

மாதங்களில் எண்ணற்ற சிறப்புகளைக் கொண்டது மார்கழி மாதம். பனி உறையும் இந்த மார்கழி மாதத்தில், பல்வேறு தெய்வங்களை அதற்குண்டான சிறப்புகளை அறிந்து, பூஜை மற்றும் வழிபாடுகள் செய்து வணங்கினால், பெரும் பலன்களை அடையலாம் என்பது முன்னோர் வாக்கு.
தேவர்களின் விடியற்காலை பொழுதாக இந்த மாதம் கருதப்படுவதால், இந்த மாதத்தில் மேற்கொள்ளப்படும் வழிபாடுகளுக்கு சிறந்த பலன்கள் கிடைக்கின்றன என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் பல முக்கிய உற்சவங்கள் இந்த மார்கழி மாதத்தில் நடத்தப்படுகின்றன.
ஏராளமான கோயில்களில், இந்த மார்கழி மாதத்தில் மட்டும் வழக்கமாக நடைபெறும் பூஜைகளுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். வழக்கமாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கும் பழக்கங்களில் சற்று மாற்றங்கள் செய்யப்படும். அந்த வகையில், பலரும் அறிந்த, சிலர் அறியாத உற்சவங்கள், வழக்கங்களும் இன்றளவிலும் நடைமுறையில் உள்ளன.
அந்த வகையில், முருகன் கோயிலில், இந்த மார்கழி மாதத்தில் மட்டும், வெந்நீரில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அது மார்கழி மாதத்தின் சிறப்பாக அமைந்துள்ளது.
அதாவது, முருகனின் அறுபடை வீடுகளையும் அனைவரும் அறிவர். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறு படை வீடுகளில், ஐந்தாவது படை வீடாக இருப்பது திருத்தணி. இங்குள்ள மூலவர் சுப்ரமணிய சுவாமியாவார். இந்த சந்நிதிக்கு பின்புறம் குழந்தை வடிவில் பால முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
மார்கழி மாதம் என்றாலே குளிர்காலம். எனவே, குளிர்காலத்தில் குழந்தை வடிவில் இருக்கும் பால முருகனுக்கும் குளிருமல்லவா. எனவே, ஆதி பாலசுப்பிரமணியர் மீதுள்ள அன்பின் வெளிப்பாடாக, மார்கழி மாதம் முழுவதும் இவருக்கு வெதுவெதுப்பான வெந்நீரில் அபிஷேகம் செய்யப்படுகிறதாம்.
நாள்தோறும், பால முருகனுக்கு வெந்நீர் அபிஷேகம் காண ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோயிலில் திரள்வது வழக்கம்.
இதையும் படிக்க.. மார்கழியில் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.