குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

2024-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி மே 1-ஆம் தேதி நிகழ்கிறது. குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம்பெயர்கிறார்.
guru bhagavan
guru bhagavan

2024-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி மே 1-ஆம் தேதி நிகழ்கிறது. குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம்பெயர்கிறார்.

குருபகவானின் இந்த இடப் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை, பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் எவை? நன்மை தீமை இரண்டும் கலந்துபலன்பெறும் ராசிகள் எவை என்று தினமணியின் இணையதள ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.

ஆதிபரம்பொருளாகிய இறைவன் தன் சக்தியை பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என மூன்று அம்சங்களாகப் படைத்தார். பிரம்மதேவர் படைப்புத் தொழிலில் தனக்கு உதவிபுரிய சப்த ரிஷிகளை உருவாக்கினார். அந்த ஏழு ரிஷிகள் மூலம் மனித, அசுர இனங்கள் தோன்றின. அந்த ஏழு ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன்தான் பிரகஸ்பதி எனும் வியாழ பகவான்.

ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுப கிரகம் என்ற அமைப்பையும், பெருமையும் பெற்ற ஒரே கிரகம், பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குரு பகவான் தான். இவர் தேவர்களுக்கு எல்லாம் தலைவன். நம் வாழ்வில் 2 விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2-வது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு. குருவுக்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன. ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால் இந்த துறைகளில் பிரகாசிக்கலாம்.

வியாழ நோக்கம்

திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குரு பார்வை என்று சொல்லப்படும் வியாழ நோக்கம் திருமணத்துக்கு முக்கியமாகத் தேவைப்படுகிறது. வியாழ நோக்கம் வந்துவிட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்க முடியும்.

குருவின் பலம்

குரு எந்த ஸ்தானத்தைப் பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்திலிருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்புப் பார்வைகளாகும்.

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்தி்ஸ்ரீ குரோதி வருஷம் உத்தராயணம் வஸந்த ரிது சித்திரை மாதம் 18ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 01.05.2024 அன்றைய தினம் க்ருஷ்ணபக்ஷ அஷ்டமியும் - புதன்கிழமையும் - திருவோண நக்ஷத்ரமும் - சுப நாமயோகமும் - பவ கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 28.22க்கு - மாலை 05.01க்கு துலா லக்னத்தில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

தற்போது மாறக்கூடிய குருபகவான் ரிஷப ராசியிலிருந்து தனது ஐந்தாம் பார்வையால் கன்னி ராசியையும் - ஏழாம் பார்வையால் விருச்சிக ராசியையும் - ஒன்பதாம் பார்வையால் மகர ராசியையும் பார்க்கிறார். குரு பகவானுக்கு ஸ்தான பலத்தை விட த்ருக் பலமே அதிகம். அதாவது இருக்கும் இடத்தின் பலத்தினை விடப் பார்க்கும் பலமே அதிகம். எனவே குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறும்.

பொதுவாக ராசிகள் பெறும் பலன்களின் அளவுகள்

நன்மை பெறும் ராசிகள்: கடகம், கன்னி, விருச்சிகம், மகரம்

நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: மேஷம், ரிஷபம், சிம்மம், கும்பம்

பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: மிதுனம், துலாம், தனுசு, மீனம்

குரு காயத்ரீ மந்திரம்

ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.

குரு ஸ்லோகம்

தேவனாம்ச ரிஷீணாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்

பக்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com