சென்னையில் ஓர் உடையவர் கோயில்!

சென்னையில் ஓர் உடையவர் கோயிலெனப்படும் பெரியமேடு தொப்பைத் தெருவிலுள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் பற்றி...
ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில், பெரியமேடு
ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில், பெரியமேடு

சென்னையிலும் இருக்கிறது ஓர் உடையவர் கோயில் என்றால் பலருக்கும்  வியப்பாகத்தான் இருக்கும். சென்னை, பெரியமேடு பகுதியில் பூந்தமல்லி  நெடுஞ்சாலையில் தொப்பைத் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில்.

ஜஸ்டிஸ் பத்மநாபன் குழுவின் சென்னை ஹெரிடேஜ் கட்டடங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள இந்தக் கோயில்தான் உடையவர் கோயிலென்றும் அழைக்கப்படுகிறது.  

ஆயிரம் வருடத்திற்கு மேல் தொன்மை வாய்ந்த இக்கோயில் 1012 வருடம் தும்துபி நாமசம்மச்சரம் திரு சென்னையா செட்டியார் மற்றும் அவருடைய மனைவி லட்சுமி தேவியின் முயற்சியால்  கட்டப்பட்டது.

இயற்கை அழகு கொண்ட இத்திருத்தலத்திற்குள் அடி எடுத்துவைத்தவுடன் நம் கண்ணில் தென்படுவது பிரமிக்க வைக்கும் நுழைவாயில், அண்ணாந்து பார்க்க வைக்கும் உயரமான துவஜஸ்தம்பம், கச்சிதமான சிறு மண்டபம்.

சுமார் ஆறு அடி உயரத்தில் அப்படியே திருப்பதி வெங்கடேச பெருமாள் போலவே வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் மனதை ஈர்க்கும் விதத்தில் காட்சியளிக்கிறார்.

இந்தத் திருக்கோயிலுக்கு வந்தால் வாழ்க்கையில் கட்டாயம் திருப்பம் ஏற்படும் என்பது நம்பிக்கை.

கூட்டம் அலை மோதாதன் காரணத்தால் மௌனத்தில் தியானித்துப் பெருமாளை வணங்குவது சாத்தியம் ஆகின்றது. இங்கு வைஷ்ணவாசாரியர் ராமானுஜருக்குத் தனி சன்னதி இருக்கும் நிலையில், உடையவர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. ராமானுஜர் இங்கே வந்து தங்கிப் பூஜைகள் செய்தது கோயிலின் சிறப்பு அம்சமாகும்.

கோயில் பிரகாரத்தில் அலர்மேல்மங்கை தாயார் சன்னதி உள்ளது. கர்ப்பக்கிரஹத்திற்கு வெளியே ஸ்ரீ ராமர் லக்ஷ்மண சீதாதேவி சன்னதியும், ராமானுஜர் சன்னதியும் உள்ளன.

பிரகாரத்தில் ஒரே விக்கிரகத்தில் முன்னும் பின்னுமாக சக்கரத்தாழ்வாரும் யோகநரசிம்மருமாக ஒரு சன்னதியிலும், ஆண்டாள் ஒரு சன்னதியிலும், துவஜஸ்தம்பம் அருகே அனுமன் சன்னதியும் இருக்கின்றன.

கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட முதல் பெருமாள் சற்றுக் கீழ் நோக்கிய பார்வை கொண்டிருந்ததால் வேறு விக்ரஹம் ஸ்தாபிக்கப்பட்டது.

முதலாவதாக இங்கு வீற்றிருந்த பெருமாள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் மூர் மார்க்கெட்டிற்கும் இடையில் மண்ணில் புதைந்து கிடந்தபோது அவ்வழியே சென்ற ஒருவர் கண்ணிற்குத் தென்பட்டுப் பெருமாள் சிலை என்று கண்டறிந்தவர் விக்ரஹத்தை, மும்பையில் ஒரு ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய, இன்று வரை பக்தர்களுக்கு அங்கே தரிசனம் தந்து கொண்டிருக்கிறார்.

இரண்டாவதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமாள் திருவுருவம் சற்றுச் சிறிதாகத் தோன்றவே அந்தப் பெருமாளை ஆழ்வார் சன்னதியில் ஸ்தாபிக்கவும் அவர் அங்கு ஆதிமூலர் ஆகக் காட்சி தருகிறார்.

மூன்றாவதாகப்  பிரதிஷ்டை செய்த பெருமாள்தான் இப்போது கோயிலில் நாம் காணும் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள்.

இந்த கோயில் தல விருட்சம் நெல்லி மரம். இம்மரத்தைப் பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். ஔவையார் கூற்றுக்கு இணங்க நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அளிக்கக்கூடிய ஒரு விருட்சம். மிகவும் லட்சுமி கடாக்ஷம் பொருந்திய ஒன்றாகக் கருதப்படுகின்றது. நெல்லிக் கனியைக் கொண்டு நெய் தீபம் ஏற்றுவது இங்கு மற்றொரு சிறப்பு.

பூலங்கி சேவை, பெருமாள் திருக்கல்யாணம், புஷ்ப யாகம் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. புரட்டாசி மாதம் திருப்பதியில் பிரம்மோற்சவம் முடியும் நாள் அன்று இங்கு பிரம்மோற்சவம் தொடங்கி பத்து நாள்களுக்கு வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கின்றது. மார்கழி மாதத்தில் பகல் பத்து, ரா பத்து ஒரு முக்கியமான விசேஷம் ஆகும். 

இயந்திர வாழ்க்கையில், ஸ்வாமியைக் கண்டு, மெய் மறந்து, மனமுருக வணங்கவும், தியானிக்கவும் பெருமாள் பக்தர்களுக்கு இக்கோயில் ஒரு வரப்பிரசாதம்.

கட்டுரையாளர் - எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com