12 ராசிக்குமான சனிப் பெயர்ச்சி பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.
வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 20 இன்று(புதன்கிழமை) மாலை 5.23க்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் சனி பகவான்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
மேஷ ராசி வாசகர்களே நீங்கள் செவ்வாயை ராசிநாதனாகக் கொண்டவர்கள்.
இந்த சனிப் பெயர்ச்சியில் உடல் நலம் சீராகும். வருமானம் சிறப்பாக இருக்கும். உங்களின் பெருந்தன்மையை அனைவரும் பாராட்டுவார்கள். அதேநேரம் ஆடம்பரக் கேளிக்கைகளுக்காக செலவு செய்வதைக் குறைத்துக் கொள்ளவும். சில நேரங்களில் யோசிக்காமல் பேசி வம்பில் மாட்டிக் கொள்ள நேரலாம். மறைமுக எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக முடியும். எதிர்பார்த்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெறுவீர்கள். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவாலும், நட்பாலும் அலுவலகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும்.
வியாபாரிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் வாணிபத்தில் ஈடுபடவும். எதையும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்துச் செயல்படுவது அவசியம். மற்றவர்களிடம் பண விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவும்.
அரசியல்வாதிகள், மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப் பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும்.
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையில் செல்லும். புதிய நட்புகளால் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சக கலைஞர்களும், ரசிகர்களும் உங்களுக்கு நிறைவான ஆதரவு தருவார்கள்.
பெண்மணிகள், மன நிம்மதியைக் காண்பீர்கள். தர்ம காரியங்களிலும், தெய்வ வழிபாட்டிலும் ஈடுபடுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகளைத் துவக்குவீர்கள்.
மாணவமணிகள் உற்சாகமான மனநிலையுடன் கல்வியில் ஈடுபடுவீர்கள். உடல் வலிமை பெற தக்க பயிற்சிகளில் ஈடுபடவும். வருங்காலத் திட்டங்களுக்காக அடித்தளம் போடுங்கள். விளையாட்டுகளிலும் வெற்றிகளைப் பெறுவீர்கள்.
பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் முருகனை தரிசித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
************
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
ரிஷப இராசி அன்பர்களே நீங்கள் சுக்கிரனை ராசிநாதனாக கொண்டவர்கள்.
இந்த சனிப் பெயர்ச்சியில் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சரளமான பண வரவால் சந்தோஷம் அடைவீர்கள். நம்பிக்கையுடன் உங்கள் பணிகளில் ஈடுபடுவீர்கள். நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். புதிய முதலீடுகளில் தைரியத்துடன் ஈடுபடுவீர்கள். அதில் உங்களின் முழுத் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். பழைய கடன்களும் வசூலாகும். உங்கள் எதிரிகளின் பலம் குறையும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்குமென்றாலும் அவர்களிடம், மரியாதைக்குரிய தொலைவில் இருந்து பழகுவது நல்லது.
வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள்.
அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் கௌரவம் உயரும்.
கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
பெண்மணிகளுக்கு குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து இன்பகரமான செய்திகள் வந்து சேரும். கணவரிடம் அனுசரித்து நடந்து கொள்வீர்கள்.
மாணவமணிகள் படிப்பில் வெற்றி வாகை சூடுவீர்கள். மேலும் உங்கள் ஞாபக சக்தியும், அறிவாற்றலும் பெருகும். அதேநேரம் விளையாடும் நேரங்களில் கவனமாக இருக்கவும். பெற்றோர்களின் ஆதரவுடன் உங்களின் எதிர்காலக் கல்வித் திட்டங்களைச் செவ்வனே நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வரவும்.
************
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
மிதுன இராசி அன்பர்களே நீங்கள் புதனை ராசிநாதனாகக் கொண்டவர்கள்.
இந்த பெயர்ச்சியில் மனதில் தெளிவு பிறக்கும். திட்டமிடாமல் காரியங்களைச் செய்யும் போது அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதை ஒருமுகப்படுத்தி உழைக்கத் தொடங்குவீர்கள். மற்றவர்களின் மனதைத் துல்லியமாக அறிந்துகொள்வீர்கள். பிள்ளைகளை ஆன்மீகத்தில் ஈடுபடுத்துவீர்கள். அவர்களும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். உங்களின் மனதை அழுத்திக் கொண்டிருந்த பல பிரச்சினைகள் விலகும். வம்பு, வழக்குகளில் ஓரளவு சாதகமான திருப்பங்கள் ஏற்படும். அதனால் விட்டுக் கொடுத்துச் சென்று வழக்குகளை முடித்துக் கொள்ளவும்.
