Enable Javscript for better performance
குரு - சுக்கிரன் சேர்க்கை நல்லதா? கெட்டதா?- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  குரு - சுக்கிரன் சேர்க்கை நல்லதா? கெட்டதா? 

  By - ஜோதிட சிரோன்மணி தேவி   |   Published On : 10th September 2022 06:08 PM  |   Last Updated : 10th September 2022 06:08 PM  |  அ+அ அ-  |  

  guru-chandran

   

  கிரகங்களின் முக்கியமான சுபக் கிரகங்கள் என்றழைக்கப்படுவர்கள் குருவும் சுக்கிரனும். ஜாதக கட்டத்தில் குரு, சுக்கிரன் தன்மையைப் பார்த்தாலே முக்கிய பிரச்னைகள் தெரியவரும். குருவும் சுக்கிரனும் இயற்கை சுபர்கள். இருவரும் நல்ல ஆசான்கள், குரு தேவர்களுக்கும், சுக்கிரன் அசுரர்களுக்கும் குருவாக இருந்து வழிகாட்டுகின்றார்கள். இருவரும் சுப மற்றும் அசுப தன்மைகளைக் கலந்து தரவல்லவர்கள். முதலில் இவர்களின் தனித்த தன்மையின் பலன்களைப் பார்ப்போம். பின்பு குரு சுக்கிரன் சேர்க்கை, பார்வை மற்றும் திரிகோணத்தின் சம்பந்தம் பெரும்பொழுது என்ன சுப அல்லது அசுப பலன்களைத் தருவார்கள் என்று பொதுவான பலன்களைப் பார்ப்போம். 

  ஆசைக்கு செக் வைப்பவர் குரு

  குரு ஒரு முழு சுப தன்மை கொண்டவர். அவர் இருக்கும் இடத்தை விடப் பார்க்கும் இடம் பலம் பெறும் என்பது உண்மையே. தனித்த குரு செயல்திறன் வெளிப்பாடு குறைவு. குருவோடு சேர்ந்த கிரகம் ஒரு செயலை சீக்கிரம் செய்ய முற்படுவார். இவர் ஒரு பொருளின் முக்கிய மூலப் பொருளாகச் சொல்லப்படுகிறது. எடுத்துக்காட்டாக வடிவமைக்காத சுத்த தங்கம் குரு ஆவார். கட்டித் தங்கத்தை உருக்கி அழகுற மாற்றினால் அங்கு சுக்கிரன் சேர்ந்துவிடுவார். ஒரு சிலருக்கு குறிப்பிட்ட தசா புத்தி காலம் பிறகு தேவையானவை கொடுத்து பின்பு ஆன்மிக பிரபஞ்சத்தை நோக்கி அவர்களை நகர்த்திச்  செல்லுவார். 

  குரு - குழந்தை செல்வத்தையை குறிக்கும் கிரகம், சுப நிகழ்வுக்கு உரிமையானவன், ஆசான், ஆசைகளுக்குக் கொஞ்சம் தடை விதிப்பவன், ஆடம்பரம் பிடிக்காது, கடவுளுக்கு மதிப்பு கொடுப்பவன். தேவ குருவின் ஆசீர்வாதம் பெற்றவன் எவனோ அவன் யோகவான் ஆவான். அவனுக்கு என்ன தேவையோ அவற்றைச் சரியாக யோகர்கள் வாயிலாகக் கொடுத்துவிடுவார். எல்லையற்ற தான தர்மம் செய்யும் மனிதனுக்கு என்ன தேவையோ, அவற்றை அளவுக்கு மேல் அதாவது அபரிமிதமான பணம், பொருள் சேர்க்கை, தொழிலில் லாப உயர்வு, மன அமைதி கலந்த சந்தோசம் என்று கொடுத்துவிடுவார். இவர் குறிப்பிட்ட நோயை வெளி காட்டிக்கொடுக்கும் கிரகம். எடுத்துக்காட்டாக பலநாள் ஒருவருக்கு என்ன நோய் என்று தெரியாவண்ணம் இருக்கும் அதனைப் படம்போட்டு (diagnosis) வெளிக் காட்டுபவர். அனைவர் மனதிலும் கேட்கும் கேள்வி குரு நல்லவரா கெட்டவரா? அது அவரவர் ஜாதகத்தின் வாயிலாக காணலாம். இவரை வியாழன், பொன்னவன், தெய்வ மந்திரி, வேதன், வேந்தன், ஆண்டளப்பான், ஆசான், சிவன், பிரகஸ்பதி, அந்தணன் என்றெல்லாம் அழைப்பார்கள்.

