திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா: ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீ சனீஸ்வரபகவான்
ஸ்ரீ சனீஸ்வரபகவான்

காரைக்கால் :  திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கோயில் வளாகத்தில், தங்க காக வாகனத்தில் உற்சவரான ஸ்ரீ சனீஸ்வரபகவான் வடக்குப் பிரகார மண்டபத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு எழுந்தருளச் செய்யப்பட்டார். வரிசையில் செல்லும்  பக்தர்கள் தங்க காக வாகனத்தில் அருள்பாலிக்கும் சனீஸ்வரபகவானை தரிசித்து சென்றனர்.

இத்தலம் திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றதாகும். உன்மத்த நடனமாடும் செண்பக தியாகராஜர் அருள்பாலிக்கிறார். சப்தவிடங்க தலங்களுள் ஒன்றாகும். பல்வேறு சிறப்புகளை பெற்றதாக தர்பாரண்யேஸ்வரர் கோயில் விளங்குகிறது.

ஒரு ராசியிலிருந்து சனி கிரகம் இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை மற்றொரு ராசிக்கு பிரவேசிக்கிறது. வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி டிச.20-ஆம் தேதி புதன்கிழமை மாலை 5.20 மணிக்கு மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்கும் சனிப்பெயர்ச்சி விழா திருநள்ளாறு கோயிலில் நடைபெற்றது.

நளசக்கரவர்த்திக்கு ஏற்பட்ட தோஷம் விலக தர்பை காடாக இருந்த திருநள்ளாறுக்கு வந்து சுயம்புவாக தோன்றிய தர்பாரண்யேஸ்வரரை வணங்கி, தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரரை வழிபட்டதால், அவருக்கு ஏற்பட்ட துன்பம் விலகி, அவர் இழந்ததையெல்லாம் மீட்டதாக வரலாறு. இக்கோயிலில் சனீஸ்வரபகவான் தனி சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறார்.

இக்கோயிலில்  அனுக்கிரக மூர்த்தியாக உள்ள சனிபகவானுக்கு சனிப்பெயர்ச்சி விழா நாளில் விமரிசையான அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

தீபாராதனைக்கு  முன்னதாக சனீஸ்வரப பகவானுக்கு நல்லெண்ணெய், மஞ்சள், பழம், பஞ்சாமிர்தம், தேன், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மலர் மாலைகள் சாத்தப்பட்டு,   சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் சரியாக 5.20 மணிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

 தோஷ நிவர்த்திக்காக பக்தர்கள் நளன் குளத்தில் அதிகாலை முதல் நல்லெண்ணெய் தேய்த்து நீராடினர். பிறகு சனீஸ்வரபகவானை தரிசிக்க கோயிலுக்கு சென்றனர்.

பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாக தர்ம தரிசனம் மற்றும் ரூ.300, ரூ.600, ரூ.1,000 ஆகிய வரிசைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அதிகாலை முதலே நீண்ட வரிசையில் சென்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். சனிப்பெயர்ச்சி நேரத்துக்கு முன்பு  வரை இயல்பான கூட்டம்  காணப்பட்டது. பக்தர்கள் கோயிலுக்குள் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்டவை  மூலம் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

 நளன் குளம், கோயில் சுற்றுவட்டாரத்தில் காவல்துறையினர் கண்காணிப்பு கோபுரத்தின் மீதிருந்து தொலைநோக்குக் கருவி மூலம் கண்காணிப்புப் பணியை செய்தனர். நளன் குளத்தினுள் தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. இதையும் மீறி ஆழமான பகுதியில் பக்தர்கள் சிக்கிக்கொண்டால் மீட்கும் வகையில், நீச்சல் பயிற்சி பெற்றவர்கள் படகு மூலம் குளத்தை சுற்றி கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  

கோயிலுக்கு உள்ளேயும், வெளியேயும் மற்றும் நளன் குளம் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையிலிருந்து எல்.இ.டி. டி.வி. மூலம் காவல்துறையினர் கண்காணித்த வண்ணம் இருந்தனர்.

மேலும் வெடிகுண்டு கண்டறியும் காவல்துறையினரும் உளவுப் பிரிவினரும் தீவிரமான சோதனைப் பணியில் ஈடுபட்டனர். 

கோயில் உள்ளேயும் வெளியேயும் பக்தர்கள் சனிப்பெயர்ச்சியை காணும் வகையில் பெரிய அளவிலான எல்.இ.டி. டி.வி. அமைக்கப்பட்டிருந்தது.  நளன் குளத்தில் பக்தர்கள் விட்டுச் செல்லும் ஆடைகளை உடனுக்குடன் பணியாளர்கள் அகற்றினர்.  தோஷ நிவர்த்தியாக நளன் குளத்தில் நீராடிய பக்தர்கள் அருகில் ஸ்ரீ நளன் கலி தீர்த்த விநாயகர் கோயிலில் தேங்காய் உடைத்தனர். 

புதுவை துணை நிலை ஆளுநர் (பொ) தமிழிசை சௌந்தரராஜன், அமைச்சர் சாய் ஜெ.சரவணன் குமார், சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.சிவா, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய  சுவாமிகள், மாவட்ட ஆட்சியர் அ.குலோத்துங்கன், கோயில் நிர்வாக அதிகாரி கே.அருணகிரிநாதன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வழிபாட்டில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com