உத்யோகஸ்தர்களுக்கு இந்த பெயர்ச்சியின் மூலம் பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் மரியாதை உயரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.
வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகவும், கோபப்படாமலும் நடந்துகொண்டால் நல்ல லாபங்களை அள்ளலாம். மற்றபடி கடுமையான போட்டிகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் வெற்றிகரமாக முடிவடையும்.
அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய பிரயத்தனப்படுவீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். பொதுவாகவே பிறரிடம் பேசும் நேரத்தில் நிதானம் தேவை. பொறுப்புகள் கூடும்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு அமோகமாக இருக்கும்.
பெண்மணிகளுக்குக் கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். பண வரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்யம் கெடலாம்.
மாணவமணிகள் கல்வியிலும், விளையாட்டிலும் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். ஆனாலும் ஒருமுறைக்கு இருமுறை படிக்கவும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை.
பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 6 முறை வலம் வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் தந்தையரின் உடல்நலம் சிறக்கும்.
************
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
கடக இராசி அன்பர்களே நீங்கள் சந்திரனை ராசிநாதனாகக் கொண்டவர்கள்.
இந்த பெயர்ச்சியினால் சற்று மந்தமான நிலை உண்டாகலாம். மனதைத் தெம்பாக வைத்துக் கொண்டால் எதையும் எதிர் கொள்ளலாம். தேக ஆரோக்யத்தில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் உங்களின் செயல்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க இயலாமலும் போகும். அதேநேரம் பல சாதகமான நிலைமைகளும் வர இருக்கிறது. உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உடல் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். வருமானம் சீராக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்துவீர்கள்.
உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலிப்பார்கள். அலுவலகத்தில் அனுகூலமான சூழலைக் காண்பீர்கள். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். இடையூறுகளை ஒரு பொருட்டாகவே கருதமாட்டீர்கள்.
வியாபாரிகளின் திட்டங்கள் அனைத்தும் நல்ல லாபத்தைக் கொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் சிறப்புகள் உண்டாகும். விற்பனைப் பிரதிநிதிகளைப் பல சந்தைகளுக்கும் அனுப்பி உங்கள் விற்பனைக் களத்தைப் பரவலாக்குவீர்கள்.
அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். எதிரிகளால் கஷ்டங்கள் உண்டாகாது என்றாலும் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்கவும்.
கலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான் துறையில் வெற்றி வாகை சூடலாம். மற்றபடி உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
பெண்மணிகள் நன்கு யோசித்த பிறகே பிறரின் வார்த்தைகளை நம்ப வேண்டும். கணவரிடமும் குடும்பத்தாரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள்.
மாணவமணிகள் கடினமாக உழைத்துப் படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும். மனக்குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள்.
பரிகாரம்: அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
************
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
சிம்ம இராசி அன்பர்களே நீங்கள் சூரியனை ராசிநாதனாகக் கொண்டவர்கள்.
இடம் பெயரும் சனி பகவானால் உங்களின் பொருளாதார நிலை மேம்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். பொது நலக் காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் கைகூடும். குழந்தை இல்லாதோர்க்கு மழலைச் செல்வம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். சாமர்த்தியசாலி என்று பெயர் எடுப்பீர்கள்.
உத்யோகஸ்தர்கள் கடின உழைப்பைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்றவும். சுணக்கத்திற்கும் சோம்பலுக்கும் இடம் கொடுக்காமல் பணியாற்றினால் மேலதிகாரிகளின் ஆதரவை எளிதில் பெறலாம்.
வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடிவடைந்தாலும் உங்கள் செயல்களில் கூடுதல் அக்கறை காட்டவும். மற்றபடி சமுதாயத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிக் குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வார்கள். தொண்டர்கள் உங்கள் பெருமைகளைப் புரிந்து கொள்வார்கள்.
கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். பண வரவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். அமைதியாகச் செயலாற்றுவீர்கள்.
பெண்களுக்குக் கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதே சமயம் குடும்பத்தில் உங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் நடந்து கொண்டு அமைதி காப்பீர்கள்.
மாணவமணிகள் புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்பு உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பாராட்டைப் பெறுவீர்கள். உடற்பயிற்சிகளை மேற்கொண்டு சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோவிலை 11 முறை வலம் வரவும். பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும். சமூகத்தில் அந்தஸ்து அதிகாரம் கிடைக்க பெறும்.
************
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
கன்னி ராசி அன்பர்களே நீங்கள் புதனை ராசிநாதனாகக் கொண்டவர்கள்.