  ஆசையைத் தூண்டும் சுக்கிரன்

  சுக்கிர தசை வந்தாலே அனைவருக்கும் ஒருவகை சந்தோஷம். களத்திரகாரகன், வாகன யோகாதிபதி, ஆடம்பரம் மற்றும் சுகபோக அதிபதியாக சுக்கிராச்சாரியார் (சுக்கிரன்) ஆவார். ஒருவருக்கு சுக்கிரன் நன்றாக இருந்தால் நல்ல உணவு, அழகிய கட்டிய வீடு, முகத்தில் பொலிவு கலந்த புத்துணர்ச்சி, ஆசையை நோக்கிய ஒரு வேகம், நிறைவான வாழ்க்கை என்று எல்லாம் வரக்கூடும். பாவ கிரகங்களின் சேர்க்கை சுக்கிரனுக்கு இருந்தால் பல்வேறு தவறான நட்பு, முக்கியமாகப் பெண்களிடம் அவமானம், ஏமாற்றம் என்று  நிகழும். ஒரு பொருளை அழகாக வடிவமைக்க சுக்கிரன் உதவி முக்கியம். இவரை வெள்ளி, மால், சுங்கன், அசுர குரு,  சல்லியன், மலைகொள், களத்திரகாரகன்  என்றெல்லாம் அழைப்பார்கள்.

  தேவ அசுர குருக்களின் சேர்க்கை

  குரு 90% சுபர், அதுவே சுக்கிரன் 80% சுப தன்மை கொண்டவர். குரு நல்ல கிரகம் ஆஹா ஓஹோ என்று சொல்லும்பொழுது நான் மட்டும் இவருக்கு மதிப்பினை கொஞ்சம் குறைத்து கொடுத்துள்ளேன், அதற்குக் காரணம் குரு ஒரு சில நேரங்களில் ஜாதகரின் தவறான நோக்கத்தை படம் போட்டுக் காட்டி, ஜாதகருக்கு அவமானத்தைக் கொடுத்துவிடுவார். ஒருவர் ஒழுக்கத்தை, நற்செயலையும் செய்து, நல்வழியில் நடந்தால் குருவுடன் சேர்ந்த சுக்கிரன் நற்பலன்களை தரவல்லவர். குருவும் சுக்கிரனும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தால் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும் அதுவே சிலசமயம் திகட்டும் அளவுக்குச் சென்று விடும். அதாவது "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்ற நிலைக்குத் தள்ளப்படும். இரு கிரகங்களின் சுப அசுப தன்மை பொறுத்து ஜாதகருக்கு பலன்கள் மாறுபடும்.

  ஒருவனுக்கு உலகில் வாழக் கொஞ்சம் பேங்க் பேலன்ஸ், பொன்னும் பொருளும் தேவை. இந்த சேர்க்கை உள்ளவர்களுக்கு அனைத்தும் கிட்டும். முக்கியமாகத் தங்க கட்டிகளாகவோ, அழகிய வடிவம் கொண்ட நகையாகவோ, வெள்ளி பாத்திரங்களவோ சேர்க்கும் ஆசை கொண்டவர்கள். வங்கிக் கணக்கில் பணம் இருந்துகொண்டே இருக்கும். முடிந்தவரை ஜாதகர் முறையாகச் சேர்த்து வைத்த பணம் என்றால் கட்டாயம் நல்வழியில் பாதுகாக்கப்படும். ஏனென்றால் குரு ஒழுக்கத்திற்கு முதலிடம் கொடுப்பார். குரு தன் கையில் மறைத்து வைத்த குச்சியுடன் இருக்கும் ஒரு வழிகாட்டியாக நமக்குப் பின்னே நிற்பார்.

