பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :5 மே 2024, 5:38 am

DIN

காரைக்கால்: திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. பாடல் பெற்ற தலமாக விளங்குவதோடு, நளச் சக்கரவர்த்திக்கு தோஷ நிவர்த்தி கிடைத்த தலமாகவும், ஸ்ரீ சனீஸ்வரபகவான் தனி சந்நிதி கொண்டதாகவும், தர்பை புல் தல விருட்சமாகவும், சனிக்கிழமையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு வரக்கூடிய தலம் என்கிற பெருமைகளுடன் இக்கோயில் விளங்குகிறது.

இவ்வகை சிறப்புகள் பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகிறது.

நிகழாண்டு திருவிழா தொடக்கத்துக்கான கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

கணபதி தாளம், ரிஷப தாளம் மற்றும் சூர்ணிகை மந்திரத்துடன் கம்பத்தில் ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது. கொடியேற்றத்துக்கு முன்னதாக கம்பத்தில் ஏற்றப்படும் கொடியை பல்லக்கில் வைத்து நான்கு வீதிகளின் வழியாக கோயிலுக்கு கொண்டு வந்தனர்.

தொடர்ந்து, கொடிக் கம்பத்தில் உள்ள ஸ்ரீ விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டன. இக்கோயிலில் உள்ள மூலவரான ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரருக்கு தர்பை புல் விசேஷமானது. இதையொட்டி கொடிக் கம்பத்தை சுற்றி தர்பை கட்டப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது.

Story image

தொடர்ந்து, பஞ்சமூர்த்திகளான ஸ்ரீ சொர்ணகணபதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ பிரணாம்பிகை அம்பாள், ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் வீதியுலா எழுந்தருளினர்.

கொடியேற்ற நிகழ்ச்சியில், கோயில் நிர்வாக அதிகாரி கே. அருணகிரிநாதன், தருமபுர ஆதீன கட்டளை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Story image

முக்கிய நிகழ்ச்சிகளாக 12-ஆம் தேதி ஸ்ரீ அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கில் வீதியுலாவும், 13-ஆம் தேதி இரவு ஸ்ரீ செண்பக தியாகராஜசுவாமி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளல், 14-ஆம் தேதி வசந்த மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளச் செய்தவது, தியாகராஜராட்டமாக (உன்மத்த நடனம்) நடைபெறுகிறது. 17-ஆம் தேதி இரவு தங்க ரிஷப வாகனத்தில் ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் மின்சார சப்பரப் படலில் (தெருவடைச்சான்) வீதியுலாவும் நடைபெறுகிறது.

தேரோட்டம்: முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. சுவாமி, அம்பாள் உள்ளிட்ட 5 சுவாமிகளுக்கென 5 தேர்கள் இடம்பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.