
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் மார்ச் 21 இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், சப்தவிடங்க தலங்களில் தலைமையானதாகும். திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.
ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரர் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் தல வரலாறு தெரிவிக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கான பெரியக் கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக சந்திரசேகரர், சண்டிகேஸ்வரர், அம்பாள், விநாயகர், முருகன் ஆகியோர் தேரோடும் வீதிகளில் கொடி சீலையை எடுத்துக் கொண்டு வீதி உலாவுக்குச் சென்றனர். வீதி உலாவுக்குப் பிறகு, பஞ்சமூர்த்திகளும் தியாகராஜர் சன்னதி கொடிமரம் முன்பு நிறுத்தப்பட்டனர்.
பின்னர், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, காலை ரிஷப உருவம், திரிசூலம், மங்கலச் சின்னங்கள் வரையப் பெற்ற கொடி ஏற்றப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது.
கொடியேற்றப்பட்டதை அடுத்து, உள்துறை மணியம் தியாகராஜரிடமும், ஓதுவார் ஆதிசண்டிகேஸ்வரரிடமும், லக்னப் பத்திரிகையை வாசித்தனர். அதன்படி, திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் மார்ச் 21 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.