் ஏற்படாமல் இருக்க கவனமாக பேசி பழகுவது நல்லது. 
அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் சம்பந்தப்பட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம். 

கலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான் துறையில் வெற்றி வாகை சூடலாம். மற்றபடி உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். 

மாணவர்களுக்கு  கல்வியில் இருந்த  மெத்தன போக்கு மாறும். புத்தகம் நோட்டுகளை இரவல் கொடுக்கும் போது கவனம் தேவை.

சித்திரை:
இந்த மாதம் எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது  மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பணவரத்து தடைபட்டாலும் வந்துசேரும்.  வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது கவனம் தேவை.

ஸ்வாதி:
இந்த மாதம் உத்தியோகஸ்தர்கள் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது.  இயந்திரங்களில் பணி புரிபவர்கள் ஆயுதங்களை கையாள்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது செயல்படுவது அவசியம். குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்து பேசுவதை தவிர்ப்பது நன்மை தரும்.

விசாகம்:
இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது. பெண்களுக்கு கோபம், படபடப்பு குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு உண்டாகலாம்.

பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வேப்பிலை கொடுத்து வணங்க பிரச்சனைகள் சுமுகமாக முடியும். 
சந்திராஷ்டம தினங்கள்: ஆக 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 11, 12

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் குரு(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், ராஹூ -  அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் புதன், சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
07-08-2022 அன்று சுக்ர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10-08-2022 அன்று செவ்வாய் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு தனித் தன்மையுடன் செயலாற்றும் குணமுடைய விருச்சிக ராசி அன்பர்களே, நீங்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் பணியாற்றுபவர்கள்.  இந்த மாதம் உடல்நிலை தேறும். செலவு கட்டுக்குள் இருக்கும். காரிய தடைகள் நீங்கும். தொட்டதெல்லாம் துலங்கும். தந்தையாரின்  நலனில் அக்கறை தேவை.  கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுவது நல்லது.

தொழில் வியாபாரத்தில்  மெத்தன போக்கு காணப்பட்டாலும் பணவரத்து நன்றாக இருக்கும். சரக்குகளை கவனமாக கையாள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம். கேட்ட பதவி உயர்வு கிட்டும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். 
குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். உறவினர்களுக்காக விருப்பம் இல்லாத காரியத்தில் தலையிட வேண்டி இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும். 

பெண்களுக்கு  தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து குறையலாம்.

அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிக் குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வார்கள். தொண்டர்கள் உங்கள் பெருமைகளைப் புரிந்து கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் மனதிற்கினிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். 

கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். பண வரவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். அமைதியாகச் செயலாற்றுவீர்கள். 

மாணவர்களுக்கு  கல்வியில் நாட்டம் உண்டாகும். போட்டிகள் நீங்கும். சக மாணவர்களுடன்  இருந்த மனகசப்பு மாறும்.

விசாகம்:
இந்த மாதம் மாணவர்கள் உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். கோபமான பேச்சு, டென்ஷன் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும்.

அனுஷம்:
இந்த மாதம் மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். லாபம் கூடும்.  எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள்.

கேட்டை:
இந்த மாதம் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள்.

பரிகாரம்: பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரையும், சிவபெருமானையும் வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். 
சந்திராஷ்டம தினங்கள்: ஆக 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 13, 14

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் குரு(வ) - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், ராஹூ -  களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் புதன், சந்திரன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
07-08-2022 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10-08-2022 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
எதையும் ஒருமுறை பார்த்தாலே அதை பற்றி கிரகித்துக் கொள்ளும் திறமை உடைய தனுசு ராசி அன்பர்களே, நீங்கள் உழைத்து உயர வேண்டும் என விரும்புபவர்கள். இந்த மாதம், நெருக்கடியான பிரச்சனைகள் நீங்கும்.  பணவரத்து அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.   பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்கள் மேல் இரக்கம் ஏற்படும். நீண்டநாட்களாக  இருந்த பிரச்சனைகள் தீரும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.

தொழில் வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். பல வழிகளிலும் பண வரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். எதிர்பார்த்த பணி இடமாற்றம் கிடைக்கும்.

குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை சேரும். உறவினர்கள் மத்தியில்  மதிப்பும், மரியாதையும் கூடும். சுபச் செலவுகள் அதிகரிக்கும்.

பெண்கள் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடித்து மன நிம்மதி அடைவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் மேல் இரக்கம் உண்டாகும். 

அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகளும் உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள். அவர்களால் உங்களின் செல்வாக்கு தொண்டர்களிடம் உயர்ந்து காணப்படும். 

கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள். அவர்களால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள். 

மாணவர்கள்  கல்வியில் முன்னேற்றம் காண  திட்டமிட்டு படித்து வெற்றி பெறுவீர்கள். மன மகிழ்ச்சி ஏற்படும் சம்பவங்கள் நிகழும்.

மூலம்:
இந்த மாதம் எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனகுழப்பம் நீங்கி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

பூராடம்:
இந்த மாதம் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும். எதிர்பாராத வீண் செலவு ஏற்படலாம். வீண்பழிவர வாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனம் தேவை.

உத்திராடம்:
இந்த மாதம் உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது  அவசியம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை உண்டாகலாம். பழைய பாக்கி வசூலாவதில் தாமதம் உண்டாகலாம்.

