

காஞ்சி சங்கர மடத்தில் மகா பெரியவர் சுவாமிகள் ஆராதனை மகோற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
நாடு முழுவதும் நடந்து சென்று, வேதம் தழைக்க, அருள் சேவைகள் செய்து, தர்ம மார்க்கத்தையும், இறை நம்பிக்கையையும் மக்களிடம் பரப்பிய பெருமைக்குரியவர் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 68-வது பீடாதிபதியாக இருந்து வந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். மகா பெரியவர் சுவாமிகள் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்பட்டும் வருகிறார்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 68-வது பீடாதிபதியாக இருந்து வந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 32-வது ஆராதனை மகோற்சவம் டிசம்பர் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. விழாவின் தொடர்ச்சியாக மகா பெரியவரின் ஆராதனை தினமான செவ்வாய்க்கிழமை காலையில் ருத்ர பாராயணம், வேதபாராயணம், ஹோமங்கள், பஜனைகள், கர்நாடக இன்னிசை நிகழ்ச்சிகள் ஆகியனவும் நடைபெற்றன.
36 வேத விற்பன்னர்களுக்கு சங்கர மடத்திலிருந்து புத்தாடைகள் மற்றும் தானங்கள் வழங்கப்பட்டன. சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் மகா பெரியவர் சுவாமிகளுக்கும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்ட இரு அதிர்ஷ்டானங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடத்தினார். இதனைத் தொடர்ந்து காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் இளைய பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் 36 வேத விற்பன்னர்களை வலம் வரும் தீர்த்த நாராயண பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அதிஷ்டானத்தில் சிறப்புத் தீபாரதனைகள் நடைபெற்றன.
ஆராதனை மகோற்சவத்தையொட்டி மகா பெரியவர் சுவாமிகள் மற்றும் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்கள் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழக ஆயுர்வேத மருத்துவர் சாய்நாதன் தலைமையில் மருத்துவ முகாமும் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து அதிஷ்டானத்தில் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சங்கர மடத்தின் செயலாளர் சல்லா. விசுவநாத சாஸ்திரி,மேலாளர் ந. சுந்தரேச ஐயர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.