

ஐபிஎல்லில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதியால் ஏலத்தில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
ஐபிஎல் 2026 மினி ஏலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் இன்று நடைபெறுகிறது. இந்த ஏலத்திற்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒரு அதிரடியான புதிய விதியை அமல்படுத்தியுள்ளது. இது பல்வேறு கேள்விகளையும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
ஐபிஎல் தொடரின் ஏலத்தில் பங்கேற்று போட்டியில் விளையாடாமல் போனால் இரண்டு ஆண்டுகள் வரை ஐபிஎல்லில் பங்கேற்க முடியாதபடி கடுமையான விதிகள் அமல்படுத்தப்பட்டன.
இந்த நிலையில், வெளிநாட்டு வீரர்களை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக புதிய விதி ஒன்றை பிசிசிஐ அமல்படுத்தியுள்ளது. அதாவது ஏலத்தில் எடுக்கப்படும் தொகை அப்படியே வீரர்களுக்குச் செல்லும் வகையில் இதுவரையில் இருந்தது.
ஆனால், சில ஐபிஎல் தொடர்களில் வெளிநாட்டு வீரர்கள் பலர் ஏலத்தில் மட்டும் பங்கேற்றுவிட்டு போட்டியில் இருந்து விலகியும் உள்ளனர். இதனால், அணி நிர்வாகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. ஒரு வீரரை ரூ. 25 கோடிக்கு மேல் செலவிட்டு ஒரு அணி எடுக்கும் நிலையில், அவர் விளையாடாமல் போனால் அணி நிர்வாகம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
இதனைத் தடுக்கும் விதமாக ‘அதிகபட்சத் தொகை - மேக்ஸிமம் ஃபீஸ்’ என்ற அடிப்படையில், ஒரு வீரர் ரூ.18 கோடிக்கு மேல் எத்தனை கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டாலும், அவருக்கு ரூ. 18 கோடி மட்டுமே கிடைக்கும் வகை அந்த விதியை அமல்படுத்தியுள்ளது.
உதாரணமாக ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் க்ரீனை ஒரு அணி ரூ. 30 கோடிக்கு ஏலம் எடுத்தாலும், அவருக்கு ரூ. 18 கோடி மட்டுமே வழங்கப்படும். மீதமுள்ள ரூ. 12 கோடி பிசிசிஐயின் வீரர் நல நிதிக்கு (Player Welfare Fund - பிளேயர் வெல்ஃபேர் ஃபன்ட்) சென்றுவிடும். ஆனால், அவரை ஏலத்தில் எடுக்கும் அணியினர் தங்களது ரூ. 30 கோடியையும் செலவிட்டுதான் ஆக வேண்டும்.
கடந்த ஐபிஎல் தொடர்களில் இந்திய வீரர்களைவிட ஆஸ்திரேலிய வீரர்களான மிட்செல் ஸ்டார்க் 24.75 கோடிக்கும், பாட் கம்மின்ஸ் 20.75 கோடிக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இது இந்திய வீரர்களின் சம்பளத்தைவிட பன்மடங்கு அதிகமாக இருந்தது.
அணி உரிமையாளர்கள் பலர் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த புதிய விதி அமல்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், இந்திய வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம் என்றும் அணி நிர்வாகத்தினர் கருதுகின்றனர்.
சில வெளிநாட்டு வீரர்கள் மெகா ஏலங்களைத் தவிர்த்து, மினி ஏலங்களில் வேண்டுமென்றே நுழைந்து, அதிக விலையைப் பெறுவதாகப் புகார் எழுந்தது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக பிசிசிஐ இந்த புதிய விதியை அமல்படுத்தியிருக்கிறது.
அதேநேரத்தில், இந்திய வீரர் ஒருவர் ஏலத்தில் பங்கேற்று அவர் ரூ. 30 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டாலும், அவர் ஒரு ரூபாய்கூட செலவிடாமல் தனது பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.