இந்த பெயர்ச்சியில் சனி பகவான் செழிப்போடு செல்வாக்கையும் உங்களுக்கு அள்ளித் தருவார். அனைத்துக் காரியங்களிலும் சராசரிக்கும் கூடுதலான வெற்றிகளைக் காண்பீர்கள். சேமிப்புகளை ஆதாயம் தரும் விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். திட்டமிட்டுச் சரியாகச் செயலாற்றுவீர்கள். கடினமாக உழைத்து லாபமடைவீர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் உண்டாகும். தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். சொத்து விவகாரங்களில் நிலவிய வில்லங்கம் விலகும். சமுதாயத்தில் உயர்ந்த பதவிகளையும் பெறுவீர்கள்.
உத்யோகஸ்தர்கள் கடுமையாக உழைத்தாலும் அதில் மேலதிகாரிகள் குற்றம் காண வாய்ப்புண்டு. அதேசமயம் சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக நிற்பார்கள். இதனால் சமாளித்துவிடுவீர்கள்.
வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எந்தக் குறையும் ஏற்படாது. ஆனாலும் எதிலும் கவனமாக இருக்கவும். புதிய முதலீடுகளைக் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே செய்யவும்.
அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.
கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள். அவர்களால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
பெண்மணிகள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். கணவரிடம் பாசத்தோடு பழகுவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். தேவையற்ற கவலைகள் சிலருக்குத் தோன்றலாம்.
மாணவமணிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு புத்துணர்ச்சியுடன் பாடங்களைப் படிக்கவும். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.
பரிகாரம்: அருகிலிருக்கும் ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று சேவிப்பது பாவங்களை போக்கும். சிக்கலான பிரச்சனைகள் தீரும். கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
************
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்
துலா ராசி அன்பர்களே நீங்கள் சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்டவர்கள்.
இந்த சனிப் பெயர்ச்சியால் இதுவரை இருந்த கடினமான சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் உற்சாகம் கரை புரளும். புத்திரர்களாலும், பேரப் பிள்ளைகளாலும் மகிழ்ச்சி ஏற்படும். உயர்ந்த பதவிகள் உங்களைத் தேடி வரும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். செய்தொழிலை விரிவுபடுத்த பெரிய அளவில் கடன் வாங்குவீர்கள். அதேநேரம் அனைத்து விவரங்களையும் நன்றாகப் புரிந்து கொண்ட பிறகே ஆவணங்களில் கையொப்பமிடவும்.
உத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கத் தொடங்கும். உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் தடை ஏற்படாது. ஆனாலும் சக ஊழியர்கள் உங்களிடம் பொறாமை கொள்ளலாம். எடுத்த காரியங்களில், சில சந்தர்பங்களில் கால தாமதம் ஏற்படலாம்.
வியாபாரிகள் நல்ல பொருளாதார வளத்தைக் காண்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் மறையும். கூட்டாளிகளிடம் ஒற்றுமை உண்டாகும். வங்கிக் கடன்கள் சிக்கலின்றி கிடைக்கும்.
அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். அதனால் எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பதால் உற்சாகமடைவீர்கள்.
கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவும் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. புகழைத் தக்க வைத்துக்கொள்ள சீரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
பெண்மணிகள் குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாகவே இருக்கும். உங்களின் புத்திசாலித்தனத்தை குடும்பத்தினர் புகழ்வார்கள். புத்தாடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மாணவமணிகள் கல்வியில் மிகுந்த ஈடுபாடு காட்டுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவும் தொடர்ந்து நல்லவிதமாக இருக்கும். வெளி விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள்.
பரிகாரம்: குல தெய்வத்தை தினமும் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.
************
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக இராசி அன்பர்களே நீங்கள் செவ்வாயை ராசிநாதனாகக் கொண்டவர்கள்.
இனி சனி பகவான் சுக ஸ்தான ராசியில் சஞ்சரிக்கிறார். உங்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடுகளுக்குச் சென்று வரும் யோகம் உண்டாகும். பிறரின் முகபாவனைகளைக் கண்டே அவர்களின் மனதை அறிந்துகொள்வீர்கள். தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள்.
தொழிலில் அதிக முதலீடுகளைச் செய்வீர்கள். இதனால் வருமானம் குவியும். உங்கள் புகழும், கௌரவமும் உயரும். இது நாள் வரை தேவையற்ற வீண் பழி சுமந்த சில வாசகர்கள், அவற்றிலிருந்து விடுபடுவார்கள்.
உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் நல்ல முறையில் இருக்கும். இதனால் மனதில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும்.
அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் கடமைகளை சுறுசுறுப்புடன் செய்வீர்கள்.
கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். சக கலைஞர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். பொறுப்புடன் நடந்துகொள்வீர்கள்.
பெண்மணிகளுக்குக் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் உங்களை அணுகிப் பயன் பெறுவார்கள். சேமிப்பில் நல்ல கவனம் செலுத்துவீர்கள். ஆலயங்களுக்குச் சென்று ஆன்மீக பலம் பெறுவீர்கள்.
மாணவமணிகளுக்கு நினைவாற்றல் பெருகும். இதனால் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உபரி நேரங்களில் மனதிற்குப் பிடித்த கேளிக்கைகளிலும், விளையாட்டுகளிலும் ஈடுபட்டு மகிழ்ச்சிக் கடலில் திளைப்பீர்கள். அதேநேரம் நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்.
பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய்கிழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும். தைரியம் கூடும். பணவரத்து திருப்தி தரும்.
************
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
தனுசு இராசி அன்பர்களே நீங்கள் குரு பகவானை ராசிநாதனாகக் கொண்டவர்கள்.
இந்த சனிப் பெயர்ச்சியில் நல்ல வழிகள் உதயமாகும். நிதி நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்திலும், வெளி வட்டாரத்திலும் உங்கள் பேச்சுக்கு மதிப்பில்லாமல் போகலாம். எப்போதும்போல் சட்டத்தை மதித்து நடப்பீர்கள். இத்தன்மை, சில அன்பர்களுக்கு சாதகமான மேலிடத்துத் தொடர்புகளை உருவாக்கித் தரும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நீங்கள் சார்ந்துள்ள துறையில் புகழின் உச்சியை நோக்கிப் படிப்படியாக முன்னேறுவீர்கள்.
உத்யோகஸ்தர்கள் தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். அதேநேரம் சில சமயங்களில் காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும். இச்சமயங்களில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.
வியாபாரிகளுக்கு கடும் முயற்சிகளுக்கு பின் தகுந்த லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள்.
அரசியல்வாதிகளுக்குப் பெயரும், புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு, உங்களை உற்சாகப்படுத்தும். கட்சியில் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் குறைவாகவே இருந்தாலும் பண வரவு சீராகவே தொடரும். ரசிகர்களின் ஆதரவும் அமோகமாகவே இருக்கும். உங்கள் திறமையினால் புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள்.
பெண்மணிகளுக்குக் கணவரின் அன்பும், பாசமும் அளவுக்கதிகமாகவே கிடைக்கும். ஆன்மீகச் சுற்றுலாவும், இன்பச் சுற்றுலாவும் சென்று மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிறையும்.
மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதனை புரிவார்கள். உழைப்பு குறைந்தால் உயர்வும் குறையக்கூடும். வெளி விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வெற்றிவாகை சூடுவீர்கள்.
பரிகாரம்: சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.
************
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
மகர இராசி அன்பர்களே நீங்கள் சனி பகவானை ராசிநாதனாகக் கொண்டவர்கள்.
இந்த பெயர்ச்சியில் உங்கள் உடல் சோர்வு அதிகரிக்கலாம். வருமானம் சீராகவே இருக்கும் என்றாலும் பேராசைக்கு இடம் கொடுக்காமல் பணியாற்றவும். நண்பர்கள் போல் பழகும் விரோதிகளிடம் கவனமாக இருக்கவும். அவர்கள் உங்களுக்கு எதிராகச் சில சமயம் சதி வேலைகளில் ஈடுபடலாம். எதிரிகள் உதிரிகளாகித் தொலைந்து போவார்கள். யாராக இருப்பினும் நன்கு யோசித்த பிறகே வாக்கு கொடுக்கவும். மற்றபடி கடன் தொல்லைகள் ஏற்படாது. தர்ம காரியங்களைச் செய்வீர்கள்.
உத்யோகஸ்தர்கள் பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். சிலர், விரும்பிய வெளியூருக்கு மாற்றலாகிச் செல்வார்கள். மேலதிகாரிகள் சற்று பாராமுகமாகவே நடந்து கொண்டாலும் தொல்லைகள் கொடுக்க மாட்டார்கள்.
வியாபாரிகளுக்கு தொழிலில் இருந்த போட்டிகள் குறையும். லாபம் அதிகரிக்கும். நண்பர்களையும், வாடிக்கையாளர்களையும் அரவணைத்துச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த தொய்வுகள் நீங்கி, மனதில் உற்சாகம் தோன்றும்.
அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப்படுத்தப்படுவீர்கள். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள்.
கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் பெயரும், புகழும் உயரும். ரசிகர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட நிறையவே வாய்ப்புண்டு.
பெண்மணிகள் கணவரின் பாராட்டுகளை எளிதில் அடைவீர்கள். புதிதாக ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள்.
மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை வாங்க வழி வகையுண்டு. பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். அவர்களால் உங்கள் எதிர்காலத் திட்டங்கள் எளிதில் நிறைவேறும். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள்.
பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.
************
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
கும்ப ராசி அன்பர்களே நீங்கள் சனி பகவானை ராசிநாதனாகக் கொண்டவர்கள்.
நீங்கள் ஏழரைச் சனியின் காலத்தில் இருக்கிறீர்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசி, காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம், குழந்தைப் பிறப்பு போன்ற சுப காரியங்கள் நடக்கும். பூர்வீக சொத்துக்கள், சிரமமில்லாமல் கை வந்து சேரும். ஆலயத் திருப்பணிகளிலும், தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். வருமானம், எதிர்பார்ப்பிற்கும் அதிகமாகக் கிடைக்கும். தேக ஆரோக்யம் சீராக இருக்கும்.
உத்யோகஸ்தர்கள், அனைத்து வேலைகளையும் குறித்த காலத்திற்குள் முடித்து, மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கு உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்வீர்கள். பண வரவு நன்றாக இருக்கும்.
வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். கூட்டாளிகளை அரவணைத்துச் சென்று காரியங்களைச் செய்யவும். புதிய சந்தைகளை நாடிச் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
அரசியல்வாதிகளைத் தேடிப் புதிய பதவிகள் வரும். செய்கின்ற காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். பொதுநலனோடு இயைந்த சமுதாய நலன் சார்ந்த எண்ணங்களைச் செயல்படுத்த முனைவீர்கள்.
கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனாலும் உங்கள் சுய கௌரவத்துக்குப் பங்கம் ஏற்படாது.
பெண்மணிகள், குடும்பத்தில் அனுகூலமான சூழ்நிலையைக் காண்பீர்கள். உங்கள் உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்கள் பாசத்தோடு பழகுவார்கள். பெரியோரின் ஆலோசனைப்படி நடந்துகொண்டு, குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டாலும் தப்பித்துக்கொள்வீர்கள்.
மாணவமணிகள், படிப்பில் சிறப்பான கவனம் செலுத்துவீர்கள். பாடங்களை முன்னதாகவே படித்து முடித்து, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்; எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.
பரிகாரம்: விநாயக பெருமானை வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.
************
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசி அன்பர்களே நீங்கள் குரு பகவானை ராசிநாதனாகக் கொண்டவர்கள்.
இந்த சனிப் பெயர்ச்சியில் தாயின் வழியில் நன்மைகள் உண்டாகும். உங்களை விட்டு விலகியிருந்த தாய் வழி உறவினர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, உங்கள் நன்மதிப்பை உயர்த்திக் கொள்வீர்கள். அதிகமான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். எந்த வயதினருக்கும் புதிதாக ஒரு கல்வியோ, கலையோ பயில வாய்ப்புண்டாகும். சிலருக்கு வெளியூர் சென்று படிக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். செய்தொழிலில் வளர்ச்சி உண்டாகும். பழைய வாகனங்களை விற்றுவிட்டு புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உத்யோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு கிடைக்கும். இதனால் ஊதியம் உயரும். மேலதிகாரிகள் உங்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உடலில் இருந்த சோர்வும், மனதிலிருந்த குழப்பமும் மறையும்.
வியாபாரிகள், போட்டியாளர்களின் தடைக்கற்களைக் கடக்க சற்று போராட வேண்டியிருக்கும். கூட்டாளிகளை நம்பாமல் நீங்களே முன்னின்று செயல்பட்டால் வியாபாரத்தில் ஏற்படும் குளறுபடிகளைத் தவிர்க்கலாம்.
அரசியல்வாதிகள், கட்சியின் மேலிடத்தில், கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். அதேசமயம் தொண்டர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள்.
கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும்.
பெண்மணிகள், குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். அனைவரையும் அனுசரித்துச் செல்லவும். நன்கு யோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுக்கவும்.
மாணவமணிகள், படிப்பில் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். தெளிவான மனதுடன் படித்து நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள். நண்பர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அதேசமயம் விளையாட்டுகளில் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெற முடியாமல் போகும்.
பரிகாரம்: முருகனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.