கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான திருநங்கைள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

திருநங்கைகள் தங்களது குல தெய்வமாகக் கூத்தாண்டவரை கருதி, இக்கோயிலில் வழிபட்டு வருகின்றனர்.

உலகப் புகழ்பெற்ற இத்திருக்கோயிலின் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 9 ஆம் தேதி சாகை வார்த்தலு டன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, செவ்வாய்க்கிழமை (ஏப்.23) மாலை கூவாகம் கூத்தாண்டவர் சன்னதி முன்பு கோயில் பூசாரிகளிடம் திருநங்கைகள் தாலிகட்டிக் கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கும்மியடித்து, ஆடி - பாடி மகிழ்ந்தனர்.

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!
சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

சித்திரைத் தேரோட்டம்

இன்று(ஏப். 24) காலை கோயிலிலிருந்த அரவான் சிரசுவுக்கு முதல் மாலை அணி விக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது. அதன் பின்னர் அரவான் சிரசு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

அப்போது திருநங்கைகள் சுற்றி நின்று, கும்மியடித்தனர். தொடர்ந்து சூரைத் தேங்காய்களை திருநங்கைகள் உடைத்து, வழிபாடு செய்தனர்.

இதன் பின்னர், கோயிலின் வலதுபுறத்தில் சகடையில் 30 அடி உயரக் கம்பம் நடப்பட்டு, அதில் வைக்கோல்புரி சுற்றப்பட்டது. இது அரவான் திருவுருவம் அமைக்க அடிப்படைப் பணியாகக் கருதப்படுவது வழக்கம்.

இதைத் தொடர்ந்து, கீரிமேட்டிலிருந்து பக்தர்கள் பூஜை செய்து எடுத்து வந்த அரவானின் புஜங்கள், மார்புப் பதக்கம், நத்தம் கிராமத்திலிருந்து பாதம், கைகள், தொட்டி கிராமத்திலிருந்து மார்பு புஜங்கள், கயிறு, கடையாணி, சிவிலியாங்குளம் கிராமத்திலிருந்து கை, விண்குடை ஆகியவை கொண்டுவரப்பட்டு, வைக்கோல் புரி மீது பொருத்தி, அரவானின் திருவுருவம் அமைக்கப்பட்டது.

இதன் பின்னர், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர், காலை 8.15 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. கூவாகம், தொட்டி, கீரிமேடு, நத்தம் என சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், திருநங்கைகள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் புறப்பட்டவுடன் விவசாயிகள் வேண்டுதலின் பேரில், தங்கள் நிலங்களில் விளைந்த காய்கறிகளையும், தானியங்களையும் அரவான் மீது வீசி, கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

இதுபோல, திருநங்கைகள் தேரோடும் வீதிகளில் தேர் வலம் வந்த போது சூரைத் தேங்காய்களை உடைத்து, பெரிய அளவிலான சூடக் கட்டிகளைக் கொளுத்தி, அரவான் பாடல்களைப் பாடி, கும்மியாட்டம் ஆடினர். மேலும் அரவானுக்கு தேங்காய் - பழம் வைத்து வழிபாடு செய்தனர்.

தேர் நான்கு ரத வீதிகளின் வழியாக வலம் வந்து, அழிகளம் நோக்கிப் புறப்பட்டது. அப்போது ஒப்பாரி வைத்துக் கொண்டு திருநங்கைகள் தேரை பின்தொடர்ந்து சென்றனர்.

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!
திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

அழிகளத்துக்கு தேர் சென்றடை ந்த பின்னர், அரவானை களப்பலி கொடுக்கும் நிகழ்வு நடை பெற்றது. அப்போது திருநங்கைகள் தங்கள் தலையில் சூடியிருந்த பூக்களை பிய்த்து எறிந்து, நெற்றியில் வைத்திருந்த குங்குமப் பொட்டை அழித்துக் கொண்டனர்.

பின்னர் பூசாரிகளிடம் சென்று கை வளையல்களை உடைத்து நொறுக்கிக் கொண்டு, கழுத்தில் அணிந்திருந்த தாலியை அகற்றிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, அங்கிருந்த இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்களிடம் தங்கத் தாலியை ஒப்படைத்தனர்.

இதன் பின்னர் அருகிலிருந்த விவசாய நிலங்களுக்குச் சென்று நீராடி, வெள்ளாடை அணிந்து விதவைக் கோலம் பூண்டு திருநங்கைகள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

தேரோட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி என மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள், கர்நாடகம், புதுச்சேரி, கேரளம் போன்ற வெளி மாநிலங்களைச் சேர்ந்த திருநங்கைகள், பக்தர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. சமய்சிங் மீனா தலைமையில் 2000 - போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com