அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேரோட்டம்!

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கிய நிலையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கேற்றுள்ளனர்.
அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேரோட்டம்!

அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் 3 நாள் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை துவங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கொங்கு ஏழு சிவஸ் தலங்களுள் முதன்மைப் பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரமூர்த்தி நாயனார், தேவார திருப்பதிகம் பாடி மீண்டும் உயிர்ப்பித்து எழச்செய்த திருத்தலமாகவும், தமிழகத்தில் 3வது பெரிய தேர் கொண்ட தலமாகவும், கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் விளங்குகிறது.

இக்கோயிலில் ஏப்.14ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கப்பட்ட சித்திரைத் தேர்த் திருவிழா ஏப்.27ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்.21,22,23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

திருத்தேரில் அருள் பாலிக்கும் கருணாம்பிகையம்மன்.
திருத்தேரில் அருள் பாலிக்கும் கருணாம்பிகையம்மன்.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை அவிநாசியப்பர் தேரோட்டம் கோலாகலமாக துவங்கியது.

இதில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சிவாச்சாரியார்கள், ஆன்மீகப் பெருமக்கள், பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் அவிநாசியப்பருக்கு அரோகரா, நமசிவாயா என்று முழக்கத்துடன், திருப்பூர் சிவனடியார்கள் கைலாய வாத்தியத்துடன் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

அவிநாசியப்பர் திருத்தேரில் சொர்ண அலங்காரத்தில் அருள் பாலித்த சோமாஸ்கந்தர்.
அவிநாசியப்பர் திருத்தேரில் சொர்ண அலங்காரத்தில் அருள் பாலித்த சோமாஸ்கந்தர்.
அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேரோட்டம்!
கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்!

திருத்தேரில் சோமாஸ்கந்தர் சொர்ண அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியில் அவிநாசி வாகீசர் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள், பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், கூனம்பட்டி சரவண ராஜா மாணிக்க சுவாமிகள் உள்பட ஏராளமான ஆன்மீக பெருமக்கள், இந்து அறநிலையத் துறையினர், அறங்காவலர் குழு தலைவர் ஆ.சக்திவேல், அறங்காவலர்கள் க. பொன்னுச்சாமி, ம. ஆறுமுகம், பொ.விஜயகுமார், கு.கவிதாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் பல்வேறு அமைப்பினர், திருமண மண்டபங்களில் பக்தர்களுக்கு அன்னதானம், நீர் மோர், குடிநீர் உள்ளிட்டவைகளை வழங்கினர். ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆங்காங்கே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு போக்குவரத்து நெரிசல் சீரமைக்கப்பட்டது.

தெற்கு ரத வீதி கோவை பிரதான சாலையில் தொடங்கப்பட்ட அவிநாசியப்பர் தேரோட்டம், மேற்கு ரத வீதி வழியாக வந்து, வடக்கு ரத வீதி வளைவில் திருத்தேர் நிறுத்தப்பட உள்ளது. மீண்டும் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு வடக்கு ரத வீதியில் இருந்து அவிநாசியப்பர் தேரோட்டம், நிலை சேருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை காலை கருணாம்பிகையம்மன், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், கரிவரதராஜ பெருமாள் தேரோட்டம், தேர் நிலை சேருதல் உள்ளிட்டவை நடைபெறவுள்ளது.

ஏப். 25ஆம் தேதி இரவு தெப்பத் தேர் உற்சவ நிகழ்ச்சியும், 26ஆம் தேதி நடராஜப் பெருமான் மகா தரிசனம், 27ஆம் தேதி மஞ்சள் நீர், இரவு மயில் வாகனக்காட்சியுடன் தேர்த் திருவிழா நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com