  சுக்கிரன் அதிக சுபத்தன்மையுடன் இருந்து அவரோடு குரு சேர்க்கை பெற்றால் ஆடம்பரம் கூடிய அழகிய வீட்டின் மீது அதிக ஆசை இருக்கும். ஆனால் வீடு வாங்குவதை விட அங்குள்ள உட்புற வடிவமைப்பதில் (interior design)  மிகுந்த ஆர்வம் மிக்கவர்கள். ஆசையுடன் அதற்கென்று செலவு செய்வதை விரும்புவார்கள். இவர்கள் சங்கர் படம் போன்று எண்ணங்களும், செயல்பாடுகளும் பிரம்மாண்டத்தை நோக்கி இருக்கும். அதோடு ஒருவரின் குறிக்கோள் கொண்ட பாதையைக் காட்டி வெற்றிக்கு வழிவகுப்பார்கள். இவர்கள் மனம் மட்டும் திடமாக இருந்தால் வெற்றியும் சாதனையும் நிச்சயம் உண்டு. யார் பேச்சையும் ஏற்க மாட்டார்கள், அவர்கள் நினைத்த பாதையில் செல்வார்கள். அதேசமயம் இந்த சேர்க்கையுடன் பாவிகள், அசுபர்கள் சேர்க்கை பெற்றால் வெற்றிப் பாதை மாறி தவறான வேறு பாதையில் நகர்ந்தும் சென்றுவிடுவார்கள்.

  இந்த அமைப்பில் இருக்கும் ஆண் பெண் இருவரும் எதிர் பாலினத்தவரைக் கவரும் வசிகர  தன்மை அதிகமாக இருக்கும். இவர்கள் தன்னை தானே மேலும் அழகுபடுத்திக் கொள்வார்கள்.  எடுத்துக்காட்டாக உடலில் பச்சை குத்திக்கொள்ளுவது, முடியில் பல்வேறு நிறங்கள் மற்றும் சிகை அலங்காரங்கள் அல்லது சினிமா நடிகர் போல வடிவமைக்கப்பட்ட ஆடையில் அழகான மாற்றங்கள், வெவ்வேறு வடிவில் மூக்குத்தி அல்லது காது ஓரங்களில் குத்திக் கொள்வது என்று தங்கள் முகத்தில் அழகு சேர்த்துக் கொள்வார்கள். எடுத்துக்காட்டாக குரு பார்வையில் செவ்வாய் சுக்கிரன் அமையப்பெற்றால் உடற்பயிற்சி கூடங்களுக்குச் சென்று தங்கள் உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க முயற்சிப்பார்கள்.

  இருவரும் ஒருவருக்குள் ஒருவர் பகை கொண்டவர்கள், அதனால் சிலசமயம் பொன்னும் பொருளும் சேர்ந்து கொடுப்பார்கள். அதேசமயம் சேர்ந்து அழிக்கவும் தயாராக இருப்பார்கள்.  நட்பானவர் வீட்டிலிருந்தால் குருவோ சுக்கிரனோ ஒருவர் சுபமாகவும் மற்றவர் அசுபமாகவும் செய்யப்படுவார். அதுவும் அவர்களின் பாவ சுபத்தன்மை பொறுத்தே அமையும். ஒருவரின் சுப அசுப நிகழ்வுகள் எப்பொழுது நடக்கும்? என்றால் அவரவர் கிரகங்களின் தசை புத்திகளில் நடைபெறும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

  வீட்டையும்  தன்னை சுற்றி உள்ள பகுதியும் சுத்தமாக வைத்திருப்பார்கள். சுத்தம் சோறு போடும் என்பது இவர்களின் தாரக மந்திரம். உணவை ஏதோ கிடைத்தால் போதும் என்று சாப்பிட மாட்டார்கள். சுவையுடன் கூடிய அழகுறப் பரிமாறினால் நன்கு சுவைத்துச் சாப்பிடுவார்கள். இதனால் இவர்கள் மற்றவர்கள் வீட்டில் தங்குவது கொஞ்சம் கடினம்.