பரிகாரம்: ஐயப்பனுக்கு அபிஷேகத்திற்கு நெய் வாங்கிக் கொடுத்து வணங்கி வர சகல தோஷங்களும் நீங்கும். 
சந்திராஷ்டம தினங்கள்: ஆக 24, 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 15, 16

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

கிரகநிலை:
ராசியில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ)  - சுக ஸ்தானத்தில் செவ்வாய், ராஹூ -  ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் புதன், சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
07-08-2022 அன்று சுக்ர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10-08-2022 அன்று செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறமையும், சாதித்தே தீர வேண்டும் என்ற பிடிவாதமும் கொண்ட மகர ராசி அன்பர்களே, நீங்கள் எந்த காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறன் கொண்டவர்கள். இந்த மாதம் தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நன்றாக நடந்து முடியும். வாக்குவன்மையால் நன்மைகள்  ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பண பிரச்சனை நீங்கும். நண்பர்கள் மூலம்  உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். நீண்ட நாட்களாக நடந்து முடியாத காரியம் ஒன்று நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். 
குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே  விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். நண்பர்களால் இருந்து வந்த மனக்கிலேசங்கள் அகலும்.

பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியம் நன்கு நடந்து முடியும்.
அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். அதனால் எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். மற்றபடி தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பதால் உற்சாகமடைவீர்கள். உங்கள் செயல்களை நேர்த்தியாகச் செய்வீர்கள். 

கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவும் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. புகழைத் தக்க வைத்துக்கொள்ள சீரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். 

மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். மற்றவர் பாராட்டும் கிடைக்கும்.

உத்திராடம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் தலைதூக்கலாம். கணவன், மனைவிக் கிடையே வாக்குவாதம்,  பிள்ளைகளின் செயல்களால் மனவருத்தம் போன்றவை ஏற்படலாம். 

திருவோணம்:
இந்த மாதம் வீட்டில் உள்ள பொருட் களை கவனமாக பாதுகாப்பது நல்லது. எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனபக்குவம் உண்டாகும். எந்த சூழ்நிலையிலும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு எப்படி பாடங்களை படித்து முடிப்பது என்ற டென்ஷன் உண்டாகும்.

அவிட்டம்:
இந்த மாதம் காரிய தடை, தாமதம் உண்டாகலாம். எனினும் எல்லா பிரச்சனைகளும் தீரும். செல்வ செழிப்பும், ஆரோக்கியமும் உண்டாகும். அடுத்தவர் குற்றச் சாட்டுகளில் இருந்து சாமர்த்தியமாக விடுபடுவீர்கள். திடீர் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. 

பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சனை தீரும். 
சந்திராஷ்டம தினங்கள்: ஆக 1, 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 17, 18, 19

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், ராஹூ -  பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் புதன், சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
07-08-2022 அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10-08-2022 அன்று செவ்வாய் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
நியாயத்தின் பக்கம் நிற்கும் கும்ப ராசி அன்பர்களே, நீங்கள் அநியாயத்தை எதிர்க்கும் குணமுடையவர். இந்த மாதம் பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து பேசுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் உண்டாகலாம். வாகனங்களால் செலவும் ஏற்படும். நண்பர்களிடம் இருந்து பிரிவு உடல்சோர்வு உண்டாகலாம். 

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. 

பெண்கள் பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும்படி நடக்கும்.
அரசியல் துறையினருக்கு இந்த காலகட்டம் சில நற்பலன்களை தந்தாலும் மனகஷ்டமும் அவ்வப்போது உண்டாகும். எதை பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது. 

கலைத்துறையினருக்கு கவனம் தேவை. எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

அவிட்டம்:
இந்த மாதம் பணதேவை ஏற்பட்டாலும் அதை   திறமையாக சமாளித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நெருக்கடி யான சூழ்நிலை  ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது.  

சதயம்:
இந்த மாதம் குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளை  அவர்களின் போக்கிலேயே விட்டு பிடிப்பது நன்மை தரும்.

பூரட்டாதி:
இந்த மாதம் மற்றவர்களால் ஏற்படும்  தொல்லைகளில் சிக்காமல் இருக்க கவனமாக  செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு காணப்படும். மிகவும் கவனமாக படிப்பது கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும். ஆனால் நல்ல பலனை தரும்.

பரிகாரம்: முருகனுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஆக 2, 3, 29, 30, 31
அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 20, 21

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

கிரகநிலை:
ராசியில் குரு(வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், ராஹூ -  சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
07-08-2022 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10-08-2022 அன்று செவ்வாய் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
யாருடைய அதிகாரத்துக்கும் கட்டுப் படாமல் தனித்தன்மையுடன் விளங்கும்  மீன ராசி அன்பர்களே, நீங்கள் நேர்மைக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். இந்த மாதம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். எதிலும் வெற்றியும் சந்தோஷத்தையும் தரும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்.

குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். துணிச்சலாக முயற்சிகள் மேற் கொண்டு வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.  மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். 

பெண்கள் காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும்.

கலைத்துறையினருக்கு கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக  இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். 

அரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்.

பூரட்டாதி:
இந்த மாதம் வீண்செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவும் இருக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல் அதிருப்தி உண்டாகலாம். கனவுகளால் தொல்லை ஏற்படலாம். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.

உத்திரட்டாதி:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல்  பணியாற்ற  வேண்டி இருக்கும். இயந்திரம், நெருப்பு,   ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.

ரேவதி:
இந்த மாதம் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம்.  பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். உறவினர்களிடம் கவனம் தேவை.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஆக 4, 5
அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 22, 23

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com