  இந்த சேர்க்கை உள்ளவர்கள் முக்கியமாக ஆண்கள் வாகனங்கள் மீது அலாதி பிரியம் உண்டு. அதில் பல்வேறு வகை கம்பெனி பிராண்ட் கார்கள் மற்றும் அனைத்து அழகிய வாகனங்களை  ஓட்ட ஆர்வம் உண்டு. எடுத்துக்காட்டாக நடிகர் அஜித் ஜாதகத்தில் இந்த அமைப்பு உள்ளது. அவருக்கு உச்சம் பெற்ற சுக்கிரனுடன் புதன் சேர்க்கை மற்றும் சுக்கிரன் வீட்டில் சனி அமர்ந்து, இருபாவத்தையும் குரு பார்வையிடுவது  நல்லது. இங்கு இவருக்கு குருவைவிட சுக்கிரன் பலம் அதிகம். அதனால் சுக்கிரன் என்பர் இவருக்கு சினிமா துறையில் வெற்றியையும், அதுதவிர  பல்வேறு பைக் மற்றும்  கார்களை ஓட்ட பிரியம் கொண்டவராகவும் இருக்கின்றார். இவருக்கு மேன்மேலும் உயர பலம்பெற்ற இந்த கிரக சேர்க்கையும் ஒன்று. அஜித் பந்தயத்தில் வெற்றி பெறுவது என்பது மற்ற கிரக சேர்க்கைகளின் சுப தன்மையாகும். 

  ஜாதகருக்கு குருவை விட சுக்கிரன் அதிக வலு தன்மையுடன் சேர்க்கை பெற்றால், சுக்கிரனால் ஏற்படும் நோய் வீரியம் அதிகம் இருக்கும். புலிப்பாணி தன் பாடலில் ஒரு ஜாதகனுக்கு லக்கினதிலிருந்து 12, 3, 6, 8 ஆகிய இடங்களில் அசுரகுரு சுக்கிரன் பலமுடன் இருந்தால் அச்சாதகனுக்கு ஆயுள் குறைவதுடன், வாதநோய், மர்ம உறுப்புகளில் நோயுறுதலும், வயிறு வீக்கம், மகோதரம், பாண்டு, குன்மம், நீர்கோவை, சயம், சோகை ஆகிய நோய்களும் ஏற்படும். அதுதவிர மனையும் நஷ்டம் ஆகும். ஆயினும் 12ல் சுக்கிரன் ஆட்சி பெற்றால் பரம் பொருளின் பேரருளால் சயன சுகமும் நல்ல யோகமும் ஏற்படும் என்று கூறுகிறார். - இங்கு என் ஆராய்ச்சியில் கோட்சர குரு சேரும்பொழுது அல்லது பார்க்கும்பொழுது அல்லது திரிகோணத்தில் வரும்பொழுது மேலே சொன்ன நோயின் தாக்கம் அதிகமாக வெளிப்பட்டு, பின்பு சரியான சிகிச்சைக்கு பிறகு நோயின் தாக்கம் குறைக்கப்படும். முக்கியமாக சுக்கிரன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அமிர்த சஞ்சீவினி மூலமந்திரத்தை நன்கு தெரிந்தவர். 

  குரு சுக்கிரன் சம்பந்தப்படும்பொழுது ஜாதகருக்கு வயிற்றுப்பகுதியில் வீக்கம், சிறுநீரகத்தில் பெரிய கற்கள், சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் பிரச்னைகள், வாத நோய், கபம், கன்னத்தில்  கொப்பளங்கள், தோல்களில் மாற்றம், பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோனில் ஏற்றத்தாழ்வு (imbalance) மற்றும் கர்ப்பப்பை வீக்கம்/கட்டி, கர்ப்பப்பை இறக்கம், குடலிறக்கம், தசைநார் சம்மந்தப்பட்ட நோய்கள், கண்ணின் ஒளி பாதிப்பு,  கொழுப்பு /நீர்க்கட்டி, சர்க்கரை நோய், கெட்ட கொழுப்பினை அதிகப்படுத்தல்,  விந்தணுக்கள் குறைபாடு, பால்வினை நோய்கள், போதை வஸ்துக்கள் மூலம் ஏற்படும் நோய்கள் என்று அடுக்கிக்கொண்டு போகலாம். இவர்களோடு அஷ்டமாதிபதி, பாதகாதிபதி, முழு பாவர்கள் சம்பந்தம் பெரும்பொழுது மார்பக புற்றுநோய் அல்லது வயிறு/முகத்தில் உள்ள அங்க பகுதிகளில் புற்றுநோய் தாக்கம் இருக்கும். பெரும்பாலும் பெண்களுக்கு சுக்கிரனால் ஏற்படும் நோயின் தாக்கம் கொஞ்சம் அதிகம்.  

  இவர்கள் பேச்சு அழகாகத் திறமையாக இருக்கும். இந்த சேர்க்கை உள்ளவர்கள் நீண்டகால திட்டம் தீட்டுவதில், மற்றவருக்கு ஆலோசனை மூலம் உதவி செய்வதில் வல்லவர்கள். அதுவும் இவர்கள் மருத்துவராக இருந்தால் இவர்கள் கைப்பட்டால் நோய் சீக்கிரம் குணமாகும். குரு அசுப தன்மை பெரும்பொழுது அதோடு சுக்கிரன் வலுப்பெற்றால் பணத்தையும், பொருளையும், சந்தோஷ சுகத்தையும் நோக்கி ஓட்டம் இருக்கும். அதுவே சிலநேரங்களில் ஒழுக்கமான இல்லற வாழ்க்கை அமையாது, தவறான சகவாசம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

  ஒருவரின் பாதகாதிபதி வீட்டில் குரு / சுக்கிரன் அமர்ந்தால் பாதகத்தைச் செய்ய குருவோ சுக்கிரனோ தயார் நிலையில் இருப்பார்கள். அவர்களுடைய தசை புத்தி வரும் காலத்திற்காகக் காத்திருப்பார்கள். இவற்றில் குரு குறைந்த பாதகத்தையும் சுக்கிரன் அதிக பாதகத்தையும் தரவல்லவர்கள். எடுத்துக்காட்டாக மிதுன லக்கினத்திற்கு குரு பாதகர். இங்கு குரு சுக்கிரன் சேர்க்கை ஜாதகருக்கு கிட்டிய மற்றும் சேர்த்துவைத்த அனைத்து வருமானமும், பொருளும் இழக்கவும் செய்வார். ஒருவேளை இவருக்கு பொருள் இழக்கவில்லை என்றால் களத்திரத்தால்/குழந்தையால் இழப்பு ஏற்படுத்தும். குடும்பத்தில் சுமூக உறவு இருக்காது அல்லது பாகப் பிரிவினை ஏற்படுத்தும்.

  குரு சுக்கிரன் சமசப்தம பார்வை பெற்று புத்திக் கூர்மைக்கு அதிபதி புதனுடன் சேர்ந்து கேந்திரம், திரிகோணத்தில் அல்லது தனம் வரக்கூடிய 2ல் இருந்தால் சரஸ்வதி அருள் மற்றும் சரஸ்வதி யோகமுண்டு. இல்லையென்றால் குழந்தைகள் அதீத அறிவாற்றல் மற்றும் படிப்பில் வல்லமை பெற்றவராகத் திகழ்வார்கள்

  இந்த சேர்க்கை உள்ளவர்கள் குலதெய்வம் அல்லது எல்லையைக் காக்கும் சாமி ஒரு சாத்வீக கன்னி தன்மை கொண்ட சாமியாகவோ, பெண் தெய்வமாகவோ இருப்பார்கள். இந்த சேர்க்கை உள்ள ஜாதகரின் கர்ம வினை அகலும், வம்சத்தை வளர்க்கும், குடும்பத்தை காவல் காக்கும், செய்யும் நற்காரியம் ஜெயம் உண்டாகும், நோயிலிருந்து விடுபடுவார்கள் என்பது  உண்மை. 

  Whatsapp:8939115647

  vaideeshwra2013@gmail.com
   

   


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp